தமிழ் தொடர்பாக எல்லீஸ், ஜி.யு.போப் தொடங்கி நொபொரு கராஷிமா, ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்ப்போலா எனப்பல வெளிநாட்டு அறிஞர்கள் பல்லாண்டுகளாக ஆய்வு செய்து நூல்களை எழுதியுள்ளனர். தமிழ், அதன் இலக்கியங்கள், பண்பாடு, வரலாறு ஆகியவை பற்றி இவ்வகையில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளவற்றைக் குறித்து படிக்கவேண்டும் என்ற ஆவலால் வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது. அந்த வாசிப்பினூடே, கண்டறிந்ததுதான் பேராசிரியர் டேவிட் ஷுல்மன் எழுதிய தமிழ்-ஒரு வாழ்க்கைக்கதை' ஆங்கில நூல். இவர் ஜெருசெலேமிலுள்ள ஹீப்ரூ பல்கலையில் மனிதாயப் படிப்புகளுக்கான ரெனே லாங்க் பேராசிரியர். இச்சிறு கட்டுரை இரண்டு பகுதியாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் நூல் அறிமுகமும், இரண்டாவது பகுதியில் இந்நூலின் மையச்சரடாக அமைந்துள்ள ஷுல்மனின் தமிழ்-சமஸ்கிருத உறவு குறித்த கருத்துகளும் விவாதிக்கப்படுகின்றன. முதலில்,
தமிழ், ஒரு வாழ்க்கைக்கதை’ என்ற நூலில் உள்ளவை குறித்து காணலாம்.

ஆலாபனை : தொடக்கங்கள்
தமிழின் தோற்றம்
மொழி ஒரு உயிர். மொழியை எந்த இடத்தில் தொட்டாலும், நாம் இயக்கத்தைப் பார்க்கிறோம். உயிர்த்திருத்தலை உணர்கிறோம். தனித்த அடையாளத்துடனான அதன் வெளிப்பாட்டு வடிவங்களைப் பார்க்கிறோம். மொழிபெயர்க்க முடியாத, இயலாத தன்மையை உடையதாக மொழி இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு மொழியைப் பேசுபவர்கள் சில சமயங்களில் அம்மொழியை ஒரு ‘அது’வாக மாற்ற முயற்சி செய்தாலும், மொழி ஒரு பொருளாக மாறுவதில்லை. அம்மொழி குறித்து மக்கள் கொண்டிருக்கும் கருத்துகள், வரலாறு ஆகியவற்றை மீறி அம்மொழியானது தனது இலக்கண வரையறைகளைப் பற்றிக்கொண்டு, உயிர்ப்புடன் தன்னியல்பில் வளர்ந்து செல்கிறது. அத்தகைய தன்மைகொண்ட பழைய மொழிகளில் ஒன்று தமிழ். இந்தத் தமிழ் மொழியின் வரலாற்றை எழுதும் முயற்சிதான், “”””தமிழ் – ஒரு வாழ்க்கைக்கதை”” என்று இந்நூல் முன்னுரையில் சொல்லுகிறார் நூலாசிரியர் டேவிட் ஷுல்மன்.
இந்தியக் கவிதையியல், சமஸ்கிருத நாடகம், 16, 17ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் நிகழ்ந்த மறுமலர்ச்சி, தென்னிந்தியாவில் இஸ்லாம், கர்நாடக இசை ஆகியவை ஷுல்மனின் விருப்ப ஆய்வுக்களங்கள். சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவருக்கு மலையாளமும் படிக்கத் தெரியும். கிரேக்கம், ருஷ்யன், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், பாரசீகம், அரபு ஆகிய உலக மொழிகளில் அவருக்குப் பயிற்சி உண்டு.
“தமிழ் – ஒரு வாழ்க்கைக்கதை” என்ற இந்த நூலை ஒரு வரலாற்று மொழியியலாளர் பார்வையில் எழுதவில்லை என்று சொல்லும் ஷுல்மன், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் புரிந்துகொள்ளப்பட்ட விதம், பார்க்கப்பட்ட விதம் பற்றி கவனம் குவித்து எழுதப்பட்ட தமிழின் பண்பாட்டு வரலாற்று நூல் என்று இந்த நூலை வரையறுக்கிறார். பேச்சு, இசை, சிந்தனை குறித்த இலக்கணங்களை உருவாக்கி, தமிழ் எப்படி வளர்ந்தது? வரலாற்று ரீதியாக கவிதையிலும், இலக்கியத்திலும் புதிய புதிய வெளிப்பாட்டு முறைகளை வளர்த்தது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடைகள் தேடிய ஒரு பயணம்தான் இந்த நூல் என்கிறார் நூலாசிரியர்.
வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, இந்நூலை விமர்சிக்கையில், ‘2000 ஆண்டுகள் பழமையான, இன்றும் எட்டு கோடிப்பேர் பேசும் ஒரு மொழியின் வாழ்க்கைக்கதையை எழுத முற்படுவது, கண்ணிவெடிகள் நிறைந்த நிலத்தில் பயணிப்பதை ஒத்தது. ஆனால், ஒரு தேர்ந்த பாலே நடனக்காரரைப்போல ஷுல்மன் இந்தக்களத்தைக் கடந்திருக்கிறார்’ எனப் பாராட்டுகிறார்.
‘தமிழ்-ஒரு வாழ்க்கைக்கதை’யில் டேவிட் ஷுல்மன் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் தொகுத்துப் பார்க்கலாம். இந்நூலில் உள்ள இயல்களுக்கு, கர்நாடக இசைப்பாடலின் அங்கங்களின் பெயர்களைத் தலைப்புகளாக வைத்திருக்கிறார் ஷுல்மன். தமிழின் தோற்றம் இலக்கணம் குறித்துப் பேசும் முதல் அத்தியாயத்திற்கு, ‘ஆலாபனை’- ‘தொடக்கங்கள்’ (Beginnings) எனப் பெயரிட்டுள்ளார். சங்க இலக்கியம் பற்றிப் பேசும் இரண்டாம் இயலின் பெயர் ‘பல்லவி’- ‘முதல் மலர்ச்சி’-‘உள்ளிருந்து வரும் தமிழ்’(First Budding:Tamil from the Inside). ‘பக்தி இலக்கியங்கள்’ உருவான காலம், அவை பேசும் பொருள் ஆகியவற்றை மூன்றாம் இயலான, அனுபல்லவி’-‘இரண்டாம் மலர்ச்சி’- இசையாகிய தமிழ்’ இயலில் (Second Budding: The Musical Self) ஷுல்மன் விவரிக்கிறார். ‘முதலாவது சரணம்’-‘ஏகாதிபத்திய தருணம், உண்மை, ஓசை’(The Imperial Moment, Truth, and Sound) என்ற நான்காவது இயலில், சோழர் கால இலக்கியங்கள் பற்றி விரிவாக எழுதுகிறார் ஷுல்மன். ஐந்தாவது இயலான ‘இரண்டாவது சரணம்’-‘அசைகளின் குடியரசு’ (Republic of Syllables) இயலில், கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் பற்றி பேசுகின்றார். அடுத்து, ஆறாவது இயலில், பதினாறாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான இலக்கியப்பனுவல்கள் குறித்து ‘மூன்றாவது சரணம்’-‘ஒரு தமிழ் நவீனத்துவம்;’(A Tamil Modernity) என்ற தலைப்பில் விவரிக்கிறார் ஷுல்மன். ‘ராகமாலிகை’-‘நவீனத்திற்கு அப்பால்’ (Beyond the Merely Modern) என்ற நிறைவு இயலில், கி.பி.1800க்குப் பிறகான நவீன காலத்தமிழ் பற்றி எழுதுகிறார் ஷுல்மன்.
மிக வேகமாகப் பேசப்படும் தென்னிந்திய மொழிகளில் தமிழும் ஒன்று. அன்றாட வாழ்வில் ஒலிக்கும் தமிழ் மொழியைக் கேட்கும்போது, அது எப்போதுமே சுவையானதாக, கவர்ச்சியுடையதாக, மந்திர இசை போல நம் காதுகளில் ஒலிக்கிறது என்று சொல்கிறார் ஷுல்மன். தமிழின் பல இலக்கியங்கள், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் மனிதகுலம் படைத்த மகத்தான படைப்புகளுக்கு ஈடானவை. தமிழின் தோற்றம், பரவல், இலக்கணம் ஆகியவை பற்றி நிலவும் பெரும்பாலான கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. பல முக்கியமான கேள்விகளுக்கு விடைகளே கூட இல்லை. தமிழ் இலக்கியங்களைக் கால வரிசைப்படுத்துவதே சிக்கலானது. தோராயமான காலவரையறைகள்தாம் செய்யப்படுகின்றன.
தமிழ் மொழியின் பெயர், அம்மொழிக்கேயுரித்தான தனித்த ஒலியான ‘ழ’-வில் முடிகிறது. இந்த எழுத்து, தமிழிலும், மலையாளத்திலும் இன்றைக்கும் பேச்சு மொழியில் பயன்படுகிறது. பண்டைய பிரதிகளில் தமிழ் மொழி என்ற சொல்லுக்கு, ‘இசை’ என்ற பொருளும் உண்டு. முத்தமிழில் இயல் தமிழ், நாடகத்தமிழ் ஆகியவற்றுடன் இசைத்தமிழும் அடங்கும். தென்னிந்தியா, சிறீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி, தென்னாப்பிரிக்கா, பாரிஸ், டொரண்டொ எனப் பல நாடுகளிலும், எட்டு கோடி பேர் இன்றும் பேசிக்கொண்டிருக்கும் ஒரே ஆதிகால மொழி, தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் ஷுல்மன் (பாரிஸ், டொரண்டோ ஆகியவற்றை நாடுகள் என்றே குறிப்பிடுகிறார் ஷுல்மன். அவை நகரங்கள் அல்லவா?). தமிழ் என்பது ஓர் ஆதி நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க அறிவுச் சேகரமாக இருக்கிறது. அது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியுடன் நீடித்து வருகிற, நன்றாக தொகுக்கப்பட்ட இலக்கியங்களைக் கொண்டதாக இருக்கிறது.
தமிழ் என்ற சொல் பல்வேறு அர்த்தப் பரிமாணங்களைக் கொண்டது. சுந்தரமூர்த்தி நாயனார், திருப்பைஞ்ஞீலி என்னும் கோயிலில் சிவபெருமானைப் பார்த்து, உங்களுக்குச் சரியான தமிழ் தெரியுமா என்று கேட்கிறார். இந்த இடத்தில், தமிழ் என்பதற்கு, எப்படி அன்பு செலுத்தவேண்டும் எனத் தெரியுமா என்பது பொருள். ‘தமிழ் அறிந்திருத்தல்’ என்பது, ‘ஒரு நாகரிக மனிதராக வாழ்தல்’ எனப் பொருள்படுகிறது. பிங்கல நிகண்டு, தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை, நீர்மை எனப் பொருள் தருகிறது. தமிழ் எனப்படுவது, ஒரு இலக்கணத்தையும் குறிக்கிறது. பேச்சு மொழிக்கும், எழுத்து மொழிக்குமான இலக்கணம் மட்டுமல்ல அது; அதைப்பேசுபவர்கள் உருவாக்கி, வாழும் வாழ்க்கையின் இலக்கணமும் ‘தமிழ்’தான்.
தமிழ் மொழியின் வரிவடிவங்கள், கிறித்துவுக்கு முந்தைய நான்காவது, அய்ந்தாவது நூற்றாண்டுகளில் ப்ராமி வரி வடிவத்திலிருந்து உருவாயின எனக்கருதப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எழுதப்பட்ட காலம் முந்தையதாகவும் அவை, வகை தொகைப்படுத்தப்பட்ட காலம் பிந்தையதாகவும் இருக்கிறது. ஒரு பாடலின்/படைப்பின் படைப்பாளியின் பெயர், தொழில், வாழ்க்கை முறை, வாழ்ந்த காலம் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள, பாடல்கள் தொகுக்கப்பட்டபோது எழுதப்பட்டிருக்கக்கூடிய அடிக்குறிப்புகள் உதவுகின்றன.

முதல் மலர்ச்சி-உள்ளிருந்து வரும் தமிழ்
சங்க இலக்கியங்கள்
தமிழின் தோற்றத்தை நூலின் தொடக்கத்தில் விவரித்த ஷுல்மன், சங்க இலக்கியங்களைப் பற்றித் தன் கருத்துகளை இந்த இயலில் எழுதுகிறார்.
மேய்த்தல் தொழில், நெல் மற்றும் சிறு தானியங்கள் உற்பத்தி செய்யும் பயிர்த்தொழில் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட சிற்றரசுகளிலிருந்து மெல்ல மெல்ல மேலெழுந்து வந்த மூவேந்தர்களின் அரசுகள், வலுவான வேளாண் தொழிலையும், நகரங்களையும் கொண்டு விளங்கின. வடதமிழ்நாட்டில், தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்ட கடற்கரைப்பகுதி தொடங்கி, மேற்கில் தக்காணப் பீடபூமியின் தென்பகுதி வரை மேய்ச்சல் நிலங்களைக் கொண்டதாகப் பல்லவ அரசு விளங்கியது. காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவர்கள் ஐந்து நூற்றாண்டுகள் ஆண்டனர். பிராகிருதம், சமஸ்கிருதம் பின்னர் சமஸ்கிருதமும் தமிழும் கலந்தவை எனப் பல பல்லவ கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கற்களாலான தென்னிந்தியக் கோயில்களைப் பல்லவர்களே முதன்முதலில் உருவாக்கினர். ஆனால், பல்லவர்களைப் பற்றிப் பத்துப்பாட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
தொலைத் தெற்கில் வைகை, தாமிரபரணி நதி சமவெளிகளில் நெல் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாக பாண்டிய அரசு கி.பி.500களில் நிலை கொண்டிருந்தது. தமிழ்ச்சங்கத்தைப் பொருள் தந்து காத்தவர்கள் பாண்டிய அரசர்கள் என்பது இறையனார் அகப்பொருள் சொல்லும் கதை. பாண்டிய மன்னர்கள் தங்களைத் தமிழ் மன்னர்களாகவும், தங்களுடைய பரம்பரையைத் தொடங்கியது சிவனியக்கடவுளே என்றும் எண்ணினார்கள். சிவனே ஒரு தேர்ந்த தமிழ்க்கவி என்பது ஒரு நம்பிக்கை என்கிறார் ஷுல்மன்.
முத்து வியாபாரிகள், பொற்கொல்லர்கள், நீதி வழங்குபவர்கள், அந்தணமுனிவர்கள், ஆடும் விறலிப்பெண்டிர், தாங்கள் பாடிய பாடலுக்கு அரசனிடமிருந்து யானைகளைப் பரிசாகப் பெற்ற பாணர்கள் ஆகியோர் நிறைந்த நகராக பாண்டியர்களின் மதுரை விளங்கியதாகப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி விவரிக்கிறது.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல், இசைக் கலைஞர்களோடு நாடு நாடாக சென்று பாணர்கள் பாடிய வாய்வழிப்பாடல்களே சங்க இலக்கியப்பாடல்கள். கிறிஸ்துவுக்கு பிறகு ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் மதுரை நகரில் இயங்கிய தமிழ்ச்சங்கத்தில் இந்த பாடல்கள் தொகுக்கப்பட்டு சுவடிகளில் எழுதிவைக்கப்பட்டன. சங்கப்பாடல்களைப் பாடிய புலவர்கள் இலக்கணத்தை நன்கு கற்றறிந்தவர்கள். பாடல்களை உரத்துப் பாடும் திறன் பெற்றவர்கள். பின்னர், சங்க இலக்கியப்பாடல்கள் தொகுக்கப்பட்டபோது பாடலை எழுதியவர் யார்? எந்தக் காலத்தைச் சேர்ந்தது போன்ற விவரங்கள் பாடல் அடிக்குறிப்புகளாக எழுதப்பட்டன. இந்தக் குறிப்புகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. அரசர்கள், புலவர்களாக இருந்து பாடல்களைப் பாடிய செய்தி இந்த பாடல் குறிப்புகள் மூலமே நமக்குத் தெரிய வருகின்றன. சங்கப்புலவர்கள், தங்கள் வாய்மொழிச்சொற்கள் மூலம், வாழ்க்கையையே மாற்றும் வல்லமை பெற்றவர்கள் என்ற கருத்து உள்ளது. புலவர்கள் அறம் பாடி விழுந்த அரசுகள் பல உண்டு. எனவே, ஒரு தமிழ் மன்னராக நீங்கள் இருந்தால் புலவர்களைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்கிறார் ஷுல்மன்.
ஏழாம் நூற்றாண்டில் அல்லது எட்டாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான பாண்டிக்கோவை சங்கப்பாடல்கள் அதற்கு, இரண்டு நூற்றாண்டுகள் முந்தையவை என்று குறிப்பிடுகிறது. தொடர்ச்சியாக, நிலையாக, தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்த ஒரு இலக்கிய மரபு கி.பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது. எட்டாம் நூற்றாண்டு பாண்டிய கல்வெட்டுகளில், இந்த இலக்கியமரபைக் காலம்தோறும் கொண்டு செல்பவர்களாகத் தமிழும், சமஸ்கிருதமும் அறிந்த ஆழ்ந்த ஞானம் கொண்ட புலவர்கள் இருந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. .அவர்களில் பெரும்பாலானோர் மனப்பாடம் செய்வதில் மிக்க பயிற்சி வாய்ந்த அந்தணர்களாக இருந்தனர். பல்லவக் கல்வெட்டுகள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் இருப்பதாக எம்மனுவேல் ஃபிரான்சிஸ் சொல்கிறார். வரலாற்று ஆய்வாளரான இவர், ஒரு தமிழ், சமஸ்கிருத அறிஞர். பல்லவ அரசர்களின் கருத்தியல், தமிழ் மொழியின் பண்பாட்டு, சமூக வரலாறு ஆகியவை இவர் எழுதிய நூல்களில் சில. நாடுகளைக் கடந்து இலக்கிய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சமஸ்கிருதம் கோலோச்சிய ஒரு காலத்தில், தமிழ்ப்புலவர்களையும், எழுத்தாளர்களையும் ஆதரித்ததன் மூலம் பல்லவ, பாண்டிய மன்னர்கள் உலகு தழுவிய தமிழ்ப் பயன்பாட்டிற்கு வழிகோலினர்.
சங்கப்பாடல்கள் உரைகளோடு கூடிய ஒரு தொகுப்பாக உருவாகப் பல காலம் பிடித்திருக்கும். பல நூற்றாண்டுகளாகக் குறிப்பாக, பல்லவ, பாண்டிய காலம் முதல் சோழர்களுக்குப் பிறகான காலம் வரை தமிழ் கற்பித்தலின் அடிப்படையாகச் சங்கப்பாடல் தொகைநூல்கள் விளங்கின எனலாம். தமிழ் பேசுவோரின் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கும், தன் விளக்கத்திற்கும் சங்கப்பாடல்கள் முறைமையாக விளங்கின. சோழர்காலத்திற்குப் பிறகான சங்கத் தமிழ் நூல்களின் உரைகளில் இதைக் காணலாம். கேரளத்தில், 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மணிப்பிரவாள மொழியின் இலக்கணமான லீலாதிலகம், எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் மலையாளம் பேசாத பகுதிகளைச் சேர்ந்த இலக்கியங்கள் எனக்குறிப்பிடுகிறது.
பல்லவர் கால சமஸ்கிருதமும், தமிழும்
பல்லவர்களின் அரசவைக் கூடத்தில், தமிழ் மொழி எப்படி விளங்கியது என்பது பற்றி பின்வருமாறு கூறுகிறார் ஷுல்மன். ‘தெற்கில் பாண்டிய மன்னர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் போற்றி வளர்த்தார்கள் என்பது நமக்குத் தெரியும். பல்லவ மன்னர்கள், இந்தியா முழுவதையும் தழுவிய அரசியல் சொல்லாடலில் புழங்கிய சமஸ்கிருதத்திற்கு இணையான ஒரு ஊடகமாக நிலை நிறுத்திக்கொண்ட தமிழையும் மதித்தார்கள்’. இதற்கு எம்மனுவேல் ஃப்ரான்சிஸ் காட்டும் கல்வெட்டுக்களை ஆதாரமாகச் சுட்டுகிறார் ஷுல்மன்.
கி.பி.ஆறாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து, ஏழாம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த முதலாம் மகேந்திரவர்மனின் அரசவையில் இயற்றப்பட்ட படைப்பிலக்கியங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் தான் இருந்தன. பன்மொழி அறிந்த அரசரே ‘மத்த – விலாச’, ‘பாக்வத்-அஜ்ஜுக’ என்னும் இரண்டு சமஸ்கிருத நகைச்சுவை நாடகங்களை இயற்றியுள்ளார். மகாபலிபுரம் என்றழைக்கப்பட்ட மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தவம் கற்சுதையின் வடிவம் (கி.பி. 630 லிருந்து 688 வரை ஆண்ட) நரசிம்ம மாமல்லனைப் பற்றியதாக இருக்கிறது. சமஸ்கிருத இலக்கிய நயமான, ‘சிலேடை’, இந்தக் கற்சுதையில், ஒரு பொருளின், இரண்டு எடுத்துரைப்பாக விரிகிறது.
தமிழராகப் பிறந்த தண்டி, சமஸ்கிருதத்தில் சிறந்த பண்டிதராக விளங்கினார். அவர் ‘காவிய தர்ஸ’ என்னும் அணியிலக்கணம் பற்றிய நூலைச் சமஸ்கிருதத்தில் இயற்றினார். அது இந்தியாவிலும், ஏன் ஆசியா முழுவதும் பரவலாகக் கற்கப்பட்ட நூலாக இருந்தது. பின்னர், பன்னிரண்டாம் நூற்றாண்டில் ‘தண்டியலங்காரம்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூல், திபெத்திய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல்லவ மன்னர்களின் ஆதரவில் சிற்பிகளும், கற்றறிந்த புலவர்களும், அறிஞர்களும் தங்களுக்கிடையே படைப்பு மொழி நுட்பங்களைப் பரிமாறிக் கொள்ளும் சூழல் பல்லவ நாட்டில் இருந்தது.
ஏழாம் நூற்றாண்டில், பல்லவர் அரசவையில் இருந்த தண்டி எழுதிய தண்டியலங்காரம், உவமைகளை அலங்காரமாகக் கையாளுதல் என்னும் பயன்பாட்டைப் பற்றிப் பேசுகிறது. சோழநாட்டினரான கம்பரும், ஒட்டக்கூத்தரும், ஜெயங்கொண்டாரும் அதனைத் தங்கள் படைப்புகளில் கையாளுகிறார்கள். அவர்கள் நேரடியாகத் தண்டியலங்காரத்தைப் படித்திருந்தார்களா என்பது தெரியவில்லை என்கிறார் ஷுல்மன்.
தமிழ் இலக்கியப் போக்கில், ‘தண்டி’ ஒரு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். யதார்த்தத்தை மிகவும் தீவிரத் தன்மையுடனும், அனுபவங்களும், பார்வைகளும் கொண்ட உருவகங்களாக எழுதும் பாணி உருவாகியது. உள்முகப் பார்வை பார்ப்பது, கவிதை மொழியின் புதிய வார்ப்பாக மாறியது.
பல்லவர் ஆட்சியின் உச்சத்தில் நிலவிய பன்மொழிச் சூழலுக்கு, ஒரு சமூகக்கட்டுமான தர்க்க அடிப்படை இருப்பதாக, பர்ட்டன் ஸ்டெயின் சொல்கிறார். இவர் இடைக்கால தென்னிந்தியாவில் வேளாண் அரசும், சமூகமும் என்ற நூலுக்காகப் பெரிதும் அறியப்படும், அமெரிக்க வரலாற்றாசிரியர். பல்லவ, பாண்டியர் ஆட்சிக்காலத்தில் அந்தணரல்லாத உழவர்கள், அந்தணர்களுடன் தொடர்ச்சியான உறவைக் கொண்டனர். வேதமறிந்த பார்ப்பனர்களுக்கு வரி கட்டத் தேவையற்ற நிலங்கள், பிரம்ம தேயங்களாக வழங்கப்பட்டதைப் பாண்டிய வேள்விக்குடிச் செப்பேடுகளில் காணலாம். பல்லவ மரபில், தென்னிந்திய சத்ரியகுல மரபு அழிந்து போன காரணத்தால் பார்ப்பன சத்திரிய அமைப்புகள் உருவாக நேர்ந்தது. பல்லவமன்னர்கள் தங்களைப் புராண, அந்தணப் போராளியான, அஸ்வத்தாமனின் வாரிசுகள் என அழைத்துக்கொண்டனர்.
பல்லவர் காலத்தின் கடைசி ஒன்றரை நூற்றாண்டுகளில், அவர்களது அரசவைப் பண்பாடு, தமிழ் இலக்கிய அறிவுச் செயல்பாடுகளின் களமாக மாறுவதைப் பார்க்க முடிகிறது. எட்டாவது, ஒன்பதாவது நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் அரசியல்தமிழ் மேலாண்மை செலுத்துகிறது. கி.பி.800-ரில் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட, வைகுந்தப் பெருமாள் கோயில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுகள், இரண்டாம் நந்திவர்மன் முடிசூடுவதை விவரிக்கின்றன, கல்வெட்டுகளை ஒட்டி, அதே பொருளில் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் நந்திக்கலம்பகம், பல்லவ மன்னனைத் ‘தொண்டை வேந்தன்’ என்றும், ‘மல்லை அண் கானல் முதல்வன்’ என்றும், ‘தொல்லை நூல் வரம்பு முழுது கண்டான்’ என்றும் விவரிக்கிறது. மூன்றாம் நந்திவர்மன் புகழ்பாடும் நந்திக்கலம்பகத்தின் பாடல்கள், தமிழின் பல்வேறு யாப்புகளில், சந்தங்களில் அமைந்துள்ளன. நந்திக்கலம்பகத்தின் மன்னனின் புகழ் பாடும் ‘மெய்க்கீர்த்தி’யை ஒத்த பகுதி புறநானூற்றுப் பாடல்களின் பாவகையான ஆசிரியப்பாவில் எழுதப்பட்டிருக்கிறது. நந்திக்கலம்பகத்தை இயற்றிய புலவர், அதன் நூறாவது பாடலைப் பாடும்போது, அதை யார் கேட்டாலும் கேட்டவர் இறந்து போவார் என்று சொன்னதாகவும், தமிழின் மீதுள்ள பற்றால், அரசன் நந்திவர்மன் அதைப் பாடச்சொல்லிக் கேட்டு அதனால், எரிந்து, இறந்து போனதாகவும் செவிவழிக் கதை ஒன்று சொல்கிறது. நல்ல கவிதைக்காக, உயிரையும் கொடுக்கலாம் என்பது உண்மைதான் போலிருக்கிறது என்கிறார் ஷுல்மன்.
மனித உருவங்களைக் கல்லில் வடிப்பதைத் தென்னிந்தியாவில் பல்லவர் ஆட்சிக் கால சிற்பங்களில்தான் முதலில் பார்க்கிறோம். பின்னாளில், பல நூற்றாண்டுகள் கழித்து, நாயக்கர் காலத்தில் உருவ அமைப்புகளைச் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, மாமல்லபுரத்தில் ஆதிவராக குகையில், அரசன் சிம்மவிஷ்ணு, தன் இரண்டு மனைவிகளுடன் இருக்கும் சிற்பங்கள் அற்புத துல்லியத்துடன், உணர்ச்சிப் பூர்வமாக வடிக்கப்பட்டுள்ளன. அருகிருக்கும் கல்வெட்டுகளில், அவர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலக் கல்வெட்டுக்கள் தென்னிந்திய வரிவடிவங்களிலேயே மிக அழகான பல்லவ கிரந்த எழுத்து வடிவங்களால் வடிக்கப்பட்டன.
பெரும்பாணாற்றுப்படை, காஞ்சி நகரத்தை மிக நேர்த்தியாக விவரிக்கும் சிறந்த பாடலாகும். எட்டாம் நூற்றாண்டில் தொல்காப்பியமும் தண்டியலங்காரமும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கண நூல்களாக விளங்கின.
திருவள்ளுவர் கதை
சங்க இலக்கியத்தை அடுத்து, கி.பி. 2 ஆம் நூற்றாண்டு இலக்கியமான திருக்குறள் பற்றி ஆசிரியர் விவரிக்கிறார். நீதி என அழைக்கப்படும் மதிப்பீடுகள், நடைமுறை அறிவு ஆகியவை பற்றியும், தமிழின் பிடித்தமான பொருளான காதலையும் அதன் உயர்வு தாழ்வையும் திருக்குறள் பாடுகின்றது.
ஆதி-பகவன் என்ற பெற்றோருக்குச் சென்னை மயிலாப்பூரில் பிறந்த திருவள்ளுவர் வேளாளர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வாசுகி என்ற பெண்ணை மணந்தார் என்று ஒரு கதை சொல்கிறது. சமஸ்கிருதத்தில் ஒரு பெரிய பாம்பு வாசுகி என்றழைக்கப்படுவதை இங்கே குறிப்பிடுகிறார் ஷுல்மன். திருக்குறளின் ஆரம்ப அதிகாரங்களில் உள்ள பேசுபொருட்களை வைத்து திருவள்ளுவர் ஒரு சமணர் என்று சொல்வதும் உண்டு. தமிழர்களின் பார்வையில் திருவள்ளுவர் ஒரு மூடநம்பிக்கை எதிர்ப்பாளராகவும், உருவ வழிபாட்டுக்கு எதிரானவராகவும், ஒரு சமூக புரட்சியாளராகவும் இருக்கிறார்.
தர்மம் என்னும் அறம் பற்றிப் பேசும் அறத்துப்பால், பொருள் அரசியல் பற்றிப் பேசும் பொருட்பால் இரண்டிலும் மனைவியின் சொல் கேட்போர் (பெண்வழிச் சேறல், அதிகாரம் 91), பரத்தையர் (வரைவின் மகளிர், அதிகாரம் 92) ஆகியோரைப்பற்றி இழித்துச் சொல்கிறது திருக்குறள். ஆனால், மூன்றாவது பாலான காமத்துப்பாலோ, காதலைக் கொண்டாடுகிறது. நாடகப்பாங்கிலான தனிமொழியில் எழுதப்பட்ட, காமத்துப்பால் காதல் வாழ்க்கையின் பல கட்டங்களைப் பாடுகிறது. நக்கீரரின் இறையனார் அகப்பொருள் சொல்லும் பாங்கில் காமத்துப்பால் அமைந்திருக்கிறது என்கிறார் ஷுல்மன். சமஸ்கிருதம் கோலோச்சிய காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பரிமேலழகர், ஐவகை நிலங்களை அடிப்படையாகக்கொண்ட திணை அடிப்படையில் காமத்துப்பாலின் முதல் ஏழு அதிகாரங்களைக் ‘களவு’, அதாவது திருமணத்திற்கு முந்தைய காதல் உறவு குறித்ததாகவும், தொடர்ந்து வரும் 17 அதிகாரங்களைக் ‘கற்பு’ அதாவது மணவாழ்வு குறித்ததாகவும் வகைப்படுத்துகிறார்.
திருக்குறள் ஒரு அறநூலா, இல்லை ஒரு படைப்பிலக்கிய நூலா என்ற கேள்வியைப் பலரும் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளிக்குமுகமாக வள்ளுவர், ஒரு அற்புதமான கவிஞர் என்பதைக் காமத்துப்பால் படிப்பவர்கள் மறுப்பின்றி ஒத்துக்கொள்வார்கள் என்று முடிக்கிறார் ஷுல்மன்.
இரட்டைக் காப்பியங்கள்
இந்நூலில் ஷுல்மன், தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை பற்றி அவர் சொல்வதை இங்கே தொகுத்துப் பார்க்கலாம். சங்க காலத்தைத் தொடர்ந்து வந்த காலத்தின் இரட்டைக் காப்பியங்களாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலையும் விளங்குகின்றன.
புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று பகுதிகளாகச் சிலப்பதிகாரம் எழுதப்பட்டுள்ளது. தனது இடது முலையைப் பிய்த்தெறிந்து மதுரையை எரித்த பின்னர், மேற்கு நோக்கிச் சென்று மலைகள் மீதேறி வானுலகம் ஏகினார் கண்ணகி. மலைக்குறவர்கள் அதைப்பார்த்து சேர மன்னனிடம் சொல்ல, கொடுங்கலூரில் பத்தினி தெய்வமான கண்ணகிக்கு அவன் கோயில் எடுக்கிறான். இன்றைய கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற கொடுங்கலூர் பகவதி அம்மன், ‘ஒற்றை முலைச்சி’ என்று அழைக்கப்படுகிறாள் என்பதை இங்கே குறிப்பிடுகிறார் ஷுல்மன்.
சிலப்பதிகாரத்தின் கதை வடிவம், கேரள வடக்கு மலபாரில் நிகழ்த்தப்படும் தெய்யம் கதைகளோடு ஒத்துள்ளது. சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஆசிரியர் பற்றி அதன் முன்னுரையான பதிகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்பதிகம் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். இறுதிக்காண்டத்தில், பேய் பிடித்த நிலையில் இருக்கும் தேவந்திகை மூலம் தன் வாழ்வைப் பற்றி இளங்கோவடிகள் சொல்கிறார். பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் சேரன்செங்குட்டுவனின் தம்பியே இளங்கோவடிகள். “”””கி.பி. 171 முதல் 193 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆண்ட கயவாகு மன்னன் கொடுங்கலூர் பகவதி அம்மனை வழிபட்டதைச் சிலப்பதிகாரத்தின் முப்பதாவதுகாண்டம் பதிவு செய்கிறது. இந்த மன்னன் சேரன்செங்குட்டுவனின் சமகாலத்தவனாக இருக்கலாம் என்கிறார் ஷுல்மன்.
மணிமேகலையின் பதிகம், காப்பியத்தை எழுதிய மதுரைக்கூலவாணிகன் சாத்தன் பெயரைச் சொல்லுகிறது. கோவலன், கண்ணகி வாழ்க்கையில் நடந்தவற்றை, சீத்தலைச்சாத்தனார்தான் இளங்கோவடிகளிடம் சொன்னதாகத் தெரிகிறது. கோவலன், மாதவி இருவருக்கும் பிறந்த பெண் மணிமேகலையின் கதைதான் மணிமேகலைக் காப்பியம். கண்ணகி மதுரையை எரித்தது போல், மணிமேகலைக் காப்பியத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை ஊழிப்பெருவெள்ளத்தால் அழிக்கிறாள் மணிமேகலை. தமிழில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்கள் பலவற்றில், இன்றும் நிலைத்து நிற்கும் ஒரு முத்து, மணிமேகலைக் காப்பியம்.
இரண்டு காப்பியங்களும் பல்வகைப்பட்ட, சிக்கலான தமிழ் நிலப்பரப்பின் செழுமையான சித்திரங்களை இலக்கியப் பிரதிகளாக நம் முன்வைக்கின்றன. இலக்கணத்தின் அத்தனை இயல்புகளும், இந்த இரண்டு இலக்கியப் பிரதிகளிலும் இடம்பெற்றுள்ளன. ஐவகை நிலங்கள், அகம், புறம் சார்ந்த வெளி, இலக்கிய, நாட்டிய வகைமைகள், மனிதனின் இலக்குகளான நன்னெறி, செல்வம், காதல் ஆகியவற்றை இந்த இரட்டை காப்பியங்களும் பேசுகின்றன என்கிறார் ஷுல்மன்.
அனுபல்லவி-இரண்டாம் மலர்ச்சி-இசையாகிய தமிழ்
நாலாயிர திவ்யப்பிரபந்தமும், தேவாரமும்
‘பக்தி இலக்கியங்கள்’ உருவான காலம், அவை பேசும் பொருள் ஆகியவற்றை மூன்றாம் இயலான, ‘அனுபல்லவி’ – ‘இரண்டாம் மலர்ச்சி’-‘இசையாகிய தமிழ்’ இயலில் ஷுல்மன் விவரிக்கிறார்.
அகத்திணை சார்ந்த சங்கப்பாடல்கள், பெயர் குறிப்பிடாமல் தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் எனப் பொது பெயர்களைக் கொண்டு எழுதப்படுவது மரபு. பக்தி இயக்கத்தில் நம்மாழ்வார் திருவிருத்தத்திலும், ஆண்டாள் நாச்சியார் திருமொழியிலும், மாணிக்கவாசகர் திருவாசகத்திலும், காரைக்காலம்மையார் அற்புதத்திருவந்தாதியிலும் கடவுளை உயிராகவும், தங்களை உடலாகவும் அமைத்துப் பாடுகின்றனர். நாயக-நாயகி பாவம் இந்தப் பாடல்களில் இயல்பாக அமைந்துள்ளது. சைவ சமயத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரும் காரைக்கால் அம்மையாரும் சிறப்பானவர்கள். வைணவத்தில் நம்மாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட 12 ஆழ்வார்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
மூன்றாம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவமன்னர்களின் ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை, மரத்தாலும் கூரைவேய்ந்தும் கட்டப்பட்ட கோயில்கள், நிரந்தர கற்கோயில்களாயின. “”””கி.பி. 600 லிருந்து 630 ஆண்டு வரை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன், செங்கற்கள் இல்லாத, மரச்சட்டம் இல்லாத, உலோகம் இல்லாத, சுதை இல்லாத கோயிலைக் கட்டி உள்ளதாகப் பெருமைப்படச் சொல்லிக்கொள்கிறான். பக்தி இலக்கியப்பாடல்கள் பலவும், கோயில்கள் கட்டப்பட்டு கொண்டிருந்த காலத்திலேயே பாடப்பெற்றன. இப்பாடல்கள் ஒரு குறிப்பிட்ட தலத்தில் உள்ள தெய்வத்தைப் பற்றியும், அதன் சிற்பச்சிறப்பையும், சடங்குகள் குறித்தும் சொல்கின்றவையாக இருக்கின்றன.
ஓலைச்சுவடிகளில் பொறிக்கப்படுமுன் சைவத்திருமுறைகள், வாய்ப்பாட்டாகப் பாடப்பட்டு வந்தன. சோழப்பேரரசன் இராஜராஜன், ஒருமுறை தேவாரப்பாடல் ஒன்றைத் திருநாவலூரில் நம்பியாண்டார் நம்பி பாடக் கேட்கிறான். ஷுல்மன் நம்பியாண்டார் நம்பியை ஆதி சைவப் பூசாரி என்றும் அந்தணச் சிறுவன் என்றும் விளிக்கிறார். பின்னர், தேவாரப்பாடல்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஒரு பூட்டிய அறையில் இருப்பதாக அரசன் அறிகிறான். அங்கு அந்த அறையைத் திறந்து பார்த்தபோது, ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் இருந்தன. அத்தனையும் தேவாரப்பதிக ஓலைச்சுவடிகள். இராஜராஜன் அவற்றைத் தொகுக்க ஏற்பாடு செய்கிறான் என்ற கதையைத் திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜனை விடவும் நாடகத்தன்மையுடன் தொகுத்துச் சொல்கிறார் ஷுல்மன்.
நாலாயிர திவ்யப்பிரபந்தமும், தேவாரமும் எப்படித் தொகுக்கப்பட்டன என்பது பற்றிய ஷுல்மனின் கருத்து பின்வருமாறு. பக்தி இலக்கியங்கள் பெரும்பாலும் வாய்ப்பாடல்களாகப் பாடப்பட்டு, வழிவழியாக மனனம் செய்யப்பட்டு, தலைமுறைகள் கடந்து நிலைபெற்றன.
பிற்கால பல்லவர் – பாண்டியர் காலத்தில் ஆரம்பித்து, முற்கால சோழப்பேரரசின் ஆட்சிக்காலத்தில் (ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டு) இந்த பக்தி இலக்கியங்கள் தரப்படுத்தப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. வைணவ இலக்கியங்களுக்கு மையப்பிரதியாக நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், திருவிருத்தமும் அமைந்தன. இவற்றுடன் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி உள்ளன. சமஸ்கிருதத்தில் உள்ள நான்கு வேதங்களையும் பல நிலைகளில் விஞ்சுவதாகத் தமிழ்வேதம் என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி கருதப்படுகிறது. பாடப்பட்டுப் பல்லாண்டுகள் கழித்து ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் நாதமுனி என்பவர் நம்மாழ்வாருடைய ஆக்கங்களையும், மற்ற பதினொரு ஆழ்வார்களின் படைப்புகளையும் தொகுத்து, நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை உருவாக்குகிறார்.
‘பக்தி இயக்கத்தின் வைணவப் பிரிவு குறித்து, விரிவாக விவாதிக்கும் ஷுல்மன், வைணவத்தின் தொடக்கத்தைச் சங்க இலக்கியப்பிரதியான கலித்தொகையில் காண முயல்கிறார். 1920ஆம் ஆண்டு எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய, ‘தென்னிந்தியாவில் வைணவத்தின் ஆரம்ப வரலாறு’ நூலிலேயே இந்தக் கருத்தாக்கம் உள்ளதை ஷுல்மன் தனது நூலில் குறிப்பிடவில்லை. கிருஷ்ணசாமி அய்யங்காரின் நூல் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது. பக்தி இயக்கத்தின் ஊடே நிகழ்ந்த சமூக மாற்றங்கள் குறித்தும், சாதி மற்றும் வர்ண முறை குறித்து பக்தி இலக்கியங்கள் முன்வைத்த பல புரட்சிகரமான விமர்சனங்கள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் எழுதியுள்ளனர். ஆனால், ஷுல்மன் இந்த விஷயத்தில் மௌனம் சாதிக்கிறார்’ என்கிறார் பேராசிரியர் அழகரசன், இந்நூல் குறித்த விமர்சனம் ஒன்றில்.
பட்டினத்தார்
பதினைந்தாம் நூற்றாண்டில் காவேரிப்பட்டணத்தில், ஸ்வேதாரண்யர் என்னும் வணிகருக்கு மகனாகப் பிறந்த பட்டினத்தாருக்கு, திருவெண்காடு தலக்கடவுள் பெயரான திருவெண்காடர் எனப் பெயரிட்டார்கள். ஒரு முறை பட்டினத்தார் வணிகம் செய்ய ஒரு கப்பலில் நண்பர்களோடு போய், தவிட்டு மூட்டைகளுடன் திரும்பி வந்தார். கடுப்பான அப்பா, அவரை வீட்டில் பூட்டிவைத்து, அந்தத் தவிட்டு மூட்டைகளைத் தூக்கி எறிந்தபோது அவை தங்கமாகவும், விலையுயர்ந்த கற்களாகவும் மாறின. பிறகு, வெளியில் சென்ற அப்பா வீடு திரும்பியபோது மகன் வீட்டில் இல்லை. அம்மாவிடம் பட்டினத்தார் கொடுத்துப்போன பெட்டியைத் திறந்து பார்த்தபோது, ஒரு காதறுந்த ஊசி இருந்தது. உடனிருந்த ஓலைச்சுவடியில், ‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என எழுதப்பட்டிருந்தது. அப்பாவிற்கு மகன் துறவறம் பூண்டது புரிந்தது.
முதலாவது சரணம் – ஏகாதிபத்திய தருணம், உண்மை, ஓசை
பிற்காலச் சோழர்கள்
‘முதலாவது சரணம்’-‘ஏகாதிபத்திய தருணம், உண்மை, ஓசை’ என்ற நான்காவது இயலில், சோழர் கால இலக்கியங்கள் பற்றி விரிவாக எழுதுகிறார் ஷுல்மன்.
பிற்காலச் சோழர்கள், சமஸ்கிருதத்துடன் தமிழ் மொழியையும் அரசு மொழியாகப் பயன்படுத்தினர். சோழப்பேரரசின் காலத்தில் பல சிறந்த இலக்கியங்கள் இயற்றப்பட்டன. அரசர்களின், கடவுளரின் மொழியாகத் தமிழ் வெளிப்படையாகத் திகழ்ந்தது. பல்லவ, பாண்டிய கல்வெட்டுக்கள், தமிழ்-சமஸ்கிருதம் இரண்டிலும் எழுதப்பட்டது போல, சோழர்காலக் கல்வெட்டுகளும் எழுதப்பட்டன. இக்கால கட்டத்தில் தேசங்கடந்த மொழியாகத் தமிழ் விளங்கியது. சோழர் கால தமிழ்க்கல்வெட்டுகள், ஆந்திர சமவெளி, மேற்கு தக்காணம், ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து, சுமத்ரா ஏன் சீனாவிலும் கூட கிடைத்துள்ளன.
கி.பி.1012இல் சோழராஜன் அனுப்பிய வணிகக் குழு ஒன்று, சீனாவில் சோங் வம்ச அரசர் செங் சுங்கைச் சந்திக்கிறது. தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு, நாகப்பட்டினம் வழியாக, இலங்கை, பர்மாவில் உள்ள ரம்மணதேசம் (தமிழில் அருமணம்), வடக்கு மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயன் ஆளுகைக்குட்பட்டிருந்த சுமத்ரா தீவுகள் ஆகியவற்றைத் தொட்டு, மூன்று ஆண்டுகள் பயணம் செய்து, தென் சீனாவில் உள்ள கடற்கரையோரப் பெருநகரான குவான் சூவை அடைகிறது. இக்குழுவின் தலைவரான சோழி அல்லது சோழ சமுத்திரன் அங்கு இறந்து விடுகிறார். சோழர்கள், சீன அரசுக்கு முத்துக்கள், தந்தங்கள், நறுமணப் பொருள்கள், மூலிகை மருந்துகள் ஆகிய தென்னிந்தியச் சிறப்புப் பொருட்களைப் பரிசாக எடுத்துச்சென்றனர்.
பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை, தமிழ் வணிகர்கள் தென்கிழக்காசியாவில் சீனா வரை சென்று வணிகம் செய்து வந்திருக்கின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் கடைசியில், குவான் சூவில், ‘கடலீசுவரன்’ என்ற பெயர் கொண்ட தமிழ்க்கடவுளுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
அது போலவே, ஸ்ரீவிஜய சைலேந்திர அரசன், மாரா விஜயதுங்க வர்மா, தன் தந்தை சூளாமணி வர்மாவின் பெயரில், நாகப்பட்டினம் துறைமுக நகரில் புத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளான். கி.பி. 1006ஆம் ஆண்டில், இராஜராஜ சோழன் ஆனைமங்கலம் என்னும் கிராமத்தின் வருவாய் முழுவதையும், பள்ளி சந்தனமும் (வரி நீக்கம்) செய்து, அந்த புத்த விகாரைக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளான்.
கி.பி.1110 ஆம் ஆண்டில், கலிங்கத்தின் மேல், (கலிங்கமென்பது இன்றைய ஓடியா) முதலாம் குலோத்துங்கன் படையெடுத்து பெற்ற வெற்றியைக் கொண்டாடுகிறது ஜெயங்கொண்டார் இயற்றிய ‘கலிங்கத்துப் பரணி’. புலவர் பாடிய ஒவ்வொரு பாடலுக்கும், தங்கத்திலான தேங்காயை அவர் பக்கம், மன்னன் முதலாம் குலோத்துங்கன் உருட்டி விட்டான் என்று செவிவழிக் கதை ஒன்று சொல்லுகிறது. கலிங்கத்தை, அதன் கிழக்குக் கடற்கரை பக்கம் படையெடுத்து தாக்கி, புத்தம்புது பிணங்களைத் தங்களுக்கு விருந்தாக்குவான் சோழ மன்னன் எனக் காத்திருக்கின்றன பேய்கள். பேய்களில் தான் எத்தனை வகைகள்! போர்க்கள சாம்பாரின் சுவைக்கு ஏங்கி சமஸ்கிருதத்தில் இறைஞ்சும் பார்ப்பனப்பேய்கள், மனித மூளையைக் கொண்டு செய்யப்பட்ட குழம்பு கிடைக்குமா என ஏங்கும் மிகுந்த அறிவுள்ள புத்த மதப்பேய்கள், ரசத்தில் தலைமுடி ஏதும் விழுந்து விடவில்லையே எனக் கூர்ந்து பார்க்கும் சமணப் பேய்கள். இப்படிப் பல பேய்களைப்பற்றிப் பாடுகிறது கலிங்கத்துப்பரணி. இவற்றைப் பற்றிய ஷுல்மனின் விவரிப்பு சுவையானது.
ஓட்டக்கூத்தரும், கம்பரும்
இடங்கை சாதிகளுள் ஒன்றான, நெசவு நெய்யும் செங்குந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் ஒட்டக்கூத்தர். காளி போன்ற பெண் தெய்வங்களைப் போற்றிப்பாடும் தக்கயாகப்பரணியை ஒட்டக்கூத்தர் இயற்றினார். தமிழில் தாந்த்ரீக, சாக்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நூல் இது என்று சொல்கிறார் ஷுல்மன்.
சோழர் கால கல்வெட்டுகள், முதன்முறையாக, அன்றைய பேச்சு வழக்கு உரைநடையைப் பதிவு செய்துள்ளன. மன்னரின் வம்சாவழியைச் சமஸ்கிருதத்தில் சொல்லும் பிரசஸ்தியும், மன்னர் புகழ்பாடும் தமிழ்க் கவிதை நடையிலான மெய்க்கீர்த்தியும், நடைமுறை உரைநடையும் ஒருசேர கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
தமிழ் புலவர்களிலேயே மிகவும் திறமை வாய்ந்தவரான கம்பர் தேரழுந்தூரில் பிறந்து காளி கோயில் ஒன்றில் ‘உவச்சன்’ என்னும் பூசாரியாக வேலை செய்தார் எனக் கூறுகிறார் ஷுல்மன். தேரெழுந்தூர் கோயில் கோபுர உட்புறச்சுவரில், கம்பரது உருவப்படம் வரையப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் கம்பர், எந்த மன்னனின் அரசவைப்புலவராகவும் இல்லை. தன்னுடைய இராமாயணத்தின் ஒவ்வொரு 1000ஆவது பாடலிலும், தனக்குப் பொருளுதவி செய்த திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த சடையன் என்கிற சடையப்ப வள்ளலைப் புகழ்கிறார் கம்பர்.
இராமாயணத்தைத் திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் அரங்கேற்ற கம்பர் விழைந்தபோது, அங்கிருந்த கோயில் பூசாரிகள், இந்நூல் சமஸ்கிருத நூலாக இருந்தால், அரங்கேற்றம் செய்ய எங்களுக்கு எந்தவிதத் தடையும் இல்லை. ஆனால், இது தமிழ்ப்படைப்பாக இருப்பதால் உங்கள் புலமை குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது என்கின்றனர். இந்த இராமாயணத்தில், கம்பருக்கு உதவிய வள்ளல் சடையப்பன் புகழ்பாடும் பாடல்கள் வருகின்றன.
எனவே, கடவுளைப் புகழாமல் நரஸ்துதி என்னும் மனிதப்புகழ் பாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது என மறுக்கின்றனர். அரசவை நடன மங்கையர், கைவினைஞர்கள், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசர்கள், புலவரின் குடும்பத்தினர், திருநறுங்கொன்றை கிராமத்தைச் சேர்ந்த கற்றறிந்த சமணர்கள் ஆகியோரின் பரிந்துரைக் கையொப்பம் பெற்று வந்தால், இராமாயணத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்ற ஒப்புக்கொள்வதாகப் பின்னர் மசிகின்றனர் திருவரங்கக் கோயில் பூசாரிகள்.
சமணர்களும் கம்பரின் இராமாயணத்தை ஏற்க மறுக்கின்றனர். அவரிடம் சில குயுக்தியான கேள்விகளைக் கேட்கின்றனர். அதற்குக் கம்பர் தக்க பதில் அளிக்கிறார். உங்கள் ராமகாவியத்தில், சமணர்களைப் பற்றி சொல்லியுள்ளீர்களா என்று கேட்க, அதற்கு கம்பர், ராவணன் புதல்வன் இந்திரஜித் போரில் இறக்கும்போது கடவுளர்கள் ஆனந்தம் கொள்வதாக வரும் பாட்டை குறிப்பிடுகிறார்.
தேவர்
எல்லாரும் தூசு வீசி
ஏறிட ஆர்த்த போது,
கொல்லாத விரதத்தார்தம்
கடவுளர் கூட்டம் ஒத்தார்(9308)
இந்தப்பாடல், வானத்தையே ஆடையாக அணிந்த திகம்பர சமண முனிவர்கள் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது.
சோழர்கள் காலத்தில் சைவர்கள், வைணவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், இன்னபிறர் என பல்வேறு பிரிவினர் கலந்து உறவாடும் ஒரு களமாகச் சமூகக் கட்டமைப்பு இருந்தது. தமிழ் பக்தி மதம், வேத, அவேத வழக்குகளுக்கு இடையே தெளிவான பிளவை ஏற்படுத்தி, அதிலும் தமிழ்ச் சைவம் குறிப்பாக எரிக்கும் மதப்பிரச்சார நிலைக்குச் சென்றது. தமிழுலகில் சமணர்கள் தொடர்ச்சியாக ஆழ்ந்த அறிவுடையவர்களாகவும், அரிய நூல்களைப் பரப்புபவர்களாகவும் நிலை கொண்டுவிட்டனர்.
பிற்கால சோழர்கள் காலத்தில், தமிழ் ஒரு பேரரசின் மொழியாக எப்படி வளர்ந்தது? சமஸ்கிருதத்துடன் இணைந்து, நிலப்பரப்பைக் கடந்த ஒரு மொழியாகத் தமிழ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதாக விவரிக்கிறார் ஷுல்மன். வீரசோழியம், நேமிநாதம் போன்ற புதிய இலக்கண நூல்கள் இக்காலகட்டத்தில் தோன்றின. பலதரப்பட்ட இலக்கியத் தொகுப்புகள், பண்பாட்டுச்சூழலை முழுமையாக மாற்றின. தமிழ்ச் சமூக கட்டமைப்பு, பரந்து விரிந்தது. அதில் பவுத்தர்கள், சமணர்கள், சைவர்கள், வைணவர்கள், மேல்தட்டு அரசவை உறுப்பினர்கள், நாடோடி மாந்திரீகர்கள், தந்திரம் பயின்ற மாயாவிகள் எனப் பலர் வலம் வந்தனர். தமிழின் செல்வாக்குப் புவியியல் ரீதியாகவும் வளர்ந்தது.
பதினோராம் நூற்றாண்டின் நடுவில் ஆந்திர சமவெளிப் பகுதியில் கீழைச்சாளுக்கிய அரசவையில் பணிபுரிந்த நன்னையா, தெலுங்குக் கவிதையின் மூலவர் ஆவார். தமிழ்ச் சங்கப்பாடல்களை அவர், தனது கவிதைக்கு முன்னோடியாகப் பார்த்தார். தமிழ்ச்சைவம், ஆந்திரா, தக்காணம் வரை செல்வாக்குப் பெற்றது. முதல் ஆயிரமாவது ஆண்டுகளின் இறுதியிலும், இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளின் தொடக்க நூற்றாண்டுகளிலும் இலக்கியங்களை உருவாக்குவதில் இந்திய மொழிகளிலேயே தமிழ் தனித்த இடத்தைப் பெற்றிருந்தது என ஷெல்டன் பொல்லாக் குறிப்பிடுவார். சமஸ்கிருத அறிஞரான ஷெல்டன் பொல்லாக், கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் தெற்காசியப் படிப்புகளுக்கான பேராசிரியராக உள்ளார்.
தமிழ் மொழியில் இலக்கியங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே பிரதேசப் பண்பாட்டில் ஆழ வேர்கொண்ட பேச்சு மொழியாகத் தமிழ் வழக்கிலிருந்திருக்கிறது. தமிழ் அதுவரை வகித்து வந்த பிரதேசம் சார்ந்த இலக்கிய மொழி என்ற இடத்தில் இருந்து, நாடு கடந்து பேசப்படும் மொழியாக வளர்ந்ததை; சமஸ்கிருதத்தின், புலமைக்கு ஈடாக, தமிழ் பயன்பாட்டுக்கு வந்ததை, வீர சோழியத்தை வைத்து ஆன் இ.மோனியஸ் நிறுவியுள்ளார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மதங்கள் துறையில் பேராசிரியராக இருந்தவர்.
உண்மையான தமிழ்’ என்பது பாணினியின், தண்டியின் மொழியியல், அணியியல் கட்டமைப்புக்குள் பொருந்திவரும் தமிழ் என்கிறார் வீரசோழியத்தின் ஆசிரியர். தமிழ்மொழி குறுங்குழுவாத, சமூக, அரசியல், புவியியல் எல்லைகளைக் கடந்து, பேரரசின் எதிரெதிர் அரசியல் தலைமைகளின் ஆதரவைப் பெற்றது. தமிழ் ஒரு உலக மொழியாக, பிற்காலச்சோழர்கள் காலத்தில் ஆனது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோழப்பேரரசின் வீழ்ச்சி ஆரம்பித்தது. சில பத்தாண்டுகளில் அது முழுவதுமாக வீழ்ச்சி அடைந்தது என்கிறார் ஷுல்மன்.
இரண்டாவது சரணம்-அசைகளின் குடியரசு
காளமேகப் புலவரும், புகழேந்தியும்
‘இரண்டாவது சரணம்’-‘அசைகளின் குடியரசு’ இயலில், கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் பற்றி பேசுகின்றார் ஷுல்மன்.
கி.பி. 1310-11ஆண்டுகளில், டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் மதுரை வரை படையெடுத்தான். பதினான்காம் நூற்றாண்டில் குமார கம்பன்னா தலைமையில், விஜயநகரப்படைகள் படையெடுத்து வந்து தமிழ்நாட்டுக்குள் தங்க ஆரம்பித்தன.
அவர்களுடன், தெலுங்கு பேசும் மக்கள் அலை அலையாக வந்து தாமிரபரணி நதிக்கரையில் குடியமர்ந்தனர். விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த போர்வீரர்-அரசர்கள், மதுரையைத் தலைநகராகக் கொண்ட நாயக்கர் ஆட்சியை ஏற்படுத்தினர். நாயக்கர் அரசு, தெலுங்கு பேசும் புதிய ஆட்சியாளர்கள் கையில் இருந்தாலும், நிலங்களும், இலக்கிய வளங்களும் காவிரி சமவெளியின் மடங்களிடம் இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப் பகுதியில் விஜயநகரப்பேரரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு இருந்தபோது, பாடல்கள் இயற்றியவர் காளமேகப்புலவர். நினைத்த பொழுதில் கவிதை புனையவல்ல, ஆசு கவி காளமேகப் புலவர், வெண்பா இயற்றுவதில் வல்லவர் என காளமேகத்தைப்பற்றி தனித்துச் சுட்டுகிறார் ஷுல்மன். திருவானைக்கா உலாவில் காளமேகப்புலவர், திருவானைக்காவல் தெருக்களில் வடமொழிகளான சமஸ்கிருதமும், பிராகிருதமும், பேச்சுத்தமிழும் பேசும் திறன் கொண்ட எட்டு வயது பேதைப் பெண்ணைக் காட்டுவதைப்பற்றி இந்த தமிழ் – ஒரு வாழ்க்கைக்கதை நூலில் நன்கு விவரித்துள்ளார் ஷுல்மன்.
வெண்பாப்புலி என்றழைக்கப்பட்ட புகழேந்திப் புலவர் தனது நளவெண்பாவில், தெற்காசிய இலக்கியங்களிலேயே மிகப்புகழ் பெற்ற காதலர்களாகிய நள, தமயந்தியின் கதையைச் சொல்கிறார். வாசகனின் மனதின் உள்ளே இன்பச்சுவையை ஊறச்செய்யும் உருவகங்களால் கவிதை புனைகிறார் புகழேந்தி. சமஸ்கிருத கவிஞர்களைப்போன்ற பகுப்பாய்வு முறையில் கவிதைகள் எழுதும் புகழேந்தி, இந்திய கண்டம் தழுவிய ஒரு உருவகக் கவிதையியல் மரபைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கிறார் என்கிறார் ஷுல்மன். பெருவழக்கை நவீனப்படுத்தியதில், பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழேந்தி புலவருக்குப் பெரும்பங்குண்டு என்கிறார் ஷுல்மன்.
காளமேகப் புலவர், புகழேந்தி ஆகியோர் இயங்கிய புலமைச் சூழல், பல்லவர் காலத் தண்டியின் சமஸ்கிருத இலக்கண நூலையோ, சோழர் காலத்தில் எழுதப்பட்ட அதன் தமிழ் வடிவத்தையோ உள்வாங்கி நடைபோட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பதினோறாம் நூற்றாண்டு தொடக்கம் வரையிலான காலம், இவ்வகையில் தொடர்ச்சியான பரீட்சார்த்த முயற்சிகளின் காலமாகும்.
பேராசிரியர், உரையாசிரியர்
பேராசிரியர், தமிழ் உரையாசிரியர்களில் காலத்தால் மூத்தவர். பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்ற அவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர். இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர் சோழப்பேரரசின் உச்சகட்டத்தில் வாழ்ந்த உரையாசிரியர்கள். அவர்கள் அதுவரை உருவான நூல்களை, சங்கச் செவ்விலக்கியங்களுடன் ஒப்பிட்டு அவற்றைத் தொகுக்கவும், இலக்கண அறிவை விளக்கவும் செய்தனர். தொல்காப்பிய பொருளதிகாரத்தின் நான்கு பிரிவுகளுக்கும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாருக்கும் உரை எழுதிய பேராசிரியர்தான், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு குறித்து முதன் முதலில் தனது எழுத்துகளில் குறிப்பிடுகிறார். எல்லாத் தமிழ் அறிஞர்களைப் போலவே பேராசிரியரும், சமஸ்கிருதமும் பிற தென்னிந்திய மொழிகளும் புழக்கத்தில் இருந்த ஒரு சமூகத்தில் இயங்கியவர் என ஷுல்மன் குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் வழக்கு மொழியைக் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டுடன் ஒருங்கிணைத்து பயன்படுத்துவதே மொழி மரபு என்கிறார். உலக வழக்கு மாறி வரும்போது மக்கள் மாறுகிறார்கள், மொழியும் மாற்றமடைகிறது என்கிறார். வழக்கொழிந்த சங்ககாலச் சொற்களைக் குறித்தும் பேசுகிறார் பேராசிரியர். ஒவ்வொரு காலத்துக்கும், புதிய புதிய இலக்கணம் வேண்டுமா என்ற கேள்விக்கு வேண்டாம், முதல் நூலான தொல்காப்பியம் என்றென்றைக்கும் வழக்கொழியாது என்கிறார். பின்னர் வரும் இலக்கண நூல்கள், அவற்றின் தரச்சான்றைத் தொல்காப்பியத்தில் இருந்தே பெறுகின்றன என்று அதற்கு காரணம் உரைக்கிறார்.
மூன்றாவது சரணம் – ஒரு தமிழ் நவீனத்துவம்
அதிவீரராம பாண்டியனும், குமரகுருபரரும்
அடுத்து, ஆறாவது இயலில், பதினாறாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான இலக்கியப்பனுவல்கள் குறித்து, ‘மூன்றாவது சரணம்’-‘ஒரு தமிழ் நவீனத்துவம்;’ என்ற தலைப்பில் விவரிக்கிறார் ஷுல்மன்.
நவீனத்துவம் என்பது ஒரு சார்பு கருத்தாக்கம் என்கிறார் ஷுல்மன். தமிழ் நவீனத்துவத்தைப் பேச வந்த அவர், பதினாறாம் நூற்றாண்டில் தென்காசியை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த அதிவீரராம பாண்டியன் பற்றிச் சொல்கிறார். நவீனத்துவத்திற்குத் தென்காசி ஒரு மையம் என்கிறார் அவர். கோயில் கட்டடக்கலையும், கோபுர உட்சுவர்களில், திருப்புடைமருதூரில் உள்ளது போன்ற அற்புத ஓவியங்களும் செழித்து வளர்ந்தன. அரசனான அதிவீரராம பாண்டியனே ஒரு சிறந்த கவிஞர். நைடதம் அவ ர் இயற்றிய நூல்.
பதினேழாம் நூற்றாண்டில் பிறந்த குமரகுருபரருக்குப் பல மொழிகள் தெரியும். தமிழுடன் சேர்த்து பாரசீகம், உருது, ஹிந்துஸ்தானி ஆகியவற்றை வாரணாசியில் கற்றுத்தேர்ந்தவர் குமரகுருபரர். கி.பி.1688ஆம் ஆண்டு மரணம் எய்தினார் குமரகுருபரர். இவர் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றினார். மத்தியகால தமிழிலக்கியத்தில் இயற்றப்பட்ட இலக்கிய வகைகளில், பிள்ளைத்தமிழ் வித்தியாசமான ஒன்று. 96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. குழந்தை மீனாட்சி தெள்ளு தமிழில் பேசுவதாகப் பாடுகிறார் குமரகுருபரர். குமரகுருபரருக்குத் தமிழும், மொழியின் உருவ வடிவமாகிய தமிழ் இறைவியும் ஒன்றே என்கிறார் ஷுல்மன்.
பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களான குமரகுருபரர், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், நிரம்ப வழகிய தேசிகர், அந்தகக்கவி வீரராகவர் ஆகியோர் தமிழ், சமஸ்கிருதம் என்ற இரண்டு மொழிகளிலும் பயின்று வந்த சூழலில், பாடல் இயற்றியவர்கள்.
தமிழின் நவீன எழுத்து, பதினாறாம் நூற்றாண்டில் தென்காசியை மையமாகக் கொண்டும், தாந்திரீகத்தை அடிப்படையாக கொண்டும் ஆரம்பித்தது என்று ஷுல்மன் சொல்வது வினோதமாக இருக்கிறது. தமிழ் ஆய்வுகளில் தடம் பதித்த ஏராளமான பன்னாட்டு அறிஞர்களை, விரிவாக அறிமுகம் செய்யும் ஷுல்மன், தமிழ்நாட்டு தமிழ் ஆய்வியல் அறிஞர்களான எஸ்.வையாபுரி பிள்ளை, வ.சுப.மாணிக்கம், மு. வை. அரவிந்தன், ய.மணிகண்டன் போன்றோரை ஏன் கவனப்படுத்தவில்லை என தன் நூல் மதிப்புரையில் கேட்கிறார் சலபதி.
தமிழில் உரைநடை
இரண்டு மொழிகளோ, மூன்று மொழிகளோ பேசப்பட்டசூழலில் தமிழர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். நவீனத்துக்கு முந்தைய இலக்கியம் முழுமையும், பாவிலக்கண அடிப்படையிலான செய்யுட்களால் ஆகியவை. உரைநடை எப்போது தமிழில் எழுதப்பட்டது? சிலப்பதிகாரத்தின் இடையிடையே சந்த நடையிலான வசனம் அல்லது உரைநடை காணப்படுகிறது. பல்லவர், பாண்டியர் காலத்திலிருந்து, தமிழ்க் கல்வெட்டுகள் உரைநடையில் எழுதப்பட்டுள்ளன. இறையனார் அகப்பொருளுக்கு எழுதப்பட்ட விளக்கம், உரை நடைப்பாங்கில் அமைந்துள்ளது. திருவாரூர் கோயில் முசுகுந்த ஓவியங்களுக்குத் தரப்பட்டுள்ள தலைப்புகள், பேச்சு மொழியில் பயின்று வந்த உரைநடையில் எழுதப்பட்டுள்ளன.
நவீன இலக்கிய உரைநடைத் தமிழ், முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்று சொல்வார் செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த தமிழ் அறிஞர் கமில் சுவலபில். இவர் முருகன் சிரிப்பு, திராவிட மொழியியல் அறிமுகம் ஆகிய நூல்களை எழுதியவர்.
வெளிப்படுத்தும் ஆற்றல், விதவிதமான பாணி எழுத்துகள் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடைத் தமிழ், பிரக்ஞைபூர்வமான மாற்றத்தை மனசாட்சியுடன் பேசியதாக சாஸ்சா எபெல்லிங் சொல்வது உண்மைதான் என்கிறார் ஷுல்மன். சாஸ்சா எபெல்லிங், சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள், நாகரிகங்கள், ஒப்பிலக்கியம் ஆகியவற்றுக்கான இணைப்பேராசிரியராகப் பணியாற்றுபவர்.
ஒரு புதிய உரைநடையைச் சொத்துக்கணக்கு எழுதும் கர்ணங்கள் பயன்படுத்தினர். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில், புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளை, தான் எழுதிய நாட்குறிப்பை உரைநடையிலேயே எழுதினார். 1727ஆம் ஆண்டு, இலங்கையில் இருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனைக்கு நாடுகடத்தப்பட்ட நிக்கோலஸ் ஒண்டாச்சிக்கு, அவரது கிறித்துவ செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய கடிதங்கள் பேச்சு வழக்கு உரைநடைத்தமிழிலேயே அமைந்துள்ளன.
தமிழ் இஸ்லாம்
17ஆம் நூற்றாண்டின் இறுதியில், பாரசீக, அரபு மொழிகள் தமிழ்ப் பரப்புக்குள் வருகின்றன. இவ்விருமொழிகளும், தமிழுடன் இணைத்து, கலந்து எழுதப்பட்டன. இலக்கிய உத்திகளில் சிலேடை அதிகம் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, சுமார் கி.பி.1665 முதல் 1740 வரை எட்டயபுரத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் கடிகை முத்துப் புலவர் சிலேடைப் பாடல்களுக்காக அறியப்பட்டார். கீழக்கரையில் வாழ்ந்த மரைக்காயர் சமூகத்தைச் சேர்ந்தவர், சீதக்காதி என்றழைக்கப்பட்ட ஷேக் அப்துல்காதர். இந்தச் சீதக்காதி வழங்கிய கொடையைக் கொண்டு, முகமது நபியின் வாழ்க்கையைச் சங்கப் பாடல் மரபில் சீறாப்புராணமாக இயற்றியவர் உமறுப்புலவர். இவர் கடிகை முத்துப் புலவரின் மாணாக்கர் ஆவார்.
தாந்திரிகத் தமிழ்
உ.வே. சாமிநாதையரால் 1900ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது, ‘மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது’. இந்த தூது நூலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. இந்த தூது இலக்கியம், 17ஆம், 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் மொழியை ஒலி வடிவிலும், காட்சி வடிவிலும் ஒரு தேர்ந்த கவிஞரால் தெய்வசக்தியுள்ள ஒரு சக்தியாக இவ்வுலகில் பயன்படுத்தமுடியும் என்ற தாந்திரீகப்புரிதலை இந்த தூது இலக்கியம் சுட்டுவதாக ஷுல்மன் எழுதுகிறார். சுமதி ராமஸ்வாமி இந்த தூது இலக்கியம் பற்றி அற்புதமாக ஆய்ந்துள்ளார் என்று குறிப்பிடுகிறார் ஷுல்மன். சுமதி ராமஸ்வாமி அமெரிக்காவில் டியூக் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருக்கிறார்.
தமிழ், இங்கே தூது செல்கிறது. உரிமையுள்ள ஒரு தனிமனிதன் போலத் தமிழ் செயல்படுகிறது. தனக்கேயுரித்தான பண்பாட்டுத்தொடர்ச்சியைப் பாரம்பரிய இலக்கணம், கவிதை, இசை கொண்டு தமிழ் பேசுகிறது. யதார்த்தவழிகளில் செயல்படுகிறது. தந்திரம்' என்பது ஒலியினாலும், ஓசையினாலும் ஒரு பிரபஞ்சத்தையே சிருஷ்டிக்கும் ஒரு மெய்ப்பொருளியல் ஆகும். அதிர்வலைகளை உருவாக்கும் ஓசைகளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது, ‘தந்திர உலகம்'. அவற்றில் பல கேளா ஓசைகள். தென்னிந்தியாவில் உருவான, ‘தந்திர' அமைப்புகளில் ஸ்ரீவித்யாவும் ஒன்று. அதன் முக்கிய தெய்வம் திரிபுரசுந்தரி. சிதம்பரத்திலும், திருவாரூரிலும் சிவ, பார்வதி கோயில்களில் ஸ்ரீவித்யாவைக் காணமுடிகிறது. இறுதியில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவன் கோயில்களும் ‘தந்திர மயமாக்கப்பட்டன' என்கிறார் ஷுல்மன். 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில், கோயில் உள்ளே ‘தந்திரமும்’, மடங்களில் ‘சைவமும்’ நிலைபெற்றன. தஞ்சை சமவெளிப் பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரத்தில், இரண்டு போட்டிமிகு பிரிவுகள் தோன்றின. மிதவாத சமயா ஆச்சாரியம், சைவப்பெருநெறியுடன் இணைந்து, நவீன ஸ்மார்த்த பிராமண விழிப்பு நிலையாகப் பரிணமித்தது. இன்னொரு பிரிவு, விதிமுறைக்குக் கட்டுப்படாத தீவிரமான கவுல பாரம்பரியம் ஆகும். இரண்டு தாந்திரிக பிரிவுகளுமே, அத்வைத கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இருமை அல்லாத யதார்த்த கண்ணோட்டத்தையும், இறைமை தத்துவத்துடன் அனைத்தையும் அரவணைக்கும் பெண் தெய்வ வழிபாட்டையும் கொண்டவை இவை. சமயக் கோட்பாட்டுவாதிகள், வெளிப்படையான பௌதிக வடிவிலான பூஜைகளைக் காட்டிலும், மனத்தினுள் இறைவியை உருவகப்படுத்தி உள்ளுக்குள் வழிபடுவதையே விரும்பினர்.
மடங்களுக்கும், கோயில்களுக்கும் உள்ளேயும், வெளியேயும், இருந்த எல்லா தென்னக தாந்திரீக முறைகளும், மந்திர உச்சாடனங்களைக் கொண்ட புதிய ஒலி இலக்கணத்தை உருவாக்கின. இதன் பயன்பாட்டினைத் தண்டியலங்காரம் எழுதிய தண்டியின் மற்றொரு நூலான, ‘கவிதையின் கண்ணாடி' நூலில் வரும் சித்திரக்கவியில் காணலாம். ஒரு கவிதையை, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும், இடமிருந்து வலமாகவும் ஒரு ஓவியத்தைப் படிப்பது போல் படிக்க சித்திரக்கவி இடம் கொடுக்கிறது. இத்தகைய கவிதைகளை, 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கவிராச பண்டிதன் வீரய்யன் எழுதிய சௌந்தர்ய லஹரியில் காணலாம். இது சமஸ்கிருத மூலத்தின் தமிழ் வடிவமாகும். திரிபுரசுந்தரியின் புகழைப்பாடும் ஆனந்த லஹரி, தெய்வத்தின் யந்திர, மந்திரங்களையும் உள்ளடக்கியது. தென்னக தாந்திரீக மரபின் மிகப்பெரிய சாட்சியாக, பாரம்பரிய கர்நாடக இசை மரபை ஷுல்மன் கருதுகிறார். இந்த நூலில் கர்நாடக இசைக்கூறுகளான ஆலாபனை, பல்லவி, அனுபல்லவி, சரணம், ராகமாலிகை என்ற தலைப்புகளில்
தமிழ் – வாழ்க்கைக்கதை’யின் செய்திகளை ஷுல்மன் வகைப்படுத்தியுள்ளார். இது, தமிழ்மொழி குறித்த ஷுல்மன் பார்வையைத் தமிழ்ச்சமூகத்தின் மேட்டிமை பண்பாட்டுக் கூறுகள் நன்கு பாதித்துள்ளதைக் காட்டுகிறது.
ராகமாலிகை – நவீனத்திற்கு அப்பால்
நவீனத்துக்குப் பிந்தைய தமிழகம்
‘ராகமாலிகை’-‘நவீனத்திற்கு அப்பால்’ என்ற நிறைவு இயலில், கி.பி.1800க்குப் பிறகான நவீன காலத்தமிழ் பற்றி எழுதுகிறார் ஷுல்மன்.
கடந்த இரண்டு நூற்றாண்டு காலத் தமிழகம், தனது பண்டைய மரபிலிருந்து மாறி நவீனத்துவ எழுச்சியைக் கண்டது. செவ்விலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்டன. வங்காள புத்தெழுச்சியை ஒத்த, தமிழ் அல்லது திராவிட மறுமலர்ச்சி ஏற்பட்டது. வாசித்தலின் பழைய முறைமைகள் வழக்கொழிந்து போயின.
நமது தலைமுறையில், தமிழின் புலமை மரபு குறித்த அறிவு துடைக்கப்பட்டு, அவ்விடத்தில், மொழித் தேசியவாதத்தின் கொடுங்கோன்மை நிலைபெற்றது என்று ஜெனிஃபர் க்ளேர் எழுதியுள்ளதை ஷுல்மன் வழி மொழிகிறார். ஜெனிஃபர் க்ளேய்ர், நவீனத்துவத்துக்கு முந்தைய தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய நூல் எழுதியவர். இந்த மொழித் தேசியவாதம், தமிழர்களின் பார்வைப்பரப்பைக் குறுகியதாக்கி, நவீன காலத்துக்கு முந்திய உலகில் பன்மொழிச் சொல்லாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச் சூழலை அழித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறார் ஷுல்மன்.
ஒரு நவீனத்தமிழ் எழுத்தாளர், தமிழில் வாசிப்பதற்கு எதுவுமே இல்லை என்று சில ஆண்டுகளுக்குமுன் சொன்னார். அதைக்குறிப்பிடும் ஷுல்மன், ஒருவேளை அவர் மௌன வாசிப்புக்கான நூல்களைச் சொல்கிறாரோ என ஐயம் எழுப்புகிறார். அதே வேளையில், நவீனத்தமிழ் இலக்கியத்தில் நவீனத்துக்கு முந்தைய, செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் தாக்கம் தொடர்ந்து வருவதை நன்கு உணர முடிகிறது என்கிறார்.
தமிழின் கால மணற்பரப்பில் 1800ஆம் ஆண்டு ஒரு காலக்கட்டத்தின் குறியீடு எனலாம். அப்போது மராத்தியர் ஆண்ட தஞ்சாவூரும், புதுச்சேரியும் துடிப்பான அரசவை மற்றும் ஜனரஞ்சகப் பண்பாடுகளைக் கொண்டிருந்தன. தன் இளமையில் தவழ்ந்து கொண்டிருந்த மதறாஸ்(இன்றைய சென்னை), தமிழ் மற்றும் தன் சகோதர மொழிகளின் கலை, அறிவு உற்பத்திக்குரிய வடிவத்தைக் கொண்டிருந்தது என்கிறார் ஷுல்மன். அன்று சென்னையில் உருவான புதிய அச்சுப்பண்பாடு, அதனால் பெருகிய நூல்கள், தமிழ்ப்பத்திரிக்கைத்துறை, வளர்ந்துகொண்டிருந்த வாசகர் எண்ணிக்கை ஆகியவை பற்றி ஸ்டூவர்ட் ப்ளக்பர்ன் ஆய்ந்து எழுதியிருப்பதை இங்கே சுட்டுகிறார் ஷுல்மன். 2003இல் பர்மெனன்ட் ப்ளாக் வெளியிட்ட காலனிய தென்னிந்தியாவில் அச்சு, நாட்டுப்புற இலக்கியம், தேசியம் என்ற நூலை எழுதியவர் ஸ்டூவர்ட் ப்ளக்பர்ன்.
இக்காலக்கட்டத்தில் பல நூல்கள் அச்சுப் பரப்புக்குள் வந்தன. கி.பி.1679ஆம் ஆண்டு தமிழ் – போர்த்துக்கீசிய அகராதியை அண்டாவோ த ப்ரொவென்ஸா வெளியிட்டார். கி.பி.1715இல் சீகன்பால்கு எழுதிய தமிழ் இலக்கணம் நூல் வெளிவந்தது. கி.பி.1740களில் வெளிவந்த பெஸ்கியின் பன்மொழி மற்றும் தமிழ் அகராதிகள், தொன்னூல் விளக்கம் ஆகிய படைப்புகள் தமிழில் நவீன உரைநடை பாணியை உருவாக்க உதவி புரிந்தன. கி.பி.1779 இல் தமிழ் -ஆங்கில அகராதியை ஃபெப்ரிசியஸ் உருவாக்கினார். கி.பி.1793இல் தமிழ் – ஆங்கிலம் இரு மொழியிலும் வெளியானது பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்ற நூல். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் போன்ற தமிழ் அறிஞர்கள், சென்னைப் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் பணிக்குச் சேர்ந்தனர்.
குமரகுருபரர், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், கடிகை முத்துப் புலவர் ஆகியோரின் கலைப் பண்பாட்டு மரபில், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876) வருகிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை, அவர் மாணவர் உ.வே.சாமிநாதையர் எழுதினார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நண்பரான மாயூரம் வேதநாயகம்பிள்ளை, கி.பி.1879 இல் பிரதாப முதலியார் சரித்திரம் எனும் தமிழின் முதல் நாவலை எழுதினார். தொடர்ந்து 1890களில் பி.ஆர். ராஜம் அய்யர், கமலாம்பாள் சரித்திரம் நாவலைப் படைத்தார்.
1891இல் கேரளம் ஆலப்புழையில் பிறந்து திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்த பெ.சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் நாடகத்தை எழுதினார். இந்த நாடகத்தை, வசன நடைக்குச் சமமான அகவற்பாவில் எழுதியுள்ளதாக சுந்தரம் பிள்ளை குறிப்பிடுகிறார். மனோன்மணீயத்தின் வாழ்த்துப் பாடலான, ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் (இன்றைய தமிழ்த் தாய் வாழ்த்து) பாடலில் இடம்பெறும்,
ஆரியம் போல் உலக வழக் கொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே' என்ற வரிகளைப் பற்றி ஷுல்மன் இதுவரை யாரும் அளிக்காத விளக்கத்தை அளிக்கிறார். ‘உலக வழக்கு மொழியாகிய அன்றாடப் பேச்சு மொழி தவிர்க்கமுடியாமல், அழிந்தொழிந்து சிதைந்து விடும்.
ஆனால், தமிழ்மொழி, ஆரியம் போலவே அழியாதது’ என்பது ஷுல்மன் விளக்கம். இவ்விளக்கம் மனோண்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையின் கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது. தேடிக் கண்டடைந்த பழந்தமிழ் இலக்கியங்கள் பழந்தமிழ் இலக்கியங்கள் தொலைந்துபோய், தமிழின் கூட்டு நனவிலி மனத்திலிருந்து மறந்துபோய், பன்னெடுங் காலத்திற்குப் பிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஒரு சொல்லாடல் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. பின்வருவது அச்சொல்லாடலின் ஒரு பகுதியை விவரிக்கும் ஷுல்மனின் கதை. உ.வே.சா.வின் ஆசிரியர்பிரான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1876ஆம் ஆண்டு இறந்துபோகிறார். உ.வே.சா. 1880ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி கும்பகோணம் முன்சீப் சேலம் ராமசாமி முதலியாரைச் சந்திக்கிறார். பழந்தமிழ் இலக்கிய அகழ்வாய்வில் முக்கியமான நாள் அது. உ.வே.சாவிடம், ‘உங்கள் ஆசிரியர் யார்? என்ன தமிழ் நூல்களைப் படித்து இருக்கிறீர்கள்’ என்று கேட்கிறார் முன்சீப். அதற்கு உ.வே.சா, ‘நான் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரத்தின் மாணவர். 20 அந்தாதிகள், 20 கலம்பகங்கள், 15 கோவைகள், 30 பிள்ளைத்தமிழ் நூல்கள், 20 உலாக்கள், சில தூதுக்கள் ஆகிய சிற்றிலக்கிய வகைகளைப் படித்துள்ளதாகச் சொல்லுகிறார்.
இந்தப் பட்டியலில் திருப்தியடையாத முன்சீப், இந்த நூல்களால் பயனென்ன என்று கேட்கிறார், உ.வே.சா, தான் படித்த புராணங்களான பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம், சேக்கிழாரின் பெரியபுராணம் ஆகியவற்றைச் சொல்கிறார். பின்னர், நைடதம், பிரபுலிங்கலீலை, தமிழ்ச் சைவ பிரதிகள், மத்திய கால இலக்கண நூல்கள் ஆகியவற்றையும் அடுக்குகிறார். முன்சீப்பிடமிருந்து பதில் இல்லை. முக்கியமான ஒன்றை மறந்து விட்டேனே என்று மனத்தில் நினைத்து, ‘கம்பராமாயணம்' என்று உ.வே.சா. சொல்கிறார். ‘சரி அவ்வளவுதானா?' என்று கேட்கிறார் முன்சீப். ‘நான் பழந்தமிழ் நூல்கள் பலவற்றின் பெயர்களைச் சொல்லி இருக்கிறேனே என்கிறார் உ.வே.சா. அதற்கு, முன்சீப் அவர்கள், ‘இந்த நூல்களுக்கெல்லாம் ஆதார நூல்களை வாசிக்கவில்லையா? ‘சீவகசிந்தாமணி படிக்கவில்லையா? மணிமேகலையைப் பயிலவில்லையா? சிலப்பதிகாரம் வாசிக்கவில்லையா?’ என்று கேட்கிறார். பதில் ‘இல்லை' என்றே வந்தது. அடுத்த சந்திப்பில், முன்சீப் உ.வே.சா.விடம், சீவகசிந்தாமணி பிரதி ஒன்றை அளித்தார்.
இப்படி ஆரம்பித்தது சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சா., ஆறுமுக நாவலர், மகாலிங்க ஐயர், திருமயிலை சண்முகம் பிள்ளை ஆகியோர் தொடங்கிய பழந்தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு. 1890 களில் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்ட போது அவற்றை வாசித்தவர்கள் அசந்து போனார்கள். எழுதப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆனபோதும், பழந்தமிழ் இலக்கியங்கள் புதுமைப் பொலிவுடன் விளங்கின. அவற்றின் அதிநவீன தன்மையையும் அழகையும் கண்டு கற்றோர் மயங்கினர்; ஆச்சரியப்பட்டனர். ‘தூசு, செல்லரிப்பு, உடைந்த ஓலைகள், அலட்சியம் ஆகியவற்றால் அலைக்கழிக்கப்பட்ட பழந்தமிழ் நூலின் ஓலைச்சுவடிப் பிரதி ஒன்றைக் கண்டடைவதே கடினம். அதை, ஒரு அழகிய பதிப்பாக பதிப்பிப்பது ஒரு அவசர அவசியமாக செய்ய வேண்டிய பணியாகப் பெரும் ஆசிரியர்கள் கருதினர். ‘கண்டுபிடித்தல், புதிய செவ்விலக்கியத்தைக் கட்டமைத்தல் ஆகிய செயல்முறையில் அச்சுக்கலை ஒரு அங்கமாகும்.
இதன் அடித்தளமாக இருப்பது, அச்சாக்கம் ஒரு தீர்வு என்ற எண்ணமாகும். இந்த பிரதிகளை அச்சாக்குதல், அவற்றை அழிவற்றவையாக, காலத்தை வென்றவையாக விளங்கச் செய்யும் என்று அவர்கள் நம்பினார்கள்’ என்று சரியாகவே சொல்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி என்கிறார் ஷுல்மன். மொழி வாதமும், மொழி அடிப்படையிலான தேசியமும், நவீனத்துவத்துக்கு முந்தைய இந்தியாவை, எப்போதுமே ஆதிக்கம் செலுத்தியதில்லை என்று ஷெல்டன் போலக் நிறுவியுள்ளார் என்கிறார் ஷுல்மன். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அடையாள அடிப்படையிலான மொழி வாதம், மிகப்பெரிய சக்தியாக ஆகியிருந்தது. இப்போதும், அதே நிலையே நீடிக்கிறது. சங்க செவ்வியல் இலக்கியங்கள் மீண்டும் புழக்கத்திற்கு வந்த நிகழ்வு, ஒரு புத்திலக்கிய மரபை உருவாக்கியது என ஆ.இரா.வேங்கடாசலபதி சொன்னதை இங்கே கவனப்படுத்துகிறார் ஷுல்மன். சலபதி, அதை மதச்சார்பின்மையின் விளைபொருள் என அடையாளப்படுத்துகிறார்.
ஆனால், மதச்சார்பின்மை என்ற பதம் தவறான அர்த்தத்தை அளிக்கிறது. சிற்றிலக்கியங்கள் எல்லாமே மதச்சார்பற்றவைதான். தக்காணம் முழுவதும், பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து தஞ்சை நாயக்கர், மராத்திய மன்னர்களின் அரண்மனையில் படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்துமே அடிப்படைவாதமற்ற, மதச்சார்பற்ற பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள்தாம் என ஒருவர் வாதிட முடியும். இருபதாம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற, பார்ப்பனரல்லாத மேல்தட்டு வர்க்கம்தான் இலக்கியத்தை மதச்சார்பற்றதாக்கியது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லும் ஷுல்மன், ஒருவித பழைய வழக்கொழிந்துபோன புராணத்தின் இடத்தை புதிய புராணம் ஒன்று பிடித்தது என்று வேண்டுமானால் சொல்லமுடியும் என்கிறார். திராவிடக் கனவுகள் திராவிடக் கனவுகளின் தொடக்கம், சுந்தரம் பிள்ளையின் நூலான மனோன்மணீயத்தில் ஆரம்பமானது தெளிவாகிறது. 1897ஆம் ஆண்டு, அவர் இறந்தபோது வெளிவந்த, 'தமிழ் இலக்கிய வரலாற்றின் மைல்கற்கள்' என்ற நூலும், ‘ஹிந்து நாகரிகத்தின் அடிப்படைக்கூறு' என்ற கட்டுரையும் திராவிடத்தின் ஆரம்பக் கூறுகளைச் சுட்டுகின்றன. இன்னும் குறிப்பாக, சமஸ்கிருதத்தில் பொதிந்துள்ள ஆரிய நாகரிகத்துக்கு எதிராக விளங்கும் அந்த அடிப்படைக் கூறு என்பது, ‘தென்னிந்திய'த்தன்மை உடையதாகும். குறிப்பாக, அது 'தமிழ்' என ஷுல்மன் குறிப்பிடுகிறார். 1856ஆம் ஆண்டு, கால்டுவெல் எழுதி வெளியிட்ட 'ஒப்பிலக்கணம்' நூலில் பயன்படுத்தப்பட்ட மொழியியல் சொல்லாக இல்லாமல்,
தமிழ்’, `திராவிடம்’ என ஆகி பின்னர் அது, நாகரிகத்தைக் குறிக்கும் சொல்லாகியது.
தென்னிந்தியாவில், நிலவிய திராவிட நாகரீகம் குறித்து அதற்கு முன்பே, வரலாற்றறிஞர் வி. கனகசபைப் பிள்ளை, நவ சைவ ஆசிரியர்களில் ஒருவரான ஜே.எம். நல்லுசாமி பிள்ளை ஆகியோர் எழுதினர். 13ஆம் நூற்றாண்டிலிருந்தே, சைவசித்தாந்த தத்துவம், பார்ப்பனரல்லாத, உண்மை திராவிட மதமாக, சமஸ்கிருத சார்புள்ள ஆரிய-பார்ப்பன அமைப்புக்கு நேர் எதிரானதாகத் திரித்துக் கட்டமைக்கப்பட்டது என்கிறார் ஷுல்மன். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளில், தமிழிலிருந்து சமஸ்கிருத அம்சங்களைக் களையும் தூய தமிழ் இயக்கம் தோன்றியது. அந்தத் தனித்தமிழ் இயக்கத்தின் வண்ணமயமான முகமாக, 1876 முதல் 1950 வரை வாழ்ந்த வேதாசலம் பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட மறைமலைஅடிகள் இருந்தார். நவீன துருக்கி மொழியில் இருந்து, அரேபிய, பாரசீக தாக்கங்களைக் களைய முற்பட்ட இளம் துருக்கியர்கள் போல, தனித்தமிழ் இயக்க வாதிகள் முயன்றனர். தனித்தமிழ் வெறியர்களிடம் காணப்படும் சமஸ்கிருத வெறுப்பே இந்த இரண்டு மொழிகளும் ஆழ்ந்த பிணைப்பைக் கொண்டுள்ளன என்பதற்கு அறிகுறி என்கிறார் ஷுல்மன். ஞரசந கூயஅடை குயயேவiஉள என்பது தனித்தமிழ் ஆர்வலர்களைக் குறிப்பிட ஷுல்மன் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்றொடர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ்நாட்டுப் பார்ப்பன எதிர்ப்பு, ஒரு பன்முகப்பட்ட செயலூக்கம் உள்ள, சக்தி வாய்ந்த, அரசியல் சக்தியாக மாறியது. 1916ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கட்சியில், பிட்டி. தியாகராய செட்டியார், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் தலைவர்களாக விளங்கினர்.
இந்தப் புதிய கட்சி, தேசிய அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்திய அன்னிபெசன்ட்டுடன் பலமுறை மோதியுள்ளது. 1921லும், 1927லும் காந்தி, சென்னை வந்த போது இந்த கருத்து மோதல் வலுத்தது. இந்த இயக்கத்தின் 1927-1944 காலகட்டம், திராவிட இயக்கத்தின் புரட்சிகர உச்சமாக இருந்தது என ஆ.இரா.வேங்கடாசலபதி குறிப்பிடுவதை ஷுல்மன் எடுத்துக்காட்டுகிறார். அது பெரியாரின்
சுயமரியாதை இயக்கம் தீவிரமாக இயங்கிய காலகட்டமாகும்.
தமிழ் மொழியின் நீண்ட நெடிய வரலாற்றைப் பல்வேறு சான்றுகளுடன், பல செவிவழிக்கதைகளுடன் ஷுல்மன் இந்நூலில் எழுதியுள்ளார். சங்க காலம் தொடங்கி இடைக்காலம், தமிழின் பழந்தமிழ் இலக்கியங்கள் கண்டுபிடிப்பு, நவீன இலக்கியங்கள் எனப் பல காலக்கட்டங்களின் இலக்கியங்கள் குறித்தும், ஆளுமைகள் குறித்தும் ஆய்ந்து எழுதியுள்ளார் அவர். இந்நூலின் மையச்சரடாக ஷுல்மன் அமைத்திருப்பது, தமிழ் மொழி மீது சமஸ்கிருதம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது என்பதுதான். இந்நூலில் உள்ள தமிழ்-சமஸ்கிருத உறவு பற்றிய ஷுல்மனின் கருத்துகளை வரும் இரண்டாவது பகுதியில் என் விமர்சனத்துடன் தொகுத்துத் தருகிறேன்.
II
சமஸ்கிருதத்தைச் சார்ந்துள்ளதா தமிழ்?
‘என்றுமுள தென் தமிழின்’ பண்பாட்டு வரலாற்றை எழுத முனைவதாகக் குறிப்பிடும் டேவிட் ஷுல்மன், தமிழ் மொழியை, ஆசியாவின் பெரும்பகுதியைத் தன் ஆளுகைக்குட்படுத்தி இருந்த ‘சமஸ்கிருத பேருலகின்’ உள்ளே வைத்து பார்ப்பதாகச் சொல்கிறார். ‘தமிழ் நாகரிகம்’ என்பது ஒரு நவீன, தேசியவாத புனைவு எனக்குறிப்பிடும் ஷுல்மன், அதைப்பற்றி இந்நூலில் பேசப் போவதில்லை என ஆரம்பத்திலேயே நூலின் உள்ளடக்கத்தை வரையறுத்துக்கொள்கிறார்.
‘தமிழ்’ என்ற சொல்லின் அடிப்படையே சமஸ்கிருதம் என்கிறார் ஷுல்மன். ‘திராவிட’ என்பது ‘திரமளம்’ ஆகி பின்னர் ‘தமிழ்’ ஆகியது என்பது அவர் கருத்து. தமிழ்மொழியை, சமஸ்கிருதத்திற்குத் தொடர்பில்லாத தனித்த பண்புகள் உடைய திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக வரையறுத்தவர், சென்னைப் புனித ஜார்ஜ் கோட்டையில் பணிசெய்த பிரிட்டிஷ் அறிஞரும், ஆட்சியாளருமான ஃப்ரான்சிஸ் வைட் எல்லீஸ் (1777-1819) என்கிறார் ஷுல்மன். பின்னர் 1856இல், திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம் எழுதிய ராபர்ட் கால்டுவெல், முதன் முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட பல்வேறு திராவிட மொழிகள் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதி செய்தார். அதன்மூலம், மொழியியல், வரலாற்று அறிஞர்களின் கவனத்தை ஒரு சேர ஈர்த்தார்.
இருபதாம் நூற்றாண்டில், தமிழில் பயன்படுத்தப்பட்டு வந்த சமஸ்கிருதச் சொற்களை நீக்கி, வேற்றுமொழிக் கலப்பற்ற தூய்மையான தமிழைப் பேசும் முயற்சியைத் தனித்தமிழ் இயக்கம் தொடங்கியது. இந்த முயற்சி, தோல்வி அடைந்தது. இன்றளவும் தமிழில் சமஸ்கிருதச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. சமஸ்கிருத வார்த்தைகள் இல்லாமல் தமிழைப் பேச முடியாது என்று எழுதுகிறார் ஷுல்மன்.
தமிழ் தோன்றியபோதே சமஸ்கிருதம் தமிழுடன் இருந்ததாகச் சொல்லும் ஷுல்மன், அதற்கு ஆதாரமாக அகத்தியர் கதையைச் சொல்கிறார். தமிழின் முதல் இலக்கண நூலாகச் சொல்லப்படுகின்ற அகத்தியத்தை எழுதியதாகக் கருதப்படுபவர் அகத்தியர். இவர் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சப்த ரிஷிகளில் ஒருவராக இருக்க வேண்டும் என்கிறார் ஷுல்மன். ஆனால், எந்தக் காலத்தில் முதன் முதலில் அகத்தியரின் பெயர் தமிழ் இலக்கணத்தோடு கூட இணைத்துப் பேசப்பட்டது என்பது தெரியவில்லை எனவும் சொல்கிறார். அகத்தியரின் சீடரே, தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் என்றும் அந்தப் புனைவு சொல்கிறது. இலக்கண நூலான அகத்தியத்தை எழுத, அகத்தியரை வடக்கிலிருந்து தென்னகத்திற்குக் கடவுள் அனுப்புகிறார் என்று பெரும்பாலும் திரும்பத்திரும்ப சொல்லப்படுகின்ற ஒரு கதையை ஷுல்மனும் திரும்ப எழுதுகிறார்.
அடுத்து, பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தை ஆதாரமாகக் கொண்டு, அகத்தியர் அகத்தியத்தை இயற்றினார் எனச் சொல்கிறார் ஷுல்மன். அந்தக்கதை பின்வருவது.
ஈடற்றிருந்த உலகைச் சமன்செய்ய கடவுள், அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்புகிறார். அப்பொழுது, அகத்தியருக்கு ஒரு அடிப்படையான விஷயத்தில் தயக்கம் இருந்தது. அவர், அதைப்பற்றி சிவபெருமானிடம் கேட்கிறார். தமிழ்நாடு கவிதைகளால் ஆன தேசம். அங்குள்ள எல்லோரும் தமிழைப் பயின்று, இனிய தமிழ் ஞானத்தை அடைந்தவர்கள். அவர்கள் என்னிடம் ஏதாவது கேட்டால், என்னால் பதில் சொல்ல முடியாது. எனவே, எனது அறியாமையைப் போக்க, ‘அந்தச்செந்தமிழ் இயநூல்’ கொடுங்கள் எனக் கேட்கிறார் அகத்தியர். கடவுள் அகத்தியரிடம் முதல் நூலை அளிக்கிறார். அதைப்படித்து, பொருள், அணியிலக்கணம், நூல் வடிவமைப்பு, முன்னுரை எழுதுதல் என அனைத்தையும் கற்றுத்தேர்கிறார். இதுதான் அந்தக் கதை. இந்தக்கதையை நாம் நம்பினால், தமிழுக்கு இலக்கணம் எழுதிய அகத்தியருக்கு இலக்கண நுணுக்கங்களைக் கடவுள்தான் கற்றுத் தந்தார் என்பதை நாம் நம்ப வேண்டும். ஷுல்மன் நம்புகிறார். நம்மையும் நம்பச்சொல்கிறார்.
சைவர்கள் சிவனிடமிருந்து அகத்தியர் இலக்கணம் கற்றார் எனச்சொல்கின்றனர். பௌத்தர்களும் அவர்களின் பங்கிற்கு, போதிசத்வ அவலோகிதேஸ்வரரிடமிருந்துதான் அகத்தியர் இலக்கணம் கற்றுக் கொண்டார் என்கிறார்கள் என்று வீரசோழியத்தை அடிப்படையாகக்கொண்டு சொல்கிறார் ஷுல்மன்.
தமிழ் பாரம்பரியம், தனக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள உறவை வைத்தே அதற்கு எதிர் நிலையில் தன்னிடத்தை அமைத்துக் கொண்டது. ஆனால், தொலைதூர வடக்கிலிருந்து, தெற்கு நிலத்திற்கு வந்த அகத்தியர், தமிழும், சமஸ்கிருதமும் ஒன்றுக்கொன்று கொண்டு கொடுத்து இயங்குவதன் உருவகம் என்கிறார் ஷுல்மன். ஆனால், அகத்தியர் ஒரு சாதாரண ரிஷி அல்ல.
சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் ஏழாவதான அவர், ஒரு சுறுசுறுப்பான தீர்க்கதரிசி; பயண விரும்பி என்று கூறும் ஷுல்மன் தமிழுக்கு அடிப்படை இலக்கணம் படைத்தவரும், அதிமுக்கியமான முதனூலை ஆக்கியவருமான இந்த வேதமுனி அகத்தியர், அடிப்படையில் சமஸ்கிருத இலக்கிய, அறிவுசார் புலத்தைச் சார்ந்தவர். எல்லா முக்கியமான பிரதிகளைப் போலவே, அகத்தியரின் இலக்கண நூலும் காணாமல் போய்விட்டது என அதற்கு ஒரு மர்ம முடிச்சு போடுகிறார் ஷுல்மன். ஆனால், அதேவேளையில் அகத்தியர் ஒரு அற்புத தெய்வீகக் கதாபாத்திரம் என ஜான் லுக் ஷெவியார் சொல்வதைத் தனது நூலின் பின்குறிப்புகளில் கொண்டுபோய் வைத்துள்ளார். ஜான் லுக் ஷெவியார் பாரிஸ் திதெரோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். தமிழ் இலக்கண ஆசிரியர்கள் குறித்தும், அகத்தியரின் 12 சீடர்கள் குறித்தும் இவர் எழுதியுள்ளார்.
அகத்தியர் என்ற பெயரே திராவிடப்பெயராகத்தான் இருக்க வேண்டும் என்கிறார் ஷுல்மன். பரிபாடலிலும், மணிமேகலைக் காப்பியத்திலும், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைச்சங்கப்புலவர் நக்கீரனின் இறையனார் அகப்பொருளிலும் அகத்தியர் என்ற பெயர் வருகிறது. இறையனார் அகப்பொருள், தமிழின் முதல் சங்கத்தில், கடவுளர்கள் சிவன், முருகன், குபேரன் ஆகியோருடன் ஒரு புலவராக அகத்தியர் இருந்ததாகவும், தமிழின் ஆதியிலிருந்தே அகத்தியர் இருந்ததாகவும் சொல்கிறது. பாண்டிய அரசரின் அசுவமேத யாகத்தை, அகத்தியர் நடத்தியதாக காளிதாசர் தனது காவியமான ரகுவம்சத்தில் குறிப்பிடுகிறார்.
முதல் சங்கத்தின் மைய நூலாக அகத்தியம் விளங்கியுள்ளது. இரண்டாவது சங்கத்திலும் வழிகாட்டி நூலாக இருந்துள்ள அகத்தியம், மூன்றாவது தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியத்துடன் இணைந்து பயிலப்பட்டு வந்தது. இரண்டாம் தமிழ்ச்சங்கம் இருந்த கபாடபுரம், கடல் கொண்டழிந்தபோது அகத்தியமும், தொல்காப்பியமும் வெள்ளத்தில் அழிந்துவிடாமல் மீட்கப்பட்டன என்று ஒரு புனைவு சொல்கிறது.
பாண்டியர்களின் கல்வெட்டுகளிலும், நக்கீரரின் இறையனார் அகப்பொருளில் மட்டுமே மீண்டும், மீண்டும் தமிழ்ச்சங்கங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால், தமிழ்ச் சங்கங்கள் இருந்தன என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனச்சொல்லும் ஷுல்மன், வரலாற்று ஆதாரங்களைப் பொறுத்தவரையில், “”””கி.பி. 470ஆம் ஆண்டு மதுரையில் வாழ்ந்த சமணமுனிவர் வஜ்ரநந்தி என்பவர் திராவிடச்சங்கம் ஒன்றை நிறுவினார் எனத் தமிழறிஞர் கமில் சுவலபில் சொல்லும் செய்தியை நமக்குத் தருகிறார்.
வழி வழி சொல்லப்படுகின்ற மற்றொரு கதை ஒன்றைப் பற்றியும் ஷுல்மன் சொல்கிறார். இந்தக்கதையில், தமிழின் 48 ஒலியன்களும், மனிதப்பிறவி எடுக்க வேண்டும் எனச் சாபம் இடுகிறார் பிரம்மா. அவர்கள்தான் முதல் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த 48 புலவர்கள். இப்படி, இந்த மாதிரியான செவிவழிக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு, தமிழ் மொழி உருவான போதே ஆரிய மொழியான சமஸ்கிருதம் உடன் இருந்தது எனக் கருத்துரைக்கிறார் அவர்.
ஷுல்மனின் அகத்தியர் பற்றிய கருத்துக்களைக் கீழ்வருமாறு விமர்சிக்கிறார் அழகரசன். ‘தொல்காப்பியத்தில் அகத்தியர் குறித்த எந்தச் சுட்டலும் இல்லை. அய்ந்திரம் மரபு குறித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த மரபுக்கு அகத்தியர் ஒருவரே காரணம் எனச்சொல்லுகிறார் ஷுல்மன். ஒற்றை இந்திய மரபை நம்புவதால், இலக்கியப்பிரதி ஆதாரங்களை விட புராணக்கதைகளையே பெரிதும் ஆதாரங்களாக அவர் ஏற்கிறார்.
அவைதிக மரபுகளுக்கும், தமிழ் நாட்டுப்புற வழக்கில் உள்ள கடவுளர்களுக்கும் இடமளிக்கிற நல்லா பிள்ளை பாரதம்(1888) போன்ற பிரதிகளை அவர் மறுதலிக்கிறார். உண்மையில், இனவரைவியல், மானுடவியல் ஆய்வு முறைமைகளைப் புறக்கணித்து, புராணங்களைக் குறித்து ஒரு சாதி இந்துவின் பார்வையைக் கொண்டிருக்கிறார் ஷுல்மன். அவர் சொல்வது போல, இந்தத் தமிழின் வாழ்க்கை வரலாறு ஒரு பண்பாட்டு வரலாறல்ல. மாறாக, இது மதம் சார்ந்த, சமஸ்கிருத, புராணப் பார்வையிலான தமிழ் வரலாறு’ என்று அழகரசன் கூறுகிறார்.
ஷுல்மன், தமிழின் வரலாற்றுக் காலத்தை மதிப்பிட பல்வேறு பின்வரும் வேர்ச்சொல் ஆராய்ச்சிகளைப் பற்றிப் பேசுகிறார். அவற்றை இப்படி வரிசைப்படுத்தலாம்.
- ரிக் வேதத்திலேயே இருபதுக்கும் அதிகமான திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, ‘மயூரா’(மயில்); ‘ஃபலா’ (பழம்).
- வேதமொழியான சமஸ்கிருதத்தின் அடிப்படையாக திராவிடமொழியின் கட்டமைப்பு இருந்ததாக முன்பு நம்பப்பட்டது. ஆனால், அலெக்சாண்டர் லுபாட்ஸ்கி அதை மறுக்கிறார் என்பதைப் பதிவுசெய்கிறார் ஷுல்மன். அலெக்சாண்டர் லுபாட்ஸ்கி ஹாலந்து நாட்டிலுள்ள லெய்டன் பல்கலைக்கழக இந்தோ-ஐரோப்பிய மொழிகள் ஒப்பாய்வுத்துறையில் பணிபுரிகிறார்.
- கிறிஸ்துவுக்கு முந்தைய முதல் 1000 ஆண்டுகளில் மொழி பேசியவர்களிடையே, ‘தூய”” ஆரியர்கள் என்றோ, ‘தூய’ திராவிடர்கள் என்றோ யாரும் தனித்தனியாக இருந்திருக்க முடியாது என்பது ஷுல்மன் கருத்து.
- வேத சமஸ்கிருதம் பேசியவர்கள் மிகப் பழங்காலம்தொட்டே திராவிட மொழிகள் பேசியவர்களுடன் தொடர்பில் இருந்தனர் என்பது உறுதி.
- திராவிட மொழிகளின் வினையெச்சங்கள், சமஸ்கிருத மொழியின் வினையெச்சங்களின் பயன்பாட்டைப் பாதித்தன எனச் சொல்லலாம் என்கிறார் ஷுல்மன்.
- இந்திய நிலப்பரப்பில் மொழிகள் தோன்றவில்லையென்றால், முன்னை திராவிட மொழி பேசியவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை அலசுகிறார் ஷுல்மன். ஈரானின் பீடபூமி, திராவிட மொழி பேசியவர்களின் தாய்வீடாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகிறார்கள். மெசபடோமியாவின் இலாமைட் மொழிக்கும், திராவிட மொழிகளுக்கும் இருக்கும் தொடர்புகளை அவர்கள் சுட்டுகிறார்கள். தன்னைப் பொருத்தவரை இலாமைட் மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் மெல்லியதானது என்று ஷுல்மன் கூறுகிறார். வடக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், புதிய கற்காலத்தில் தெற்குநோக்கி இந்தியாவிற்குள் வந்த மேய்ச்சல் குடியானவர்கள் பேசியது திராவிட மொழிகளாக இருக்கலாமென மற்றவர்கள் கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என நமக்குத் தெரியாது என்கிறார் ஷுல்மன். அதுபோல, சிந்து சமவெளி நாகரிகத்தைச்சேர்ந்த மக்கள் பேசிய மொழி திராவிட மொழியா என்பது நிரூபிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது என்கிறார் ஷுல்மன். ஆனால், வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்தியா, திராவிட மொழிகளுக்கு தாயகமாக இருந்தது எனச்சொல்லலாம் என்கிறார் அவர். தமிழிலும், தெலுகுவிலும் உள்ள காலத்தால் முந்தைய இலக்கியப்படைப்புகள் அதற்குச் சான்றாக இருக்கின்றன. ஆனால், அக்காலத்திலும் இந்தத் திராவிட மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளுடனும், பிராகிருத கவிதைகளுடனும் தொடர்புடையவாக இருந்தன.
- விவிலியத்தின் அரசர்கள் பகுதியில் வரக்கூடிய திராவிட சொற்களாக ஷுல்மன் சுட்டும் சொற்கள் பின்வருவன. 1. தோகை(துக்கியம்) 2. அகில்(அஹலிம்) 3. கூகை (கற்கோம்). இந்தச்சொற்களை, ‘இண்டிக்’ சொற்கள் என ஷுல்மன் குறிப்பிடுகிறார். பெரும்பான்மை கோலோச்சுகின்ற அண்மைக்காலத்தில் ‘இண்டிக்’ என்ற சொல் அடிக்கடி உச்சாடனம் செய்யப்படுகிறது. திராவிட, இந்தோ-ஆரிய சமஸ்கிருதம் என்ற உட்பிரிவுகள் இல்லாமல், பொத்தாம்பொதுவாக இந்தியாவை குறிக்கும் குறியீடாக ‘இண்டிக்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது தற்போதைய அரசியலோடு தொடர்புடைய ஒரு வார்த்தையாகும். திராவிட, ஆரிய உட்பிரிவுகள் எல்லாவற்றையும் கலந்து ஒற்றையாக, ஒற்றை அடையாளமாகக் காட்டும் சொல் இது. அழகரசன் இந்நூல் பற்றிய விமர்சனத்தில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
- வட இந்திய அரசர் அசோகரின் பிராமி எழுத்துகளிலிருந்து உருவான தமிழ் பிராமி எழுத்துகள், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. புத்த, சமணத்துறவிகள் வாழ்ந்த குகைகளில் காணப்படும் கல்வெட்டுகளில் இவ்வெழுத்துகள் உள்ளன. இவற்றின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு. ஆனால், அண்மையில் பொருந்தல், கொடுமணல் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம், கி.மு. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுகளாக இருக்கிறது. இது அசோகனின் காலத்துக்கும் முன்பே தமிழ் எழுத்து வடிவம் கொண்டதாக இருக்கிறது என்பதைச்சுட்டும் ஷுல்மன் இதை ஒத்துக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்.
- இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த சமண கல்வெட்டுகள் நிறைய பிராகிருத மொழிச் சொற்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அந்தக் கல்வெட்டுகளை வெட்டிய சமணத்துறவிகள், சமய வழிபாட்டுக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் பிராகிருதத்தைப் பயன்படுத்தினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இந்த எழுத்துகள், தென்னிந்தியாவில் வட இந்திய மொழிகளும், கருத்துகளும் கலந்தே இருந்ததைக் காட்டுகின்றன என்று சொல்லும் ஷுல்மன், ‘தூய’ தமிழ் என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை; எங்குமே இருந்ததில்லை என்கிறார்.
- அசோகரின் புகழ்பெற்ற கல்வெட்டுகளுக்குச் சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இந்த தமிழ் ப்ராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அசோகரின் கல்வெட்டில் தென்னிந்திய அரசுகளான சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர(சேர) அரசுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால் தமிழில் சமஸ்கிருத வார்த்தைகளும், செவ்வியல் சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்களும் எண்ணற்ற அளவில் இருக்கின்றன என்று சொல்லும் ஷுல்மன், ‘தூய’ தமிழ் என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை; எங்குமே இருந்ததில்லை என்கிறார் மீண்டும்.
பதினாறாம் நூற்றாண்டின் நிரம்ப வழகிய தேசிகரின் சீடர் பரஞ்சோதி முனிவர் இயற்றியது திருவிளையாடற் புராணம். திருவிளையாடற் புராணமும், சமஸ்கிருத படைப்பான ‘ஹாலாஸ்ய மகாத்மியமும்’ இரட்டைப்பிரதிகள் எனக்கருதுகிறார் எலேன் ஃபிஷர். திருவிளையாடற் புராணத்திலிருந்து மொழிபெயர்த்து ஹாலாஸ்ய மகாத்மியம் எழுதப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் மதவியல் ஆய்வுகள் துறையில் பணிபுரியும் ஃபிஷர் எழுதியுள்ள நூல் – ஹிந்து பன்மைத்துவம்: ஆரம்பகால நவீன தென்னிந்தியாவில் மதமும், பொது வெளியும். ஆனால், ஹாலாஸ்ய மகாத்மியம், காலத்தால் முந்தையது என்றும் அதிலிருந்து புதுப்பித்து கற்பனை நயம் சேர்த்து எழுதப்பட்டதே திருவிளையாடற்புராணம் என்று சொல்வதே தமக்கு உடன்பாடாக இருக்கிறது என ஷுல்மன் கருத்து தெரிவிக்கிறார்.
தமிழ் ஓசைகளும், சங்கத் தமிழ்ப் புலவர்களும் எப்படி தோன்றினார்கள் என்பதற்கு திருவிளையாடற் புராண கதை ஒன்றை ஆதாரமாகக்கொள்கிறார் ஷுல்மன். சங்கப்புலவர்கள், சரஸ்வதி தேவியின் மக்களாகப் பிறக்கிறார்கள். பிறந்ததும், ஆரிய மொழியான சமஸ்கிருதத்தைக் கற்கிறார்கள். மேலும் தமிழுடன் சேர்ந்து 17 மொழிகளையும் கற்கிறார்கள். எனவே, தமிழ்ச்சங்கப் புலவர்கள் தமிழுடன் ஆரியத்தையும் பயின்றனர் என்பதை எடுத்துக் கூறுகிறார் ஷுல்மன்.
இடைக்காலத்தமிழ் வரலாற்றில் வடக்கு என்பது என்னவாக குறிப்பிடப்படுகிறது என்ற கேள்விக்குப் பதில் தேடுகிறார் ஷுல்மன். வடக்கு என்பது சமஸ்கிருதம் தோன்றி வாழும் ஓர் இடம். இதற்கு எதிர்த்திசையில் இருப்பது செம்மொழியான தமிழ். ஒவ்வொரு மொழிக்கும் அவற்றுக்கே உரித்தான வெளிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. உலகில் வடக்கும், தெற்கும் அதாவது சமஸ்கிருதமும் தமிழும் ஒரே கருத்தியல் சாரத்தை உடையவையாக ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்து உள்ளன என இறையனார் அகப்பொருளைக் காட்டி நிறுவுகிறார் ஷுல்மன்.
பல்லவ அரசவையில் இயற்றப்பட்ட பல இலக்கியப் பிரதிகள் சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டன. பன்மொழி அறிந்த அரசன் முதலாம் மகேந்திரவர்மன், மத்தவிலாசம், பகவத்-அஜ்ஜுக போன்ற சமஸ்கிருத அங்கத நாடகங்களை இயற்றினார். பல்லவ மன்னன் நந்திவர்மன் வடமொழியில் இருந்த மகாபாரதத்தைத் தமிழ் மொழியில் இயற்ற பெருந்தேவனாருக்கு உதவினார்.
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவ அரசு, வடபுலம் சார்ந்த சமஸ்கிருதம் நிறைந்த அரசாக இருந்தது. தென் திசையில் இருந்த பாண்டிய மதுரை அரசு, தமிழ் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு அதற்கு எதிர் நிலையில் இருந்தது. ஆனால், இந்த வட-தென் வேறுபாட்டை அதிகப்படுத்த தேவையில்லை என ஷுல்மன் சொல்லுகிறார். இரண்டு அரசுகளுமே தமிழ் பேசின. தமிழ் பாடின. செப்பேடுகளில், கல்வெட்டுகளில் தமிழைச் செதுக்கின. ஓலைச்சுவடிகளில் தமிழை எழுதின. சைகை மொழியிலும் தமிழ் பண்பாட்டையே பயின்றன. இரண்டு அரசுகளுமே ஒரு தமிழ்ப் பண்பாட்டுச் சூழலைப் பேணின.
காஞ்சிபுரத்தில் தண்டி சமஸ்கிருதத்தில் இயற்றிய தண்டியலங்காரமும், மதுரையில் நக்கீரர் இயற்றிய இறையனார் அகப்பொருளும் ஒன்றுக்கொன்று வளமூட்டிக் கொண்டன என்பது அவர் கருத்து. சோழர்களின் கோயில் கல்வெட்டுகளில், தமிழும், சமஸ்கிருதமும் கலந்தே எழுதப்பட்டன சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பிரசஸ்தி, மன்னர்களின் பரம்பரையையும், பேச்சு மரபையும் பதிவுசெய்தது. தமிழில் எழுதப்பட்ட மெய்க்கீர்த்தி, செய்யுள் வடிவில் அரசர்களின் புகழ் பாடியது. இது குறித்துச் சொல்லும் ஷுல்மன், சில இடங்களில் சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டதைத் தமிழில் திரும்பச்செதுக்கி உள்ளனர் என்கிறார்.
சோழர் காலத்தில் புத்தமித்திரன் எழுதிய பௌத்த தமிழ் இலக்கண நூல் வீரசோழியம். கி.பி. 1063இல் இருந்து 1070வரை அரசாட்சி செய்த வீரராஜேந்திரன் காலத்தில் எழுதப்பட்ட வீரசோழியம், முற்றிலும் சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட தமிழ் இலக்கணம் என்கிறார் ஷுல்மன். ஒலி இலக்கணத்தையும், பொருள் இலக்கணத்தையும் சமஸ்கிருத கலைச் சொற்களைக் கொண்டும், சமஸ்கிருத கருத்துக்களைக் கொண்டும் தொகுத்துச் சொல்கிறது வீரசோழியம். வீரசோழியமே மணிப்பிரவாளம் பற்றி பேசும் முதல் இலக்கண நூல்.
கருத்தியலிலும், நடைமுறையிலும் ஒரே மாதிரியான உறவைக் காலம் நெடுகிலும் தமிழும், சமஸ்கிருதமும் பேணவில்லை என்பது உண்மையே என்கிறார் ஷுல்மன். பல சமயங்களில், சமஸ்கிருதப்பிரதிகள் செறிந்த நிலையில் தமிழுக்கு வந்து சேர்ந்தன. தமிழ் மொழி தோன்றியபோதே சமஸ்கிருதம் இருந்தது என்றும், பல்லவ, சோழர் காலங்களில் இரண்டாவது சமஸ்கிருதமயமாக்கல் நடந்தேறியது என்றும் சொல்கிறார் ஷுல்மன்.
இந்த நூலின் ‘அசைகளின் குடியரசு’ என்ற ஐந்தாம் இயல் சரணம் இரண்டில், இடைக்காலத்தில் தமிழுக்கு இலக்கணம் எழுதிய இலக்கணிகளைப் பற்றி விரிவாக எழுதுகிறார் ஷுல்மன். தமிழ் உரைநடையின் ஆதி வல்லுநர்களில் ஒருவரான ‘பேராசிரியர்’, தொல்காப்பியத்திற்கு மிகச் சிறப்பான உரை எழுதியுள்ளார். 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் பேராசிரியர், தமிழின் செவ்விலக்கியத் தொன்மையை விளக்கி எழுதுவதிலும், அதை ஆதரிப்பதிலும் கவனம் செலுத்தினார். இடைக்கால இலக்கணிகளில் இளம்பூரணர், சோழர்கால ஆட்சி உச்சத்தில் இருந்தபோது வாழ்ந்தவர். அடியார்க்குநல்லாரும், சேனாவரையரும் பேராசிரியரின் சமகாலத்தவர்கள். இடைக்கால அறிவுலகின் மிகச்சிறந்த பல்துறை வித்தகரான நச்சினார்க்கினியர், இவர்களுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வாழ்ந்தவர்.
‘தொல்காப்பியத்தையும், தண்டியலங்காரத்தையும், வீரசோழியத்தையும் பற்றி விரிவாக விவாதித்துள்ள ஷுல்மன், தொல்காப்பியத்திற்கு அடுத்து சிறப்பான இலக்கண நூலாகக் கருதப்படுகின்ற நன்னூல் குறித்து, அதன் பெயரைக் கூட ஓரிடத்திலும் குறிப்பிடாதது புதிராக இருக்கிறது. அடுத்து, இந்த நூல் எழுப்பும் முதன்மையான கேள்வி, வரலாற்றில் எப்போதுமே, தமிழ் தனித்து இயங்கியதில்லை எனும்போது, திராவிட மொழிகளில் தமிழ் மட்டுமே ஏன் சமஸ்கிருதத்தை எதிர்த்து தொடர்ந்து போராடும் சிலுவையை சுமந்து கொண்டிருக்கிறது?’ என்று இந்த நூல் குறித்த விமர்சனத்தில் கேட்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி.
இரண்டாவது சமஸ்கிருதமயமாக்கம்
சோழர்களுக்குப் பிறகான காலத்தில் வந்த இலக்கணிகள், சங்க கால ‘அகத்தியம்’ தந்த அடிப்படை மொழிக் கட்டமைப்பைப் பற்றி நின்றவர்கள். அதே சமயத்தில், சமஸ்கிருத வியாகரணங்களில் இருந்த வலுவான கருத்துகளையும், முறைகளையும் தமிழ் அமைப்பில் இணைக்க முயன்றனர் என்கிறார் ஷுல்மன். இந்த முயற்சிகளை இரண்டாவது சமஸ்கிருதமயமாக்கல் என ஜான் லுக் ஷெவியார் அழைப்பதை அவர் சுட்டுகிறார். பதினேழாம் நூற்றாண்டில், சுப்பிரமணிய தேசிகர் எழுதிய ‘பிரயோக விவேகம்’ என்ற நூல் இந்தச் சமஸ்கிருதமயமாக்கலின் விளைவே என்கிறார் அவர்.
மணிப்பிரவாளம் பற்றிப் பேசுகையில், ஷுல்மன் மீண்டும் சமஸ்கிருத-தமிழ் உறவைப் பற்றிப் பேசுகிறார். தென்னிந்தியாவில், இரண்டு மொழிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தே இருந்து வந்துள்ளன என்று அவர் சொல்கிறார். ஒரு அறிஞரோ, ஒரு கவிஞரோ தமிழில் மட்டும் அல்லது சமஸ்கிருதத்தில் மட்டும் தன் பிரதியை இயற்ற நினைத்தால் அது கோட்பாட்டளவில் மட்டுமே சாத்தியம் என்கிறார் ஷுல்மன். மணிப்பிரவாளத்திற்கு பௌத்த இலக்கண நூல் வீரசோழியம் அளிக்கும் விளக்கம் பின்வருவது. தமிழ், சமஸ்கிருத ஒலியன்கள் கலந்து எழுதப்பட்டால் அது விரைவியல் எனப்படும். சமஸ்கிருத, தமிழ்ச் சொற்களைக் கலந்து எழுதினால் கிடைக்கும் மொழிப் பயன்பாட்டிற்குப் பெயர் மணிப்பிரவாளம். மணிப்பிரவாளத்திற்கு இலக்கணவிளக்கம் சொன்னது கி.பி.14ஆம் அல்லது 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட லீலாதிலகம் என்ற நூல். இந்த மணிப்பிரவாளத்தில் கேரள மணிப்பிரவாளம், தமிழ் மணிப்பிரவாளம் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. தமிழ் மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டது விராட பர்வ மணிப்பிரவாள மஞ்சரி என்ற நூல், சமஸ்கிருத இதிகாசமான விராட பருவனின் மொழிபெயர்ப்பு நூல் இது. இதை எழுதியவர் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள களமூரில், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஸ்வநாதன் சூரி என்பவர்.
தமிழ் ஸ்ரீ வைஷ்ணவத்தில், சமஸ்கிருதம் வடகலை என்றும், தமிழ் தென்கலை என்றும் அழைக்கப்படுகின்றன. அவை இரண்டு வெவ்வேறு பிரிவுகளாக இருக்கின்றன. அவற்றின் இறையியலும், வழிபாட்டு முறைகளும், சமூக, நிறுவன கட்டமைப்பும் வெவ்வேறாக உருவாகியுள்ளன.
தென்னக ஸ்ரீவைஷ்ணவர்கள், தமிழ் மீது தனித்த காதலுடையவர்களாக இருக்கிறார்கள். தமிழ்வேதம் என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அதைப் பார்க்கலாம். 13 ஆம் நூற்றாண்டில், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எழுதிய ஆச்சார்ய ஹ்ருதயத்திலும், அதற்கு மணவாளமாமுனி எழுதிய மிகப்பெரும் தமிழ் விளக்கங்களிலும் இந்தத் தமிழ்ப்பற்றை நாம் கண்கூடாக காணலாம். அவை, சமஸ்கிருத புராணங்களையும், இதிகாசங்களையும் விட தமிழ்வேதமான திருவாய்மொழி சிறந்தது என வாதிடுகின்றன. வேதப்பழமைவாத நடைமுறையின், தூய்மை வாதத்தின் சின்னமாக இருக்கின்ற சமஸ்கிருதத்தை ப்ரக்ஞைப்பூர்வமாக நிராகரித்தது ஆச்சார்ய ஹ்ருதயம்.
கி.பி.1560இல் தென்காசியை ஆண்ட அரசன் அதிவீரராமபாண்டியன், ஹர்ஷர் இயற்றிய சமஸ்கிருதக் காவியமான நய்ஸதிய சரிதாவைத் தமிழில் ‘நைடதம்’ என்ற தலைப்பில் இயற்றினார். இந்நூலில், தமயந்தியின் சுயம்வரத்திற்கு வரும் மாப்பிள்ளைகள் எல்லோரும் சமஸ்கிருதத்தில் பேசினர்.
பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் தமிழ்ப்படைப்புகள், பன்மொழிகள் அறிந்த அறிஞர்-கவிஞர்களால் இயற்றப்பட்டன. அதற்கு ஒரு உதாரணம்தான் திருக்காளத்தி பற்றி எழுதப்பட்ட சீகாளத்திப் புராணம். பதினேழாம் நூற்றாண்டின் நடுவில், கருணை பிரகாச சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள், வெள்ளையப்பன் சுவாமிகள் என்னும் மூன்று சகோதரர்கள் இணைந்து இயற்றியது இந்நூல். சீகாளத்திப் புராணம், தமிழ்த்தெய்வத்தை வாழ்த்தும் பாடலுடன் தொடங்குகிறது. ஷுல்மன், இந்த பாடலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
‘இலக்கணம் அறிந்த கடவுள், அவர்தான் சிவன். அவரே, இறையனார் அகப்பொருள் இலக்கண நூலை இயற்றியவர். இவ்வாழ்த்துப்பாடல், ‘ஆரியத்தோட்டுரல்தரு தமிழ்த்தெய்வத்தை’ என்று ஆரிய சமஸ்கிருதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், எல்லா மொழிகளையும் வென்ற தெய்வத் தன்மை பொருந்தியது என்று தமிழைப் போற்றுகிறது. தமிழ் சமஸ்கிருதத்துக்கு எதிரி. ஆனால் அதற்கு, இணையான ஒரு மொழி. தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு தனித்த மொழிகளாக இருந்தாலும், அவற்றிடையே சில பிரச்சினைகள் இருந்தாலும், அவை இரண்டும் இணைந்து ஒரு தொகுப்பாக, உலகின் ஏனைய மொழிகள் அனைத்தையும் வெற்றி கொள்கின்றன’ என்ற கருத்தோட்டத்தில் இந்த இரு மொழி உறவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே ஷுல்மனின் பார்வை.
தமிழ்மயமான தந்திரம் அல்லது தாந்திரீகத்தமிழ் என்பது எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு புதிய, தீவிரமான ஆற்றலைக் கொடுக்கிறது எனச் சொல்கிறார் ஷுல்மன். இக்காலகட்டத்தில் சித்திரக் கவிதைகளும் எழுதப்படுகின்றன. தண்டியின் ‘காவ்ய தர்ஸா’ என்னும் கவிதை இயல் நூலும், அதன் பின்னால் வந்த தண்டியலங்காரமும் சொல்லும் சித்திரக்கவி பின்னாளில் பயிலப்பட்டது.
16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நவீனத்துவம் தோன்ற ஆரம்பித்த ஒரு காலகட்டத்தில், கவிராச பண்டிதன் வீரய்யன் என்னும் பிராமண கவிஞர், தென்னிந்திய சமஸ்கிருத கவிதை நூலான ‘சவுந்தரிய லஹரி’யைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
சௌந்தர்யலஹரியின் சமஸ்கிருத மூலம், இன்றைக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் தமிழ் நிலத்தில் ஓதப்படுவதாக ஷுல்மன் சொல்கிறார். இந்தப்படைப்பில், பெண்தெய்வம் மூவுலகிலும் ஆகச்சிறந்த பேரழகியாகச் சித்திரிக்கப்படுகிறாள். அவளது யந்திர வரைபடமும், மண்டலமும் இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படுகின்றன. இந்நூலில், ஒருவர் தன்னைச் சுயமாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன.
பதினெட்டாம் நூற்றாண்டில், ஒலிமூலம் அற்புதம் படைக்கும் தாந்திரீக முறையைப் பின்பற்றி பாடல்களை இயற்றிய கர்நாடக இசை அமைப்பாளர்கள் சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர், தியாகராஜர் ஆகியோர் வாழ்ந்தனர். இந்த மூன்று பேரும் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் பாடல்களை இயற்றினர். இவர்கள் ஹெய்டன் (1732-1809), மொசார்ட் (1756-1791), பீத்தோவன் (1770-1827) ஆகியோரின் சமகாலத்தவர் என்கிறார் ஷுல்மன்.
மனோன்மணீயம் சுந்தரனார் என்று பின்னாளில் கொண்டாடப்பட்ட பெ.சுந்தரம்பிள்ளை, அந்நாடகத்தின் வாழ்த்துப்பாவினால் இன்றும் அறியப்படுகிறார். அந்த நாடகத்தின் தொடக்கத்தில் சின்னஞ்சிறு அழகிய வாழ்த்துப் பாக்கள் இருக்கின்றன. அவை, தமிழ் மொழியின் வரலாற்றில் உள்ள பல அடையாளங்களைச் சித்தரிக்கின்றன. சமஸ்கிருதமும், வேதங்களும் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்பே, மிகப்பழமையான, அழியாத மொழியான தமிழ், இந்தப்பிரபஞ்சத்துக்கே சொந்தமாக இருந்தது என்று சொல்லுகிறார் சுந்தரம்பிள்ளை. சைவசித்தாந்த வழிபாட்டு மரபை, பார்ப்பனரல்லாதாரின் திராவிட மதமாகக் கட்டமைக்கும் முயற்சி பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து வளர்ந்து வந்தது என்று சொல்லும் ஷுல்மன் இந்த மரபை, ஆரிய-பிராமண சமஸ்கிருத மரபுக்கு நேரெதிராகக் காட்டும் முயற்சியும் தொடர்ந்து நடந்தது என்கிறார் அவர். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளில் தமிழிலிருந்து சமஸ்கிருத தாக்கத்தை நீக்கும் முயற்சி தொடங்கியது. சமஸ்கிருத எதிர்ப்பின் தீவிரத்தைப் பார்க்கும்போது, இந்த இரண்டு மொழிகளும் ஒன்றுக்கொன்று எவ்வளவு சார்ந்து இருக்கின்றன என்பது தெரிய வருகிறது என்று கணித்துச் சொல்கிறார்.
நவீன தமிழ்க்கவிஞர்களில் மிக நுணுக்கமான திறமைகள் கொண்டவரான தேசிய கவி சுப்பிரமணிய பாரதி சமஸ்கிருதத்தை ஒரு அந்நிய மொழியாகவே நினைத்ததில்லை என்கிறார் ஷுல்மன். சமஸ்கிருதம் இல்லாமல் எக்காலத்திலும் தமிழ் தனித்து இயங்கியதில்லை என்பதற்குப் பல இலக்கிய ஆதாரங்களைக் காட்டும் ஷுல்மன், தமிழ் தனித்து இருந்ததற்கான ஆதாரங்களுக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் தரவில்லை. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் அகப்பொருள், 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருவிளையாடற்புராணம், அகத்தியர் பற்றிய வழிவழிக்கதைகள் ஆகியவற்றைப் பெருமளவு அவர் நம்பி ஆதாரங்களாகக் காட்டுகிறார். அண்மையில், கீழடியிலும், பொருந்தலிலும், கொடுமணலிலும் கிடைத்துள்ள அகழாய்வு முடிவுகள் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் மொழி எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று கூறுகின்றன. ஷுல்மன் இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்.
தில்லானா
டேவிட் ஷுல்மன் இந்த நூலை ஒரு கர்நாடக இசைப்பாடலின் அமைப்பில் வகுத்துள்ளார். அவரைப்போலவே இக்கட்டுரையின் நிறைவுப்பகுதியைத் தில்லானா என்று நாமும் குறிப்பிடலாம்.
வரலாறு எழுதுதலுக்கு அடிப்படைத் தரவுகள் தேவை. அடிப்படைத் தரவுகள், முதன்மைத் தரவுகளாகவும். துணைத் தரவுகளாகவும் வகைமைப்படுத்தப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வில் பங்கேற்ற ஒருவராலோ, பார்வையாளராக இருந்த ஒருவராலோ உருவாக்கப்பட்ட ஆவணங்கள், தொல் கைவினைப் பொருட்கள் போன்றவை முதன்மைத் தரவுகளாகக் கருதப்படுகின்றன.
நாட்குறிப்புகள், கடிதங்கள், நேர்முகங்கள், வாய்மொழி வரலாறுகள், புகைப்படங்கள், செய்தித்தாள் கட்டுரைகள், அரசு ஆவணங்கள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், இசை ஆகியவையும் முதன்மைத் தரவுகள் ஆகும். துணைத் தரவுகள் என்பவை, ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து எழுதப்பட்ட நூல்களும், கட்டுரைகளும் ஆகும். மற்ற தரவுகளுக்கு வழிகாட்டும் நூற் பட்டியல்களும் துணைத்தரவுகள் வரிசையில் சேருகின்றன. ஷுல்மன் எழுதியுள்ள இந்தத் தமிழ் மொழியின் வாழ்க்கைக்கதை இலக்கியங்களைப் பெரும்பாலும் தரவுகளாகக் கொண்டிருக்கிறது. தொல்லியல் ஆவணங்களான கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றையும் இவர் சில இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், பெரிதும் வாய்மொழிக் கதைகளை நம்பி எழுதுகிறார். தமிழின் தோற்றம் குறித்த அகத்தியர் கதை, திருவள்ளுவர் கதைகள், பட்டினத்தார் கதை, காரைக்காலம்மையார் கதை, திருமுறைகளின் ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்ட கதை, கண்ணகி கதை எனப் பல கதைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வரலாற்றின் பக்கங்களை எழுதிச் சென்றுள்ளார். நாம் இந்தப் புனைவுகளை அப்படியே நம்பிவிட முடியுமா?
ஷுல்மன், மீண்டும் மீண்டும் திராவிடவாதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால், எந்த ஒரு எழுத்தாளரையோ, பிரதியையோ தனித்தோ, குறிப்பிட்டோ சுட்டவில்லை. உண்மையில், ஷுல்மன் அவர்களின் திராவிட இயக்கம் பற்றிய ஆதாரங்கள், சுமதி ராமஸ்வாமி, யுஜின் இர்ஷிக் ஆகியோரின் ஆய்வுகளிலிருந்து எடுக்கப்பட்டவை. ஒவ்வொரு கீழைத்தேயவாதியின் – பண்டைய மற்றும் நவீனவாதியின் – பின்னாலும் உள்ளுர் தகவல்களை அளிப்பவர்களும் பண்பாட்டு அறிஞர்களும் இடமளித்து உபசரிப்பவர்களுமே இருக்கிறார்கள். சாதிகள் குறித்த ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. தகவல் அளிப்பவர் கீழ்சாதியைச் சேர்ந்தவரா, ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரா என்பதைப் பொறுத்து கீழைத்தேயவாதிகளின் நிலை தீவிரமாக மாறுபடுகிறது.
சாதி குறித்த பார்வையில் வில்லியம் ஜோன்ஸ் (1746-94) மாக்ஸ் முல்லர் (1823-1900) ஆகியோர் ஒரு புறமும், சீகன்பால்கு (1682-1719), ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் (1777-1819), ராபர்ட் கால்ட்வெல் (1814-1891) ஆகியோர் மறுபுறமும் இருக்கின்றனர். தமிழ், சமஸ்கிருதம், பாலி மொழி அறிஞரான அயோத்திதாசர், தனது ‘தமிழன்’ இதழில், கீழைத்தேயவாதிகளின் இந்து மதம் குறித்த பார்வையை உள்ளூர் தகவல் அளிப்பவர்கள்தான் பாதித்தார்கள் என்கிறார். எட்வர்ட் சையத் குறிப்பிடும் ‘ நவீன கீழைத்தேயவாதி’யாக ஷுல்மன் இருக்கிறார் என்று ஆங்கிலப்பேராசிரியர் அழகரசன் குறிப்பிடுகிறார்.
தமிழ் மொழியின் கால அளவோ மிகப்பெரியது. நம் மொழியின் இலக்கிய வளமோ அளப்பரியது. இத்தகைய வளமான வரலாறு கொண்ட தமிழ்மொழியின் கதையை எழுதுவது என்பது எளிய காரியமல்ல. இதற்கு முன் கே.எஸ்.சீனிவாச பிள்ளை (1922), ஆர்.ராகவ அய்யங்கார் (1941), தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (1965) ஆகியோர் தமிழின் வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். அந்த வரிசையில், அமெரிக்காவில் பிறந்த யூதராகிய டேவிட் ஷுல்மன் இந்த மிகக் கடினமான பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
தமிழின் வரலாற்றை ஒரு கதை போல எழுதும் டேவிட் ஷுல்மன், சமஸ்கிருதச் சார்புடன் ஒருதலைப்பட்சமாக எழுதியுள்ளாரா என்ற அய்யம் எழுவது தவிர்க்கமுடியாததாகிறது. இந்த இடத்தில், மேற்குலகிலிருந்து வந்து தமிழ் மொழியை காதலுடன் பயின்ற ஆய்வாளர்களை வியப்புடன், நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன். இந்த நூலில், தமிழியல் ஆய்வுக்கு உரம் சேர்த்த 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அறிஞர்களின் எழுத்துகளை துணை ஆதாரங்களாக சேர்த்துள்ளார் ஷுல்மன். இவர்களோடு இன்னும் பல அறிஞர்கள் தமிழியலுக்கு தங்கள் உழைப்பை நல்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் டேவிட் ஷுல்மன் சிறப்பான இடத்தைப்பெறுகிறார்.
தமிழின் ஆழ, அகல செழுமைச்சிறப்பை உணராத தமிழர்கள் பெருகிக்கொண்டிருக்கும் காலம் இது. அவ்வப்போது பொங்கும் தற்பெருமை மட்டுமே காணக்கிடைக்கிறது. இத்தகையதொரு நூலை ஒரு தமிழர் எழுதியிருக்கவேண்டும். ஆனால், தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு குறித்த அக்கறையுள்ள இன்றைய வாசகர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு முக்கியமான நூலாக அயலவர் டேவிட் ஷுல்மனின், ‘தமிழ் – ஒரு வாழ்க்கைக்கதை’ அமைந்துவிட்டது நம் சமகாலத் தீயூழ்.
தமிழ் – ஒரு வாழ்க்கைக்கதை (TAMIL – A BIOGRAPHY), டேவிட் ஷுல்மன்
ஹார்வர்ட் பல்கலைக்கழக பதிப்பகம், 2016, ரூபாய் 595/-
இந்நூல் பற்றி மேலும் வாசிக்க:
ஷுல்மனின் இந்நூல் குறித்து, ஆங்கிலத்திலும், தமிழிலும் பல விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. தி இந்து நாளிதழில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ள மதிப்புரை இந்த இணைப்பில் படிக்கலாம்.
https://www.thehindu.com/books/books-reviews/review-tamil-a-biography/article17325788.ece
ஸ்க்ரால் இணய இதழில் ஆர்.அழகரசன் எழுதிய விமர்சனத்தை படிப்பதற்கான இணைப்பு இது.
https://scroll.in/article/939454/does-david-shulman-wrongly-place-his-biography-of-tamil-in-a-framework-of-sanskrit-and-hinduism.
அழகரசனின் விமர்சனத்திற்கு, டேவிட் ஷுல்மன் ஆற்றிய எதிர்வினையை இங்குப் படிக்கலாம்.
https://scroll.in/article/940175/rejoinder-writer-david-shulman-refutes-r-azhagarsans-criticism-of-his-tamil-a-biography
ஃப்ரண்ட்லைன் இதழுக்காக, ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஷுல்மனுடன் கண்ட நேர்காணலை இங்குப் படிக்கலாம். https://frontline.thehindu.com/arts-and-culture/literature/there-is-no-language-in-the-world-which-is-pristine-and-pure/article9855237.ece A.S.Panneerselvan Interview
2017, புதிய ஆராய்ச்சி (எண்.6) இதழில் முனைவர் ந.கோவிந்தராஜன், ‘ஒரு பாணன் இசைக்கும் ‘தமிழ்’பாடல்’ என்ற தலைப்பில் இலக்கிய வரலாறெழுதியல் விமர்சனம் ஒன்றை விரிவாக எழுதியுள்ளார்.
ஜூலை 2017இல் வெளிவந்த, புதிய பனுவல் (தொகுதி 08 இதழ் 01இல்) இந்நூல் குறித்த மதிப்புரை ஒன்றை ஆனந்த் அமலதாஸ் எழுதியுள்ளார்.