முபின் சாதிகா
கவிதைகள்
கரும்பறவை சூடியது
நிழல் சாறுள்ள கனியை
உள் ஆழக் குரலும்
நுடங்கும் திண்மையில்
நாளென் அச்சம்
நிகழா அற்புதத்தில்
பொற்பமைந்து விரிய
பறத்தல் சுமந்து
குழையும் நலமதில்
கோர்த்து புகலிடத்து
வட்டமாய்க் கூடி
வளிசெல் திசையும்
ஒர் அணு புகன்று
எண்ணமும் வினையும்
செயலாய் பரிதவித்து
ஆவியின் சருகில்
மீளுமோ சிறகாய்
இருப்பென்னும் இன்மை
இருப்பென்றும்
இன்மையென்றும்
இருப்பாகி நின்று
இன்மை யனைய
இருப்பில் நிகர
இன்மையும் பகர்ந்து
இருப்பும் இலங்க
இன்மையில் பதிந்து
இருப்பை ஈர்க்க
இன்மை யச்சம்
இருப்பில் கரைந்து
இன்மை சார்பில்
இருப்பென்னும் இன்னதும்
இன்மையின் உன்னதம்
இருப்பை நவில
இன்மை வலிந்து
இருப்பில் உளதும்
இன்மையில் சிலதாய்
இருப்பைக் கலந்து
இன்மையில் கழிந்து
இருப்பின் முதுமை
இன்மையில் கனிய
இருப்பின் களைப்பு
இன்மையில் முகிழ
இருப்பின்மை இயல
இசை எல்லை எனும் ஆக்கம்
நேசத்தில் குருவிகளின் கீச்சொலி
ஏட்டில் ஒலிப்பதாய்க் கேட்க
சின்னக் கிள்ளைகளாய் மிழற்றும்
இசையும் அறியாத ஓசையென
கானமாய்ப் பதிந்திருக்க
வனம் கொள் மாதும்
மாயப் பறவையின் நிறம்
ஒன்றைப் பாடி நிற்க
துயர் எனும் குரலாய்
காவியத்தில் சங்கமிக்கும்
மென்மைதனை செப்பி
கின்னரகீதம் பொழியும்
பெயர் அறியா புனைவுப் பட்சி
எனவே புலம்பும் பாவின்
சங்கீதச் சருக்கம் நகும்
புள்ளின் கனவது எனும்
கவியின் பேரெல்லை
கண்டும் கேட்டும் உண்டும்
உயிர்த்தும் உற்றறிந்தும்
செவ்வனே விட்டுவிடுதலையாகி
அடைக்கலமாகுமோ இயல்பின்
பாற்பட்ட ஆக்கத்தில்