திரைப்படக் கலைஞராக அறிமுகமாகியுள்ள செனகல் நாட்டின் செம்பேன் உஸ்மான், சிறந்த இலக்கியவாதி என்பதை இச்சிறுகதைத் தொகுதி உணர்த்துகிறது. தமிழ்ச் சூழலுக்கு எதைத் தமிழாக்கித் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்னும் பிரக்ஞையுடன் இத்தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு புதிய மொழி பெயர்ப்பாளர் கிடைத்துள்ளார்.
சென்பேன் உஸ்மான் (1923-2007) பிரெஞ்சு கற்பித்த ஆசிரியர் அடித்ததற்காக பதிலுக்கு தாக்கிவிட்டு பள்ளியிலிருந்து வெளியேறியவர். பின்னர் பிரெஞ்சு மொழியில் தன் சிறு கதைகள், நாவல்களை எழுதினார். God’s bits of wood என்பது இவரது தலைசிறந்த நாவல். எமிலிஜோலாவின் Germinal போன்றது எனப் பாராட்டப்படுவது Xala இவரது முக்கிய திரைப்படம்.
முழுமையான அறிவு ஜீவி மற்றும் அசாதாரண பண்பாட்டு மனிதாயவாதி… சீரிய சமூக விமர்சகராக, ஆப்பிரிக்கா மீதான மாற்று அறிவை உலகுக்கு வழங்கியவர் எனச் செம்பேனைப் பாராட்டுகிறார் தென்னாப்பிரிக்க கலை-பண்பாட்டுத்துறை அமைச்சர் பல்லோ ஜோர்டான்.
வோலோஃப் என்னும் தாய்மொழியுடன் கொஞ்சம் அரபியும் சரிவர பிரெஞ்சும் அறிந்திருந்தவர் செம்பேன். இரண்டாம் உலகப் போரின்போது, பிரெஞ்சு குடியுரிமை பெற்று ராணுவப் பணியாற்றினார். 1947இல் நாடு திரும்பி ரயில்வேப் போராட்டத்தில் பங்காற்றினார். திரும்பவும் பிரான்ஸுக்குத் தப்பிச் சென்று தொழிற்சங்க ஈடுபாடு, கம்யூனிஸ்ட் கட்சிப்பணி என்றிருந்தவர். இரவுப் பாடசாலை வகுப்புகள் இவரை ஆற்றல் மிக்கவராக்கின.
1960 இல் செனகல் பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்றதும் தாயகம் திரும்பி, தன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இன்னும் மேலதிகமான மக்களுக்கு கலை, இலக்கியம் சென்று சேர வேண்டும் என்று, மாஸ்கோவில்திரைப்பட நுணுக்கப் பயிற்சி பெற்றார். நடிகராக இயக்குனராக, தயாரிப்பாளராக திரைத்துறையில் பெரும் பங்காற்றினார்.
12 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பு பிரெஞ்சு வழி ஆங்கிலத்திலிருந்து கூர்மையாக செய்யப்பட்டுள்ளது. பேச்சு வழக்கு வருமிடங்கள் தமிழின் பொதுபேச்சு வழக்கில் தரப்பட்டிருப்பது சிறப்பாக உள்ளது.
‘போலிமீட்பர்’ கதையில் உழைக்காமல் வாழ்ந்திட வேண்டும் என நினைக்கும் முகமதுஃபால், மசூதியில் இமாமாகிறான். பணம் சேர்க்கிறான். சேர்த்ததை வைத்து ரகசியமாக வாழ உத்தேசித்து அங்கிருந்து வெளியேறுகிறான். பணத்தைப் புதைத்து வைக்கிறான். தொழுகை செய்யாமலேயே உறங்கிக் கிடப்பவன் அலறியடித்து எழுகையில், தலை மழிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். தோண்டிப் பார்த்தால் மயிர்கற்றை வருகிறது.
‘என் தலை மழிக்கப்படுவதைக் கூட இறைவன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்’ என்று கோபத்துடன் இனித் தொழுகை செய்வதில்லை என பைத்தியமாய் ஓடுகிறான். ‘ஒரு திருடனாக இருப்பதற்கு அல்லாவிடம் நம்பிக்கை வைப்பது அவசியமில்லை’ என்றுணர்கிறான்.
பிலாவாக (பாங்கோசை சொல்பவன்) உள்ள சுலைமான், நான்காவதாக ஒருத்தியை மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்னும் உத்தேசத்துடன், 3 மனைவியரையும் இம்சித்து வருகிறான். மீனவக் குடும்பத்தினைச் சேர்ந்த 20 வயது யாசினை மனைவியாக்குகின்றனர். 3 வருடத்தில் குழந்தை பிறந்த பிறகு, யாசினை அவன் அதிகம் நெருங்குவதில்லை, ரகசியத் தொடர்பு ஏற்படுத்தி இரண்டாவது பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள் யாசின்.
பிறந்த குழந்தைக்கு மார்க்க விழிப்புணர்வேற்ற வேண்டும் என்கின்றனர் ஊரார். தனக்குப் பிறக்காத குழந்தைக்கு தான் செய்யப் போவதில்லை என்கிறான் சுலைமான் விவாகரத்து கோரினால் பரிசுப் பணம், பொருட்களையெல்லாம் சுலைமானுக்குத் திருப்பித் தர வேண்டும். இதனால் ஒன்றும் கூறாமலேயே எல்லாப் பொருட்களுடன் பிறந்தகம் சென்றுவிடுகிறாள். ஊரார் விசாரிக்கையில், ‘‘நான் மணவிலக்கு கேட்கவில்லை.
இரண்டாவது, அவனோடெல்லாம் இனிமேல் என்னால் வாழ முடியாது. மூன்றாவது, அவனுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியது என்று ஒன்றுமேயில்லை, இந்தக் குழந்தைகூட அவனுடையது இல்லை’’ என அடித்துச் சொல்லிவிடுகிறாள்.‘தாய்’ என்னும் கதையில் கொடுங்கோலனான ஒரு மன்னன், தன் நாட்டில் 50 வயதுக்கு மேலுள்ள ஆண்களை எல்லாம் கொன்று தீர்க்கிறான். தன் மஞ்சத்திற்கு வராத யுவதிகளே இருக்கக்கூடாது எனப் பெண் பித்துடன் அலைகிறான். அப்படிப் பலியாகும் மகள் ஒருத்தியின் தாய் மட்டும் மன்னனை எதிர்த்துப் பேசுகிறாள், நிந்திக்கிறாள், சபிக்கிறாள். மன்னன் அவளையும் அடித்து வீழ்த்துவதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத மக்கள், கலகம் செய்கின்றனர், மன்னன் கொல்லப்படுகிறான்.
கடித வடிவில் ஒரு கதை ‘பிரான்ஸிலிருந்து கடிதங்கள்’ பால்யகாலச் சிநேகிதிக்கு புலம் பெயர்ந்து பிரான்ஸில் வாழும் பெண்ணொருத்தி எழுதும் கடிதங்களாக உள்ளது. பிரான்ஸில் ஆனந்தமாக வாழலாம் எனக் கனவுகளுடன் வரும் பெண், சரிவர வேலை செய்யாமல் சம்பாதிக்காமல் திரியும் கணவனால் ஏமாற்றப்படுகிறாள். திக்கற்று நிற்கும் கண்ணியமிழந்து நிற்கும் தன் துன்பங்களை துயரங்களை அக்கடிதங்களில் எழுதிக் கொண்டே இருக்கிறாள். உறவுக்காரர்கள் இருந்தும் வெறுமைக்குள் புழுங்கிக் கிடக்கிறாள்.
‘சாய்பா எனும் அல்ஜீரியன்’ கதையில் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின்போது, பிரான்ஸின் மார்ஸே துறைமுகத்தில் சுமைதூக்கியாக வேலைபார்க்கும் நலிவுற்ற தொழிலாளி விவரிக்கப்படுகிறான். ஏதோவொரு விவகாரத்தில் நாடு கடத்தப்படுவதற்காக முகாமில் அடைக்கப்படுகிறான். தப்பிச் செல்ல முற்படுகையில் சுட்டுக் கொல்லப்படுகிறான். ஆதிக்கவாதிகளை வெறுத்தவன் அவன். மனைவி மக்களை நேசித்து வாழ்ந்திருந்தவன் அந்த அல்ஜீரியன்.
‘‘தனது சந்ததிகளுக்கு தன்மானத்தையும் மரியாதையையும் அது போன்றதொரு புரட்சிகர வாழ்வு மட்டுமே பெற்றுத் தரும் என்பதை உண்மையில் நம்பியவன்.’’ஆக, காலனியாதிக்கம், புலம் பெயர்தல் காரணமாக ஆண்களின் வாழ்வு சிதைக்கப்படுவது இக்கதைகளில் காணப்படுகிறது. மதம் போன்ற காரணங்களினால் இந்த ஆண்களின் ஒடுக்குமுறையால் அல்லல்படும் பெண்களின் துயரம் இக்கதைகளில் பதிவாகியுள்ளது. எதிர்ப்புக் குரலும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படவே, செனகலில் பலதார மணத்தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அறிய முடிகிறது.
‘தன் வாழ்நாள் முழுமைக்கும் உழைக்கும் மக்களோடு மக்களாக பெண்ணொடுக்குமுறை, மத அடிப்படைவாதம், நவகாலனியம் போன்றவற்றிற்கு எதிராக சமரசமில்லாமல் நின்ற’ செம்பேன் உஸ்மானின் இச்சிறுகதைகள், ஆப்பிரிக்காவின் கொந்தளிப்பான காலகட்டத்தையும் கடுமையாக எதி்ர்வினையாற்றிய மக்களையும் நம் முன் வைக்கின்றன.
சிறப்பாக மொழி பெயர்த்துள்ள லிங்கராஜா வெங்கடேஷ் வெளியிட்டுள்ள கலப்பை பதிப்பகத்தினரும் பாராட்டுக்குரியவர்கள்.
