மதம் ஓர் அபினி என்றார் லெனின் Poppy is ALSO A FLOWER எனும் அரிய திரைப்படமும் அதன் புத்தக வாசிப்பும் சிலிர்க்க வைத்த அனுபவம். அந்த பாப்பி என்னும் அழகிய மலர், பயங்கர போதையை போதையில் உசுப்பி விடப்படும் உணர்ச்சி வயப்படலை அடுத்து பல்வேறு நாச காரியங்களுக்கு கிரியா ஊக்கியான போதைப் பொருளைக் கொண்ட ஆப்கானிஸ்தான மண்ணில் விளைந்த செடியில் பூப்பதாகும். மனிதர்கள் வெறி கொள்ளும் மதத்தைப் போல, இக்கட்டுரையை எழுதும் சமயம் நாம் எவ்விதமான சூழலில் எத்தகைய மன இறுக்கத்தில் ஒவ்வொரு நாளையும் கடக்கிறோம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெறியும், வேற்றுமையும் போரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் தாங்கவொண்ணா செயற்கைப் பஞ்சமும், மனிதனுக்கு மனிதன் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை ஏற்படுத்திக் கொள்ளும் அழிவுக்கான முக்கிய காரணங்களில் தலையாயது மதம் தான் என்பதில் வேறொரு கருத்து இருக்காது.
மதத்துக்கு மதம், ஒரே மத நம்பிக்கைக்குள் உட்பிரிவுகளுள் இணக்கம் கூடி, காட்டி அமைதியாக வாழ்ந்து வந்த பொழுதுகளின் நிலை நிரந்தரமாயிருந்ததல்ல. நீரு பூத்த நெருப்பாகவே இருந்து வந்திருக்கிறது. பட்டியல், எடுத்துக்காட்டு அவசியமில்லை. அவதூதர்களும், ஞானிகளும் அவ்வப்போது தோன்றி இணக்கம் ஏற்பட நிலைக்க வலுக்கவும் ஆவன மேற்கொண்ட வரலாற்றிலும் கூர்ந்து பார்த்தோமானால் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு சார்பு உணர்வை ஏற்படுத்தக்கூடியதாகவும்படுகிறது. எனவே அவர்களின் முயற்சிகளிலும் குறுக்கீடும் இடையூறும் எதிர்ப்பும் நிகழ்ந்திருக்கின்றன.
மதங்களிடையே தீவிர நோக்கிலான இடைவெளியைக் குறைத்தும் நீக்க முயற்சித்தும் உலகில் அமைதியும் மக்கள் நல்வாழ்வும் கருதி மறை மெஞ்ஞானிகள் அவ்வப்போது தோன்றி ஆவன மேற்கொண்டு வாழ்ந்து போயிருக்கிறார்கள். பலன் ஒன்றும் நிரந்தரமானதாயில்லை, ஒரு வித ஆன்ம ஒத்தடங்கள் என்றே கொள்ளத் தோன்றுகிறது. அந்த வழியில் இஸ்லாமிய சமய உட்பிரிவுகளில் ஒன்றாக பொருள் கொள்ளும் ‘‘சூஃபியிஸம்’’ தன் பங்கிற்கு பல சூஃபிகளை காட்டிச் சென்றிருக்கிறது. சூஃபிகளுக்கு நல்லடக்கமும் பின்னர் அவர்களை நினைவு கொண்டு தொழுது வரும் தர்காக்களும் நிறைய இருக்கின்றன. தர்கா வழிபாட்டை நம்பிக்கையை, சூஃபிகளையெல்லாம் ஆச்சார இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்றும் தெரிய வருகிறது. தமிழகத்தில் குணங்குடி மஸ்தான், கர்னாடகத்தில் சாந்த சிசுநாள் ஷரீஃபசாஹிப் பரு ஆகியோரின் சூஃபிகர பாடல்களில் மிகவும் பூடகம் மிக்க குறியீடுகளாலான கருத்துக்களில் குறிப்பிட்ட மதம் என்று கூறாமல் ஒரு மறை மெஞ்ஞான போதகம் மிளிர்கிறது.
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகளை விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகளை வாசித்தவர்கள் இத்தருணத்தில் நினைவு கொள்ளுவார்கள். சூஃபிஸம் குறித்து விவேகானந்தர் சிகாகோ உரையாற்றலின்போது, ‘‘சூஃபிஸம் என்பது வேதாந்தத்தால் மென்மைபடுத்தப்பட்ட, அழகுபடுத்தப்பட்ட இஸ்லாம் சமயமாகும், என்கிறார். ஆனால் அவர் எந்த குறிப்பிட்ட சமய உட்பிரிவின் பிரதிநிதியாகவும் கலந்து கொள்ளாமல் சர்வ வேதங்கள் கூறும் அனைத்துலக சமயத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு மானுடம் முழுவதின் சமயப் பேரார்வத்தைப் பற்றி பேசினார். ஆனால் அனைத்துலக சமயவாதம் என்பது சிகாகோவில் வரவேற்கப்படாததோடு விவேகானந்தரை இந்து சமயவாதியாகவே பார்க்க நேரிட்ட தவிர்க்க இயலாத ‘‘தன் ஒரு மதம் பேணும் வெறி’’ என்பது வெளிப்பட்டது.
சமயம் சார்ந்த விஷயமே கத்தி முனை மீது நடப்பதாகும். சாமர்செட்மாம் கூட இவ்வுணர்வுகள் மின்னலிட்ட தம் நாவலுக்கு, RAZORS EDGE’’ என்று பெயரிட்டார். சாமர் செட்மாமே மனவமைதி தேடி, இந்தியாவுக்கு வந்து வடக்கு, கிழக்கு, மேற்கெல்லாம் அலைந்து திரிந்துவிட்டு இறுதியாக திருவண்ணாமலைக்கு வந்து ஆசிரமத்தில் தங்கியிருந்து அங்கும் மனநிறைவு கிட்டாதவராய் கேரளாவுக்குச் சென்று சில மாதங்கள் வாழ்ந்தபோது தமக்கு மனவமைதி கிடைத்ததாயும் அந்த அனுபவங்களைக் கொண்டு எழுதியதே ரேஸர்ஸ் எட்ஜ், நாவல் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த கத்தி முனையின் மேல் நடக்கும் சங்கதிகளை சார்பு இன்றி நன்கு எழுதப்பட்ட ஒரு நூல், IN GOOD FAITH, A JOURNEY INSEARCH OF AN UNKNOW INDIA, என்பது எழுதியவர் திருமதி சபா நக்வி (SABA NAQVI) இது, திரு முடவன் குட்டி முகம்மது அலியின் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பில், வாழும் நல்லிணக்கம், அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம் என்ற தலைப்பில் சிறந்த முறையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய அரசியல்-சமூக சூழ்நிலையில் மதச் சகிப்புத்தன்மை என்பது உலகளாவிய அளவிலும் இந்திய உபகண்டத்திலும் பெருமளவுக்கு கீழிறங்கிப் போய் அபாயகரமான விளிம்பை எட்டி விடும்படிக்கு தாழ்ந்திருக்கிறது. இந்த மனநிலையில் திருமதி சபா நக்வி இந்தியாவின் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் பயணித்து நகரங்களிலும் கிராமங்களிலும் அலைந்து திரிந்து அந்த மதச் சகிப்புத் தன்மையும் மதநல்லிணக்கமும் எப்படியெல்லாம் ஜீவித்து வருகிறதென்பதை அனுபவபூர்வமாக கண்டு எழுதியிருக்கும் கட்டுரைகள் கொண்ட நூல்.
பெரும்பாலும் அவர் பார்த்தது, அறிந்தது, கேட்டது பிறகு சொல்லுவது யாவும் சூஃபிஸம்-சூஃபிகள் பற்றியதாகவே இருக்கிறது. அனுபவார்த்த பார்வையில் சொன்னால் இந்து சமயத்தைச் சேர்ந்த அதுவும் பாமர மக்கள் அதிகளவு பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் ஞானிகளின் அடக்கத்தலமான தர்காக்களுக்கும் போய்ப் பார்த்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வைத்து, சர்க்கரை ஊதுபத்தி அளித்து காணிக்கையும் செலுத்துகின்றனர். பிறமதத்தினர் பகீதியிலீடுபட்டு இந்து சமய கோயில்களுக்கு வருகை தருவதென்பது அபூர்வம். சுற்றுலா என்ற கணக்கில் பயணிக்கையில் வரலாற்று புகழ்மிக்க தொல் பொருளாய்வுத் துறையினர் வசமுள்ள பழங் கோயில்களைச் சுற்றிப் பார்க்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், அரசின் இந்து அற நிலைய கட்டுப்பாட்டு துறையே, புகழ்பெற்ற பாரம்பரியமான கோயில்களில் கருவறையின் வாசலிலேயே, ‘‘இந்துக்கள் அல்லாத பிற சமயத்தினருக்கு அனுமதி இல்லை’’ என்ற அறிவிப்பை வைத்திருக்கிறது. பயங்கரவாதமும் நாசவேலையும் அதிகரிக்கவும் இப்படியான தடை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களிலும் தர்காக்களிலும் பிற மதத்தினருக்கு யாருக்குமே எங்கும் இவ்வித தடை ஏதுமில்லை. இந்த நிலையில் இந்த நூலின் செய்திகள் ஒத்துப் போகின்றன. நிலைமைகளையும் நிலவரங்களையும் ஏராளமாக எடுத்துச் சொல்லிக் கொண்டே போகிற நூல், மேற்கொண்டு மத நல்லிணக்கத்துக்கான யோசனைகள் எதையும் முன் வைக்கவில்லை. யோசனைகள் முரண்படலாம். பிரச்சனைகளை புதியதாகக் கிளப்பலாம். எனவே எச்சரிக்கையோடு தவிர்க்கப்பட்டிருக்கலாம்
இன்றுவரை இந்திய தேசம் முழுவதும் பயணித்து பார்த்து அனுபவ ரீதியாக சபா நக்வி தம் நூலில் சொல்லியிருக்கும் அளவில் நடைமுறையில் இருந்தே வருகிறது. இன்னொரு பக்கம் மத ரீதியான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் செய்திகளாக வந்தபடியே இருக்கின்றன. நந்தவனத்தாண்டி குயவனை வேண்டிக் கொணர்ந்த மண்தோண்டியைப் போட்டுடைத்த கதை. சபா நக்வியின் பார்வையில் இன்னும்-இன்றும் வாழ்ந்துவரும் நல்லிணக்கத்துக்கான சமய அந்நியோன்யம் நிலைத்து வாழ்ந்தால்தான் மேற்கொண்டு பல்வேறு நல்லிணக்க நடைமுறைக்கு உந்துசக்தியாக விளங்கும். அவரது அயராத நீண்டு பரந்த பயணங்கள் சமய நல்லிணக்கம் இன்றும் இந்திய கிராமங்களிலும் பல்வேறு திசைகளிலுள்ள பாமர மூலை முக்குகளிலும் வாழ்ந்து வருகிறதை நல்லடக்க சமாதி வழிபாடு, திருவிழாக்கள், பூசனைகள் வாயிலாக தெரிவிக்கிறார். கடைசியில் நூலின் முத்தாய்ப்பாக இந்தி சினிமாவில் உள்ள முஸ்லீம்களின் பட்டியல் விவரத்தை ‘‘பாலிவுட்டில் முஸ்லீம்கள்’’ என்று ஓர் தேவையற்ற அநாவசிய அத்தியாயத்தை இணைத்திருப்பது நூலின் சமத்துவ நோக்கில் பிசிறு தட்டுகிறது. தவிர்க்கப்பட வேண்டியது.
சபா நக்வி இந்தியாவின் முன்னணி வாரச் செய்தி இதழான அவுட் லுக்’’கில் அரசியல் தொடர்பான செய்திகளின் பதிப்பாசிரியர். அரசியல், ஆட்சி, நடப்பு விவகாரம் ஆகியவை குறித்து எழுதி வருபவர். இந்தியா முழுக்க விரிவான அளவில் பயணம் மேற்கொண்டவர். நாட்டின் தேர்தல்கள் குறித்து குறிப்பாக உத்திரபிரதேசம், பீகார், குஜராத் மாநில தேர்தல்கள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். அரசியல் நிருபராக ஆய்வாளராக மட்டுமல்லாமல் அடையாளம், பண்பாடு குறித்த பிரச்சினைகளையும் தொடர்ந்து கவனித்து வருபவர்.
கடையநல்லூரைப் பிறப்பிடமாய்க் கொண்டு பெங்களூரில் 41 ஆண்டுகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுக்குப் பின்னர் தம் சொந்த ஊரில் வசிக்கும் முடவன்குட்டி முகம்மது அலி,
முடவன் குட்டி என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை முயற்சியும் செய்து வருபவர். திண்ணை, சமரசம்
ஆகிய பத்திரிகைகளில் அவை வெளிவந்துள்ள நிலையில் வாழும் நல்லிணக்கம் அவரது சிறந்த
மொழி பெயர்ப்பு நூல்.