- மயிலம் இளமுருகு
இலக்கியம், சினிமா சார்ந்து தொடர்ந்து இயங்கி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜா.தீபா. தன்னுடைய பள்ளிப்பருவம் முதற்கொண்டே இலக்கியப் பரிச்சயம் உடையவராக இருந்துள்ளார். அக்காலத்தில் பேசப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளைத் தேடித்தேடி வாசித்து, தன்னை மெறுகேற்றிக் கொண்டு தற்போது தன் படைப்புகளின் வழி முன்னிற்கின்றார். குறிப்பாகப் பெண் படைப்பாளர்களில், கவனத்திற்குரியவராக விளங்குகிறார். சினிமா பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இன்று திறம்படச் செயலாற்றி உரிய இடத்தைப் பெற்றுள்ளார்.
முன்பு, பல்வேறு மொழிகளைக் கொண்டு உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிற இந்த உலக இயக்குனர்களின் உரையாடல்கள் தீவிரச் சினிமா விரும்பிகளின் சொத்து என்றே நான் கருதுகிறேன்’ என உலக இயக்குநர்களின் உரையாடல்களை ‘மேதைகளின் குரல்கள்’ என்ற தலைப்பிலான நூலைச் சார்ந்த உலகத்திற்குக் கொடுத்திருந்தார். ‘பெண்ணென்று சொல்வேன்’ என்ற நூலையும் ‘மாதர் திரையுலகு‘ என்ற நூலில் பெண் இயக்குனர்களின் கலை ஆளுமையைச் சிரத்தையோடு பதிவு செய்திருந்தார். தற்போது உலகின் ஆகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களின் உரையாடல்களைத் தமிழில் தந்து திரைத்துறை, இலக்கிய ஆர்வலர்களுக்கு நன்மை செய்துள்ளார். இயல்பாகவே தனக்குப் பிடித்த ஒரு செயலைச் செய்யும்போது அதில் ஈடுபாடும் மகிழ்ச்சியும் இருக்கும். இப்பண்பினைப் பெற்றவராக நூலாசிரியரும் இருந்துள்ளார். எளிய சொற்கள், மூலநூலில் சொல்லப்பட்ட கருத்துகளை அழகுபடக் கூறியவிதம், சொல்தேர்வு என்பவை வாசகருக்குப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன.
திரைத்துறை சார்ந்தவர்களுக்கு ஓர் வழிகாட்டி நூலாக இந்நூல் திகழ்கிறது எனக் கூறுவது மிகப்பொருத்தமாக இருக்கும். நூலின் அட்டைப்படம் அருமையாக அமைந்து படிப்பவரைக் கவர்வதாக உள்ளது. நூல் வடிவமைப்பு, நூல்கட்டு, அச்சாக்கம் என்பன சிறப்பானதாக இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் செழியன் தன் உள்ளக்கிடக்கையை அழகாக வெளிப்படுத்தி வாசகருக்கு ஒரு நல்ல புரிதலைத் தந்து நூலை வாசிக்க வழி அமைத்துள்ளார். ஒளிப்பதிவு, நுட்பம், காட்சிப்பதிவு என்று கூறி ‘ ஒரு திரைப்படத்தின் அழகை முழுமையாக உணர வேண்டுமெனில் நீங்களும் ஒரு ஒளிப்பதிவாளராக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளதின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிகின்றது. நூலாசிரியரே நூல் எழுந்ததற்கான காரணத்தை ‘ ஒளியமைப்பு சார்ந்து புதிய தொழில்நுட்ப அனுபவத்தினைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களுக்கும் இதுபோன்ற முயற்சியில் இருப்பவர்களுக்கும் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் அவசியமானது என்பதையும் உணர்ந்தேன்’ என்று கூறியுள்ளமை மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. இந்நூலில் எட்டு ஒளிப்பதிவாளர்களின் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் தங்களுடைய தொழில்நுட்ப ரகசியங்களையும் அனுபவங்களையும் தன் இளமைக்கால வாழ்க்கையையும் இயல்பாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
வளரும், வருங்கால ஒளிப்பதிவாளருக்கும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியிருக்கின்றனர். ஒளிப்பதிவாளர்கள் தனக்குப் பிடித்தத் தொழில் இது என்றும், இந்த இடத்திற்கு வருவதற்குத் தான்பட்ட அனுபவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொழிபெயர்ப்பாளர் ஜா.தீபாவின் தூரிகையில் அந்த உரையாடல்கள் உயிர் பெற்றுள்ளன.
ஒவ்வொரு ஒளிப்பதிவாளர்கள் குறித்து முதலில் தந்துள்ள அறிமுகம் சிறப்பானதாக உள்ளது. ஒவ்வொரு உரையாடலின் இறுதியில் அவர்கள் ஒளிப்பதிவு செய்த திரைப்படங்களின் பட்டியல் ஆண்டு அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர்கள் தாங்கள் பயன்படுத்திய ஒளியமைப்பு, கேமரா நுட்பங்கள், லைட்ஸ் என்பன குறித்துக் கூறியுள்ள செய்திகளைப் படிக்கின்றபோது வியந்து போகின்றோம். இந்நூலில் நீண்ட உரையாடலாகப் பில் பட்லரின் உரையாடல் அமைந்துள்ளது. (23 பக்கம்) ஓபன் ராய்ஸ்மானிடத்து கண்ட உரையாடல் குறைந்தளவு உள்ளதாக இருக்கிறது. (14 பக்கம்) நேர்கண்டவர் அந்தந்த ஒளிப்பதிவாளர்களிடத்துத் தக்க சிறப்பான சமயோசித வினாக்களையே பெரும்பாலும் கேட்டு அசக்தியுள்ளார். அனைத்து ஒளிப்பதிவாளர்களுமே உரிய விடைகளை நேரடியாக, தெளிவுபடக் கூறியுள்ளனர். மைக்கேல் சேப்மேன் தந்த 31 வினாக்களுக்குரிய பதில்கள் நம்மை வியப்படைய வைக்கிறது . அதேபோல் ஓவன் ராய்ஸ்மான் 18 வினாக்களுக்குத் தக்க பதில்களைச் சிரத்தையோடு பகிர்ந்துள்ளமை கவனிக்கத்தக்கது. இந்நூலில் உள்ள 150 பக்கங்களை வாசிக்கும் போது உலக ஒளிப்பதிவாளர்களுடன் இருக்கின்ற நெருக்கத்தை இந்த மொழிபெயர்ப்பு நூல் தந்து நமக்கு ஆச்சர்யத்தை ஊட்டுகிறது.
நெஸ்டர் ஆல்மன்ட்ராஸ் முதலில் ஆசிரியராகவும் பின் ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து தன் திரைவாழ்க்கையைத் தொடங்கினார். இவரைப்போன்றே முதன்முதலில் ஆவணப்படத்தில் ஜான் அலான்சோ பணியாற்றினார். ஜான் பெய்லியும் மரியோ டாஸியும் முதன்முதலில் ஒளிப்பதிவாளரிடத்து உதவியாளராக இருந்து கற்றுக்கொண்டே பின்னே ஒளிப்பதிவு துறையில் நுழைந்து வெற்றி கண்டனர். பில் பட்லர் தொலைக்காட்சி நிலையத்தில் பணியாற்றி இத்துறைக்கு வந்தார். மைக்கேல் சேப்மன் கேமரா ஆப்ரேட்டராக இருந்து பின் ஒளிப்பதிவாளரானார். ஓவன் ராய்ஸ்மான், பில்லி வில்லியம்ஸ் ஆகிய இருவரின் அப்பாக்களும் ஒளிப்பதிவாளர்களே. இவர்களிடத்து அதிகமான நுட்பங்களைக் கற்றுப் பின்னாளில் உலகச் சினிமாவில் கால்பதித்து வெற்றி அடைந்தனர். காட்சிகளுக்கேற்ற உரிய எந்த லைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவை இந்த உரையாடல்கள் சொல்லித் தருகின்றன. நூலிலுள்ள நடை ஆற்றொழுக்காகச் செல்வதைப் படிக்கும் வாசகர்கள் உணர்வர். இயக்குனர்களுக்கும் ஒளிப்பதிவாளருக்கும் எத்தகைய நட்பு இருக்க வேண்டும் என்ற புரிதலை இந்நூல் காட்டிச் செல்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவாளர்கள் எப்படிப்பட்ட பொறுப்புடையவர்கள் என்பதையும் இந்த உரையாடல்கள் சொல்லித் தருகின்றன. வெளிப்புறப் படப்பிடிப்பு, அரங்கப் படப்பிடிப்பு குறித்த வினாக்களுக்கு ஒளிப்பதிவாளர்கள் அவரவர்க்கான வேறுபட்ட பதில்களைத் தந்து அசத்தியிருக்கின்றனர்.
நடிகர்களிடம் நடந்துகொள்ளும் விதம், கேமராப் பயன்பாடு, பல்வேறு விதமான லைட்களைப் பயன்படுத்தி எடுக்கும் முறைகளை, இந்நூலின் வழியாக அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக ஆர்க் லைட்டுகள் , பவுன்சோ, ஃபில் லைட், ஸ்பாட் லைட், பேக் லைட், பிரன்ட் லைட், வார்ம் லைட், ஹார்டு லைட், டாப் லைட், கிராஸ் லைட், ஃபில் லைட், கீ லைட், பவுன்ஸ் லைட், லைட் பிக்ஷர்ஸ், லோ லைட் எனப் பல்வேறு ஒளி நுட்பங்கள், ஒளியமைப்பு போன்றவற்றை இந்நூல் நமக்கு அதுசார்ந்த அறிவினைச் சொல்லித் தருகின்றன. இந்நூலில் உரிய இடத்தில் தேவையான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அது மேலும் தெளிவையும் புரிதலையும் ஏற்படுத்துகிறது. தன்னுடைய பணியில் திருப்தி தந்த படங்கள் எதுவென்று ஒளிப்பதிவாளர்கள் கூறியுள்ளனர். இவர்களின் பதில்கள் வாசகருக்கு அதிகமான கற்றுத்தருதலை விதைக்கின்றன. நேரத்தின் அவசியம், முக்கியத்துவம் குறித்து ஆல்மன்ட்ராஸ் பின்வருமாறு கூறுகிறார். மாய ஒளி’ நேரம் (Magic Hour) சூரியன் மறைந்த பிறகு படம்பிடிப்போம். சூரியன் மறைந்த பிறகு இருபது நிமிடங்கள் கழித்துதான் இருள் வரும் . இடைப்பட்ட அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய அழகான ஒளியைப் பயன்படுத்துவோம். (பக்கம்- 23) என்கிறார். ஒளிப்பதிவாளர்களின் சவால்களை இந்நூல் விளக்குகின்றது. நூலின் தலைப்பிற்கேற்ற விடைகள் அனைத்து நேர்காணலிலும் உள்ளன. ஒளிப்பதிவாளர்கள் தனக்கு உடன்பாடு இல்லாதவைகள் குறித்தும் நல்லனவற்றைப் பாராட்டவும் செய்வர் என்பதையும் இந்த உரையாடல் நமக்குத் தெளிவாக்குகிறது.
ஆரம்பத்தில் செய்த செயல்களும் பின் மாறிய பாதைகளையும் ஒளிப்பதிவாளர்கள் கூறியுள்ளனர். அவர்களிடத்து உள்ள நல்ல பண்புகள், விருப்பங்கள், விடாமுயற்சி, பொறுமை, தலைமைப்பண்பு போன்றவற்றைச் சொல்லித் தருகிறது. தான் அடைந்த அனுபவம், தொழில் நுணுக்கங்கள் குறித்து ஒளிப்பதிவாளர்கள் கூறி, தன் பின் வருபவர்களுக்கு வழி அமைத்துள்ள பாங்கினை உணர முடிகின்றது. நல்ல தெளிவு , நேர ஒழுங்கு பற்றிய புரிதல், உழைப்பு, ஆதங்கம், நேரும் சிக்கல்கள், சமயோசிதப் புத்தி எனப் பலவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தை இந்நூல் தருகிறது. தன் இயல்பை, காரணத்தைக் கூறி ஒத்துக்கொள்ளும் பண்பு என ஒளிப்பதிவாளர்களின பண்பு பாராட்டப்பட வேண்டியது. இடம், வெளி சார்ந்து படம் எடுக்கும்போது நிகழும் சாதகப் பாதகங்கள் அழகுபடக் கூறப்பட்டுள்ளன. படத்தை எப்படித் தேர்வு செய்ய வேண்டும், கம்போஷிங் செய்ய வேண்டும் எனப் பல்வேறு தகவல்கள் இந்நூலில் உள்ளன. நூலில் நிறைகள் அதிகம் இருந்தாலும் சில குறைகளும் உள்ளன. ஓரிரு எழுத்துப்பிழைகள் , சிலவிடங்களில் சொற்களுக்கிடையிலான இடைவெளி இல்லாமை, சில வினாக்களுக்கு Bold செய்யாமல் விட்டமை என்பன உள்ளன. உள்ளே என்று தலைப்பிட்ட பொருளடக்கத்தில் பக்க எண்கள் இரண்டு தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ( 113- 117 ஆகவும், 127- 123 ஆகவும்) தரப்பட்டுள்ளன. 47 ஆம் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் இயக்கிய படங்கள் 1 என்று துவங்காமல் 36 என்று தொடங்குகிறது. இப்படிச் சிலவற்றைக் கவனித்து இருக்கலாம். ஆனால் தமிழில் இத்தகைய நூல்களின் வரவு இல்லாத சூழலிலும் நூலாசிரியரின் ஆர்வமும் உழைப்பும் போற்றுதலுக்குரியது. மொழிபெயர்ப்பு நூலென்று தெரியாமலேயே இந்நூல் நம்முள் பயணம் செய்யக் காரணமான ஆசிரியருக்கு நன்றிகள். மேலும் பலநூல்களைப் படைத்துத் தாருங்கள் என்று வலியுறுத்தி வாழ்த்துகிறோம். இத்தகைய சிறப்பான நூலை நல்ல முறையில் வெளியிட்ட டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.