அஷ்டமூர்த்தி மலையாள எழுத்துலகில் முக்கியமானவர். 1982ல் குங்குமம் விருது பெற்ற ‘ரிகர்சல்கேம்ப்‘ என்ற நாவல், 1992ல் கேரளா சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘வீடு விட்டுப் போகுன்னு‘, அபுதாபி சக்தி விருது பெற்ற ‘அவுசானத்து சில்பம்‘, கதாசாரம், லாபத்தா, பகல்வீடு, மரண சிஷை, கருவன்னூர்ப் புழையில் பாலம், அஷ்டமூர்த்தியோட கதைகள், ‘திரச்சுவரவு‘ என்ற நாவலோட அகலத்து பாம்பே அயலத்து மும்பை, எப்போலானு மகள் மடங்கி எத்துக, ஆயாள் கதை எழுதான் போகுகையானு, மாலாகமாரே மறையுயல்லே, ஆர்க்கு வேணும் எழுத்துக்காரன், கம்பி ராந்தலிண்ட வெளிச்சம், எல்லாவர்க்கும் பனியானு, நீர்மாதுளம் பாடிய காலம் ஆகிய கட்டுரைத் தொகுப்புகள், பிரவீன் குமாரோடு சேர்ந்து எழுதிய ஹரிதாவனம் என்ற கதைத் தொகுப்பு ஆகியவை அஷ்டமூர்த்தியின் முக்கியப் படைப்புகள்.
அந்த வரிசையில் அவரது கடைசிசிற்பம் என்ற இச்சிறுகதைத் தொகுப்பும் அபுதாபி சக்தி விருதைப் பெற்றிருக்கிறது. தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் அவை ஒவ்வொன்றும் நிஜ வாழ்வில் நிகழ்கிற அனுபவங்களை தரிசனங்களாக முன்வைக்கிறது. அஷ்டமூர்த்தியின் கதைகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் சிதம்பரம் இரவிச்சந்திரன்.
சிதம்பரம் இரவிச்சந்திரன் விழித்திறனற்ற மாற்றுத் திறனாளி. கதைகளை செவி வழி கேட்டு அதை வாய் மொழியே மொழி பெயர்த்தருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய சீரிய முயற்சி.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை இருக்கும். காலம் தோறும் அது வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த வகைமையைச் சேர்ந்ததுதான் ஜலசமாதி என்ற முதல் கதை. நள்ளிரவில் ஒரு இளம் பெண்ணும் அவள் தாயும் ஊருக்குள் பிரவேசிக்கிறார்கள். வந்தவர்களுக்கு அடைக்கலம் தருகிறான் செபி. செபி, ஊரின் நன்மைக்காக பாடுபடுபவன். தண்ணீரும் காற்றும் மனுஷனுக்கு இலவசமாக கிடைக்க வேண்டியவை என்ற எண்ணத்தில் திளைப்பவன். அதற்காக தண்ணீர் பந்தல் அமைத்து நடத்தி வருகிறான். அவனது செயல்பாடுகள் அடுத்தவனது தொழிலை பாதிக்கிறது. ஊருக்காக செபி செய்வது வேலையல்ல, வேறு வேலை என்று பேச்சு அடிபடுகிறது. அதற்கு ஏற்றாற்போல், அடுத்த ஊரிலிருந்து வந்த பெண்களைத் தேடி வரும் ஆட்களுடன் அவ்விரண்டு பெண்களும் போக மறுக்க, அவர்களை செபி தனது கிராமத்திலேயே இருக்கச் செய்கிறான். இந்த நிலையில் பிறகொரு நாள் ஆற்றில், செபியினுடைய பிணம் மிதக்கிறது…!!!
எப்போதும் ஆற்றில் குளிக்கும் செபி, கால் இடறி விழுந்திருப்பான் என்று எழும் பேச்சு, நீச்சல் நன்கு அறிந்த செபி எப்படி தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பான் என்று நீள்கிறது.
யாராலாவது கொல்லப்பட்டிருப்பான்? தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கும்? என்று மாறி மாறி உலவுகிறது பேச்சு. அந்த இளம் பெண்ணுடன் ஆரம்பம் முதலே செபிக்கு தொடர்பு இருந்திருக்கும், அதனால்தான் அன்று ராத்திரி அவர்களை அழைத்துப் போனான்…. என்று ஆளுக்கு ஆள் பேசிக் பேசி கதைகளாக நீள்கிறது. பிறகு செபியும் ஒரு கதையாக மாறிப்போனான் என்று முடிகிறது ஜலசமாதி கதை.
ஊராரின் நாக்கில் புரளும் கதைகள் ஒரு போதும் முடிவடைவதே இல்லை. மனிதர்களின் வாழ்வு எப்போதும் பலவாறாக மக்கள் நாவில் கதைகளாக உழன்று கொண்டே இருக்கிறது. உண்மையும் கற்பனையும் கலந்து யதார்த்தத்திலிருந்து விலகியும் நெருங்கியும் ஓடும் கதைகள் முடிவற்றவைகளாகவே இருந்து கொண்டிருக்கிறன.
கடைசி பாட்டு என்ற கதையில், மேடைக் கச்சேரியில் (கானமேளா) பிரபல பாடகி சரியாகப் பாடாமல் போக, புதுப் பாடகியாக கலாவதி என்ற பெண் பாடுகிறாள். அவள் குரல் வசீகரமாக இருக்கிறது. அதோடு அவள் ரசிகர்களின் ரசனை அறிந்து பாடுகிறாள். கச்சேரி களைகட்டுகிறது. ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் கச்சேரியிலிருந்து பாதியில் வெளியேறும் நாயகன், ரயில் வர தாமதமானதால் கச்சேரியில் பாடிய பெண் தன் தந்தையுடன் ரயில்நிலையம் வருவதைப் பார்க்கிறான். கச்சேரியில் ராஜகுமாரியாய் இருந்தவள் ரயில் நிலைய பெஞ்சில் சாதாரணமாய அமர்ந்து சாப்பிட்டு, தூங்குவதைக் காண்கிறான். விழா ஏற்பாட்டாளர்கள் அவர்களை சரியாய் கவனிக்காததால், அவர்கள் புறப்பட்டு வந்ததை அறிகிறான்.
பாட வேண்டும் என்ற ஆசை பெண்ணிற்கு அலாதியாக இருக்கிறது, கச்சேரிகளில் பாட்டுப் பாடி முன்னேற வேண்டும் என்ற ஆசைக்கு அதன் உள் நிறைந்திருக்கும் போட்டிகளும், பொறாமைகளும், அரசியல் சூழ்ச்சிகளும் அவள் குடும்பத்தினரிடம் எதிர்ப்பை வலுக்கச் செய்கிறது. ‘நாளை முதல் இவளை பாட அனுமதிக்கப்போவதில்லை‘ என்கிறார் அவள் அப்பா. ரயில் வர அங்கு கூடியிருந்த ஆட்கள் யாவரும் சற்று நேரத்திற்கு முன் அவள் பாட்டுக்கு மெய்மறந்து கைதட்டி, ஆடியவர்களாகவும் இருந்திருப்பவர்கள், இப்போது அவளை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள். After the chess game, the king and the pawn go into the same box என்ற இத்தாலிய பொன்மொழியை நினைவு படுத்தும் விதமாக இருக்கிறது கதை.
எல்லோருக்கும் எப்போதும் ஏதாவது ஒன்றை செய்வது பிடித்தமான பொழுது போக்கு. ‘கடைசிச் சிற்பம்‘ கதையில் வரும் அப்பாவும் ஏதாவது ஒரு உருவத்தை யானைத் தந்தத்திலோ, கொட்டாங்கச்சியிலோ செதுக்கிக் கொண்டே இருக்கிறார். கூடவே கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படும் பிளவும், அது பழைய சகாக்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பையும் கவனிக்கிறார். கட்சி ஆபீஸை புதுப்பித்து வாசக சாலை அமைத்து, அதற்கு ஒவ்வொரு சகாவும் பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்த பலா மரத்தை வெட்டி பலகைக்காக விற்கிறார்கள் பணம் தருகிறார்கள். வெட்டிய பலா மரத்தின் அடிவேரைப் பெயர்த்து திருப்பி போடச் சொல்லி, அதன் அடி வேரின் ஒரு பகுதியில் எதையோ செதுக்கத் துவங்குகிறார் அப்பா.
அவர்கள் ஊருக்கு வரும் இ.எம்.எஸ் (கேரளாவின் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்) அப்பாவையும் காண வருகிறார். அவரிடம் தான் செதுக்கிக் கொண்டிருக்கும் சிற்பத்தை குறிப்பிடுகிறார். செதுக்கி முடித்ததும் வந்து பார்க்கும் படியும் கேட்டுக் கொள்கிறார். மறு நாள் சிற்பத்தை முடிக்க வேண்டும் என்று எண்ணும் அப்பா அந்த பலா மரத்தைப் பார்த்தபடியே இறந்து போகிறார்.
கடைசி வரை அப்பா செதுக்க நினைத்து முயன்ற கடைசி சிற்பம் என்ன வடிவம் என்பது அறிந்து கொள்ள முடியாமலேயே போகிறது. சொல்லப்படாத அந்த வடிவமே வாசகனுக்குள் ஒரு அரூப வடிவத்தை கற்பனையாக விரியச் செய்கிறது.
பெருக்கெடுத்து ஓடுவதற்கு முன் காலம் சில அடையாளங்களை மிச்சம் வைத்துவிட்டுத்தான் போகிறது. அப்படி மிச்சப்படுபவைகளில் ஒன்று வீடு. சங்கரன் குட்டி நகரத்தில் வசித்தாலும் பிறந்த ஊரில் மூன்று மாடிகள் கொண்ட, நாலாயிரத்து முன்னூறு சதுரடியில் கட்டப்பட்ட தனது புது வீட்டை நண்பனுக்கு காட்டுகிறான். மிக பிரம்மாண்டமான வீடு. தனது ரிட்டயர்மெண்டுக்குப் பிறகு ஊருக்கு குடி வந்து அதில் தங்கப்போவதாகச் சொல்கிறான். அவனது பழைய வீடு அதே ஊரில் பாழடைந்து கிடக்கிறது. இப்போது பார்த்துப் பார்த்து கட்டிய புது வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்து வைக்க வேண்டும் என்று நண்பனை கேட்டுக் கொள்கிறான். எல்லோருடைய ஆசைகளும், கனவுகளும் சௌகர்யமான, விசாலமான, வசதியான வீட்டை நோக்கியதாகவே இருக்கிறது. பராமரிக்காத பழைய வீடுகள் அப்படியே நின்று விடுகிறது. செடிகளும், கொடிகளும் புதராக வளர்ந்து பாதையை மறைத்தபடி நிற்கின்றன. போக்கிடம் இல்லாத மனிதர்கள் மட்டும் அவற்றினூடாக நடமாடுகிறார்கள் என்பதாக சித்தரிக்கிறது சங்கரன் குட்டியுடைய வீடு சிறுகதை.
பணத்துடனான புழக்கத்தில் ஒவ்வொருவருக்கும் எப்போதாவது கைசேர்ந்திருக்கும் சில செல்லாத நோட்டுக்கள். பணத்தின் மதிப்பை விட பெரிதாய் கனக்கும் செல்லாத நோட்டு பற்றியும், அதனுடனான பயணத்தையும் விவரிக்கிறது செல்லாத நோட்டு கதை.
பஸ் கண்டக்டர் கொடுத்த செல்லாத ஐந்து ரூபாய் நோட்டை பழக்கடை, காய்கறிக்கடை, ஆட்டோ ரிக்க்ஷா என்று தள்ளிவிட முயன்று முடியாமல் போக, வீட்டு வேலையாளுக்கு தெரிந்தே தள்ளிவிட, பின் மனசாட்சி உறுத்த அதைத் திரும்ப வாங்கி, அதைக் கொடுத்த கண்டக்டரிடமே திருப்பித் தரும் போது ஒரு நிம்மதி பிறக்கிறது. கிழிஞ்சி போற பேப்பருக்கு அஞ்சு ரூபாய்னு யாரு நிச்சயிச்சுது? எல்லாம் ஒரு கற்பனை இல்லையா? ஆனாலும் இந்த ஒரு பேப்பருக்குத்தான் உலகம் சுத்திகிட்டு இருக்குது…! என்று கண்டக்டர் உதிர்க்கும் சொற்கள் அர்த்தம் நிறைந்ததாகவே இருக்கிறது.
ஊரில் மனிதர்களுக்கு அடுத்தபடியாய் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பது டீக்கடைகள்தான். சில செய்திகளுக்கு சாட்சிகளாக, சில செய்திகளுக்கு ஊற்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட டீக்கடைதான் சின்னண்ணனுடைய டீக்கடை. அதன் ஒருநாள் பொழுதிலிருந்து துவங்கி விரிகிறது கதை. டீக்கடைக்கே உரித்தான பதார்த்தங்களின் ருசி போல் இருக்கிறது சின்னண்ணன், வேலாயுதம், கண்டாரன் கதாபாத்திரங்கள். எந்த வேலையும் இல்லா விட்டாலும் ஊர் மக்களின் சந்திப்பு இடமாக மாறுகிறது டீக்கடை. கட்சிக்குள் நடக்கும் குழறுபடிகளும், அதனால் உண்டாகும் பழிவாங்கல்களுமாக நீள்கிறது கதை. மனதில் எழும் குற்ற உணர்ச்சிகளே அவர்களை வழிநடத்துகிறது என்பதை கண்டாரனுடைய கதாபாத்தரம் வழியாகச் சொல்லிச் செல்கிறது. கதை சுற்றிச் சுற்றி டீக்கடையை சுழன்று வருவதும் அர்த்தப்படுத்துவதாகவே இருக்கிறது.
தொகுப்பில் மேலும் இடம் பெற்றுள்ள சிறுகதைகளான ‘கிருஷ்ணப்பனுடைய பயணங்கள்‘, ‘ஒன்றேகால் நாழிகை நேரம்‘,‘சிஷ்ய தட்சணை‘ போன்ற கதைகள் தனித்தன்மையுடன் இருந்தாலும் மலையாள வாசனையை தலைப்பிலிருந்தே கிளப்புகிறது எந்தா டீச்சர் இவிடே என்ற மலையாள மூலம் அப்படியே இது என்ன டீச்சர் இங்கே? (பக் 110) என்று வருவதும், பஸ்க்குப் போகிற ஆள்கள் (பக்-90), அப்பா மரணம் அடைந்தது (பக்-43), ஆள்கள் கூடியிருந்தார்கள் (பக்-20) என்று வரும் தினை விகுதிகள் மட்டும் ஆங்காங்கே லேசாக இடறுகிறது. எப்படி இருந்த போதும் ஈ விவர்த்தனம் வளர நன்னாயிட்டுண்டு (இது பாராட்டப்படவேண்டிய மொழிபெயர்ப்பு) என்றே சொல்ல வைக்கிறது.