- நெல்சன்
மவ பிரசவத்துக்கு
ஒத்தாசைக்கு ஊருக்கு
போன அம்மா
எதையுமே மறக்கல
பேறுகால சாமான்
நாட்டுக்கோழி முட்ட
தோட்டத்துல
வெளஞ்ச வாழ,
பப்பாளி
கொய்யா
தேங்கா
கொழந்தைக்கு தாய்ப்பால்
சுரக்க வெந்தியம்
நிலப்பூசணி
பாதாம்
ரெண்டு வருசமா சீட்டுக்கட்டி
வாங்கிவச்ச தங்கச்சங்கிலினு
எதையுமே மறக்கல.
புருசன்காரன் சரியா
தண்ணி காட்டாம
காஞ்சிப்போன
ரோசாச்செடிக்கு
வீடியோ காலுல
ஒப்பாரி வச்சி
முந்தானையில
மூக்க சிந்தும்போதுதான்
தெரிஞ்சிச்சி
எல்லாத்தையும்
கொண்டுபோன அம்மா
மனச மட்டும்
வீட்லயே பதியம் போட்டு
வச்சிருக்குனு.
வீட்டு நெனப்புல
ஒடஞ்சி அழும்போது
என்னையும் உன்னையும் விட
ரோசாச்செடிய கட்டிபுடிச்சி
அழறதுக்குதான் உங்க அம்மாவுக்கு
வாச்சிருக்கு அழட்டும்ங்கிறார் அப்பா .
வாழ்க்க புரிஞ்சும் புரியாமலும்
சிரிக்கன் நான்.