- ஸ்ரீநிவாஸ் பிரபு
மனிதர்களின் வாழ்வியலை அவர்களின் வாழ்க்கையினூடாகப் பேசும் கவிதைகள் அவ்வப்போது எதிர்பட்டுக் கொண்டுதான் வருகிறது. எழுத்து வகைமையை ஜனரஞ்சக எழுத்து, தீவிர எழுத்து என பிரித்துக் கொண்டால், ஜனரஞ்சக எழுத்தைப் படிக்கும் வாசகனைத் தீவிர எழுத்துக்களின் பக்கம் கொண்டு வரும் லாவகம் சிலரின் எழுத்துக்கள் செய்யும். தமயந்தியின் எழுத்துக்களுக்கு அந்தத் தன்மை இருக்கிறது.தன் சிறுகதைகளால் தனி கவனத்தை ஈர்க்கும் தமயந்தி ‘என் பாதங்களில் படரும் கடல்‘தொகுப்பின் வழியாக கவிதைகளுடன் எதிர்ப்படுகிறார்.
தமயந்தியின் கவிதைத் தேர்வும், அதை வகைப்படுத்திய முறையும் இடம்பெற்றுள்ள கவிதைகளும் தனித்துவமாக இருக்கிறது. தெளிவுடனும், தீர்க்கத்துடனும்,எதன் பொருட்டும புறக்கணிக்க முடியாத சமகாலக் கவிதை ஆளுமையாக எதிர்ப்படுகிறார். இதையே ‘அலைகள் இன்று காலை எனக்குள் நுழைந்தன, நான் கரைகிறேன். உப்புக்கரிக்கிறது, என் ஆன்மாவில் சுவை ஏறுகிறது‘ என்கிறார் இயக்குனர் மிஷ்கின் முன்னுரையில்.
ஒரு சிறு அலை இன்று காலை
என் தூக்கத்தினுள் நுழைந்து
வாசல்களற்ற என் கனவில்
எப்படி உள்ளே வந்ததென
பதறினேன்
பெருங்கடலின் சிறுதுளியை
சுமக்கும் போதான எடை
கூடலை
சமாளிக்க இயலாது
தடுமாறுகையில்
தொலைபேசி அழைப்பொன்று
கேட்கிறது
யாரோ பேர் தெரியாது அலையதைத்
தழுவுது
யாருமற்ற கரையில்
தனித்திருக்கும் உலகில்
இறகை நீட்டும் பறவை
ஒருவானை உருவாக்குமா
அலையிடம் கேட்கிறேன்
கிழித்துக் குருதியாக்கும்
யாருமற்ற உணர்வின் கத்தி முனையில் நின்று
அலை சிரித்தது
ஓசைகள் அற்று
தனித்திருக்கும் பெருங்கடலை
மனிதர்கள் விட்டுச் செல்லும்
இரவில் கண்டிருக்கிறாயா என்றது
என் மீதெல்லாம் நுரைக்கப் பார்க்கிறேன்
பெருங்கடலின் மேல் தடுமாறாது நிற்கிறேன்
கடலின் துணையாய்
ஜென் கவிதைகள் இயற்கை அறிதலை ஆன்மீக வழிகாட்டுதலாக முன்வைக்கும். அரபி,சூபி கவிதைகளும் இயற்கையை அந்த வகையிலேயே அணுகுகின்றன. கவிதைகளில் இயற்கையின் வாழ்வியலையும், இயக்கத்தையும், அதன் விந்தையான போக்கையும் கால்களில் ஏறிய ஈரம் போல் தமயந்தியின் நடையில் வழிந்தோடுகிறது. கடலும், கடலலைகளும், ஈரத்தின் அடையாளங்களாக மாறி எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கிறது.புறவயமான சித்தரிப்பில் துல்லியமான உருவங்களின் வழி எதிர்ப்படுபவை, அகவயமான சித்தரிப்பில் அரூபமான அலகுகள் வழி வெளிப்படுகிறது.
நிரம்பி நிரம்பி வழிந்தாலும்
ஒரு துளி கூட எடுத்துப் போக
முடியாது
வாழ்க்கையும் கடலும்
காலம், வெளி, இயற்கை, தற்செயல், பயணம், உறவுகளின் உளச்சிக்கல் என கவிதையின் பல்வேறு ஆதார சாத்தியங்கள் அதன் மையத்தில் கவனமாகச் சூழன்று கவிதைகளை முன்னெடுத்துச் செல்கிறது.
நெகிழ்தலில் நகக்கீறல்
என் வீட்டு நிலாவில் என் கூட்டுப்பறவையின்
கால் தடத்தில் ஏதுமில்லை நிழல்
கவிதை நெய்யும் நேரம்
வார்த்தைகளின் கிழிசலில்
வழியுமென் உணர்வு
எட்டிப் பார்க்கும் வெயில்
கப்பலின் மூன்றாவது தாளத்தில்
ஏதுமில்லை நீரின் தடயம்
பொய்களின் வரலாற்றில்
போர்களில் வெட்டப்படும்
ஆடுகளுக்கேது கழுத்தில் ரத்தம்?
எருக்கஞ் செடியில் பசும்பாலென
கதைகள் புழங்கும்
புழக்கடை கிணற்றடி முற்றம்
தாண்டி நீளும் வானம்
நகக்கண் துண்டுகளாய்…
கண் முன் தெரியும், கைகளில் அகப்படும் அனைத்துப் பொருட்களையும் இழுத்து வைத்து விளையாடும் குழந்தை, தனது அக உலகுடன் பிணைந்த சில குறிப்பிட்ட பொம்மைகளையே எப்போதும் பிடித்திருக்கும். அப்படியான ஒரு பொம்மையைப் போல இருத்தல் சார்ந்த அம்சங்களுடன் பெரிதும் பின்னிப் பிணைந்து நிற்கிறது தமயந்தியின் அகம்
அந்த அலை என்னை நோக்கித் தான் வருகிறது
ஒரு மரணத்தின் எஞ்சிய கடைசித்துளிபோல…
கடலற்ற அலையொன்றால் என் கால்கள்
நனையவில்லை
மார்பின் வெக்கையில் மடிந்து விழுது ஈரம்
ஆனாலும் சொல்லிக் கொள்ளத்தான் தோணுது
என் கால்களின் கீழ் கடலொன்று
தவமிருக்கிறதென…
எளிய சிறு நிகழ்வின் அவதானிப்புகள் முழுமை நிறைந்த கவிதைகளாக உருப்பெற்று எழுவது, உவமைகளையும், உருவகங்களையும் தாண்டி சொற்சிக்கனம், எளிமைகளால் கவித்துவம் நிறைந்த சித்திரமாக விரிகிறது. மலையின் முகட்டின் மீது சொல்லின்றித் தவிக்கும் கவிஞன் முன் அவன் மூச்சொலி மூலம் உருப்பெறும் சொற்களைப்போல், வாழ்வியல் நிகழ்வுகளின் எளிய காட்சிகள் கவிதைகளாக வெளிச்சம் பாய்ச்சுகிறது
வெளிச்சம் வெளிச்சமென
தேடி அலைந்து
சிதறிய கண்ணாடிச் சில்லில்
அடையாளம் கண்டால்
அது இருட்டுச் சில்
நவீனத்துவம் பேசும், காலத்தின் முன் காதல் உணர்வு இயற்கையின் துணையுடன் கூர்மை அடைந்து கொண்டே இருக்கிறது. காதல் மனம் சார்ந்த அழகுடன் வெளிப்பட்டாலும், சாரம் நிறைந்த இருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. அதை கவிதைகள் மிக லாவகமாக முன்னெடுத்துச் செல்கின்றன.
எங்கோ எவன் கூடவாவது
வாழ்ந்து கொள்
பிள்ளை பெற்றுக் கொள்
சமைத்துத் துவைத்துப் பொட்டுக் கொள்
என்னைக் காதலித்துத் தொலைத்தாயா?
அதை மட்டும் சொல்லிச் செல்
அந்நிய நதியாய் பாயுது காதல்
ஒரு எறும்புக்கடியாய் மனசுள் என்ன செய்ய?
காதலிக்கத் தெரிகிறது
காதல் செய்யத் தெரியவில்லை
காலமும் வெளியும் அனுபவ மண்டலத்தில் நிகழ்த்தும் மாயங்களாக இருக்கிறது சில கவிதைகள். தத்துவ அடுக்குகளுக்குள் அவை அமர்ந்து இளைப்பாறிச் செல்வது தனித்துவமாக இருக்கிறது.புகைப்படங்களில் ஒளிரும் காட்சிச் சட்டங்கள் காலத்தின் ஒரு கணத்தை உறையச்செய்வது போல உணர்வுகளையும் காட்சிப்படிமங்களையும் காலம் கடந்த அனுபவப் பதிவாக மாற்றுகிறது கவிதைகள்.
அந்த மௌனப்பள்ளத்தாக்கில்
ஒளிந்திருக்கிறது
ஓலங்களற்ற நிழல் ஒன்று
குருதி படர்ந்து
நதியொன்று அதன் மீதே
படர்ந்து போகையில்
நெளியுது நிழல்
உதட்டைக்கவ்விய உன் பற்கள் போலே
உடலுக்கும் உள்ளத்துக்குமான உறவை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளைத் தேர்ந்த நடை வெளிப்படுத்துகிறது. வயோதிகத்தின் பார்வை யௌவனத்தின் மீது குவிவதை பெண்களின் கண்களின் வழி அடையாளப்படுத்துகிறார்.
துணி காயப்போடுவதில்
பெரிய கிழவிக்கு புலம்பலுண்டு
பிராவ எங்கிட்டுப்போடுற?
பொருட்காட்சி அப்பளம்போல்
துணிக்கடில மறைச்சுப் போடு
அவசரத்துக்கும் மகனின்
ஜட்டியைத் துவைத்ததில்லை
என்பதில் ஏகப் பெருமை அவளுக்கு
மார்பை சுமப்பதைவிட
பெரிதானது அவளுக்கு
மறைப்பதை மறைப்பது
எண்ணங்கள், உணர்வுகளின் வழி பெருகி ஒன்றிலிருந்து ஒன்றென விரிந்து எழும் மனநிலையில் உருவாகி வருவதல்ல தமயந்தியின் கவிதைகள். மாறாக அதற்கு எதிர்திசையில்,உணர்வுகள் அற்றுபோகும் நிலையினின்றும் மேலெழந்து வருபவை. ஒரு அனுமானம் உருவாக்கும் உணர்வு நிலை அடங்கும் புள்ளியிலிருந்து உருப்பெருகிறது.
என் நாவில் வெண்ணெய் தடவிய
ரொட்டித் துண்டுகள் ஏதுமில்லை
என் முகம் முன் சமரசமற்ற புன்னகை இல்லை
இலக்கற்ற பறவையின் தேடலும்
இரக்கமற்ற புறக்கணித்தலும்
நிகழ்ந்த வண்ணமே உள்ளது
உயிரின் வேர்களில் ரணங்கள் நுரைக்கும்
போதில்
இன்னொரு நிலம் உங்களை போஷிக்கட்டும்
நன்றி
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிலைகளில் மீண்டெழும் உணர்வுகள் மனதின் ஒளியால் கவிதைகளாக வெளிப்பட்டுச் சிதறுகிறது.எவ்வித அலங்காரங்களும், ஒப்பனைகளுமின்றி வழித்துணையாய், உரையாடலுடன் சக பயணியாகவே உடன் வருகிறது கவிதைகள். எண்ணங்களால் உந்தப்பட்ட மொழி, ஒரு உறைந்த அமைதியை படிப்பவர் மனதுள் உருகி வழிந்து உருவாக்குகிறது.
மிகுந்த புரிதலோடு கவிதைகளை அணுகுவது ஒரு கலை. அந்த வகையில் தமயந்தியின் கவிதைகள் ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தித்தரவே செய்கிறது. l
