இந்தியக் குற்றவியல் நீதி அமைப்பு பெண் கைதிகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. ஒரு வகையில் இந்திய சமுதாயம் பெண்களிடத்தில் காட்டும் அலட்சியத்தின் நீட்சியே இது. அலட்சியத்தின் இந்த இரு முகங்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ஆகும்… (வி.ஆர்.கிருஷ்ண அய்யர்)
மனித இனத்திற்கு எக்காலத்தும் பிற உயிர், பிற இனம், மதம் என ஏதோ ஒன்றினை அடக்கி ஒடுக்கி ஏய்த்திட வேண்டும். இதில் முதல் இடம் பெறுவதும், தொடங்குவதும் குடும்பத்திற்குள்தான். அங்குதான் பெண் இருக்கிறாள். இப்புள்ளியிலிருந்தே அடக்குமுறை தொடக்கம் பெறுகிறது என்ற கூற்றினை மறுக்கவியலாது. வீட்டினுள் இருப்பதாலேயே அது பெரும்பாலும் பொதுவெளிக்கு வருவதும் தடுக்கப்படுகிறது, இதுவும் உண்மை. இத்தகைய ஏய்ப்புகளையும், கொடுமைகளையும் முதலில் அனுபவிப்பது பெண்ணே.
பெண் மனவலுவுள்ளவள். வலி தாங்குபவள். இதனை அடக்கி ஆளும் ஆண் அறிவான். இந்தப் பண்பே அவனுக்கு அச்சத்தினை ஏற்படுத்துகிறது. உளவியல் கூறுகளும், ஆய்வுகளும் இதனை சுட்டிக்காட்டி எடுத்துரைக்கிறது. தன் இருப்பினைக் குறித்த அச்சம் எங்கு தோன்றுகிறதோ அங்கு அடக்குமுறை உற்பவிப்பதும் உளவியல் கூறே.
அடக்குமுறையும், ஆதிக்க உணர்வும் நெடிய வரலாறுப் பிண்ணணி கொண்டவை. மனித மனம் கல்வியினாலும், மேம்பட்ட சிந்தனை, எண்ணங்களாலும் பண்படும்போதே இத்தகைய இழிவான குணங்கள் தாழ்ச்சி பெறும். சமுதாய மேம்பாடும், சமத்துவம் ஆகியவை சொல்லளவில் இருந்து விடுபட்டு செயலளவில் நடைமுறைக்கு வரும். இதில் வசந்தி தேவி அவர்களுக்கு அரசு அளித்திருந்த மூன்றாண்டுகள் என்ற காலவரையானது மிகச்சொற்பமானது. இருப்பினும், தன் மனதின் உள்ளார்ந்த அர்ப்பணிப்பின் விளைவாகவே அவர் தன் பணியை மேற்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், இதில் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காயே என்ற கூற்றினை வசந்தி தேவியின் கட்டுரைகள் ஐயமின்றி நிரூபணம் செய்கின்றன. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு நடைமுறை நியாயங்களே எட்டாக்கனியாக இருக்கும் சூழலில் நீதி கிடைப்பதென்பது அரிதாகிவிடுகிறது. தனக்கு சாதகமானதை நிறுவிக்கொள்ளத் துடிக்கும் மேட்டிமை வர்க்கம், அதற்குத் துணை நின்று பலனை அனுபவிக்கும் அதிகாரங்கள் என இவற்றின் கொடுங்கரங்கள் சாமானியரின் பார்வைக்கு எட்டாதவை. அவற்றின் தந்திரங்களின் வேர்களை அவன் அனுமானிக்க முடியாது.
நூலில் வசந்தி தேவியின் பெண் கைதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கத்தக்கவை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகம். தேசிய அளவில் பெண் கைதிகளின் விழுக்காடு 16 சதவீதம். ஆனால், ஆண் கைதிகளின் விழுக்காடு தேசிய அளவில் 6.8. இந்தப் பெண் கைதிகளில் 70 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தினைச் சார்ந்தவர்களே என்பதும் இப்புள்ளி விவரம் காட்டுகிறது.தாழ்த்தப்பட்ட இப்பெண்கள் செய்த குற்றம் கள்ளச்சாராயம் விற்றார்கள் என்பதே குற்றச்சாட்டு.
இதனை வசந்தி தேவி பதிவாக்குகிறார். ஏறத்தாழ ஓராண்டு காலம் கழிந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதில்லை. அவ்வாறு நீதிமன்றத்திற்கு சென்று சிறைக்கு திரும்பும் வரை அவர்கள் காவல் துறையினர் வசமிருந்தாலும் சிறை வளாகத்திற்குள் நுழைந்ததும் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தப்பெறுகிறது. இந்த நடைமுறையினை தவிர்க்கவும், அவர்களுக்கு அத்தியாவசியமான மாற்றுடைகள், நாப்கின்கள் வழங்கவும் இவரது தலைமையிலான ஆணையம் நடவடிக்கை எடுத்திட அரசுக்குப் பரிந்துரைத்தது.வசந்தி தேவி தனது நூலில் சில கட்டுரைகளையே விவரிக்கிறார். பரவலான தலைப்பின் கீழ் இவை இடம் பெற்றுள்ளன. தாழ்த்தப்பட்ட இனத்தினைச் சார்ந்த கருப்பியின் மீது திருட்டுக்குற்றம் சுமத்தப்பட்டு அவளது குடும்பத்தினர் மீது காவல்துறையின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அடுத்ததாக அவள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வழக்கினை முடிக்கப்பார்க்கிறது.
இதுவே நூலின் முதல் பதிவு. இந்த வழக்கில் ஏறத்தாழ 10ஆண்டுகள் கழித்தே நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கப் பெற்றது. இதன் நகை முரண் என்னவெனில் புகார் அளித்ததும் தாழ்த்தப்பட்ட இனத்தினைச் சார்ந்தவரே. ஆனால் குற்றம் சுமத்தப்பெற்றவர் தாழ்த்தப்பட்ட பிரிவில் கீழான பிரிவினைச் சேர்ந்த அருந்ததியர் இனம்.
இப்புள்ளியில், சாதிய கட்டமைப்பு உருவாக்கம் பற்றிய வசந்தியின் கருத்துகள் சிந்தனையைத் துவக்குகின்றன, மிக எளிய சொற்களில் அவரது கருத்தினைக் கூறவேண்டுமானால் உடல் உழைப்பிலிருந்து பல்வேறு காரணங்களால் விடுதலை பெற்றவர்கள் அல்லது அதனைக் கைவிட்டவர்கள், ஆதிக்க சாதியாக உருவெடுக்கின்றனர். கடினமான உடல் உழைப்பினையும், மிகக்கீழான பணிகளையும் மேற்கொள்வோர் தீண்டத்தகாதோர் என வகைப்படுத்தப்படுகின்றனர். அதுவே நமது சாதிய சமுதாயத்தின் மதிப்பீட்டு முறையாகக் கொள்ளலாம் என அவர் பதிவிடுகிறார்.
மார்க்சீய சாரத்தினைத் தனது அடிப்படையாகக் கொண்ட வசந்தி தேவி மகளிர் ஆணையப் பணியில் தன்னை முழுவதுமாகப் பிணைத்துக் கொண்டதில் வியப்பேதுமில்லை. இதற்கு துணையாக, பின்புலமாக அவரது குடும்பப் பின்னணியும் பங்காற்றுகிறது. சில ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் வசித்தகாலத்தில் அங்கு ஏற்பட்டிருந்த இடதுசாரித்தன்மை வாய்ந்த அரசியல் கிளர்ச்சியும் உடன் ஏற்பட்டிருந்த அறிவுப் புரட்சியும் அவரின் பார்வையை மாற்றி அமைத்தன.
அவர் இவ்வாணையத்தின் பொறுப்பேற்றுக் கொண்ட சூழலில் இதற்கென எந்த அதிகாரமுமற்ற அமைப்பாக அது இருந்தது. எந்த அதிகாரியையும் விசாரித்திடவோ, பிரமாணத்தின் மீது உண்மையைக் கூறவைக்கவோ அதற்கு அதிகாரமில்லை. அரசுக்கு இதனை நடைமுறைப்படுத்திட பலத்த தயக்கம் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இருப்பினும் இறுதியில் அதனை வென்றெடுத்தார்.
அரசின் நடைமுறைகள் பொதுவாக மெத்தனமானவை. அவை பல அடுக்குகளில் மறைந்து கிடப்பவை. செயல்படுத்த வேண்டும் என்ற துடிப்போரைத் தட்டிவைத்து, சிறுமைப்படுத்தி மனதினைத் தளர்வடையச் செய்பவை, மக்களுக்கு, குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காக அவை சிறு துரும்பினையும் கிள்ளிப் போட விரும்பாதவை. அவர்களின் குரல்களை கேட்க அது விரும்புவதில்லை எனில் அவர்களுக்கான உரிமைகளைக் கேட்பவர்களின் நிலை எத்தகையதாக இருக்கும் என்று விளக்கிடத் தேவையில்லை.
இருப்பினும் தான் முன்னெடுத்துச் சென்ற முயற்சியில் இத்தகைய இடர்பாடுகளைக் கடந்து அரசுக்கு மகளிரின் உரிமைகளைப் பெற, வென்றெடுக்க பல பரிந்துரைகளை வசந்தி தேவியின் தலைமையிலான ஆணையம் மேற்கோண்டது. தேசிய மகளிர் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ‘
சிறையில் மாதக்கணக்கில் அடைபட்டு தண்டனையும் பெறவியலாது, விடுதலையும் அடைய முடியாத எண்ணற்ற அபலைகளின் மேம்பாட்டிற்காக சட்டரீதியான உரிமைகளைப் பெறப் பரிந்துரைத்தது. பெண் சிசுக்கொலை, ஆணவக் கொலைகள், பணியிடத்தில் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வழிகாட்டுதல்கள், பாலியில் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்திற்கு வழி கண்டடைதல் பெண் சிறார் தொழிலாளர்களுக்கான நடத்தை முறைகள் என எண்ணற்ற பிரச்சினைகளுக்கு அவர் அரசுக்கு பரிந்துரைகளை தன் பணிக்காலத்தில் அளித்தார்.
இவற்றில் எத்துணை பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, நடைமுறைப்படுத்தப்பட்டன என அறிய இயலவில்லையெனினும் அவர் தனது கடைமையினை செவ்வனே செய்து முடித்தார் எனக் கொள்ளலாம். நீதியைத் தேடி நீண்ட பயணம், எந்த நீதி இந்தப் பெண்களைச் சிறையில் அடைத்தது, பணியிடத்தில் பாலியல் வன்முறை, பிறப்பும் இறப்பும் இழந்த பெண் சிசுக்கள், முப்பாரம் சுமப்பவர்கள், கதியற்ற சிறுமிகளும் கிடைக்காத நீதியும் உள்ளிட்ட தலைப்புகளில் வசந்தி தேவியின் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.
பெண் குழந்தைகளின் கொடுமை பற்றிய பகுதி வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கல்வியறிவும், நாகரீகமும் மனிதனின் மனத்தினை மேம்பாடையச் செய்துள்ளதா என்கிற வினா நம்முன் எழுகிறது. வெளிச்சம் கண்டவை சொற்பம். வறுமையின் அசுரப்பிடியில் சிக்கித் தவிக்கும் விளிம்புநிலைக் குடும்பங்களில் பெண் குழந்தைகள் மட்டுமே பணிக்குச் சென்று உழைத்து சீண்டல்களுக்கும், வக்கிரங்களுக்கும் பலியாவதற்குக் காரணம் என்ன? யார்? இவ்வாறான பல விடையளிக்கவியலாத கேள்விகள் வசந்தி தேவியின் மனதில் எழுந்திருக்கக்கூடும்,காலம் மறந்த கிராமம் என்ற பகுதி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்துப் பேசுகிறது. கிராம மக்களின் பிரதிநிதியாக இருந்தவரின் குடும்ப உறுப்பினரின் அட்டகாசங்கள் கிராமப் பெண்களால் விவரிக்கப்படுகின்றன. இதனை அவர் ஆணையச் செயல்பாடுகளின் வழி தடுத்து நிறுத்தி அவர்களுக்கான சட்டப்படியான தீர்வுகள் பெற்றுத் தரப்பட்டாலும், ஆதிக்கவர்கத்தினர் ஒன்று கூடி அவர்களது வாழ்வாதாரமான உழைப்பினை வஞ்சகமாக தடுத்து நிறுத்தினர். இத்தகைய வஞ்சகத்தால் அந்த இனத்தின் வருவாய் ஆதாரமே சிதைந்து அவர்கள் அல்லலுற்றனர் என்பதே துயரமான நடைமுறையும், அவலமும். இதற்கான தார்மீக உரிமையினை யார் வாயிலாக எப்படிப் பெற்றுத் தருவது என்ற வேதனை மிக்க வினாவுடன் வசந்தி தேவி இப்பகுதியினை முடிக்கிறார்.
நூலெங்கிலும் பல தரவுகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. எளிய வாசகன் அவற்றைத் தவிர்த்துச் செல்லும் சாத்தியங்கள் உண்டு. எவ்வாறிருப்பினும், நூலின் உள்ளடக்கம் வீர்யமும், காத்திரமும் கொண்டது. ஆணையத்தின் தொடக்ககால செயல்பாடாக பொது விசாரணை என்ற முறையினை வசந்தி தேவி அறிமுகப்படுத்தினார். மகளிர் ஆணையத்திற்கென எவ்வித அதிகாரமுமில்லாத காலகட்டத்தில் அரசு அதனை ஒரு சங்கடமளிக்கும் நடவடிக்கையாகக் கருதியது. விளைவு, ஆணையம் அழைப்பு விடுத்திருந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எந்தத் துறை அதிகாரிகளும் அதில் பங்கேற்க மறுத்து அக்கூட்டத்தினைத் தவிர்த்தது மட்டுமல்லாது, துறை சார்ந்த அலுவலர்களையும் பங்கேற்கவிடாது தடுத்த அவலத்தினையும் பதிவு செய்கிறார். அரசின் ‘ஒத்துழையாமை இயக்கம்‘ என அதனை வசந்தி தேவி கூறுகிறார்.
இத்தகைய நடவடிக்கைகள் எத்தகைய மனச் சோர்வினை உண்டாக்கும் என்பதனை விளக்கிடத் தேவையில்லை. எவ்விதப் பிடிமானமுமற்ற சூழலில் ஒரு அமைப்பினை நடத்திச் சென்று அதன் வாயிலாக தீர்வினை எளிய மக்களுக்கு எவ்வாறு வழங்குவது? இதற்கு பொறுப்பான அரசே இதனை செயலாக்கவிடாது தடுத்து யாரையோ, எதனையோ ‘அமைதிப்படுத்திட‘ அல்லது ‘திருப்திப்படுத்திட‘ துடிக்கும்போது தனியொரு நபராக அவர் இத்துணை அளவு செயலாற்றியதே பெரியதொரு செயலாகிறது.
இதுபோன்ற பெண்களின் நிலை குறித்தும், அவர்களுக்கான உரிமைகள், அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்தும் ஆய்வு செய்யும் வளரும் தலைமுறையினருக்கு விரிவான தரவுப்பட்டியல்கள் நிரம்பிய இந்நூல் சிறந்ததொரு வழிகாட்டும் கையேடாகத் திகழும் என்பதையும் இங்கு உறுதியாகக் குறிப்பிட வேண்டியதாகிறது.
வசந்தி தேவியின் இக்கட்டுரைகள் காலச்சுவடு மாத இதழில் வெளியான கட்டத்திலேயே பரவலான கவனத்தினைப் பெற்றது. இருப்பினும் அது பெருவாரியான வாசகர்களைச் சென்றடையவில்லை. இச்சூழலில் மைத்ரி பதிப்பகத்தின் வெளியீடாக ‘பெண்ணுக்கு ஒரு நீதி‘ நூலாக இது வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு சிறப்பினைச் சேர்க்கும் நூல்கள் வரிசையில் இதுவும் குறிப்பிடத்தக்கது. மைத்ரி பதிப்பகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறுவதுடன் இது போன்ற படைப்புகளை பரவலான அளவில் மகளிரிடையே கொண்டு சேர்க்க நமது முயற்சியும், பங்களிப்பும் அவசியமிக்கதாகிறது என்னும் கருத்துடன் இக்கட்டுரை நிறைவாகிறது.
மைத்ரி, விலை: ரூ.130
