ஆண்களும், அவர்களது ஆதிக்கமும் நீக்கமற நிறைந்த உலகில் ஒரு பெண் தனது முயற்சி, தனித்தன்மை, தான் நேசிக்கும் கலையின்பால் உள்ளார்ந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பின் வழி வாழ்வின் உச்சத்தினை அடைந்த கதை தேவதாசியும் மகானும் என்னும் பெங்களூரு நாகரத்தினம்மாவின் வாழ்க்கைக் கதை.
தேவரடியாள், தேவதாசி என்று அழைக்கப்பட்ட ஓரினம் பின்னர் இச்சையும், கவர்ச்சியுமிக்க சொல்லாக மருவி வழக்கொழிந்தது. அத்தகைய நிலையில் தன்னைப் பற்றி கூறிக்கொள்ள பலர் தயங்கி வாழ்ந்த நிலையில் தான் ஒரு தேவதாசி என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டதுடன் தன்னை சமுதாயம் திரும்பிப் பார்க்கும் வண்ணம் வாழ்ந்து காட்டியவர் அவர்.
தங்களுக்கு ஏற்புடைய கருத்துகளை கூறும்வரை கலைஞர்களை அவர்களது படைப்பின் வாயிலாக பாராட்டும் சமூகம், தங்களுக்கு ஒவ்வாதவறைக் கூறும்போதும், எழுதும் போதும் இத்தகைய கலைஞர்களை உதறித் தள்ளுவதும், மூர்க்கமாக எதிர்த்து, ஒதுக்கிவைப்பதும் படைப்பு பிறந்த காலம் தொடங்கி தொடர்கிறது.
மேன்மையான கலாச்சாரம், பண்பாடுகள் கொண்ட நாடான இங்கிலாந்திலேயே புகழ்பெற்ற படைப்பாளியான டி.எச்.லாரன்ஸுக்கு 1928இல் இதுவே போன்றதொரு நிலை ஏற்பட்டது. அவருடைய புதினமான LADY CHATTERLEY’S LOVER என்ற நாவல் கடும் சர்ச்சைகளுக்குள்ளாகி, வழக்குத் தொடுக்கப்பட்டு அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஆனால், அவருடைய இறப்பிற்குப் பின்னர் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அறிவு வளர்ச்சி உச்சம் பெற்றதாகக் கருதப்படும் இருபதாம் நூற்றாண்டில் சமூகத்தின் பார்வை, மனோநிலை இவ்வாறாக இருக்கும் நிலையில் நாகரத்தினம்மாள் முத்து பழனியின் தெலுங்குக் காப்பியமான ராதிகாவின் சாந்தவனம் என்னும் காப்பியத்தினை பதிப்பித்து வெளிக்கொணர அடைந்த சிரமங்களும் சட்டபூர்வமான போராட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. இருப்பினும் அது தமிழில் வெளிவந்துள்ளதா என அறிய இயலவில்லை. கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்னும் முதுமொழிக்கேற்ப நாகரத்தினம்மாள் அதன் சிறப்பினையும், மொழி வளத்தையும் உணர்ந்து இப்பணியினை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.
ஆந்திராவின் புகழ் பெற்ற சீர்திருத்தவாதியான கண்டுகூரி வீரேசலிங்கம் பந்துலு இதன் பிரதான எதிர்ப்பாளராக இருந்தார். இது குறித்தான வாதப் பிரதிவாதங்களில் நாகரத்தினம்மாள், மான, அவமான நெறிகளெல்லாம் பெண்கள் மட்டுமே கடைபிடிக்க வேண்டிய நெறிகளா? என்ற கேள்வியை முன்வைத்தார்.
சீர்திருத்தவாதியும், தேவதாசி முறை ஒழிப்பின் தீவிர ஆதரவாளருமான வீரேசலிங்கம் முத்துபழனி ஒரு விலைமாது என்றும், அவரது படைப்பினால் சமூக ஒழுக்கங்கள் சிதைவதாகக் குற்றம் சாட்டியதும் நகைமுரணாகிறது.
இருப்பினும் மனந்தளராத அவர் வழக்கில் சாதகமான தீர்ப்பினைப் பெற்று அதனைப் பதிப்பித்தார். 6 அணா விலையில் அது விற்கப் பெற்றது.
தற்போது அதனை பெங்குவின் பதிப்பகம் தனது செவ்வியல் பதிப்பாக The appeasement of Radhika Santhavam என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. மின்னூல் பதிப்பாகவும் கிடைக்கிறது. மிகுந்த சிருங்கார ரசமும், பாலியல் குறித்த வர்ணனைகளும், கவித்துவமும் கொண்ட இந்தப் படைப்பு இன்று பதிப்புக் கண்டது நாகரத்தினம்மாளின் போராட்டத்தினாலேயே சாத்தியமாயிற்று. மேலும், முத்து பழனி, ஆண்டாளின் தமிழ்ப் பாசுரங்களை அடியொற்றியே இதனைப் படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மைசூரிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த நாகரத்தினம்மாள் பெரும் போராட்டத்தின் இறுதியிலேயே சென்னைக் கலைஞர்களிடத்தில் தன் இருப்பினை உறுதி செய்து கொண்டார். வெற்றியும், புகழும், செல்வாக்கும் பெற்றார். பெரும் செல்வம் ஈட்டினார். நாட்டிலேயே வருமானவரி செலுத்தும் ஒரே பாடகியாக அவர் விளங்கியதும் கவனிக்கத்தக்கது.
அவருக்கு பல சிறு, குறுநில மன்னர்களும் அவருக்கு பலவிதமான கௌரவங்களையும், காணிக்கைகளையும், பல பட்டங்களையும் அளித்தனர். அவரது பாடல்களை இசைத்தட்டில் பதிவாக்க 1905இல் ஒரு பதிவுக்கு ரூ 3000 பெற்றார் எனில் அவரது செல்வச் செழிப்பு விளங்கும். தன் இல்லம் தேடி வரும் அனைத்துக் கலைஞர்கள் உட்பட தன் பகுதி வாழ் மக்களையும் அவர் ஆதரித்தார்.
சென்னை திருவொற்றியூரில் ஒரு கடைத் தெருவையே விலைக்கு வாங்கி அதிலிருந்த கடைகளின் மூலம் கிடைக்கும் வருவாயினை நந்திகேசுவரர் ஆலயத்தின் நடைமுறைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வழி செய்தார். மேலும், பல வசதியற்ற எழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி அவர்களுக்கு உதவியளித்தார். பல பெண்களுக்கு திருமணமும் செய்து வைத்தார். நல்ல விஷயங்களுக்காக தனது பெரும் செல்வத்தினை தானமாகவும் தந்தார். சென்னையில் ஓர் அரசி போல அவர் வாழ்ந்ததையும் பல குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்நாளைய வழக்கப்படி திருவிழா மற்றும் ஆராதனை நாட்களில் எல்லோருக்கும் உணவிடுதல், தண்ணீர் பந்தல் அமைத்து பல வகையான பானங்களை வழங்குதலையும் அவர் கடைபிடித்து வந்தார்.
நாகரத்தினம்மா சங்கீத விற்பன்னரான தியாகராஜரிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அவருக்கு வழிபாட்டுத் தலம் அமைக்க உறுதி பூண்டவர். பல வழிகளில் முயன்று அவர் இதற்கான இடத்தினை தனது சொந்த முயற்சியினால் பெற்று இதனைச் சாதித்தார்.
அவரது அடுத்த போராட்டம் திருவையாற்றில் தொடங்கியது. ஆண்கள் மட்டுமே தியாகராஜர் ஆராதனைகளில் அதுவரை பங்கெடுத்து வந்தனர். ஆனால் நாகரத்தினம்மா 50 தேவதாசிகளைக் கொண்டு அந்த நிகழ்ச்சியில் பாட வைத்து புரட்சியினைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி பெண்களிடையே அவரது செல்வாக்கினைப் பல மடங்கு உயர்த்தியது. திருவையாறு மேடையில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக அமர்ந்து பாடியதற்கு காரணியாக அவர் உருவெடுத்தார். இதனை பெண் இனத்துக்கான வெற்றியாக்கினார்.
புகழ்பெற்ற திரைப்படக் கலைஞரும், பண்பாளருமான சி.வி.நாகையா அவர்கள் நாகரத்தினம்மாவின் திறமையையும், மேதைமையயும் கண்டுணர்ந்து தனது செலவில் திருவையாறில் அவருக்கு வீடு ஒன்றினை அன்பளிப்பாக அளித்தார்.
சின்ன கட்சி, பெரிய கட்சி என்று பிரிந்து தனித்தனியாக திருவையாற்றில் ஆராதனை விழாவினை நடத்தி வந்த இரு பிரிவினரையும் இணைத்து ஒற்றுமையை உண்டாக்கிய பெருமைக்குரிய பெண்மணி நாகரத்தினம்மா. சிறந்த பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள், செல்வந்தர்கள், அரசு அதிகாரிகள் என சமூகத்தின் அனைத்து சக்திகளையும் பல காலம் ஒருங்கிணைத்து அதனை சிறப்புடன் நடத்திச் சென்றதும் அவரது விடாமுயற்சிக்கும், தொடந்து போராடும் உள்ள வலிமைக்கும் சான்றாவதுடன் வாசகனுக்கு வியப்பினையும் அளிப்பது.
பல இடங்களில் அவர் கண்ணியத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் சில கசப்பான நிகழ்வுகளும் நிகழ்ந்தன. நெல்லூரில் அவர் நன்கொடை பெற சென்றபோது அவருடைய இனம் நிமித்தம் தனியாகத் தங்கவைக்கப்பட்டதுடன் உணவுண்ணும் தட்டுகள், கோப்பைகள் ஆகியவற்றிலும் வேறுபாடு இருந்தது. அந்த வீட்டின் பெண்களும் கூட அவரைச் சந்திக்கவில்லை.
மனம் தளராத அவர் என் முன்னே வந்து நின்றால் உன் சொத்து சகலமும் போய்விடுமா? என் விதியினை நான் இவ்வாறுதான் கடக்க வேண்டுமா? இதை அறிந்த பின்னரும் நான் சும்மா உட்கார்ந்து ஏமாறத்தான் வேண்டுமா? என்ற பொருள் கொண்ட ஒரு தெலுங்குப் பாடலைப் பாடினார். அது அந்த செல்வந்தரிடம் பெரிய மாற்றத்தினை உண்டாக்கியதுடன் பெரிய தொகையும் நன்கொடையாகக் கிடைத்தது. அவர்களது பிற்போக்கான மனப்பான்மையினைச் சுட்டிக்காட்டிய பின்னரே அவர் அதனை ஏற்றார். இவ்வாறு அவர் தனது தனித்தன்மை, சுயமரியாதை ஆகியவற்றில் சமரசம் செய்து கொள்ளாது கடைசி வரை வாழ்ந்தார்.
நூல் முழுவதும் சென்னையில் அந்நாளில் வாழ்ந்த பிரமுகர்கள், இசை வல்லுனர்கள், பல தரப்பட்ட மேதைகள், முக்கியமாக பதிப்பகங்கள், நீதிபதிகள் பற்றிய விவரங்கள் நிறைந்துள்ளன. ஆய்வு நோக்கிலும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் மட்டுமன்றி எளிய வாசகனுக்கும் அவை சுவையளிப்பவை.
சென்னை பாரிமுனைப் பகுதியில் இன்றுள்ள வீதிகளுக்கான பெயர்க் காரணங்கள், பல கட்டடங்களுக்கான பெயர்கள், (எடுத்துக்காட்டாக டேர் ஹவுஸ்) பற்றிய தரவுகளும் காணப்படுகின்றன.
ஒரு குறிப்பின்படி அவர் 26 வருடங்களில் சராசரியாக மாதத்திற்கு 3 கச்சேரிகள் நடத்தியதாகக் கூறுகிறது. சென்னையில் மட்டும் 849 நிகழ்ச்சிகள். (மொத்தம் 1235).
ஆயினும், தன் வாழ்நாளின் இறுதியில் திறமை பின்னுக்குத் தள்ளப்பட்டு, குழு மனப்பான்மை தலைதூக்கிய அவலத்தினை மனப்புழுக்கத்துடன் பார்த்து மனம் வருந்தினார். கலைஞர்களை விடுத்து பல தலையீடுகளுடன், குறுக்கீடுகளுடன் பலர் அங்கு இடம் பிடித்தனர். உன்னதமான தூய கலைக்கான அங்கீகாரமளிக்கும் முறை மெல்ல மெல்லத் தேய்ந்தது. அது நடைமுறை உலகில் தவிர்க்கவியலாததாக மாறிப் போனது. தனது குருவான தியாகராஜர் இந்த மலினங்களை, கூச்சல்களை, ஓசைகளை சகித்துக் கொள்வாரோ என்ற வினா அவரைத் துளைத்தெடுத்தது.
தான் ஈட்டிய பெரும் செல்வத்தினை அவர் தியாகராஜருக்கான ஒரு டிரஸ்ட்டினை உருவாக்கி அதற்கே சமர்ப்பித்தார். தன் இறுதிக்காலத்தினை ஒரு துறவார்ந்த மனநிலையில் அமைதியாகத் திருவையாறில் கழித்தார்.
தனக்கான தார்மீக உரிமையினைப் பெறவும், அதனை நிலைநிறுத்தவுமான போராட்டமானது அவர் வாழ்வு. யாருடைய துணையும் இன்றி போராடியும், பல தருணங்களில் தனது ஆழ்ந்த அறிவினாலும், கூர்மையான வாதங்களினாலும் வலிமையான ஆண்களுக்கு சமமாக அவர் தன்னை இருத்திக் கொண்டார். சில சமயங்களில் அவரது முயற்சிகள் வெற்றி பெறாது போனாலும் அது குறித்து அவர் வருந்தியதுமில்லை, சோர்வுற்றதுமில்லை. மாறாக அந்நிகழ்வுகள் அவருக்கு புதிய உந்துதலை அளித்தன. தன் கருத்தினை, நிலையினை மேலும் வலியுறுத்தி முன்னெடுத்துச் செல்லும் உறுதியினை அளித்தன.
அவ்வகையில் பெண்களுக்கு தக்கதொரு வழிகாட்டியாக அவரது வாழ்வு திகழ்வதை எவரும் மறுக்கவியலாது. பின்னாட்களில் புகழ் பெற்ற பல பெண் ஆளுமைகளுக்கு அவர் ஆதர்சமாகத் திகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. பெண்கள் மட்டுமல்லாது எல்லா வாசகர்களுக்கும் இந்த நூலினை வாசிப்பது மிக்க சுவாரஸ்யத்தினை மட்டுமல்லாது தங்களை முழுமையாக மேம்படுத்திக் கொள்ள ஏதுவாயிருக்கும் என்பதும் உறுதி
இசை உலகில் மட்டுமல்லாது பொது நிலையில் இரு பாலரும் சமம் என்ற நிலையினை எட்டிட தம் வாழ்நாள் முழுதும் உழைப்பதைக் கடமையாகக் கொண்டவர். ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்தாலும் அது குறித்த கழிவிரக்கம் அவரிடம் என்றுமே காணப்பட்டதில்லை. அதனைக் கருவியாய்க் கொண்டு மற்றவர் உதவியினை நாடாது, தனது பின்னணியை அறிவித்து பெருமிதம் கொண்டார்.
அவரது வாழ்வினை மூன்று கட்டங்களாகக் கொள்ளலாம். முதல் பகுதி சென்னை நகரில் நிலை பெறுதல், இரண்டாவதாக இலா தேவியமு என்ற ராதிகா ஸாந்தாவனமு காவியத்தினை பதிப்பிக்க நடத்திய போராட்டங்களும், திருவையாற்றில் அவரது முயற்சிகளும், அது தொடர்பான நிகழ்வுகளும்.
இறுதியாக, தனது குருவாக வரித்துக் கொண்ட தியாகராஜருக்கு ஆலயம் கட்டுதலும், அங்கு பெண் கலைஞர்களுக்கு அவர்களுக்குரிய நிலையினைப் பெற்றுத் தர அவர் மேற்கொண்ட முயற்சிகளும், அதில் அடைந்த வெற்றிகளும், தன் முதுமைப் பருவத்தினை அங்கேயே அமைதியாகக் கழித்து மரணமெய்துதலும் என்றாக அவரது வாழ்வு நிறைவுற்றது. இந்நூல் காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ளது.