என்னுடைய சுயசரிதை தவறான முன்னுதாரணங்களுக்கு வழிகோலுவதாக ஒருபோதும் அமைந்துவிடக்கூடாது. குற்ற வாசனையுள்ள எந்த இளைஞனும் இதை வாசித்து சீரழிந்துவிடக்கூடாது. இந்த புத்தகத்திலும் அபூர்வமாக சில நல்லவை சிதறிக்கிடக்கக்கூடும். கவனம் இதில்தான் பதியவேண்டும்……(மணியன் பிள்ளை)
சூழல்களே மனிதனின் வாழ்வில் பல மாற்றங்களுக்கு காரணியாகின்றன. அத்தகையதொரு தருணம் மணியன் பிள்ளையைக் கள்வனாக்குகிறது. அவனுடைய பிற்கால வாழ்வோட்டத்தினை, திசையை நிர்ணயிக்கிறது. இன்னமும் கூடுதலாக அவன் கைக்கொண்ட களவே அவனை மனிதனாக்குகிறது. தனது வழக்குகளைத் தானே வாதிட்டுக் கொள்ளும் வழக்கறிஞானாக உருமாற்றுகிறது. வாழ்வியலின் தத்துவங்களைப் பேசும் ஞானியாக்குகிறது. கற்றதினால் அறிவு பெற்றோர் கணக்கற்றிருப்பினும் கல்வியறிவற்ற மேதைகளாலும் உலகம் நிரம்பிக் கிடக்கிறது. கல்வி ஒருவனுக்கு அறிவை அளிக்கிறது. வாழ்வில் செல்வத்தினைச் சேர்க்க உதவும் கருவியாகிறது. வாழ்வறத்தினை அளிக்கிறதா என்னும் வினாவிற்கு அறுதியான, இறுதியான விடையில்லை.
தன்னை வருத்திக் கொள்ளும் தருணத்திலோ, வாழ்வின் சூழல்கள் ஒரு மனிதனை வருத்திடும்போதோ அவன் தன்னைத் திரும்பிப் பார்க்கத் தொடங்குகிறான். மனம் மெல்ல முதிர்ந்து கனியத் தொடங்குகிறது. கண்ணிமைக்கும் கணப்பொழுதில் மனிதன் மாற்றமடைகிறான்.
சுயசரிதையினை கதை என்று கூறுவது வியப்பளிக்கலாம். மணியன் பிள்ளையின் வாழ்க்கை சுவாரசியமிக்க கதை போன்றும் தோன்றுவதும் மறுக்கவியலாதது. பல தத்துவங்கள் சாதாரணமாக மணியன் பிள்ளையின் கதையில் விழுகின்றன. அவை வலிந்து வாக்கியங்களில் பொதியப்படவில்லை. கதை கூறுவது போல அவை ஊடு பாவாக ஊடாடிக் கிடக்கின்றன. சிறை வாழ்க்கை ஒரு மனிதனை தத்துவார்த்தியாக மாற்றும் விந்தை மணியணுடையது.
பொதுவில் காவல்துறையினர் பற்றிய சாதாரண மக்களின் பார்வையிலிருந்தும் மணியன் பிள்ளை மாறுபட்டு நிற்கிறார். தன்னிடம் அவர்கள் கருணையோடு நடந்து கொண்டதாகவும், தன்னுடைய வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அவர்களே தனக்கு துணையாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இருப்பினும், நீதிபதிகளும், காவல்துறை அதிகாரிகளும் தன்னுடைய வழக்குகளில் வாதிடும்போது அவரைக் கண்டு அஞ்சி, சமசரம் செய்து கொண்ட நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார்.
தன்னை வஞ்சித்தோர், ஏமாற்றி அவமதித்த உறவினர்கள், கடுமையாகத் தாக்கி சித்திரவதைக்கு ஆளாக்கிய காவல் துறை அதிகாரிகள், தான் வாழ நேர்ந்த சமுதாயம் உள்ளிட்ட எவர், எதன் மீதும் அவருக்கு கோபமோ, வன்மமோ எள்ளவுமில்லை எனக்கூறும் முதிர்ச்சி பெற்ற, பக்குவடைந்த ஒரு மனிதராகவே அவர் வாசகனுக்குத் தோன்றுகிறார். வாழ்வின் மீது தருணங்களும், அனுபவங்களும் நிகழ்த்தும் வினையாக இதனைக் கொள்ளலாம்.
தன்னுடைய பொருள் களவாடப்படாதவரை அது திருடனின் சாகசாமாகிறது. தனது பொருள் திருடப்படும் பொழுது அது மன்னிக்கவியலாத குற்றமாவதை மணியன் மிக்க நகைச்சுவையுடனும், பொருள் பொதிந்த வேதனையுடனும் விவரிக்கிறார்.
தந்தையினை இழந்து வறுமையில் வாடித்தவிக்கும் மணியனை, உறவுப்பெண் ஒருத்தி நகையைத் திருடத் தூண்டுகிறாள். பதினேழு வயதில் ஒரு முப்பது பைசாவினை தனது சட்டைப்பையில் வைத்திருந்ததாக மணியன் பிள்ளை முதன் முதலாகக் கைது செய்யப்பபடுகிறான். மணியனின் திருடனாக மாறும் கணம் அது.
பசி தாளாது குப்பையில் வீசி எறியப்பட்டிருந்த இலைகளில் மீதமிருந்த எச்சில் உணவினைக் கூட உண்ண அனுமதிக்காது உலகம் அவரைத் துரத்தி அடிக்கிறது. கழிவிரக்கம் வாட்டும் இச்சூழலில் கூட அவர் தனது நகைச்சுவையினை கைவிடவில்லை. என்னைப் போன்றோருக்காக கைப்பிடி அளவு உணவினை இலையில் மீதமாக்கியவருக்கு நன்றி எனக் கூறுகிறார்.
ஏற்ற இறக்கங்களும், முடிவிலியான மாற்றங்களும் கொண்ட மனிதவாழ்வின் நடைமுறையினை தெள்ளத் தெளிவுடன் சுட்டிக்காட்டுகிறது மணியன் பிள்ளையின் வாழ்வு. கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் முக்கியப் பிரமுகராகவும், புகையிலை ஏற்றுமதியில் முதலிடத்திலும் இருந்த மணியன் பிள்ளை பிறிதொரு கட்டத்தில் உடுத்திய உடையுடன் பேருந்தில் ஊர் திரும்புவதும் அவரது வாழ்வின் பக்கங்களை வாசகனுக்குக் காட்டுகிறது.
திருடர்கள் ஒற்றுமையுடன் வாழும் அரசியல் அரங்கில் நானும் ஒரு ’விலைமதிக்க முடியாத அன்பளிப்பாகியிருப்பேன் என்னும் அரசியல் குறித்த அவரது இக்கருத்து வாசகனை பலத்த சிந்தனைக்குள்ளாக்குகிறது. எதார்த்த அரசியலின் நடைமுறைகளை, முகத்திரைகளை கிழித்தெறிகின்றது. பிரபல திருடனான அவர் ஜனதா கட்சியின் வேட்பாளராக மைசூரில் தெரிவு செய்யப்படுவது ஒரு நகைமுரண்.
தனது சுயசரிதையில் பல இடங்களில் அவர் நிகழ்வுகளை விதி என்று வகைப்படுத்தினாலும் தனது செயல்களுக்கு விதியினைப் பொறுப்பாக்கிவிட்டு தன்னை அவர் நியாயப்படுத்திக் கொள்ளவில்லை. பல தருணங்களில் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அவர் முயற்சிப்பதும் இந்நூலில் உண்டு. மனுஸ்மிருதியிருந்து மேற்கோள் காட்டும் நிலையினையும் அவர் எட்டியிருந்ததும் இந்நூலில் புலப்படுகிறது.
தன் வாழ்வினைத் திரும்பப் பார்க்கும் எந்தவொரு சாதாரணன் போலவே மணியனும் தான் வாழ்ந்த வாழ்வினை திரும்பப் பார்க்கிறான். கடந்து போன மகிழ்வான தருணங்களை, வேதனை அடங்கிய சம்பவங்களை நடைமுறை வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து தன்னைத் திருத்திக் கொள்ளவும் முயற்சிக்கிறான். தன்னுடைய நண்பனுடன் மணியன் தெருவில் பேசும் காட்சி தத்துவார்த்தமானது. சாதாரணமாகப் பேசிக் கொள்ளும் அவர்களை சமூகம் எவ்வாறு பொருள் கொள்கிறதென மணியன் பிள்ளை விவரிப்பது கவனிக்கத்தக்கது.
தன் தாயைப் பற்றி, தனது மனைவியின் மரணம் குறித்த அவரது வாக்கியங்கள் அடங்கிய பகுதிகள் மிகுந்த நெகிழ்ச்சியும் மன வேதனையையும் கொண்டவை. திருடன் திருடனாகத்தான் வாழ வேண்டுமென சமுதாயம் தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்துகிற அவலத்தினை அங்கதச் சுவையுடன் அவர் விவரிக்கிறார். இத்தகைய பகுதிகளில் மலையாள பிதாகமரான வைக்கம் முஹம்மது பஷீரும், உருது பிதாகமரான மண்டோவும் நினைவில் எழுவதையும் குறிப்பிடலாம். சமூகம் தன்னைத் திருடனாகத்தான் ஞானஸ்நானம் செய்து வைத்துள்ளதென்ற வரிகளும் மணியனுடைய எழுத்தில் உண்டு.
தன்னுடைய வாழ்நாள் நெடுக தான் சந்தித்த பல்வேறு இயல்புகள் கொண்ட சக தோழர்கள், உறவினர்கள், காவல் அதிகாரிகள், நீதிபதிகள் என அவரது வரலாறு பன்முகம் கொண்டு விரிகிறது. தான் நடத்திய ஒவ்வொரு திருட்டையும், அதற்கான அவரது முன்னேற்பாடுகளையும் அவர் மிக்க இரசனையுடன் விவரித்துச் செல்கிறார். தேவைக்காக ஒரு தொழிலினைச் செய்வதற்கும், உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் அதனை நடத்துவதற்குமுள்ள வேறுபாடுகளையும் அவர் வாசகனுக்கு எடுத்துரைக்கிறார். தன் தொழில் சார்ந்த சகாக்களின் வினோதமான, விசித்திரமான இயல்புகளும் அவரது எழுத்தில் உண்டு. வாசகர்களுக்கு அவை நகைச்சுவையினை அளிப்பவை.
ஒரு கள்வனின் வாழ்க்கையில் என்ன அடங்கியிருக்கும்? அவலங்கள், அவமானங்கள்,வேதனைகள், கசப்புகள் தவிர வேறெதனை அவன் பெற்றிருக்கவியலும்? மணியன் பிள்ளையும் அதற்கு விலக்கல்ல. அவருக்கும் அதனையே உறவும், சமூகமும் பரிசளித்தது. ஆயினும், அவர் இப்படைப்பினை மிக்க பொருட்செறிவுடன் மட்டுமன்றி மிக்க அங்கதச் சுவையுடன் வாசகனுக்கு அளிக்கிறார். வாழ்வனுபவத்தில் முதிர்ச்சியும், பக்குவமும் வாய்க்கப் பெற்றோரே தன்னைச் சுயபகடி செய்து கொண்டு கொண்டாட்டமான மனநிலையில் வாழ்வினைக் கடந்து செல்கிறார்..
மை டேஸ் இன் தி அண்டர்வேர்ல்ட் (My Days in the Underworld) என்னும் அக்னி ஸ்ரீதரின் கன்னட சுயசரிதை நூலினை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. மணியனைப் போன்றே இவரும் பெங்களூரு நகரின் பிரபல தாதாவாக விளங்கியவர். பட்டம் பெற்றுள்ள அவர் தனது இத்தகைய நடவடிக்கைகளை பின்னாட்களில் கைவிட்டு அவரது கனவான அக்னி வாரசெய்தி இதழினைத் தொடங்கி நடத்தினார். அவரது மேற்கண்ட நூல் கன்னட சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளது. புகழ்பெற்ற பல படைப்புகளையும் அவர் எழுதியுள்ளார்.
இவ்வாறு மிகச்சிலரே தங்களது அனுவங்களை சொல்லில் வடித்தெடுக்கும் வல்லமையைப் பெறுகின்றனர். ஒரு திருடனின் வாழ்க்கையில் என்ன இருந்துவிடக்கூடும்? அவன் நமக்கு எதைக் கூறிவிடமுடியும்? கள்வனுக்கும் நம்மைப் போல வாழ்வுண்டு. ஆசாபாசங்களும், குடும்பமும் முக்கியமாக தானும் பிறரைப் போல அமைதியான, கண்ணியமிக்க வாழ்வினை வாழவேண்டும். இவையெல்லாம் இச்சுயசரிதையில் தெறித்துக்கிடக்கும் மணியனின் அபிலாஷைகள்.
மலையாள மனோரமா நாளிதழின் முதுநிலை உதவியாசிரியான ஜி.ஆர்.இந்துகோபன் மணியனின் வாழ்க்கையை தொகுத்து எழுதியவர். திரு,குளச்சல் மு.யூசுப் அவர்களின் மொழியாக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது. மணியன் பிள்ளையின் வாழ்க்கைத் தருணங்களை உளப்பூர்வமாக உணர்ந்து, உணர்வுப்பூர்வமாக இந்நூலினைப் படைத்துள்ளார். இவரது சின்ன அரயத்தி, மீஸான் கற்கள், மஹ்ஷர் பெருவெளி உள்ளிட்ட மொழியாக்கங்கள் குறிப்பிடத்தக்கவையாவதுடன் இவருக்கு சிறப்பும் சேர்ப்பவை.
மணியன் பிள்ளையின் துயரமும், எள்ளலும் மிக்க முன்னுரையினை இங்கு சேர்க்கவேண்டிய அவசியம் உண்டாகிறது., அவை, இந்தப் புத்தகம் முழுவதும் நிரவிக்கிடப்பவை என்னுடைய வாழ்க்கையைக் கீறிப்பிளந்து, உப்பிட்டு உலர வைத்தெடுத்த வேதனைகள். இதிலுள்ள சதைப்பற்றையும் உப்புச்சுவையையும் ருசித்துவிட்டு மொத்தமாகவோ, கொஞ்சமாகவோ சமைத்து வெளிப்படையாகவோ, மறைமுகமாவோ விற்கலாமென்று நினைத்தால் தயவுசெய்து மன்னிக்கவும். அப்படியான முயற்சியில் ஈடுபட்டால், ஏற்கனவே செய்வதற்கு எதுவுமில்லாமல் வெட்டியாக உட்கார்ந்திருக்கும் இந்தச்சூழலில் தேவையற்ற சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும். கள்ளனின் நூலைக் களவாடக் கூடாதென மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறைவாக்கிட, எண்பத்தி எட்டு பகுதிகளுடன் ஏறத்தாழ 590 பக்கங்களுடனும் விரிந்து கிடக்கும் மணியன் பிள்ளையின் வாழ்க்கைக் கதை வாசகனுக்கு எதை உபதேசிக்கிறது. அது கூறும் செய்திதான் என்ன? மனிதன் தன் வாழ்நாள் நெடுக ஒற்றைப் பரிமாணம் கொண்டனவனாகவே வாழத் தேவையில்லை. தன் பரிமாணத்தினைத் தான் விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம், மேம்படுத்திக் கொள்ளலாம். கற்காமலேயே வாழ்வின் அடிப்படையினை புரிந்து கொள்ளலாம். வாழ்வினைப் பட்டறிவின் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம். தன்னை தன் சிந்தனையின் வழி உயர்த்திக் கொள்ளலாம். இவ்வாறான பல கூறுகள் இப்புதினத்தில் பொதிந்து கிடப்பதே இதன் சிறப்பாகிறது. இதுவே வாசகனுக்கு அது விடுக்கும் செய்தியாகிறது. இது காலச்சுவடு வெளியீடு.
காலச்சுவடு, விலை: ரூ.590