அமெரிக்கக் கறுப்பின மக்களின் மகத்தான தலைவர்களில் ஒருவரான ரோஸா பார்க்ஸ் அவர்களைப்பற்றிய எளிய, உணர்ச்சிகரமான அறிமுகமாக இச்சிறுநூல் அமைந்துள்ளது.’ வெள்ளை அகம்பாவத்தின் காலடியில் சிக்கிச் சிதைந்து கொண்டிருந்த’ கறுப்பின மக்களின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றின் பகுதியாக மாறிவிட்ட தோழர் ரோஸா பார்க்ஸின் வாழ்வின் சில கொந்தளிப்பான பக்கங்களை நாம் இந்நூலில் வாசிக்கிறோம்.
எங்களைப்போன்ற பல எழுத்தாளர்களை எளிய மக்களின் மூச்சுக்காற்று எம் மீது படும் அளவுக்கு மக்களிடம் நெருக்கமாக அழைத்துச் சென்றவர் பேராசிரியர் ச.மாடசாமி.அவருக்கு எல்லாநிலைகளிலும் துணை நின்றதுடன், தனக்கெனச் சொந்த முகமும் சொந்தக் கால்களும் கொண்டு எங்கள் கண் முன்னால் எழுந்து நிற்பவர் அவரது இணையர் தோழர் லைலாதேவி.இவர்கள் இருவரும் இணைந்து வழங்கியிருக்கும் இந்நூல் எளிமையின் அழகைச் சூடி நிற்பதில் ஆச்சரியமில்லை.
இன்றைய இந்திய வாழ்வு சுமந்து கொண்டிருக்கும் சாதிய மதவாத அழுக்கு மூட்டைகளைப் போலவே அமெரிக்க சமூகம் இனவெறி மூட்டையைச் சுமந்தபடிதான் வரலாற்றின் படிக்கட்டுகளில் ஏறி வந்துகொண்டிருக்கிறது.1863இல் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த காலத்திலேயே அடிமை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டாலும் அமெரிக்க சிவில் சமூகம் இன்னும் அதை இறக்கித் தூர எறிந்துவிடவில்லை.அதன் ஒரு விளைவுதான் ட்ரம்ப்பின் வெற்ற
இளமைப்பருவத்தில் தந்தை குடும்பத்தை விட்டகல, தாயின் அரவணைப்பில், இன ஒதுக்கல் கொடுமைகளுக்கு ஊடாக நடந்து வந்த அவரது வாழ்க்கையை வாசிக்க மனம் நெகிழ்கிறது.1955இல் அமெரிக்க நாட்டை உலுக்கிய பஸ் இருக்கைக்கான போராட்டத்தின் விதையாக ரோஸா திகழ்ந்திருக்கிறார்.மென்மையான மனுஷியான அவரது உள்ளம் விடுதலைக்கான போராட்டத்தில் உருக்குப்போன்ற உறுதியுடன் நின்றதை இந்நூல் விரித்துச் சொல்கிறது.
பஸ் போராட்டம்தான் இந்நூலின் மையப்புள்ளியாக இருந்து,ஒரு மர்மக்கதையின் சுவாரஸ்யத்துடன் நம்மை உடன் அழைத்துச் செல்கிறது.அவர்கள் வெற்றி பெற்ற தருணம் விவரிக்கப்படும்போது நம்மையறியாமல் கண்களில் நீர் துளிர்க்கிறது.
கல்விமுறைக்குள் மாறுதலுக்காகத் தன்னளவில் பல அரிய சோதனை முயற்சிகளைச் செய்துவரும் தோழர் மாடசாமி, இயல்பாகவே ரோஸாவின் பால்யகாலத்தில் கற்பதற்காக அவர் பட்ட இன்னல்களையும் பள்ளிகளுக்குள் நிலவிய இன ஒதுக்கல் நடைமுறைகளையும் வலி மிகுந்த சொற்களால் சித்தரித்துள்ளார்.
சட்டப்போராட்டம் நடத்தி, பரீட்சை எழுதித் தன் 32-ஆவது வயதில் வாக்குரிமை பெற்ற ரோஸா வாக்குரிமை வயதான 21 ஆவது வயதிலிருந்து 11 ஆண்டுகளுக்குக் கணக்கிட்டு 11 ஆண்டுகளுக்கான வாக்குரிமை வரி கட்டித்தான் வாக்களித்தார் என்கிற செய்தியை வாசித்தபோது அடப்பாவிகளா என்றது மனம். அமெரிக்க நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த கதைகள் அப்படியே இன்றைய நம் நீதிகளுக்கும் தீர்ப்புகளுக்கும் பொருந்துகின்றன.மக்கள் தெருக்களில் அணி திரண்டு நிற்காமல் நல்ல தீர்ப்புகள் வராது என்பதுதான் ரோஸாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்.
மார்ட்டின் ஊதர் கிங்கின் வாழ்க்கையின் சில துளிகள் ரோஸாவின் வாழ்வுடன் இணைந்தே இந்நூலில் வருவது குறிப்பிடத்தக்கது.
கறுப்பர்களுக்குத் தனிப்பள்ளி,வெள்ளையர்களுக்குத் தனிப்பள்ளி என இருந்ததை மாற்ற நடந்த போராட்டம் 1954இல் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பால் முடிவுக்கு வருகிறது.எல்லோருக்கும் ஒரே பொதுப்பள்ளி என்றானபின் பொதுப்பள்ளிக்கு வரும் கறுப்பினக்குழந்தைகளை வெள்ளைக்குழந்தைகள்,குறிப்பாக ஆரம்பப்பள்ளிக்குழந்தைகள் ஆரத்தழுவி வரவேற்கிறார்கள்.என்ன ஒரு காட்சி.கற்பனையில் பார்க்கவே நம் கண்கள் கலங்குகின்ற காட்சி.
வெள்ளை அகம்பாவம் துப்பாக்கி எடுக்கும்.இந்தியாவின் சனாதன அகம்பாவம் அவமதித்து அவமதித்துத் தற்கொலைக்குத் தள்ளும் என இருவரும் நூலை முடிக்கிறார்கள
ரோஸா விரும்பியதுபோல எல்லோரும் அன்பு கொண்டு, இசைவுடன் வாழும் ஓர் உலகமே என்றென்றும் நம் கனவாக இருக்கிறது.
உலகெங்கும் வாழும் விடுதலையை விரும்பும் மக்களின் உள்ளங்களிலெல்லாம் ரோஸா வாழ்கிறார்.அவ்வாழ்வை நமக்கும் உயிர்த்துடிப்புடன் கடத்தியுள்ள மா.லைலா தேவி -ச.மாடசாமி தம்பதிகளுக்கு நன்றியும் வாழ்த்தும்.
