மனித வரலாற்றில் ஒவ்வொரு படிநிலைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருந்துள்ளன. மனிதன் தான் கண்டுபிடித்த நெருப்பில் துவங்கி இன்று அறிவியல் வளர்ச்சியின் வழியாக அகிலத்தையும் தன்வசமாக்கிக் கொண்டிருக்கிறான். நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம் என்பன நம்மோடு பின்னிப் பிணைந்துள்ளன. எதைக்கண்டு பயந்தார்களோ அதையே வழிபட்டனர். இயற்கையை ஆதிகால மனிதன் வழிபடத் துவங்கினான். தனக்கு மீறிய சக்தி இருப்பதாக கருதினான். இப்படியாகவே நாம் மனித குல வரலாற்றை தெரிந்து கொள்கிறோம்.
ஒவ்வொரு மதத்திற்கும் இறை என்பது கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. கருத்தியல் ரீதியாக பார்த்தாலும்கூட மனிதர்களுக்கு நம்பிக்கை தருவதாக இறைவழிபாடு இருந்துள்ளதை அறியமுடிகிறது. இத்தகைய வழிபாட்டின் வழியாக மனிதர்கள் மகிழ்ச்சியும் அமைதியும் அடைந்தனர். இந்த இறைவழிபாடு என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொருவிதமாக அமைந்துள்ளன.
ரமேஷ்பாபு எழுதியுள்ள யார் கைகளில் இந்து ஆலயங்கள் என்ற புத்தகம் ஆலயங்களின் வரலாற்றைத் தகுந்த ஆதாரங்களோடு முன்வைக்கிறது. இந்நூல் இந்து அறநிலையத்துறை முன்னாள் அதிகாரியான சி.ஜெயராமனின் நேர்காணல் வழியாக ஆலயம், அரசியல், அரசு இயந்திரம் ஆவணங்கள், அதிகாரியின் செயல்பாடுகள், நயவஞ்சகர்களின் பேராசை, மக்களின் பழக்கவழக்கம், நம்பிக்கைகள், நேர்மையான மனிதனின் செயல்பாடுகள் எனப் பலவற்றை வாசகர்களுக்குத் தெளிவாக விளக்குவதாக அமைந்துள்ளது.
இந்நூல் எழுத்தாளரின் மூத்த மகன் சூரியகுமார் இறப்பின் காரணமாக ஒரு ஆண்டு கழித்தே வெளிவந்ததாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார். ’நுழைவதற்கு முன்னால்’ என்ற பகுதியில் பல்வேறு செய்திகளை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களின் வாக்குவங்கி, தனியார் கைகளில் மடங்கள் சென்றால் எப்படி இருக்கும், ஆலயங்களில் பின்பற்றப்படுகின்ற செயல்பாடுகள், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினாலும் அர்ச்சகர் கைது செய்யப்படாத சூழல், சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர் வசமே இருக்கின்ற சூழல் போன்றன நூலில் சொல்லப்பட இருப்பதாக கூறியுள்ளார்.
வேட்டி ஜெயராமன் என்ற சி. ஜெயராமன் குறித்து சொல்கின்றபோது அவரோடு தொடர்புகொண்டு பேசத் துவங்கினேன். ஆச்சர்யங்களின் மொத்த உருவமாக அந்த மனிதர் தெரிந்தார். 1974 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்த முதல் தினமே மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் அவர். நாகை மாவட்டம், சீர்காழி வட்டம் ஆச்சாள்புரத்தில் முதல் முதலாக ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கொடி ஏற்றிய காரணத்திற்காக சாதி விலக்கம் செய்யப்பட்டவர். கடலூர் மாவட்ட முதல் வெடிகுண்டு வழக்கில் வழக்கறிஞர் அவர் என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற்று அறநிலையத் துறை அதிகாரியாக பதவி ஏற்று அவரது பணியின் நேர்மையை ஆசிரியர் கூறியுள்ளார். இவரின் கோவில் நிர்வாக செயல்பாட்டில் அரசு, மடங்களிற்கும் சிக்கனமாக பணியாற்றிய விதத்தை நூல் வழியாக நாம் அறிகின்றோம்.
எனது அனுபவங்கள் என்ற தலைப்பில் சி. ஜெயராமன் இந்த நூல் வெளிவருவதற்கு முன்னோட்டமாக சில வார்த்தைகள் கூற வேண்டியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். கோயம்புத்தூரில் பேராசிரியர் ந. மணி அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டுக் கருத்தரங்கிற்குக் கருத்துரையாற்ற என்னை அழைத்திருந்தார். நான் இந்து அறநிலையத் துறையில் பல இடங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்ற அடிப்படையில் பணியின்போது பட்ட அனுபவங்களை இன்றைய சூழலில் எப்படிப் பார்ப்பது என்பது குறித்து உரையாற்றினேன் என்பதாகக் கூறியுள்ளார். இம்மாநாடே இந்நூல் வெளிவரக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் சிறுவயதில் எழுதிய எழுத்துகளான கதை, கவிதை போன்றன அச்சில்வராத சூழலைக் வெளிப்படுத்தியுள்ளார்.
அது தன் மனதில் காயமாக உள்ளதையும் பதிவு செய்துள்ளார். இதன் காரணமாகவே ரமேஷ்பாபு அவர்களின் வழியாக இந்நூல் வெளிவருகின்ற முறையினையும் கூறியுள்ளார். இளமைக் காலம் துவங்கி கல்லூரிப் படிப்பு, கம்யூனிஸ்ட் கட்சியில் சேரல், சாதி விலக்கம் செய்யப்பட்டவிதம், மார்க்சிஸ்ட் கட்சியின் வழக்கறிஞராக பணியாற்றியமை, அறநிலையத் துறை அதிகாரியாக பணிபுரிந்தவிதம் போன்றவற்றினைத் தன் நினைவலைகளின் வழியாக வாசகர்களுக்குத் கடத்தி இருக்கிறார். சமூகத்தில் நடந்துவரும் அவலங்களைக் கூறுதல், பா.ஜ.க அரசின் தந்திர வேலை போன்ற நடப்புச் சூழலில் இந்நூல் வெளிவர வேண்டிய அவசியத்தை இந்நூலின் வழியாக நாம் அறிகின்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிறப்பான அணிந்துரையை வழங்கியுள்ளார். இவரது அணிந்துரை வாசகருக்குப் படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அரசனின் காலத்தில் கோயில், நிர்வாகம் செயல்பாடுகள், போராட்டங்கள் எனப் பலவற்றை எடுத்துக் கூறியுள்ளார். கோயில்கள் கலைக்கூடங்களாக, செல்வக்களஞ்சியங்களாக மட்டும் இல்லை. சாதியத்தைக் கட்டிக் காக்கும் வேலிகளாகவும் இருந்தே வந்துள்ளன. இன்றுவரையில் அனைத்து சாதியினரும் தமிழகத்தில் அர்ச்சகராக முடியவில்லை. கோயில் நுழைவு மிகப்பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது என்பதாகப் பதிவு செய்துள்ளார். மார்க்சிய ஆய்வு முறையைப் பின்பற்றி ஆய்வாளரின் தேவையை இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூல் மூன்று பகுதியாக எழுதப்பட்டுள்ளது. பகுதி-1 ல் 6 தலைப்புகளின் வழியாக பல்வேறு தகவல்களை அறிந்து கொள்கிறோம். நாகரிகங்களின் தோற்றம், ஆரியர்களின் வருகை, இயற்கை வழிபாடு, இறையை உருவாக்கிய சூழல், தத்துவங்கள் போன்றன விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 8 தத்துவங்கள் இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. 1. தாந்திரீகம், 2. லோகாயுதம், 3. நியாயம் 4. வைசேடிகம் 5. சாங்கியம் 6. சமணம், 7. பெளத்தம், 8. யோகம் போன்ற தத்துவங்களின் சாராம்சத்தை எளிய சொற்களில் ஆசிரியர் விளக்கியுள்ளார். இத்தகைய சூழலில் தத்துவங்களை வளர்க்க நிறுவனங்களான கோயில்கள் விளங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
கோயில்கள் குறித்தும் அதற்கான பல்வேறு பொருள்கள், சொற்றொடர் குறித்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மேலும் பண்டைய எகிப்து கோயில்கள், கிரேக்கரோம கோயில்கள், புத்த கோயில்கள், சமண சீக்கிய கோவில்கள், கிறித்துவ, இஸ்லாமிய, இந்துக் கோவில்கள் போன்ற கோயில்கள் குறித்து சுருக்கமாக அதே சமயம் தெளிவான கருத்துகளை குறிப்பிட்டுள்ளது சிறப்பாக உள்ளது. இந்துச் சமயக் கோயில்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றன. தைவிகம்- தேவர்களே மூல விக்கிரங்களை நிறுவிச் செய்தது. ஆசுரம்-அசுரர்கள் ஏற்படுத்திய கோயில்கள். ஆர்சம்- ரிஷிகள் கோயிலுக்கான மூலவரை நிறுவுவது. மானுஷம்- மன்னரும் மக்களும் நிறுவி குடமுழுக்கு செய்யப்பட்டது, இப்படி கோயில்களின் விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ள இப்பகுதி உதவுகின்றது.
வரலாற்று அடிப்படையில் சங்ககாலம் தொடங்கி இன்றைய காலம் வரைக்கும் இருக்கின்ற ஆலய வழிபாட்டில், அரசர்களின் செயல்பாட்டை எழுதியவிதம் மிகச்சிறப்பு. பக்தி இயக்கத்தின் அடிப்படை கோயில்கள் என்றும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் எந்தெந்தத் தளங்களில் பாடி உள்ளார்கள் என்பதைப் புள்ளிவிவரத்தோடு பக்கம்-42 விளக்குகிறது. நிலத்தானம் பற்றியும் சுருக்கமாக கூறினும் தெளிவாக உள்ளது. உலகக் கோயில் வரலாறு, சிலை குறித்த வரலாறு, சிலை திருட்டு போன்றவற்றைத் தரவுகள் அடிப்படையில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரத்தில்தான் எவ்வித மத, சமய அடையாளமும் வழிபாடும் கடவுள் சிலையும் கிடையாது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். கோயில்கள், அறக்கட்டளை, திருமடங்கள் போன்றவற்றின் மூலம் வருகின்ற வருமானம், நிலங்கள் மீட்கப்பட்ட விவரங்கள், அறநிலையத்துறை என்ற தனி நிர்வாக அமைப்பு இல்லாவிட்டால் கோயில் சொத்துக்களும் விலைமதிப்பற்ற சிலைகளும் இருக்குமிடம் தெரியாமல் போயிருக்கும். தொன்மை வாய்ந்த பல கோயில்கள் அழிந்திருக்கக்கூடும். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் களைய வேண்டுமே தவிர அறநிலையத்துறைக்கு மாற்றாக வேறு வழியை யோசிப்பது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதாக ஆசிரியர் சொல்லியுள்ளார். அறநிலையத்துறை வரலாறு இந்நூலில் நன்றாகக் கூறப்பட்டுள்ளது. 1959 இல் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சட்டத்தின் முக்கியத்துவம் இந்தியாவிலேயே மிகவும் முன்னோடி சட்டமாக விளங்கியுள்ள சூழலையும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
இத்தகைய பின்னணியில் அறநிலையத்துறை அதிகாரியாக விளங்கிய சி.ஜெயராமனின் நேர்காணல் பகுதி 2 ஆக அமைந்துள்ளது. இந்த நேர்காணலே இந்நூலின் பெரும்பகுதியைக் கொண்டதாக உள்ளது. (110- பக்கம்) இந்நேர்காணல் பல்வேறு தகவல்களைத் தருவதாக உள்ளது. நேர்காணல் செய்த ரமேஷ்பாபுவின் கேள்விகள் சிறப்பாக இருந்துள்ளன.
ஜெயராமனின் இளமைக் காலம் துவங்கி படிப்பு, பணி, சாதனைகள், பணி நிறைவு, தற்போது அவரது மக்கள் பணியில் செயல்பாடு என விரிவான தகவல்களை இந்நூல் தருகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய சூழலில் அவரையும் அவர் குடும்பத்தையும் சாதிவிலக்கம் செய்த செய்தி இடம்பெற்றுள்ளது. ஆதிக்கச் சாதியினர் செய்த அத்துமீறலை இந்நூல் விளக்குகிறது. நான் நக்சலைட் குழுவை ஆதரிப்பவன் என்று கட்சி கருதியதால் நான் கட்சியிலிருந்து விலகினேன் என்பதையும் கூறியுள்ளார். விவசாயிகளின் நிலையை உணர்ந்து நேர்மையாக இருந்த நிலையை நாம் இந்நூலில் அறிகின்றோம்.
நான் பணியில் இருந்த வரையில் குத்தகை விவசாயிகள்மீது ஒரு வழக்கு கூட போடவில்லை. 2, 3 ஆயிரம் ஏக்கர் எனப் பெரிய இடங்களில்கூட பிரச்சனை வரும்போது சமாளித்திருக்கிறேன். விவசாயிகள் பிரச்சனை வந்தது. குத்தகை விவசாயிகள் மீது அரசாங்கம் வழக்குப் போட சொல்லியது. வழக்கு போட வேண்டிய அவசியமில்லை என்று இருந்தேன். கூடிப்பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். குத்தகை விவசாயிகளை அழைத்து கோவிலில் முதல்முதலாக கூட்டம் நடத்தினேன். அங்கேயே அவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கப்பட்டது. கூட்டத்திற்காக குத்தகை விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்போது எதார்த்தமாக அந்த நோட்டீசை சிவப்புக்கலரில் அடித்துவிட்டேன். இதை அ.தி.மு.க டிரஸ்டி பார்த்துவிட்டு அறநிலையத்துறை துணை ஆணையரிடம் சென்று கம்யூனிஸ்ட் கட்சியைக் கோயிலில் வந்து காட்டுகிறார் என்று புகார் கொடுத்துவிட்டார் என்பதாக அவரது செயல்பாட்டை கூறியுள்ளதை நாம் அறிகின்றோம்.
பணி மாற்றத்தின்போது பொறுப்புகளை ஒப்படைக்க ஐம்பத்தொன்பது நாளான சூழலையும் அதற்காக தனியாக அரசாணை வெளிவந்ததையும் குறிப்பிட்டுள்ளார். சிலைகள் குறித்தான ஆழ்ந்த அறிவைப் பெற்றவராக ஜெயராமன் அவர்கள் இருந்த சூழலை நாம் அறிகின்றோம். (பக்கம்- 74) சிலை விற்பனை, மாற்றல், நாடகம் எனப் பல்வேறு செயல்களை இந்நேர்காணல் விளக்குகிறது. மடாதிபதி, ஜீயர் போன்றோரின் வாழ்க்கைமுறை, ஆதித்தனார் இவர் மீது கொண்ட பகையைப் பக்கம் 90 வழி நாம் அறிகின்றோம்.
இந்தக் கோயிலில் என்னால் வேலைபார்க்க முடியாது. ஆதீனம் எஜமான் அவர்களே! என்னை விடுவித்துவிட்டு வேறு ஆளைப் போட்டு கொள்ளுங்கள்’ என்றும் மேலே சொன்ன புகார் அனைத்தையும் படித்துக்காட்டினார். ஊர்க்காரர்கள் அனைவரும் யோசிக்கிறார்கள். ’இவர் கணக்கு வழக்கில் சரியாக இருக்கிறார். செய்யற தப்ப வெளிப்படுத்துவதால் இப்படி செய்கிறார்கள்’ என்று தெரிந்து கொண்டனர். ஆதினத்தின் பேச்சைத்தான் யானைக்காரர் கேட்பார். அப்படி இருக்கும்போது நீங்க ஏன் வம்பு வைத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டனர். இப்படியாக இவரது நேர்மைக்கு சிக்கல் வந்துள்ள சூழல் கவனிக்கத்தக்கது.
எட்டுக்குடித் தேரில் தலித்துகள் ஏற அனுமதி இல்லை என்ற வினாவும் அதற்கான விடையும் முக்கியத்தும் வாய்ந்தது. தன் பணியில் பல்வேறு சமயங்களில் அரசியல் குறுக்கீடு இருந்ததை ஜெயராமன் பதிவு செய்துள்ளார். கோயில் விழா, அதன் சூழல், பண்பாடு போன்றவற்றை இந்நேர்காணல் மூலமாக தெரிந்து கொள்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்குக் கோபிநாதசுவாமியைக் கொண்டு சென்ற சாதனையை நாம் அறிகிறோம். கோயில்களில் செருப்புக்கு ஏலம் விடும்முறை இருந்துள்ளது. உதவி ஆணையராக இருந்த ஜெயராமன் பிள்ளையார்பட்டி கோவில் இந்த ஏலமுறையைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றார் என்பது இவரது சாதனையாகப் பார்க்கப்படுகிறது. பின்னாளில் தமிழகம் முழுவதும் அனைத்துக் கோவில்களிலும் காலணிகளை இலவசமாக விடுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதற்கு முழுமுதற் காரணமாக ஜெயராமன் இருந்துள்ளார்.
பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்களில் அவர் பணியாற்றிய விதங்கள் குறித்தும் அவர் செய்த செயல்பாடுகள் குறித்தும் வினா விடை கூறும் முகமாக இந்நூல் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு இஸ்லாமியர் சங்கரநாராயணர் கோவிலுக்குக் யானை கேட்டு வழக்கு போட்டதும் அதன் பிறகு தினத்தந்தி ஆதித்தனார் யானையை வாங்கித்தந்த சூழலையும் விளக்கியுள்ளார். நீதிமன்ற கருத்தோடு ஜெயராமன் முரண்பட்ட சூழலைப் பக்கம் – 123 விளக்குகிறது.
பரக்கலாக்கோட்டை கோயில் பொது உடையான் கோயில் என்றும் ஆலமரத்தை மட்டுமே கோயிலாக, கடவுளாக மக்கள் பார்க்கின்றனர். பிறகு இராஜ கோபுரம், மண்டபம் கட்டியுள்ள சூழலையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். திருவண்ணாமலை கோவிலில் பணியாற்றிய அனுபவங்களைக் குறிப்பிட்டு அவரது நற்செயல்களையும் இந்நூலின் வழி நாம் அறிகிறோம். 42 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் தரை போட முடியும் என்ற கூறியநிலையில் இவர் 16 லட்சத்திலே முடித்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையாரைத் தனக்கோடிபுரம் மக்கள் ஊருக்கு வர விருப்பம் தெரிவித்தனர். இத்தகைய மக்களின் ஆசையை நிறைவேற்றியவிதம் அருமை. இரட்டைப்பூட்டுமுறை, எக்காரணங்களுக்காக சிலைகள் மாற்றப்பட்டன என்பதும் தெரிந்து கொள்கிறோம். மாங்காடு, கும்பகோணம் போன்ற கோயில்களில் இவரது பணி எத்தகையது என்பதை இந்நூல் விளக்குகிறது. தருமபுர ஆதீனத்தின் ஆதித்தனார் தங்கரதம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்தினர் இந்த ரதத்தை உருவாக்கினர். இவர் தம் அறிவுக் கூர்மையால் மூன்று கிலோ தங்கம் ஆதீனத்திற்கு எஞ்சியது. இத்தகைய இவரது பணி சிறப்பு வாய்ந்தது. திருப்பாணாழ்வார் கதை, ஆசந்திப் பலகை, அரிவாணம், கோயிலொழுகு, தென்கலை, வடகலை எனப் பல்வேறு விரிவான கருத்துகளை இந்நேர்காணல் விளக்குகிறது.
பகுதி-3 ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற அரசியல் நிலையை கேள்விகேட்டு மதச்சார்பின்மையைப் பின்பற்ற வேண்டும் என்பதை இப்பகுதி விளக்குகிறது. கோவில்களை நிர்வகிக்கும் அரசு ஏன் தேவாலயங்களையும் மசூதிகளையும் நிர்வகிக்கவில்லை என்பதை ஆசிரியர் விளக்கியுள்ளார். சைவ வைணவ கோயில்களைச் சான்றாக வைத்து கோயில்கள் எப்போதுமே தனியார்களிடம் இருந்ததில்லை என்பது இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஊர்களில் சிறுதெய்வக் கோயில்கள், அங்கு பின்பற்றப்படும்முறை, பலியிடல் எனப் பலவற்றை இந்நூல் விளக்குகிறது.
மதம் என்பதற்கான விளக்கமும் முற்போக்குக் கருத்துகளும் கூறியவிதம் சிறப்பாக உள்ளது. இறுதியில் மதச்சார்பின்மையை நாம் பின்பற்றுவது நல்லது என்பதை நூலாசிரியரும் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமியரும் இந்துக்களும் கோயில் வழிபாட்டிலும் சரி விடுதலை வரலாற்று முறையிலும் ஒன்றாக கலந்துள்ள சூழலை நாம் அறிகிறோம். பாண்டிச்சேரியில் பாய்முருகர் மற்றும் முத்தாளம்மன், துலுக்கானத்தம்மன் என்று வழிபடுகிற சூழலை நாம் அறியமுடிகிறது. எனவே ஆலயங்களை தனியார்மயமாக்க கூடாது என்று இந்நூல் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
அரசின் வசமே ஆலயங்கள் இருப்பது நன்மையைத் தரும் என்பதைத் தகுந்த ஆதாரங்களின் வழி இந்நூல் ஆவணப்படுத்துகிறது. இறுதியில் பல வினாக்களை எழுப்பி உரையாடலைத் தொடர்வதாக இந்நூல் முடிவடைகிறது. இந்நூல் எழுதுவதற்குதவிய நூல்களாக 24 நூல்களை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மிகவும் எளிய நடையில் ஆலய வரலாறு, நேர்மையான அதிகாரியான சி. ஜெயராமனின் செயல்பாட்டினையும் சமூகப் பொறுப்புள்ள பதிவுகளையும் இந்நூலில் காணமுடிகிறது.
கோயில்கள் குறித்த வரலாறு, முரண்பாடு பற்றி தெரிந்துகொள்ள இந்நூல் சிறந்த ஆவணமாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையன்று. சிறப்பாக எழுதியுள்ள ரமேஷ்பாபு அவர்களுக்கும் நன்முறையில் அச்சிட்டுப் பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துக்கள்.
பாரதி புத்தகாலயம்,
பக்: 200, ரூ.170
