மன்னர்களின் வரலாறுகளையும், அதையொத்த கதைகளைப் படிப்பதும் எப்போதும் அலாதியானது. அப்படியான ஒரு பின்புலத்தில் அப்பல்லோ நாவல் வந்துள்ளது. தொடர்ச்சியாக சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் என்று அண்டனூர் சுராவின் படைப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. அவரின் முத்தன் பள்ளம் நாவல் பரவலாக கவனிக்கப்பட்ட படைப்பு. அதனை தொடர்ந்து வெளிவந்துள்ள அப்பல்லோ நாவல்.
அழிக்கப்பட்ட ஒரு மருத்துவ குடியின் கதையை பேசுகிறது. இந்த நாவலை வாசிக்கும்போது அமெரிக்கா தனது லாப வேட்டைக்கு செவ்விந்திய பழங்குடிகளை அவர்களது சுவடே இல்லாமல் மிருக வேட்டையைப்போல மனித வேட்டையாடி அழித்த வரலாறே நினைவுக்கு வருகிறது. ஒரு பழங்குடி சமூகத்தைக் கூண்டோடு தீவைத்து அழித்த கதையை பல்வேறு முடிச்சுகளோடு முழு புனைவாக்கி அப்பல்லோ’ கொண்டு வந்துள்ளார் சுரா.
கிரேக்க நாடகங்களில் வரும் பாத்திரங்களை தனது நாவலின் பெயர் பாத்திரங்களாக்கி அதன் வழியே நாவல் சமகால அரசியல் வரை பேசுகிறது. யாராலும் வீழ்த்த முடியாத ஆர்கே தேசத்தின் மன்னன் மெனிலாஸ் பல சூழ்ச்சிகளால் வீழ்த்தப்படுகிறான். மெனிலாஸின் முகத்திலேயே விழிக்ககூடாது என்று விலகி இருக்கும் அவனது கூடப்பிறந்த அண்ணன் அகமென்னன் தம்பிக்காக அனைத்தையும் மறந்து அரவணைப்பது. பலம்கொண்ட மெனிலாசை வீழ்த்தும் நேரத்துக்காக காத்திருக்கும் டிரோஜன் தேசத்து மன்னன் பாரிஸ் என்று மூவரை சுற்றி நாவல் பின்னப்படுகிறது. அவர்களின் வழியே நாவல் நகரும் போக்கில் நாவலின் மையமான ஒரு பழங்குடி சமூகத்தை முற்றாக அழிக்கும் அரசியல் சூழ்ச்சிகளை நோக்கி நாவல் வந்தடைகிறது.
வரத நாட்டு அரசருக்கு முதுகில் கட்டுப்படுத்த முடியாதளவு அரிப்பு நோய் வருகிறது. அதனை நிவர்த்தி செய்ய பல முயற்சிகள் செய்தும் பயனில்லாதபோது காட்டிலிருந்து வந்த மருத்துவகுடி கிழவன் தங்களது தொன்மையான மருத்துவ முறை மூலம் நோயைத் தீர்த்து வைக்கிறேன் என்று சொல்கிறார். அதற்காக ஒருமாதம் வைத்தியம் பார்க்க வனம் நோக்கி கிளம்பும் மன்னனை பூபூம்பா என்ற ஒருவன் தடுக்கிறான். அவன் வடக்கிலிருந்து வந்த ஒரு சூனியக்காரன்.
அவனிடமுள்ள மந்திரங்களும், சடங்குகளும் மூலமாக நோயுடன் இருக்கும் மன்னனை தன்னால் குணப்படுத்த முடியும் என்று பல வித்தைகளை காட்டி மன்னனை நம்ப வைக்கிறான். இறுதியில் அவனொரு மோசடிக்காரன் என்று தெரிந்தவுடன் அவனை சிறையில் அடைக்க முடிவெடுத்தபோது பல மாயா வித்தைகள் செய்து அரசியை பயமுறுத்துகிறான் அதனால் வேறு வழி இல்லாமல் மன்னன் சிகிச்சை முடிந்து திரும்பும் வரை வரத நாட்டின் தற்காலிக அரசனாக சூனியக்காரன் இருப்பதாக ஒப்பந்தம் போடப்படுகிறது. அதோடு அந்த நாடு சடங்குகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. பல்வேறு சடங்குகளால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகுகிறார்கள். சூனியக்கார மன்னனை கேள்வி கேட்பவர்களை தேசவிரோதி என்று கடுமையாக ஒடுக்கினான்.
வனத்துக்கு போன அரசனுக்கு நோய் குணமாகுவதாக தகவல் வருகிறது. கேள்விப்பட்ட சூனியக்காரன் அதிர்ச்சியாகிறான். இதனால் சடங்குகள் மந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும், மக்கள் அறிவியல் பக்கம் திரும்பி விடுவார்கள் கடைசிவரை மந்திரங்களை நம்பும் முட்டாளாகத்தான் மக்கள் இருக்க வேண்டும். அதனால் அறிவியல் பூர்வமாக இருக்கும் அந்த மருத்துவ குடியை அழிக்க வேண்டும் என்று உத்தரவு போடுகிறான். அந்த குடியை அழிக்கிறான். இந்த நாவல் அரசன் மெனிலாசின் கதை வழியே தற்போதைய இந்திய அரசியல் முகத்தை நேரடியாகப் பேசுகிறது.
மெனிலாஸ் அரசனின் பலமே அவனது கால்தான் என்பதினால் கடைசியில் அரசனின் கால் எடுக்கப்பட்டு புதைக்கப்படுவதும், அதற்கு பின்னால் நடக்கும் பல்வேறு திரை நாடகங்களையும், தியானத்தையும், அப்பல்லோ என்ற மருத்துவ குடில் முன்பு நடக்கும் பல்வேறு கூத்துகளையும் சொல்லிக்கொண்டே போவது, சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசியலில் நடந்த அரசியல் விளையாட்டை நினைவுப்படுத்துகிறது.
ஒரு பேண்டசி நாவலைப்போல சுவாரசியமாக அப்பல்லோ நாவல் வேகமாக ஓடுகிறது. எங்குமே தொய்வில்லாமல் நகரும் நடை. அண்டனூர் சுராவுக்கு வாழ்த்துக்கள்.
பாரதி புத்தகாலயம், விலை: ரூ.250