பாரதியின் இந்தக் கூற்று இந்திய நிலப்பிரபுத்துவ ஒழிப்பு இயக்கத்துக்கு முற்றிலும் பொருந்தும். நிலப்பிரபுத்துவ ஒழிப்பு என்பது வர்க்கங்களாக பிளவுண்டிருக்கும் இந்திய சமூகத்தில் விவசாய வர்க்கமும் முதலாளி வர்க்கமும் முன்னெடுத்த செயல்திட்டமாகும். இதில் முன்னது சமரசமற்று செயல்படும்போது பின்னது அவ்வப்போது சமரசம் செய்து ஊசலாட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு முனைகளுக்கும் நடுவில், அதாவது சமரசப்பாதை மற்றும் ஊசலாட்டப்பாதை இரண்டுக்கும் நடுவில் ஏராளமான அணிகள் செயல்பட்டு வருகின்றன. எனினும் யார் எந்தப் புள்ளியில் இருந்தாலும் அவரவர் வர்க்கத் தன்மையே இந்த விஷயத்தில் அவரவது செயல்பிடிப்பை உறுதிப்படுத்தும். கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடைபெற்ற நிலப்பிரத்துவ ஒழிப்பு இயக்கமும் காங்கிரஸ்காரர்கள் தலைமையில் நடைபெற்ற நிலப்பிரபுத்துவ ஒழிப்பு இயக்கமும் இந்த இரு முனைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. நிலப்பிரபுத்துவ ஒழிப்பு விஷயத்தில் பொதுவாக கம்யூனிஸ்ட்கள் தாங்கள் செய்த பணியை மட்டும் பேசுவார்கள். காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்ட்களை புறக்கணித்துவிட்டு குறிப்பாக அவர்களை வன்முறையாளர்கள் என்று கூறிவிட்டு சமூகத்தின் அவசியத் தேவையான நிலப்பிரபுத்துவ ஒழிப்பை தங்களின் பூதான இயக்கமே முன்னின்று நடத்தியது என்று கூறுவார்கள்.
வித்தியாசமாக ஒரு காங்கிரஸ் தம்பதியினரின் நிலப்பிரபுத்துவ ஒழிப்பு நடவடிக்கை பற்றிய புத்தகத்தை ஒரு கம்யூனிஸ்ட் எழுதியது நிச்சயமாக கம்யூனிஸ்ட்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. நரோலா என்ற புனைப்பெயரில் தோழர் மலர்விழி எழுதிய நிலமடந்தைக்கு என்ற சிறு நூல் தடாகம் பதிப்பகத்தாரால் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நூல் தொண்டு அன்னை கிருஷ்ணம்மாள் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக கூறுகிறது. கிருஷ்ணம்மாளின் வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை. அது தனது இருப்புக்காக ஒரு தனி மனுஷி நடத்திய போராட்டத்தின் வரலாறு அல்ல ஏழை எளிய மக்களின் நலனுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் வரலாறு. எண்பதாண்டுகால போராட்டத்தை 80 பக்கங்களில் சொல்வது அவ்வளவு எளிதல்ல. சரியான சமூகப் பார்வையில்லாமல் இப்படி நேர்த்தியாக நரோலாவால் எழுதியிருக்க முடியாது. தனது 92 வயதிலும் மற்றவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாளின் பயணம் ஒரு நெடிய பயணம். காங்கிரஸ் அமைப்பின் தொண்டரும் வசதி படைத்த டிவிஎஸ் அய்யங்காரின் புதல்வியும் சர்வோதய இயக்கத்தை சார்ந்தவருமான சௌந்திரம்மாளின் அரவணைப்பில் துவங்கிய கிருஷ்ணம்மாளின் பதின்பருவ போராட்ட வாழ்க்கை, அன்றைய மதுரை மாவட்டம், ராமாநாதபுரம் மாவட்டம், தஞ்சை மாவட்டம் என்று விரிந்து பீகார் மாநிலத்தில் பூமிகர்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றது வரை நீண்டு சென்று இன்று நாகை மாவட்டத்தில் தொண்டு என தொடர்கதையாகச் செல்கிறது.
நில விநியோகத்திற்காக காந்திய வழியில் நடத்திய சத்தியாகிரகப் போராட்டங்கள் எண்ணற்றவை. அவற்றில் சிலவற்றை மட்டுமே இந்நூல் பதிவு செய்திருக்கிறது. அவற்றை முழுமையாக தொகுத்து எழுத வேண்டுமானால், அவை இன்னும் பல நூறு பக்கங்களுக்கு விரிந்து செல்லும். அந்த முயற்சியை நரோலா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நரோலாவின் முயற்சி பாராட்டத்தக்கது. வாசிப்பு நடையும் எந்த நெருடலும் இல்லாமல் நகர்ந்து செல்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டிக்கு அருகில் உள்ள அய்யங்கோட்டை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த கிருஷ்ணம்மாள், ராமநாதபுரம் மாவட்டம் பாண்டிக்கண்மாய் அருகில் அமைந்த செங்கப்படை கிராமத்தில் முக்குலத்தோர் சமூகத்தில் பிறந்த ஜெகந்நாதன் இருவரும் அவர்களது இளம் வயதில் காந்தியத்தின் மீது ஈர்ப்பு கொண்டு அதை நோக்கி நகர்ந்து சென்ற வரலாற்றை இந்நூல் கூறுகிறது. அன்றைய காங்கிரஸ் அமைப்பின் அர்ப்பணிப்புத் தன்மையை இந்நூலைப் படிக்கும் வாசகனால் உணர முடியும். இவர்கள் இருவரும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டு சமூகப் பணிக்காக தங்களை முழுநேரமாக அர்ப்பணித்தவர்கள். சுதந்திரத்திற்குப் பின்பு அமைந்த முதலாளித்துவ அரசமைப்பில் நிலப்பிரபுத்துவம் இளைய பங்காளியாக சேர்ந்து காலச்சக்கரத்தால் நசுக்கப்பட்டு மாண்டுபோவதை தள்ளிப்போடும் வேலையை அரசமைப்பை பயன்படுத்தி செய்து கொண்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டதின் முக்கிய கோஷமான உழுபவனுக்கு நிலம் என்ற கோஷம் சுதந்திரத்திற்குப் பின்பு அமைந்த அரசால் கைகூடாமல் போனதன் விளைவாக அன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் வெகுண்டெழுந்த விவசாயிகள் பேரெழுச்சி நடைபெற்று வந்தது. ஒருபுறம், அந்த எழுச்சிப் பேரலையை வன்முறை கொண்டு அடக்க ஆளும் வர்க்கம் எத்தனித்தது மறுபுறமும் காந்தியம் தனது பூதான இயக்கத்தின் வாயிலாக எழுச்சிப் பேரலையை நீர்த்துப் போகச் முனைந்தது. எந்த வழியில் போனாலும் விவசாயிகளுக்கு நிலம் என்பது முழுமையாக நடைபெறாவிட்டாலும் உயிர்ச்சேதாரத்தை குறைத்து சிறு அளவிலாவது நடைபெற்றதற்கு சர்வோதய இயக்கம் ஆற்றிய பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
தமிழகத்தில் காங்கிரஸ் நடத்திய பூதான இயக்கத்தின் முன்னோடிகளாக கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியினர் செயல்பட்டனர். 1953-56 காலகட்டத்தில் நடைபெற்ற இந்த இயக்கம் 70000 ஏக்கர் விளை நிலத்தை நிலப்பிரபுக்களிடமிருந்தும் பெரும் பண்ணையார்களிடமிருந்து தானமாக பெற்று 50000 குடும்பங்களுக்கு விநியோகித்ததை இந்த நூல் பதிவு செய்கிறது. இதில் இந்த தம்பதியினரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. அன்றைய தினத்தில் தமிழகத்தில் இருந்த விவசாய நிலங்களான 2 கோடி ஏக்கரில் இது சிறியளவுதான். இவர்களின் சமூகப் பணி என்பது வெறும் நில விநியோகம் பூதான இயக்கம் என்ற மட்டோடு இல்லாமல், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் குரலாக இறுதி மூச்சுவரை செயல்பட்ட ஜெகந்நாதனும், 92 வயதானாலும் இன்னும் செய்து கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாளும் நடந்து வந்த பாதையில் குறிப்பிட வேண்டிய சில மைல் கற்களை இந்நூல் பதிவு செய்கிறது குடும்பப் பின்னணி காரணமாக ஆதரவற்ற குழந்தைகளுடன் படிப்பு அதன் பிறகு சௌந்திரம்மாளுடன் சமூக சேவைக்காக இணைதல் என்று இவரது ஆரம்ப வாழ்க்கை துவங்கியது. பெண்களின் முன்னேற்றத்திற்காக சௌந்திரம்மாள்-ராமச்சந்திரன் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட காந்திகிராம நிர்வாக பொறுப்பை கிருஷ்ணம்மாள் தன்னுடைய 22 வயதிலேயே மேற்கொண்டார். இது சுயேச்சையாக துவங்கி அவருடைய முதல் சமூகப்பணி. 1951ல் சர்வோதயா இயக்கம் துவக்கிய பூதான இயக்கம் தமிழகத்தில் 1953ல் செயல்படத் துவங்கியது மூன்றாண்டுகள் நடைபெற்ற இந்த இயக்கத்தில் இந்த இருவரின் பங்கு மகத்தானது. இந்த இயக்கத்தின் முன்முயற்சியால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வயலூர் கிராமமே பூதான இயக்கத்திற்கு தானமாக கொடுக்கப்பட்டது. அங்கே கூட்டுப்பண்ணை விவசாயத்தை நடைமுறைப்படுத்தியதில் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு கிராமத்திலும் வசதிபடைத்த பண்ணையார் சிறு விவசாயிகளிடம் கடுவட்டிக்கு கடன் கொடுத்து குறிப்பிட்ட காலத்தில் நிலத்தை எழுதி வாங்கிக் கொள்ளும் வழக்கம் அன்றைக்கும் தமிழகத்தில் இருந்தது. இதில் வத்தலக்குண்டு வட்டாரத்தில கோணியம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவத்தில் கிருஷ்ணம்மாள் தலையிட்டு விவசாயிகளுக்கு மீண்டும் நிலத்தை உரிமையாக்கிய நிகழ்ச்சியையும் இந்நூல் பதிவுசெய்கிறது. சாதிய சக்திகளால் 1957ம் ஆண்டு விசிறிவிடப்பட்ட முதுகுளத்தூர் கலவரத்தின் போது அமைதி நிலைநாட்ட சர்வோதயா இயக்கம் அங்கே களம் இறங்கியது அதன் களப்பணியாளர்களாக இந்த தம்பதியினர் செயல்பட்டனர். காமராஜர் ஆட்சி காலத்தில் பெண்கள் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை அரசு இயந்திரத்தை மட்டும் வைத்து செய்யாமல் தொண்டர்களை வைத்து அமல்படுத்த முயன்றது. இதில் வத்தலக்குண்டு வட்டாரத்தில் எட்டு பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டது இவற்றை திறம்பட நிர்வகிக்கும் பொறுப்பை கிருஷ்ணம்மாள் செய்து வந்தார். நில விநியோகமும் விவசாய உறவுகளையும் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள், குத்தகை விவசாயிகள், சிறு விவசாயிகள், கூலி விவசாயிகள், சாகுபடி நிலம், தரிசு நிலம் பாசன வசதி பெற்ற நிலம் வானம் பார்த்த பூமி என்று எத்தனையோ வகைப்பட்ட மனிதர்களுக்கும் நில வகையினங்களுக்கும் இடையிலான உறவுகளில் சுரண்டல் என்பது பிரிக்க முடியாதது. 1961ம் ஆண்டில் மதுரை மாவட்டத்தில் குத்தகை விவசாயிகளை நிலவெளியேற்றம் செய்ய பண்ணையார்கள் முயன்ற பொழுது சர்வோதய இயக்கத்தின் தலையீடு வலுவாக இருந்தது. இதில் கிருஷ்ணம்மாளின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதே போல் காவல்துறையினரும் பண்ணையார்கள் தூண்டுதல் பேரில் நலிவடைந்தவர்களை துன்புறுத்தும் வழக்கத்தை இன்றும் காண்கிறோம். அய்யங்கோட்டை கிராமத்தில் இதுபோன்று நடைபெற்ற சம்பவத்தில் இவரின் தலையீடு காரணமாக துன்புறுத்தல் நிறுத்தப்பட்டது.
தானமாக நிலத்தைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்கும் இயக்கம் நிறைவு பெற்ற பின், அதாவது அதன் எல்லையைத் தொட்டபின், விவசாயிகளுக்கு நிலத்தைப் பெற்றுத்தர நிலத்தை விற்பவர்களிடமிருந்துதான் செய்ய வேண்டும். இந்தப் பணியையும் சர்வோதயா இயக்கம் செய்தது அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்தான் அசோபா (Association for Sarva Seva Forum) மேயர் டிரஸ்ட், லாஃப்டி (Land for Tillers Freedom) போன்றவை. இவற்றின் மூலம் தனவந்தர்களிடம் நிதி திரட்டி குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி நிலமில்லாத ஏழைகளுக்கு விநியோகிப்பது. இந்தப் பணியையையும் முன்னின்று செய்தவர் கிருஷ்ணம்மாள். 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரத்தைப் போல் தஞ்சை மாவட்டம் வெண்மணி கிராமத்தில் 1968ம் ஆண்டு டிசம்பர் 25ந்தேதி கூலி உயர்வு கேட்ட தாழ்த்தப்பட்ட விவசாயிகளை குடிசையில் அடைத்து வைத்து எரியூட்டப்பட்ட நிகழ்ச்சி. இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 44 பேர் கருகி மாண்டனர். இந்நிகழ்ச்சி நடைபெற்ற மறுதினமே கிருஷ்ணம்மாள் அங்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்ட சர்வோதயா தொண்டர் படையில் இணைந்தார். நிலஉச்சவரம்புச் சட்டம் என்ற சட்டம் வந்தபின் நிலப்பிரபுக்கள் தங்கள் நிலங்களை அறக்கட்டளைகாக மாற்றியும் பினாமிகள் பெயரில் எழுதி வைத்தும் செயல்பட்டு வந்தனர். இவர்களில் ஒருவர் தஞ்சை மாவட்டம் வலிவலம் தேசிகர். இவர் ஏழு கிராமங்களுக்கு சொந்தக்காரர். இவரை எதிர்த்து செங்கொடி இயக்கம் வீறுகொண்ட போராட்டங்கள் நடத்தி வந்த பொழுது, 1972-75 காலத்தில் இவர் எழுதி வைத்த நிலத்தின் பினாமிகளை அடையாளம் கண்டு அவர்கள்தான் சட்டபூர்வ உரிமையாளர்கள் என்று வாதிட்டு அந்த நிலங்களை அவர்களுக்கு பெற்றுத்தரும் வேலையில் கிருஷ்ணம்மாள் இறங்கினார். பீகார் மாநில நிலப்பிரபுரக்களுடன் ஒப்பிடுகையில் தமிழக நிலப்பிரபுக்களை ஜீவகாருண்யவாதிகள் எனலாம்.
அவசர நிலைக்காலத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினர் அங்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்த தம்பதியினர் இறுதியாக மேற்கொண்ட போராட்டம் இறால் பண்ணை எதிர்ப்பு இயக்கமாகும். இவர்கள் சத்தியாகிரக போராட்டம் நடத்திக் கொண்டே சட்ட வழிப் போராட்டத்தையும் நடத்தினர். விளைநிலங்களை பாழ் செய்யும் இறால் பண்ணைகளின் தங்குதடையற்ற ஓட்டத்திற்கு மூக்கணாங்கயிறு இட்டவர்கள் இவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். அரசு அவ்வப்போது அறிவிக்கும் பட்டா வழங்கும் ஆணைகள் மூலமாக ஏழைகளுக்கு நிலம்பெற்றுத் தருவது அவர்களுக்கு கல்வீடுகள் கட்டித்தர அரசு திட்டங்களை பயன்படுத்துவது போன்றவைகளில் இவர்கள் அரசு அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் அலைந்து இத்திட்டங்களின் பயன் ஓரளவுக்கு ஒரு சிறு பகுதியினருக்குப் போய்ச் சேருவதில் இவர்களின் உழைப்பு மகத்தானது. அனைத்துப் பகுதி மக்களின் நலனுக்காகவும் ஒவ்வொரு பிரிவினரின் கோரிக்கைகளை உள்ளடக்கி துவக்கப்பட்ட இயக்கம் காங்கிரஸ் இயக்கம்.
அதிகாரத்திற்கு வந்தபின் வலுவானர்களுக்கான ஆட்சியமைப்பாக மாறிய நிலையில் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த சிரத்தையான ஊழியர்கள் திசை தெரியாது தவித்தனர். அவர்கள் கட்சியையும் அது நடத்தும் ஆட்சியையும் நிர்ப்பந்திக்க வழியில்லாமல் போயிற்று. சுயேட்சையாக அவர்கள் சமூக நலத் தொண்டுப் பணிகளில் ஈடுபடலாயினர். எனினும் இவர்களின் பணி மட்டுமே நிரந்தரத் தீர்வுக்கு வழிகோலாது. ஒரு புரட்சிகரமான மாற்றமில்லாமல் தொண்டுகள் மூலம் மட்டும் மாற்றம் சாத்தியப்படாது. அவர்களில் ஒருவராக கிருஷ்ணம்மாள் திகழ்ந்தார். எந்தவித அரசு சலுகையையும் எதிர்பார்க்காமல் தொண்டே வாழ்க்கை என்று வாழ்ந்து வருபவர். இது போன்றவர்கள் அனலடிக்கும் நமது சமூகத்தின் பாலைவனச் சோலைகளாக திகழ்பவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இப்பணியைச் செய்த நரோலாவின் உழைப்பு பாராட்டத்தக்கது.