- புதுவை யுகபாரதி
இளங்கோ என்னும் பெயர், தமிழர்கள் அனைவருக்கும் விருப்பமான பெயர். அரசியலை வைத்து வணிகம் செய்வோர்க்கு அறத்தைக் கூற்றாக்கியவர். இல்லற ஒழுக்கத்தைப் பேணுகின்ற பெண்களுக்கு மறத்தை ஊற்றாக்கியவர் நல்லோர்க்கும் தீயோர்க்கும் அவரவரின் செய்வினையை நற் பே(ற்)றாக்கியவர். முத்தமிழ் நாட்டின் நுண்கலைக் கருவூலகங்களையும், வாழ்வியல் பண்பாட்டு அறங்களையும், அரசியல் அறங்களையும் எடுத்துச் சொல்வதற்காக மக்கள் காப்பியம் படைத்தவர். அக்காப்பியத்தில் ஒரு பெண்ணை நாயகியாக்கிப் புதுமை செய்தவர். இவை எல்லாவற்றையும் விடக் கணியர்கள் கணித்துச் சொன்னதை மூடத்தனம் என்று மெய்ப்பிக்க அரசர் இனம் துறந்து அடிகளானவர். அதனால்தான், பாரதி, யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை! உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!
என்று பாடினார்.
கொ.மா.கோ. இளங்கோ அவர்கள். சிலம்பு தந்த அந்த இளங்கோவின் பெயரில் குழந்தை இலக்கியம் படைத்து வருபவர். இலக்கிய இணையர் இராசேசுவரி-கோதண்டம் என்னும் புகழ்ப் பெற்றோர்க்குப் புகழ் மகனாய் அவர்களின் இலக்கியத் தடத்தில் இயைந்து பயணம் செய்து வருபவர். குறிப்பாக, குழந்தை இலக்கியத் தளத்தில் ஒரு படைப்பாளராக, ஒரு செயற்பாட்டாளராகத் தொடர்ந்து இயங்கி வருபவர். இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறார் இலக்கிய நூல்களைப் படைத்தளித்துள்ளவர். இவற்றுள், பாடல் நூல்கள், கதை நூல்கள், புதினங்கள், குறும்புதினங்களும் அடக்கம்.
இவரின் குழந்தை இலக்கிய நூல்களுக்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் -கலைஞர்கள் சங்கமும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இன்னபிற அமைப்புகளும் பரிசும் விருதும் அளித்துச் சிறப்பித்துள்ளன.
அண்மையில் இவர், “சஞ்சீவி மாமா” என்ற சிறுவர் புதினத்தைப் “பாரதி புத்தகாலய”த்தின் மூலம் வெளியிட்டுள்ளார். ‘இந்தியாவுக்கு நேரு மாமா! இந்தத் தெருவுக்கு யாரு மாமா? என்று கேட்டு, அதற்குச் “சஞ்சீவி மாமா” என்று மறுமொழியளிக்கும் அட்டைப்படத்துடன் இந்தச் சிறுவர் புதினத்தைத் தொடங்குகிறார். இளம் அகவையில் தான் சஞ்சீவி மாமாவாக மாறுவேடப் போட்டியில் பங்கேற்றுப் பரிசுபெற்ற நிழற்படச் செய்தியோடு புதினத்தை நிறைவுசெய்கிறார். இதற்கிடையில், உண்மை நிகழ்வுகளோடு புனைவையும் இணைத்துப் புதினத்தை நகர்த்திச் செல்கிறார்.
இப்புதினம், 1990ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்த குளத்தூர் என்ற சிற்றூரின் திடீர்நகர் என்னும் குடியிருப்பின் வாழ்வியலை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. ஒரே வரிசையில் (லைன் வீடுகள்) ஒன்றொன்றுக்கொன்று மாறுபாடு இல்லாமல் கட்டப்பட்ட வீடுகள் அமைந்த தெருக்களைத் திடீர்நகர்க் குடியிருப்புக் கொண்டிருக்கிறது. அந்தத் தெருக்களில் ஒரு தெருவில், பேச்சிராசு வாழ்கிறான். இவன் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவன். அந்தத் தெருவைத் தூய்மை செய்யும் பணியாளர் சஞ்சீவி. மாந்தக் கழிவை அள்ளும் மாந்தத் தோட்டி அவர். அவருடைய பொறுமையும், பணிவும் பேச்சிராசுவை ஈர்க்கின்றன. பேச்சிராசு அவரை “மாமா” என்று அழைக்கிறான். “வாடா, போடா” என்பனவற்றைத் தாண்டி வாயால் சொல்லமுடியாத சொற்களால் அழைக்கப்பட்டு வந்த தோட்டி சஞ்சீவிக்குப் பேச்சிராசு “மாமா” என்றழைத்தது “பல்லக்குச் சுமந்தவனைப் பல்லக்கில் வைத்துச் சுமந்ததுபோல்” இருந்தது. அதுமுதல் இருவரும் அன்பாகப் பழகத் தொடங்கினர்.
ஒருமுறை, பள்ளியில் கிட்டிப்புல்லால் அடிபட்டுக் குருதிக் காயத்தோடு வீடுதிரும்பும் வழியில் பேச்சிராசுவுக்கு, மூலிகைச் செடியின் சாற்றை மருந்தாக்கித் தன் துண்டின் ஒருபகுதியைக் கிழித்துக் கட்டுப்போட்டு ஆறுதல் சொல்கிறார் சஞ்சீவி. இது முதல் இருவரின் பழக்கம் வளர்ந்து தொடர்கிறது. ஊரில் மழை இல்லை என்ற காரணத்தால், கோயிலில் “ஜக்கம்மா”வின் வாக்கு என்ற பெயரால் சஞ்சீவியின் மகனை மொட்டையடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, செருப்பு மாலை போட்டு, கழுதைமேல் ஏற்றி ஊரைச் சுற்றிவரச்செய்து கொடுமைப்படுத்தியதையும், அதைக்கண்டு சஞ்சீவி அழுது புரண்டதையும் கண்ட பேச்சிராசுவுக்கு அவர்மீது உயிர் இரக்கம் ஏற்படுகிறது. அதனால் இருவரின் நட்பும் உறவும் மிக ஆழமான ஒன்றாக வேரூன்றி வளர்கிறது. தந்தை வேலை செய்யும் பஞ்சாலையில் தொழிலாளர் நாள் கொண்டாடப்படவுள்ளதைத் தந்தையின் மூலம் அறிகிறான் பேச்சிராசு.
பஞ்சாலை விழாவில் நடத்தப்படவுள்ள மாறுவேடப் போட்டியில் பேச்சிராசுவைக் கலந்துகொள்ளச் சொல்கிறார் தந்தை. பேச்சிராசு ஒரு தோட்டியாகச் “சஞ்சீவி மாமா” வேடம் போடப்போவதாகத் தன் விருப்பத்தைச் சொல்கிறான். தாழ்த்தப்பட்ட அதுவும் தொழிலாளியின் வேடத்தைப் போடுவதா? என்று அனைவரும் மறுக்கின்றனர். பேச்சிராசு தொடர்ந்து அடம்பிடிக்கவே, தந்தை ஒப்புக்கொள்கிறார்.சஞ்சீவியிடம் இருந்து அவருடைய கருவிகளை வாங்கிக்கொண்டு அப்பாவின் காக்கி கால்சட்டையுடன் அச்சுப்பிறழாத தோட்டியாகச் “சஞ்சீவி மாமா”வாகத் தோன்றித் தூய்மைப் பணியாளர்களை மதிக்காது கீழ்த்தரமாக நடத்துகின்ற இக்குமுகக் கொடுமைகளை முழங்கி எடுத்துரைத்து முதல் பரிசைப் பெறுகிறான் பேச்சிராசு. இதுதான் இப்புதினத்தின் கதைச் சுருக்கம். பேச்சிராசுவுக்கு அளிக்கப்பட்ட பரிசுக்கோப்பையில் “சஞ்சீவி மாமா” என்று பெயர்பொறிக்கச்செய்து, வீட்டுக் கதவைத் தட்டிச் சோறு கேட்கக்கூடாது என்ற நிலையில் இருந்த தோட்டியரின் வாழ்வில், ஒரு தோட்டியின் பெயரில் அமைந்த கோப்பையை வீட்டு வரவேற்பு அறையில் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் வைக்கும்படி பேச்சிராசுவின் மூலம் சிந்தித்துத் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட இந்நூலாசிரியர் கொ.மா.கோ. இளங்கோ மிகுந்த பாராட்டுக்குரியவர். கொரானா நோய்த்தொற்றுக் காலத்தில், இந்தியாவின் தலைமை அமைச்சர் (பிரதமர்) முதல் அனைத்து உயர் பதவியாளர்களும், முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணிகளைக் கைகள் தட்டி போற்றுவதோடு, அவர்களின் கால்களைத் தூய்மை செய்து மேன்மைபடுத்தும் நிகழ்வுகளும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால், இதற்கு முன்பே இளங்கோ அவர்கள் ஒரு படைப்பாளியாகத் தம் படைப்பின் வாயிலாகத் தூய்மைப் பணியாளரைக் கதையின் தலைமையாக்கி, இதைச் செய்து காட்டிவிட்டார். அறம்மிகுந்த எழுத்தாளர்களின் கனவுகள் நிறைவேறும் என்பதற்கு இற்றை நாளில் தூய்மைப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் மதிப்புகளே சான்று பகர்கின்றன.
இந்தப் புதினத்தில், அற்றைக் காலத்தில் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து, பாவைக்கூத்து, கரகாட்டம், பொய்க்கால் குதிரை, வில்லுப் பாட்டு, மேடை நாடகம் போன்ற கலைகள் குறித்த செய்திகளைப் பதிவுசெய்கிறார். சிற்றூர்ப் புறங்களில் விளையாடிய கிட்டிப்புள், கிச்சுக்கிச்சுத் தாம்பூலம், கோலிக்குண்டு, ஏத்தியா பித்தியா, கண்ணாமூச்சி, பாண்டி போன்ற விளையாட்டுகளையும் பதிவு செய்கிறார். அப்பகுதியில் அதிகமாகப் பறக்கும் கரிச்சான் குருவி, ஆட்காட்டிக் குருவி போன்றவற்றைப் பதிவுசெய்துள்ளார். அக்காலத்தில், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விரும்பிச் சாப்பிட்ட சவ்வு மிட்டாய், பப்பர் மிட்டாய், தேன் மிட்டாய், ஆரஞ்சு, பஞ்சு மிட்டாய், கொக்கோ மிட்டாய், கம்மங்கதிர் மிட்டாய் போன்ற மிட்டாய் வகைகளையும் குறிப்பிடுகிறார். டமர டமர டமர டமர டமர டம்…. டமர டமர டமர டமர டமர டம்…. என்ற மேளம் ஒலித்துக்கொண்டு செல்லும் “சினிமாக்கொட்டகை” விளம்பர வண்டிக்காரர், பலூன் விற்பவர், ஐஸ் வண்டிக்காரர், சோன்பப்டி விற்பவர் போன்ற சிற்றூர்ப்புற வியாபாரிகள் ஆகியோரும் இப்புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
சருவத்தாள், சொளவு, வெள்ளன, உப்புக்கண்டம், தமுக்கு, கொட்டாயி, வெஞ்சனம் போன்ற தென்தமிழகத்தில் புழங்கும் சொல்வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவற்றுக்கான பொருள்களும் அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளன. இப்பதிவுகள் அனைத்தும் நூலாசிரியரின் கூர்மையான குழந்தைப் பார்வையை எடுத்துக்காட்டுகின்றன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒரு கைப்பிடி மாட்டுச் சாணத்தை வைத்துவிட்டுப் போகிற பட்டம்மாள், மரத்தடியில் அமர்ந்துகொண்டு முடிதிருத்தும் தாத்தா, கண்மாயில் பன்னி விட்டைகளைச் சேகரிக்கும் சொக்கத்தாயி, பேச்சிராசுவுடன் கடைசிப் பலகையில் பக்கத்தில் அமர்ந்து படிக்கும் கொறக்குடி வீரய்யா, “அச்சச்சோ! நெசமாவா? எனக்குத் தெரியாதே” என்று முனிக்கதையைக் கேட்டு அச்சப்படும் காளைப்பாண்டி, யாருலே அவன்? வாய்க்கால அள்ள வர்றவனும் வீடுவீடாப் பீயள்ள வர்றவனும் ஒனக்கென்ன மாமனா? என்று கேட்கும் பேச்சிராசுவின் அம்மா சாதியப் பிடிமானம் மிக்க ரெங்கம்மா, தீப்பெட்டி அடிக்கட்டைகளைக் கொட்டி நிரப்பிய சாக்கைத் தூக்கிக் கொண்டு, தீப்பெட்டித் தொழிற்சாலைக்குச் சென்று திரும்பும் போது, வேப்பம் பழங்களைப் பொறுக்கி, அதை வெய்யிலில் உலர்த்திக் காயவைத்து விற்றுக் காசாக்கிச் சேமிக்கும் பேச்சிராசுவின் அக்கா வேணி, ஐயா, ஒடுக்கப்பட்ட சனங்க எப்பவும் கீழதான் உட்காரணும். அதுதான் ஊர்ச்சட்டம். நீங்க சின்ன பையனாக இருந்தாலும் சேர்ந்து உட்காரக்கூடாது ராசு என்று பேசும் சஞ்சீவி, “மாமா! ஒங்க ஒடம்புல ஓடற ரத்தமும் செவப்பாத்தானெ இருக்கும்?” என்று கேட்கின்ற பேச்சிராசா, பஞ்சாலைத் தொழிலாளர் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அ. பேச்சிராசு என்று பதிக்கணும் என்று நெகிழ்ந்து பேசும் அப்பா அரசப்பன் ஆகியோர் இந்தப் புதினத்தை உயிரோடு நகர்த்திச் செல்கின்றார்கள். இவ்வாறு, ஓர் உயிருள்ள புதினமாக, மாந்த உணர்வுகளை மேம்படுத்தும் புதினமாக இந்நூல் இலக்கிய உலகின் பார்வையை ஈர்த்துள்ளது. ஆசிரியர்க்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
“வாடு பயிர்க்குவரு மாமழைபோல் நைந்துருகி நாடுமக வுக்குதவு நாற்றாய்போல்” என்று மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடுவார். அவர் பாடுவதைப் போன்று, குழந்தை இலக்கியப் பயிர்க்கு மாமழைபோல், குழந்தைகளுக்கு நற்றாய்போல் குழந்தை இலக்கிய உலகில் வாழ்கின்ற குழந்தைகள் இலக்கியச் சீர்மணி கொ.மா.கோ.இளங்கோ அவர்களின் இலக்கியத் தொண்டு வளர்க!
