இந்நூலனது மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.முதல் பகுதியில் கட்டுரையாசிரியரினுடைய மரியாதைக்குரியவர்களின் மரணத்தையொட்டி எழுதப்பட்ட நினைவுக்குறிப்புகளும்,இரண்டாம் பகுதியில் நாடோடிக்கதைகள்,சிறார் இலக்கியம் மற்றும் தன் வரலாறு குறித்த பதிவுகளும்,மூன்றாம் பகுதியில் நண்பர்களின் நூல்களுக்கு எழுதப்பட்ட முன் குறிப்புகளையும் கொண்டிருக்கின்றன.
இதில்,ஒவ்வொரு தலைப்பின் கீழும் கட்டுரையாசிரியர் கூறியுள்ள முக்கியமான கருத்துக்கள் மட்டும் வாசகர்களின் பார்வைக்காக முன்வைக்கப்படுகிறது.
கவிஞரும் விமர்சகருமான இராஜ மார்த்தாண்டனுக்கான அஞ்சலிக்கட்டுரையில் கூறும் போது, இறந்துபோன செய்தியை கேட்டதும் தன் தகப்பனுக்குச் சமமான ஒருவர் இறந்து போனார் என தன் மனைவியிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.அவருக்கும் இவருக்குமான தொடர்பினை நினைவு கூர்கையில்,சென்னை இராயப்பேட்டையிலுள்ள நாகராஜ் மேன்சனில் ஒரு சிற்றறைக்குள் இரண்டு கட்டில்கள்.அதில் ஒரு கட்டிலில் குவிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள்.சுவர் அலமாரியிலும் கட்டில்களுக்கு கீழேயும் புத்தகங்கள்.அறையின் பெரும்பகுதி இடத்தை புத்தகங்கள் பிடித்துக்கொள்ள மீந்ததில் அவர் ஒடுங்கி வாழ்ந்திருந்தார்.
அவரிடம்,பிசாசு போல பிடித்திருந்த புத்தக பிரேமை.அத்துடன் மதுப்பிரியம்.அவரது எளிமை பல சந்தர்ப்பங்களில் எனக்கு வியப்பளித்திருக்கிறது.கடுஞ்சொல் பேச்சை அவரிடமிருந்து ஒருபோதும் கேட்டதில்லை.மகனைப்போல என்னை அரவணைத்து வைத்திருந்தார்.அவரது செல்லம் பெற்ற சிலரில் நானும் ஒருவன். மனிதப்பண்பின் மிக உயர்வான அம்சங்களை நான் அவரிடம் துலக்கமாகக்கண்டிருக்கிறேன்.ஆனால் எல்லாமும் அவரிடம் வெளிப்படையாக இருந்தன.நல்லது,கெட்டது என்று எதையும் பிரக்ஞைப்பூர்வமாக பேணவில்லை.எல்லாமும் இயல்பின்படியே இருந்தன.
கட்டுரையாசிரியரின் ஊரான பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்தான் திரைப்பட உதவி இயக்குநரும் இலக்கியவாதியுமான வைரக்கண்ணு.இவர் கட்டுரையாசியாசிரியருக்கு அறிமுகமாகியிருந்த வேளையில்,திடீரென மாரடைப்பால் இறந்துவிடுகிறார். இவரின் இறப்பு கட்டுரையாசிரியரை மிகவும் பாதிக்கிறது. அமரர். வைரக்கண்ணு எழுதியிருந்த நீர்மேகம் எனும் நாவலுக்கான முன்னுரையில் குறிப்பிடும் போது,கிராமக்கலாச்சாரத்தின் மனித உறவுசிக்கல்களின் உள் நரம்புகளைக்கொண்டு பின்னப்பட்ட இந்தக்கதை நெடுகிலும் அதன் உயிர்துடிப்பைக்காப்பாற்றி வைத்திருக்கிறது என்றும், முதல் நாவல் எனும் சலுகையைக்கோராமலே தன் சொந்த வலுவில் காலூன்றி நிற்கிறது.
எழுத்தாளர் மணா தொகுத்த ‘ஆதிமூலம்-அழியாக்கோடுகள் எனும் நூலில் இடம் பெற்ற கட்டுரையாகும் இது. மற்ற அனேகரைப்போல ஓவியர் ஆதிமூலத்தின் மீது காதல் கொண்டிருந்தவர்களில் கட்டுரையாசிரியரும் ஒருவர். ஆதிமூலம் இறந்துவிட்ட செய்தியறிந்து அவரைப்பற்றி நினைவுகூறும் போது,அவர் என் மன அரூபத்தின் ஒரு பகுதி.அது கலை என்பதையும் தாண்டி அவருடைய உரையாடல்,உடல்மொழி,இணக்கத்தின் பெளதிக அடையாளங்களையும் கொண்டது.அதன் பசுமை என் இளம் பருவத்துக் கதிரவனிடமிருந்து வந்தது.இந்த உலகில் எந்த மனிதனாவது தன் இளம் பருவக்கதிர் வெம்மையை இழக்கும் தொலைக்கும் சாத்தியம் இருக்குமானால்,என்னுள் அரிதாக எப்போதாவது மேலெழுந்தும்,பலபோது அடியுறைந்து கிடப்பதுவுமான ஆதி எனும் நிகழ்வு வெளிறிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.
வானவன் மாதேவி மனிதத்தின் கம்பீரம் எனும் கட்டுரையில் ,ஏறத்தாழ பத்துவயதுவரையில் நன்றாக இருந்த பெங்களூருவைச்சேர்ந்த வானவன் மாதேவி,இயலிசை வல்லபி சகோதரிகள் பிறகு,சிறுகச்சிறுக உடல் உறுப்புக்களின் செயல்பாட்டை முற்றிலும் இழக்கக்கூடிய தசைசிதைவு எனும் நோயால் (மஸ்குலர் டிஸ்ட்ரோபி )பாதிக்கப்பட்ட நிலையிலும் ‘ஆதவ் ட்ரஸ்ட்’ ஒன்றினை உருவாக்கி,அதன் வழியாக தங்களைப்போல் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.பிறகு தன் 37 வது வயதில் மரணித்ததைப்பற்றி நினைவு கூறும்போது மனிதத்தின் கம்பீரம் என்கிறார்.
கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக கேரளச் சமூகத்தளத்தில் நிறைந்து ஒளிவீசிய ஆளுமையும் தன் பன்முக ஆற்றலால் மலையாளக் கலாச்சாரத்திற்கு செழுமை சேர்த்த எம்.வி.தேவன் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக்கட்டுரையாகும் இது.சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்ற இவர் 1948 களில் பிரபலமிக்க ஓவியர்களான ராய் செளத்திரி,மற்றும் கே.சி.எஸ் பணிக்கருக்கு சீடர். இவர் கலையிலும் அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் அநீதிகளை இரக்கமற்று கேள்விக்குட்படுத்துவதில் தீவிரம் கொண்டிருந்தவர்.கலையின் நவீனத்துவத்தில் இவர் கொண்டிருந்த தாகம் சம காலத்தின் கலைப்பிரக்ஞயை வலுப்படுத்தியது ; பார்வையை விரிவாக்கியது.
நவீன மலையாளக்கவிதையின் ஆசான்களில் ஒருவரான ரவிவர்மா, அந்தக்கவிதைக்கு மிகப்புதியதொரு பாணியை முகத்தை உருவாக்கிக்கொடுத்தவர் ஆவார்.இவருடைய கவிதைகள்,அமைதியான மேற்பாங்கும் வலுவான அடியோட்டமும் கொண்டதாகும்.மலையாள நவீனக்கவிதையின் வடிவம் ,உக்கிரம்,மொழி,அரசியல்,பரிணாமம் முதலியவையெல்லாம் ஆற்றூரார் மூலமாகவே சாத்தியமாயின.கலாச்சார வகைமைகளின் நிலம் சார்ந்த அடையாளங்களின் மொழித்தன்மைகளை இவரது கவிதைகள் வெளிப்படுத்தின.அவை நவீன மலையாளக்கவிதையின் கிளாசிக் என்று புகழப்படுகின்றன.கவிதை,மொழிபெயர்ப்புக்கள்,உரைநடை மூலமாக தமிழுடன் ஆத்மார்த்த பிணைப்பும்,பரிமாற்றமும் கொண்டிருந்த பெருங்கலைஞர் ஆற்றூறார்.
சக்தி வை. கோவிந்தன் எனும் மாபெரும் பதிப்பாளரைப்பற்றி குறிப்பிடும் போது,பஞ்ச பூதங்களால் ஆனது உலகு என்பது போல,வை.கோவிந்தனின் உலகம் புத்தகங்களால் ஆனது.அரிதரிதாய் வகை பல எழுத்துக்கள் வாழும் உலகம் அது.உளமார்ந்த மோகமாகவும் சமூகக்கடமையாகவும் அவர் பதிப்புத்துறையை வரித்துக்கொண்டார்.அந்தக்காலத்தில் அவர் தன் உணர்வுகளையும் தளராப்பெரும்பாடுகளையும் உயிரையுமே உவந்தளித்து செயல் புரிந்தார்.தான் போற்றிய துறையை அறிவும் செறிவுமாக ஆக்கினார்.
நாடோடிக்கதைகளைப்பற்றி கூறிடும்போது,மக்களின் கலாச்சாரம்,நாகரீகம் நம்பிக்கை,யுக்தி முதலியவற்றை மரபுரிமைச்செல்வங்களாக தலமுறைதோறும் வாய்மொழியாகவும் எழுத்திலும் பகிறும் நாடோடிக்கதைகளின் வசீகரமறியாதவர் எவருமில்லை.அவை மொழிகளின் அளவு,தொன்மை கொண்டு உலக சமூகத்தின் இணையற்ற செல்வங்களாக கொழித்திருக்கின்றன.பழமை ஏறும் தோறும் புதுமை வரித்துக்கொண்டிருப்பது இவற்றின் இயல்புகளில் ஒன்றாகும்.காலதேச வர்த்தமானத்திற்கு அப்பாற்பட்டு மனித மன ஒருமையின் சாட்சிகளாக விளங்குபவை.
இக்கட்டுரையில் தமிழ்சிறார் இலக்கியம் குறித்த தனது சஞ்சலத்தினை மிக விரிவாகவும் ஆழமாகவும் கட்டுரையாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார்.சிறுவர் இலக்கியத்தினை படிக்க வேண்டியதன் அவசியத்தைப்பற்றிக்கூறும் போது,பாடங்களுக்கு அப்பாற்பட்டு எல்லையற்று பரந்திருக்கிறது பிரபஞ்சம்.மனித வாழ்க்கை இவற்றையெல்லாம் கலை இலக்கியங்களில்தான் சிறார்க்கு காட்ட முடியும்.சிறாருக்கான நல்ல கலை இலக்கியங்களை அவர்களுக்கு ஆற்றுப்படுத்துவது என்பது என்றென்றும் தவிர்க்கவே முடியாத சமூகக்கட்டாயமாகிறது.
கலை இலக்கியங்கள் பற்றி மேலும் கூறும் போது, இவை தாம் மனிதம் புகட்டுகின்றன.மனதின் நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றன.மெய்யான பார்வையை உருவாக்கிக்கொடுக்கின்றன.சமூகத்தின் பல்வேறு அடுக்குகளினூடே பயணிக்கச்செய்கின்றன.அனைவருடனும் ஒன்றுபடச்சொல்கின்றன.இயற்கையைப்பற்றியும் உயிர்களைப்பற்றியுமான பிரக்ஞை கொடுக்கின்றன.கட்டறுத்து அனைத்துக்கும் இதயம் கொடுத்து,கவித்துவம் உற்றுணர்ந்து கனிந்து,ரசித்து,களித்து, நேசம் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ கற்றுக்கொடுக்கின்றன.பாடங்களுடன் பிள்ளைகள் கலை இலக்கியங்களை படிக்கத்தான் வேண்டும்.
இது ஒரு மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரையாகும்.இதுபற்றிக் கருத்துக்கூறுகையில்,சிறந்த மொழிபெயர்ப்பு படைப்புகள் தமக்கு பேரனுபவத்தை தருகின்றன என்றாலும்,பல படைப்புக்கள் மொழிபெயர்ப்பு குறைபாடுகளின் காரணமாக நம் மனத்தோடு அணுக்கமாகாமல் போய்விடுகின்றன.அஷ்டாவதானத்தைவிடவும் பன்மடங்கு கவனம் தேவைப்படக்கூடியது. மொழிபெயர்ப்பு மூலத்தின் மொழிநடைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அல்லது விசயத்தைமட்டுமே எடுத்தெழுதுவது அல்லது வார்த்தைக்கு வார்த்தை பிரதியெடுப்பது அல்லது சாரம்சத்தை மட்டுமே பிரதானப்படுத்துவது,சில சந்தர்ப்பங்களில் விவரணங்களின் மீது ஆளுமை செலுத்துவது அல்லது அப்படியே ஏற்பது மூலத்துக்கு சரி இணையாக இருக்கும் பிராந்தியக்கூறுகளைப் பயன் படுத்துவது அல்லது மூலத்தின் தனித்துவத்தையே கடைபிடிப்பது,தவிர்க்கவே முடியாத இடங்களில் புரிதலுக்காக வார்த்தைகளை அதிகமாகச்செலவிடுவது,அடிக்குறிப்புகளுக்கான முக்கியத்துவம் முதலியனவெல்லாம் ஒவ்வொருவரின் ரசனையையும் அனுபவத்தையும் ,இருமொழிப்புலமையையும்,இருநிலம் குறித்த அறிவையும்,படைப்பார்வத்தையும் மிக முனைந்த தேடலையும் பொறுத்ததாகும்.
அக்கா எனும் குல தெய்வம் எனும்கட்டுரையானது ஆசிரியரின் இளம்பிராய காலத்து,தன்வரலாறு குறித்த பதிவாகும்.இதில் அண்ணணையும்,தன்னையும் அர்ப்பணிப்புமிக்க தனது அக்கா காப்பாற்றி கரை சேர்த்திருப்பதை நினைவு கூர்கிறார்.நீ எங்கே இருந்தாலும்,ஏழையாக இருந்தாலும், மேன்மையானவனாக இருந்தாலும் இந்த அக்காவின் அன்பு உனக்கு அரண் செய்யும்.நீ என் நினைவில் பதிந்திருப்பதைப்போலவே எக்காலத்துக்கும் சகோதரியின் கரத்தைப்பற்றிக்கொண்டிரு.நீ அறத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறாய்.இந்த உலகின் சகல நன்மைகளையும் மகிழ்ச்சிகளையும் பற்றிக்கொண்டிருக்கிறாய். நீ உன் வாழ்க்கையை பற்றிக்கொண்டிருக்கிறாய் என நெகிழ்கிறார்.
திசைக்குழப்பம் எனும் கட்டுரையும் கூட,ஆசிரியரின் பள்ளிப்பருவ தன் வரலாறு குறித்த பதிவுதான்.இதுபற்றிக்கூறும் போது, உண்மையிலேயே தன்னை நிர்பந்த இருட்டு சூழ்ந்திருப்பதைப் புரிந்து கொள்ளும் போது இளமை கடந்திருந்தது.தன் தட்டிலிருந்து அவன் நிதானமாக ஒரு கவளம் வாழ்வை எடுக்கும்போது அந்த பைசாசம் அவசர அவசரமாக வாரி அள்ளி வாயில் திணித்துக்கொள்கிறது. அதன் மிகக்கீர் நக முனைகளையும் சருமத்தின் பயங்கர சொரசொரப்பையும் அவன் தன் பருக்கைகள் தீர்வதினூடாக பேரச்சத்துடன் உணர்கிறான். விடுபடும் திசை தேடி அற்றலைந்து களைக்கும் போதில்தான் தரிசனம் போல உறைக்கிறது. அவன் செல்லமான வளர்ப்பு பிராணிகள் போன்றிருந்த அந்த நான்கு திசைகள் அல்ல இங்கே. ஒன்றோடொன்று சிக்கிப்பிணைந்து முறுக்கிக்கொண்டு கிடக்கும் வன்மங்கொண்ட பல நூறு பெருந்திசைகள் ! பேதமை மாறா பிள்ளைப்பார்வையுடன் அவன் குழம்பித்திகைத்து உறைந்து போனான்.
அறுநூறு பக்கங்களில் மொத்தம் எழுபத்தைந்து கதைகள் அடங்கிய, மலையாள எழுத்தாளர் அமரர்.சி.வி.சிறிராமன் அவர்களின் சாகித்திய அகாதமி விருதுபெற்ற தேர்ந்தெடுத்த சிறுகதைத்தொகுப்பினை மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறார்.அந்த வேளையில் எழுத்தாளரின் மரணச்செய்தி கிடைக்கிறது.அப்போது முடங்கிப்போன பணியை ஏறத்தாழ பன்னிரென்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடர்வதைப்பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
புத்தகங்கள் சேமிப்பது மற்றும் அவற்றினை பாதுகாப்பது குறித்த கட்டுரைப் பதிவு இது.புத்தகங்கள் சேமிப்பது பற்றி எனக்கு பெரிய திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டு.இன்றளவும் என் சொத்து சம்பாத்தியம் என்பது இதுதான்.புத்தகத்தை முறையாக பராமரிக்க முடியாததின் சூழலை விவரித்துவிட்டு, ஆயினும்,என் அன்பிற்கும், போற்றுதலுக்கும், வேதனைக்கும், துயரத்திற்கும் பெரு மகிழ்ச்சிக்கும், பெருந்தனிமைக்கும் உரிய இந்த புத்தகங்கள் இல்லையென்றால் என் உயிரின் மகத்துவ உணர்கொம்பு ஒன்று துண்டிக்கப்பட்டுவிடும் என நினைக்கிறேன்.
யாரோ என் புத்தகங்களை களவாடச்செய்கிறார்கள் எனும் தலைப்பிட்ட பதிவில், இத்தனை வயதான பிறகும் என் புத்தகங்களை யாரோ களவாடக்காத்திருப்பதான ஒரு பூடகமான எண்ணம் மட்டும் என் மனதிலிருந்து இன்னும் மறையவில்லை.அன்று அம்மாவிடம் செய்த புலன்விசாரணை இன்று என் மனைவியிடமும் தொடர்கிறது. புத்தகங்கள் சூழ்ந்தமையாத ஒரு இருத்தல் எனக்கு வாய்த்துவிடுமோ என்பது குறித்தான என் பேரச்சமே இந்த விசாரணைக்கு காரணமாகக்கூட இருக்கக்கூடும்.
சிறார் இலக்கியம் எனும் பதிவில்,நல்ல சிறார் இலக்கியப்படைப்புகள் தாய்ப்பாலுக்கு நிகரானவை என்று நம்புகிறேன்.பிள்ளைப்பிராயத்தில் படித்துக்களிக்கும் நல்லதெதுவும் எக்காலத்திலும் உள்ளத்திற்கு உரமாக உடனிருப்பவையே.
இன்று நம் தலைமேல் விழுந்து மூச்சுவிட முடியாமல் அழுத்தும் இழிவுகளையெல்லாம் நாளையேனும் அகற்றுவதற்கு நாளயேனும் மனிதம் சகல உரிமைகளுடனும் மகத்தான கனவுகளுடனும் நிமிர்வதற்கு நம் பிள்ளைகளுக்கு கலை இலக்கியம் ஊட்டுவதொன்றே வழி.
எழுத்தாளர் சி.மோகனுடனான முதல் சந்திப்புக்கு பிறகு, தன் மனப்போக்கு கட்டமைந்த விதம் பற்றி குறிப்பிடுகையில்,மானசீகப் பரத்திலும் இக இருத்தலிலும் மேலெழுந்தவாரியாக எதிலும் பட்டும் படாமலும் வழுக்கி கலைந்து கொண்டிருந்த என் மருண்ட பார்வை,நடுக்கமற்று நின்று நிலைத்து அவதானம் அறிந்து நான் மோகனின் சொல்லிலும் செயலிலும் மிளிர்ந்த கலை நம்பிக்கையை சேகரித்து தொகுத்து என் போக்குப்பாங்கை வடித்துக்கொண்டேன்.
தமிழ் நதியின் ‘மாயக்குதிரை’ சிறுகதைத்தொகுப்பின் முன்னுரையில் கூறும் போது,இந்தக்கதைகள் ஒவ்வொன்றும் தன் சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க அதனதன் முழுமையில் நம்முள் வாழ்வாகின்றன .இந்தக்கதைகள் என்னுள் சற்றே அசந்திருந்த எழுத்தின் வலிமையையும் சாத்தியங்களையும் பற்றிய வியப்பையும் மதிப்பையும் மீண்டும் ஒருமுறை உசுப்பி மலர்த்தியிருக்கின்றன.
அஜயன்பாலாவின் கூட்டுவண்டியின் கடைசிப்பெட்டி சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில்,வாழும் கதைகள் இவை.அனுபவத்துளைப்பிலிருந்து பொங்கும் மனச்சுனைகள் .இவற்றிலிருந்து பெருகும் உதிரமும் உற்ற நிறங்களும் அடிச்சுவடுகளாக இவர் நடைவெளியெங்கும் பதிகின்றன.அஜயன் பாலாவின் கதைகள் மீதில் எனக்கொரு இலக்கிய கிரக்கம் உண்டு.அவற்றை முன்பு நான் ரகசியமாக உச்சிமுகர்ந்து சிலாகித்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்திக்கொள்கிறேன்.
சி.மோகனின் ‘விந்தைக்கலைஞனின் உருவசித்திரம்’ எனும் நாவலுக்கான முன்னுரையில், மோகனுடைய வாழ்வின் இனிது யாவற்றிலும் இடர்பாடு எதனினும் அவர் ஆன்மா,தூரிகை வெளிப்பாடுகளை அணைந்து உச்சிமுகர்ந்து கொண்டிருப்பது மனமுவந்த தீற்றல்களை சிலாகித்து சிலாகித்துக் கரைவது எங்கும்,கலைநுண் செறிவுகளைக் கிரகித்துக்கொண்டிருப்பது.இன்னும் விவரிப்பதாயின் கலையுடனான கூடல் உச்சமான ஞானப்பரவசத்தை என்றும் தன்னுள் ஸ்திரப்படுத்திக்கொண்டது இடையறா அதிர்வின் இந்த சலன கதி,இந்த நாவலை அதன் உயிரழகுப் பசுமையுடன் நிறைவேற்றியிருக்கிறது.
எழுத்தாளர் த.அரவிந்தனின் ‘உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள் ‘ எனும் சிறுகதை தொகுப்புக்கு எழுதிய முன் குறிப்பில், இந்த நவீனக்கோர்வையின் படிகளில் ஏறிப்பார்க்கையில் தன்னைத்தானெ முடிச்சிகளிட்டுக்கொண்டு நீண்டிருக்கும் நாகம் போன்ற நதி கிடக்கிறது.அது பிறப்பித்தது நீங்களேயாயினும் என்னைப்போலவே நீங்களும் அதனொரு முடிச்சில் சிக்கி,போக்கு மறந்து துயரின் முடிவிலியைத் தியானித்திருப்பீர்கள் என்று அறிவேன்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள், தன் மகனைத்தேடி போலீஸ் வீட்டிற்கு வந்த சம்பவத்திலிருந்து இன்று வரையிலுமான நிகழ்வுகளை அவருடைய வார்த்தைகள் கொண்டு விவரிக்கும் ‘அடைபட்ட கதவுகளின் முன்னால்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரையில் கூறும்போது,நண்பர்களே,நான் உங்கள் ஒவ்வொருவரின் கரம் பற்றியும் கேட்டுக்கொள்கிறேன்.இந்த நூலினை படிக்கும் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.இதில் உங்களுக்கு அரிய செய்தி இருக்கிறது.பார்வை இருக்கிறது.கூடு சிதைந்த பறவைகளின் ஓலமும் நிராதரவும்,வெட்ட வெட்ட கிளைத்துப்பரவும் நம்பிக்கையின் கம்பீரமும்,மனித வாஞ்சையும் சமூக நீதியும் இருக்கின்றன.
உலகத்தாய்மையை மாசற்றுப்பிரநிதித்துவப்படுத்தும் ஒரு அம்மாவை சந்திப்பீர்கள்.
ஜே.பிரான்சிஸ் கிருபாவின் ‘சம்மனசுக்காடு’ எனும் கவிதை தொகுப்புக்கான முன்குறிப்பில், என் நிலத்தில்,மொழியில் இவர் நிகழ்கிறார் என்ற காரணத்தால் என்றும் நன்றி கொண்டிருப்பவனானேன்.எப்போதோ பெய்த மழையின் சொட்டுக்களை ரகசியமாகக் காப்பாற்றிவைத்திருக்கும் மரமாக நான் ஆக வேண்டும் என்பது என்விருப்பம்.நடைபொழுதில் நிழலணைய என்னருகே இவர் சற்று நின்றால், இந்த சுத்த சுயம்புவின் மீது பொழிந்து ஆறுதலடைவேன்.
ஜே.பிரான்சிஸ் கிருபாவின் ‘ஏழுவால் நட்சத்திரம் ‘ எனும் கவிதைத்தொகுப்புக்கான முன்குறிப்பில்,ஓர் நாடோடி இஸ்லாமிய பக்கிரியைப்போல,என் தப்பு வாத்தியத்தை கொட்டி முழக்கி இந்தக்கவிஞனின் புகழ் பாடி நடக்கிறேன்.
