- இரவிச்சந்திரன்
1.மான்களுக்கு நட்புடைய புதிய காகித உறைகள்
உயிரியல் சரணாலயங்கள், பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகள் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக் உறைகள் அங்கு வாழும் உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தாகமுடியும் சம்பவங்கள் உலகம் முழுதும் நடந்துவருகின்றன. ஜப்பானில், நாரா என்ற நகரில் உள்ள மான்களை மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்படும் இத்தகைய உயிரிழப்புகளில் இருந்து காப்பாற்ற ஒரு புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் ஜப்பானின் தலைநகரமாக இருந்த நாரா என்ற இந்த நகரம் கயோட்டொவின் (Kyoto) தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் காணப்படும் சீக்கா வகை மான்கள் (Sika deers) இந்நகரின் பாரம்பரியச் செல்வமாக, நாட்டின் உயிரியல் சொத்தாகக் கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்துவருவதாகக் கருதப்படும் இந்த மான்களில் பெரும்பாலானவை இந்நகரின் மையத்தில் அமைந்துள்ள நாராப் பூங்காவில் சுதந்திரமாக உலா வரும் காட்சியைக் காணலாம். இப்போது இந்தப் பூங்காவில் மட்டும் 1203 க்கும் மேற்பட்ட மான்கள் வாழ்ந்துவருகின்றன. இவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுவரும் விலங்குகள். நாராப் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மான்களுக்கு சர்க்கரைச் சத்து இல்லாத திண்பண்டங்களைக் கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இவை பிளாஸ்டிக் உரையில் வருவதில்லை. ஆனால், பல பார்வையாளர்கள் இந்த உணவுகள் தவிர பிளாஸ்டிக் உறைகளில் பொதியப்பட்ட வேறு உணவுகளையும் மான்களுக்கு கொடுக்கின்றனர். பிளாஸ்டிக் உறைகளை ஆங்காங்கே விட்டுச்செல்கின்றனர். உணவு என்று கருதி மான்கள் இந்த பிளாஸ்டிக் உறைகளைத் தின்பதால், 2019ல் மட்டும் இங்கு 9 மான்கள் உயிரிழந்துள்ளன. ஒரு மானின் வயிற்றில் இருந்து 4 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் உறைகள் எடுக்கப்பட்டது. இவ்வாறு பிளாஸ்டிக் உறைகளை தின்பதால் மான்கள் உயிரிழக்கும் செய்தி நாரா நகரில் காகித நிறுவனம் நடத்திவரும் டக்காஷி நக்கமூரா (Takashi Nakamura) என்பவரை வேதனையடையச் செய்தது. இதே ஊரில் வடிவமைப்பாளராக இருக்கும் நண்பருடனும், அழகுசாதன நிறுவனம் நடத்தும் நண்பருடனும் இணைந்து நக்கமூரா இதற்கு ஒரு புதிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளார்.
அரிசி உமி (rice bran), மில்க் கார்ட்டன் (milk carton) ஆகியவை கொண்டு மான்களுக்கு கேடு ஏற்படுத்தாத, புதிய காகித உறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மான்களுக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் தின்பண்டங்களில் உள்ள அதே சத்துக்களை இந்தக் காகித உறைகள் கொண்டுள்ளன. இவற்றைத் தின்பதால் மான்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படுவதில்லை. இவை எளிதில் அவற்றால் செரிக்கப்படுகின்றன. ஜப்பான் உணவு ஆய்வுக்கூடத்தால் (Food research laboratory)பரிசோதிக்கப்பட்டு மான்கள் உண்பதற்கு இந்த உறைகள் பாதுகாப்பானது என்று சான்று அளித்துள்ளது. இத்தகவல், அசாஹி ஷிம்பன் (Asahi shimbun) என்ற ஜப்பானிய செய்திநிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மான்களுக்கு நட்புடைய இந்த உறை ஒன்றின் விலை 100 யென்/$0.095/0.73 பவுண்டு. சாதாரணப் பிளாஸ்டிக் உறை ஒன்று ஒரு சில சென்ட் விலைக்கு விற்கப்படுகிறது. பூங்காவிற்காக மட்டும் இல்லாமல், உள்ளூர் சுற்றுலா முகமை, உள்ளூர் வங்கி, மருந்துக் கடை உட்பட ஆறு நிறுவனங்களுக்கு நக்கமூரா 3500 உறைகளைத் தயாரித்து அளித்துள்ளார். ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சி உலகம் முழுவதும் உள்ள வனவிலங்குப் பூங்காக்களிலும் மேர்கொள்ளப்பட்டால், பிளாஸ்டிக் தின்று உயிரிழக்கும் வனவிலங்குகளைக் காப்பாற்றமுடியும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் நம்புகின்றனர்.
- அரை மில்லியன் சுறாக்களும், தடுப்பூசி மருந்தும்
கொரோனா தொற்றிற்கான தடுப்பூசி மருந்து தயாரிக்க உலகில் உள்ள அரை மில்லியன் சுறாக்கள் அழிக்கப்படவேண்டும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்லனர். அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ‘சுறா நண்பர்கள்’ (Shark allies) என்ற சுறா பாதுகாப்புக் குழு உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா தொற்றிற்கான தடுப்பூசி மருந்தை இரண்டு முறைகள் வழங்க, அரை மில்லியன் சுறாக்கள் அழிக்கப்படவேண்டும் என்று கூரியுள்ளனர்.
இந்த மருந்து தயாரிக்க, சுறாக்களிடம் இருந்து எடுக்கப்படும் லிவர் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. உலகில் பல நாடுகளிலும் இப்போது விஞ்ஞானிகள் தீவிரமாக கொரோனா தடுப்பூசி மருந்தை இந்த லிவர் ஆயிலைப் பயன்படுத்தி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்லனர். இந்த எண்ணையில் ஸ்குவாலீன் (Squalene) என்ற மருத்துவகுணமுள்ள பொருள் உள்ளது. இந்தப் பொருள் தடுப்பூசி மருந்தின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்த உதவும் பொருளாக (adjuvant) தடுப்பூசி மருந்துடன் சேர்க்கப்படுகிறது. ஒரு டன் ஸ்குவாலீன் எடுக்க சுமார் 3000 சுறாக்கள் கொல்லப்படவேண்டும். ஸ்குவாலீன் அடங்கியுள்ள கொரோனாத் தடுப்பூசி மருந்தை உலக மக்கள் அனைவருக்கும் ஒரு முறை வழங்க, 275,000 சுறாக்கள் தேவைப்படுகின்றன. கல்பர் சுறா (Gulper shark),, பாஸ்கிங் சுறா (basking shark) ஆகிய இரு சுறா இனங்களே அதிகமாக இந்த மருத்துவப்பொருளைக் கொண்டுள்ளன. இவை இப்போதே ஆபத்தை எதிர்நோக்கி உள்ள உயிரினங்கள். இவற்றின் எண்ணிக்கை ஏற்கனவே நாளுக்குநாள் குறைந்துவருகிறது. இந்நிலை தொடர்ந்தால், இந்த உயிரினங்கள் இன அழிவைச் சந்திக்கும். ஒரு மருந்தில் சேர்ப்பதற்காக அழியும்நிலையில் உள்ள ஒரு உயிரினத்தைக் கொல்வது எந்தவிதத்திலும் நீடித்த, நிலையான தீர்வாக அமையாது என்று சுறா நண்பர்கள் அமைப்புக் கூறியுள்ளது. அதிலும், குறிப்பாக, உயிர் கோபுரத்தில் உயர்ந்தநிலையில் இருக்கும் இந்த விலங்குண்ணிகள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் எப்போது முற்றிலுமாக அழிக்கப்படும், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும், இந்த நோய்க்கிருமிகள் வரும்காலத்தில் எந்தெந்த விதங்களில் மரபணு மாற்றம் (mutation) பெறும் என்பது போன்ற ஏராளமான வினாக்கள் பதில் இல்லாமல் நம் முன் விசுவரூபம் எடுத்து நிற்கின்றன. இதனால், தடுப்பூசி மருந்திற்காக சுறாக்கள் கொல்லப்படுவது ஒவ்வொருஆண்டும் அதிகமாகிக் கொண்டே போகும் என்று இந்த அமைப்பின் நிறுவன இயக்குனர் ஸ்டெஃப்பனி பிரண்டல் (Stefanie Brendl) கூறியுள்ளார். சுறாக்களின் இன அழிவைத் தடுக்க, ஸ்குவாலினுக்கு மாற்றான பொருளை நொதிக்கப்பட்ட கரும்புச்சாற்றில் (fermented sugarcane) இருந்து செயற்கைமுறையில் தயாரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஸ்குவாலீன் எண்ணெயில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், அழகுசாதனப்பொருட்கள், இயந்திர எண்ணை, மருந்துகள் தயாரிக்க சுமார் மூன்று மில்லியன் சுறாக்கள் கொல்லப்படுவதாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
திடீரென்று லிவர் எண்ணெயின் தேவை அதிகரிக்கும்போது, சுறா இனம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் என்று சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். ஸ்குவாலினுக்கு மாற்றான பொருள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, சுறாக்கள் ஒட்டுமொத்த அழிவில் இருந்து காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் சூழல் அறிஞர்கள் காத்திருக்கின்றனர். - பறவைகளைப் பாதுகாக்கும் தீயணைப்புப் படையினர்
மார்ச் 15 முதல் செப்டம்பர் 30, 2020 வரை உள்ள காலத்தில் 2400க்கும் மேற்பட்ட பறவைகளை டெல்லி தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளதாக, அதன் இயக்குனர் அதுல் கார்க் (Atul Garg) கூறியுள்ளார். பறவைகள் மற்றும் விலங்குகளை மீட்பதற்கான அழைப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது, அதிகம் வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த சமயத்தில் மக்கள் பட்டங்களைப் பறக்கவிடும் காலம். மரக்கிளைகளில் இவை சிக்கிக்கொள்ளும்போது அறுந்துபோகும் நூலில் மாட்டிக்கொண்டு பல பறவைகள் ஆபத்தை எதிர்நோக்குகின்றன. டெல்லி தீயணைப்புத்துறையினரின் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, குறிப்பிட்ட இந்த காலத்தில் மட்டும், மீட்பிற்கான 13,271 அவசர அழைப்புகள் வந்தன. இதில், ஒரு நாளைக்கு சராசரியாக 150 முதல் 200 அழைப்புகள் என்ற கணக்கில், 2,433 பறவை மற்றும் 1,681 விலங்குகளை மீட்பதற்கான அழைப்பு வந்துள்ளன. வழக்கமாக, இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாகிறது. 2020ல், டெல்லி தீயணைப்புப் பிரிவிற்கு (Delhi Fire Services DFS) பறவை மீட்பிற்காக 882 அழைப்புகளும், விலங்குகளை மீட்பதற்காக 345 அழைப்புகளும் வந்தன.
பறவைகளில் காகம், புறா, கிளி போன்றவையும், விலங்குகளில் பசு, மற்ற கால்நடை, நாய், பூனை போன்றவையும் தீயணைப்புப் படையினரால் அதிகமாக மீட்கப்படுகின்றன. பட்டங்கள் அறுந்து அதன் நூல் மரங்களில் மாட்டிக்கொள்வதால் பறவைகள் ஆபத்துக்கு உள்ளாகின்றன. குறுகலான சந்துகள், மூடப்பட்ட இடங்கள், வீட்டில் உள்ள குழிகள், வாய்க்கால், சாக்கடைகள் போன்றவற்றில் விழுவதால் விலங்குகள் ஆபத்தை சந்திக்கின்றன. மீட்புப் பணிகளின்போது, நான்கைந்து தீயணைப்புப் படையினருடன் ஏணி போன்ற சாதனங்கள் கொண்ட ஒரு மீட்பு வாகனம் உடன் அனுப்பப்படுகிறது. உயரமான கட்டிடங்களில் பறவைகள் சிக்கிக்கொண்டால், அதை மீட்க, பெரிய வாகனமும் அனுப்பப்படுகிறது. மீட்கப்பட்ட பறவை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தால், மேற்சிகிச்சைக்காக படையினர் அதை டெல்லியில் உள்ள பறவை நல மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.
செப்டம்பர் 28, 2020 அன்று செக்டர் 21, ரோஹினி காவல் நிலையத்தில் இருந்து தீயணைப்புப் பிரிவிற்கு அங்கு உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் குழியில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு பசுவை மீட்கக் கோரி ஒரு அவசர அழைப்பு வந்தது. கயிறு மற்றும் உள்ளூரில் கிடைத்த உபகரணங்களின் உதவியுடன், தீயணைப்புப் படையினர் பொறுமையாகப் பல மணிநேரம் போராடி அதை உயிருடன் மீட்டனர். பறவைகள், விலங்குகளை மீட்பதில் பல சவால்கள் உள்ளன. அவை மாட்டிக்கொள்ளும் இடங்களை படையினர் சுலபமாக அணுகுவது பெரும் சிக்கலாக உள்ளது. மீட்பிற்காக சிறப்பு உபகரணங்கள் எவையும் தீயணைப்புத் துறையினரிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான நேரங்களில், உயரமான கட்டிடங்களில் ஏற்படும் தீயை அணைக்க உபயோகிக்கப்படும் நீர்மேடை (Hydrolic platform)பயன்படுத்தப்படுகிறது.அறுந்துபோன பட்டங்களின் நூலால் சுற்றப்பட்டு, மரங்களில் மாட்டிக்கொள்ளும் பறவையை மீட்கச் செல்லும்போது, படையினரின் ஒரு காலடியைத் தவறாக எடுத்துவைத்தால் கூட, மரக்கிளை உடைந்து கீழே விழுந்துவிடும். அப்போது, கிளையுடன் சேர்ந்து பறவையும் கீழே விழுந்து இறக்க நேரிடும். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், படையினரின் மீட்புப் பணி மொத்தமும் பாழாகிவிடும். பொதுவாக, படையினர் பறவை அல்லது விலங்கை மீட்பதற்கு, வழக்கமாகப் மேற்கொள்ளும் செயல்முறைகளைப் பின்பற்றுவதில்லை.
குறிப்பாக, பறவை மீட்புப் பணிகள் சவால் நிறைந்தது. சிறப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில், படை வீரரின் சமயத்திற்கு ஏற்றவாறு அறிவைப் பயன்படுத்தும் திறன், கை தேர்ந்த அனுபவம், கடல் அளவு பொறுமை ஆகியவையே பறவைகளை வெற்றிகரமாக மீட்க உதவுகிறது. மீட்புப் பணி நடைபெறும் குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் பொருட்களும், மீட்பிற்கான ஏற்பாடுகளும் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மனித உயிர்களைப் போலவே மற்ற எல்லா உயிர்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டு, மனித உயிர்களை மீட்பதில் காட்டும் அதே அளவு அர்ப்பணிப்பு உணர்வுடன் டெல்லி தீயணைப்புப் படையினர் பல காலங்களாக பறவை, விலங்குகளை மீட்டுவருகின்றனர். சக உயிர்களையும் தம் உயிர் போல் மதித்து டெல்லி தீயணைப்புப் படையினர் செய்துவரும் இந்தச் சேவைகள் பாராட்டுதலுக்கும், வாழ்த்துதலுக்கும் உரியது.
