- 1
மூட்டையாய் நெரியும் சந்தடியில்
மூச்சுக் கரங்களால் பிடரியை வருடியபோது
பார்வைகளின் மோதலில் தெறித்த நட்சத்திரம்
உள்ளக் குழியில் பற்றிச் சிதறியது
திக்கும் திசையும்
ஊரும் ஒதுக்கமும் அறியாதபோதும்
எண்ண வலையில் சிக்குண்ட முயல்
திமிறிக் கிடந்தது
தியான வீச்சின் விளைவோ, என்னவோ
மறுபடியும்
திரும்பத் திரும்பக் குறுக்கிடும் பாதை
மையமிட்ட புயலாய்
சுழற்றி வந்துச் சேர்த்தது
குறுக்கிடும் வெள்ளப் பெருக்காய்
அரிதாரம் பூசிய நபர்கள்
எங்கும்
மேடு பள்ளம் காத்தார்கள்
அணை உடைந்து பீறும்
வெள்ளம்
அடித்து நிரவி கடல் வந்து சேர
காலங்களை அடைகாத்து
தகிப்பைத் தணிக்க வழிதேடும்
தோப்பில் ஒரு வகை மரம்
நான்
கூட்டி விழுங்கிய வார்த்தைகளை
வெந்து தகிக்கும் பெருமூச்சாய்
துப்பும் பகல் விழுங்கிய இரவு.
மறு ஆட்டம் நிகழ்த்த
ஊளையில் உறவாடத் திரியும்
சந்தடியைத் தின்று முடித்த சாலையைச்
சந்திக்கும் வாசல்
கதவை அசைத்து இரவை சபிக்கும்
சதுரத்துள் அடைக்கப்பட்ட
உறவை எண்ணி
சதுரத்துள் சுருண்டு மூலைகளில் முட்டி
இடறி விழும் பூச்சியாய் கட்டவிழும் தினவு
கரைந்த
பறவைகளின் ஒலிக் கீற்றுகள்
மறுபடியும் தலைநீட்டி
வெளிர வெளிர உயிர் தொட்டு அசைக்கும்
போர்த்தி முடங்கிய உணர்வு
கொப்பளித்து வெளிக் கிளம்பி அடங்கும்
அலையும் மனது
தெரு நாயாய் அலைய மந்திரிக்கப்பட்டு
யுகங்களாச்சு
- 2
வேகம் கூட்ட வேகம் கூட்ட
சிறு சிறு துளிகள் நிறைத்து நனைக்கும்
எனும் அறிவற்றுப் போனேன்.
உன்னருகே
மெதுவாய் வந்திருந்தால்
உனைச் சுற்றி நிறைந்திருக்கும் காற்றில்
கலந்த உன் மூச்சாவது
எனக்கு இதம் தந்து சுகம் கூட்டியிருக்கும்.
யாரென்று அறியாததாயினும் பரவாயில்லை
மின்னல் வெட்டும் நேரத் துளியில்
என் விழிகள் உன்னைக் கவ்விக் கொண்ட
பார்த்த முதல் கணம்.
கவனம் என் மீதுப் படராதிருந்தும்
உன் பக்கம் நெருங்க பயம் வந்து அரட்டி
சிறு நடுக்க அதிர்வு.
பரிமாற்ற அன்பு
இரு பாலருக்கும் ஒன்று தானே?
பதிந்த விழிகளுக்கு
உன் பிம்பத்தை அழிக்கத் தெரியவில்லை
என்றாவது ஒரு நாள்
கைக் கூடும் என்பதில்லை.
