உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களும் (கல்விச்சாலைகள் அல்ல), கல்வியறிவு பெற்றோர் விழுக்காடும், தொழில்நுட்ப வளர்ச்சியும் உச்சத்தினை எட்டிவிட்டதாக மார்தட்டிப் பெருமிதம் கொண்டிருக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் பொருளற்ற சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் நிறைந்திருக்கின்ற அவலத்தினை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். 18ஆம் நூற்றாண்டின் சமூகச்சூழலில் அவை எவ்வாறு இருந்திருக்கும், அவற்றை உபதேசித்தவர்களும், பின்பற்றியிருப்போரும் எத்தகைய மனநிலையில் இருந்திருக்கக்கூடும் என்பது குறித்து விளக்கிடத் தேவையில்லை.
அவ்வாறான ஓர் இருண்ட காலத்தில் இவற்றினைப் பேசிய, வலியுறுத்திய பலருக்கும் நாமளித்த இடமும், அவர்கள் அடைந்த அவமானங்களும், அனுபவங்களும் துவர்ப்பு மிக்கவை. ஆண்களுக்கே இவ்வாறான நிகழ்வுகளெனில் இருட்டறையில் தன்னைச் சுருக்கிக் கொண்டு கேட்கப்பட்ட வினாவிற்கு மாத்திரம் கதவின் பின் நின்றவாறு விடையளித்து வாழ்ந்திருந்த பெண்களின் நிலையினை நாம் நிச்சயம் கற்பனை செய்யவியலும்.
இத்தகைய காலகட்டத்தில் பெண் ஒருவர் ஒர் இதழினைத் தொடங்கி வெளியிடுவது அரிய நிகழ்வாகிறது. அதனினும் சிறப்பு, அதன் மூலம் பொருளீட்டும் நோக்கத்தினைத் தவிர்த்து அவ்விதழில் பெண் விடுதலை, அவர்களுக்கான உரிமை, சமத்துவம், இளவயது திருமணம், விதவைகளுக்கான மறுமணம், பெண்களுக்கு அரசியல் அறிவு போன்ற கூறுகளை வலியுறுத்தி கட்டுரைகள் வெளியிட்டு பெண்களிடையே விழிப்புணர்வினை உண்டாக்கிட அதனை ஒரு காரணியாக்கி, மாதஇதழ் நடத்திய முதல் பெண் இதழாசிரியரான சகோதரி பாலம்மாள் எனும் பெண்மணி குறித்தே இக்கட்டுரை பேசுகிறது.
கோ.ரகுபதி அவர்கள், பாலம்மாள் முதல் பெண் இதழாசிரியர் என்ற தலைப்பிட்டு இவர் குறித்த இப்புத்தகத்தினை தொகுத்தளித்து தமிழ் வாசகர்கள் பார்வைக்கு தந்துள்ளார். பாலம்மாள் தமிழ், கன்னடம் மற்றும் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். பெண் கல்வி இதழில் 1911ல் வெளியான ஒரு கட்டுரையே இவரது தொடக்ககால எழுத்தாகவும். முதல் எழுத்தாகவும் அறியப்படுகிறது. அதுவன்றி அவரது படைப்புகள் 1917ல் மைசூர் மாகாணத்திலும் (கர்நாடகா), 1918ல் சென்னை, வங்காள மாகாணங்களிலும் அரசின் பாட நூற்குழுவினரால் பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தன என்றும் ரகுபதி தெரிவிக்கிறார்.
மேலும், பாலம்மாள் மொழியாக்கப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இந்தியக் கைத்தொழில் விசாரணை சங்கத்தின் அறிக்கையில் மதன்மோகன் மாளவியா எழுதிய குறிப்பினை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பொதுச்சேவைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹீமின் மரபுரையை – ராஜசேவையும் இந்தியரும் – என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
மேற்கண்ட புத்தகத்திற்கு இந்து நாளிதழின் எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார் முன்னுரை எழுதியுள்ளார். இப்புத்தகம் வெளியாகியுள்ள நிலையில், ஆங்கிலம் படிக்காத எளிய கிராம மக்களை .இனி வீணான மிரட்டல்களுக்கு உள்ளாக்க முடியாது என திராவிடன் இதழ் விமர்சனம் எழுதியது. (நாள். நவ.7 – 1917). மேலும், சகோதரி பாலம்மாளின் படைப்புகளுக்கு அந்நாளைய ஆளுமைகள் பலர் அணிந்துரை அளித்துப் பாராட்டியுள்ளனர்.
அதன் பின்னர், 1924ஆம் ஆண்டு சிந்தாமணி என்ற பெயரில் இவரது முதல் இதழ் வெளியானது. 1928வரை இது வெளியானதற்கான தரவுகளை ரகுபதி பதிவாக்கியுள்ளார். மேலும், இந்த மாத இதழானது எப்போது நிறுத்தப்பட்டது என்பதற்கான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் பதிவிடுகிறார். பாலம்மாளின் இந்த மாத இதழுக்கு பொருளியில் ரீதியில் இலாபமடைந்திருக்க வாய்ப்புகள் மிகக்குறைவாகவே இருந்திருக்க இயலும் என்பது அவர் தனது பல கடிதங்கள் வாயிலாக வாசகர்களை, குறிப்பாக பெண்களை இப்பத்திரிக்கையை (இதழ்) வாங்கிப் படித்திட வேண்டுகோள் விடுத்திருப்பதன் மூலம் உணரலாம்.
இதழுக்கு ஆண்டுச் சந்தாவாக ரு 5.00 என அவர் விலை நிர்ணயம் செய்துள்ளார். எண்ணற்ற கடிதங்களின் மூலம் சந்தா அளித்து ஊக்கப்படுத்துமாறும், வி.பி.பி முறையில் அனுப்பி வைக்கப்பட்ட இதழ்களை தயவுசெய்து திருப்பி அனுப்பி நட்டத்தை உண்டாக்க வேண்டாமென்றும் அவர் வாசகர்களுக்கு எழுதுகிறார். ஏறத்தாழ நான்கு தலைப்புகளில் பாலம்மாள் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதை நாம் காணமுடிகிறது. பெண் விடுதலை, அரசியல், திருமணம், ஆரோக்கியம் இவை அவரது கட்டுரைகளின் தலைப்பாக இருந்துள்ளது.
பெண் அரசியல் என்னும் தலைப்பிட்டு அவர் எழுதியுள்ள கட்டுரையில் தாய்மொழி வாயிலாகக் கல்வியறிவு பெறவேண்டியதன் முக்கியத்துவத்தினை உணர்த்தியுள்ளார். அவரது சில வாக்கியங்கள் நூலில் உள்ளவாறே வாசகர்களுக்கு கீழே தரப்பட்டுள்ளன. கட்டாய இலவசக் கல்வி பரவி வரும் இச்சமயத்தில் பெண் கல்வியும், பெண் மக்கட்குரிய படிப்பும் பரவ வேண்டுமாயின், பெண் சமூகம் முழுவதும் பொதுவாகக் கல்வியறிவைப் பெற வேண்டுமாயின் தேசபாஷையை நன்கு போதித்தாலே பெரும் பயனளிக்கும் என்பதை கல்வி இலாகா அதிகாரிகளும், பெற்றோர்களும், ஜனப்பிரதி நிதிகளும் கணிசித்து (ஊகித்து) தக்க சிரத்தை எடுத்தல் முக்கியம். சிறுமியர் தமதிளம் வயதில் தமது தாய்மொழியைப் பயில்வாராயினும் கூச்சமற்றுப் பயிலக்கூடிய பன்னிரண்டு வயதிற்குள் நல்ல தேர்ச்சியடைந்து விடுவர். பிறகு தமக்குத் தேவையான கலைகளை இத்தாய் மொழியிலுள்ள கிரதங்கள் மூலமாகவே நன்கறிந்து கொள்ளவும் இடமுண்டு. ஆதலின் ஆடவர் தமது கல்விப் பயிற்சியில் எவ்வித அபிப்ராயம் கொள்ளினும், பெண் மக்களுக்குத் தேசபாஷை (தாய்மொழி) முக்கியமென்பதை யுணரவேண்டுமென்பதே நமது வேண்டுகோள்…
இது போன்ற பல கருத்துகளை பாலம்மாள் மேற்கூறப்பட்டுள்ள தலைப்புகளில் தொடர்ச்சியாக எழுதியும், வலியுறுத்தியும் உள்ளதைத் தொகுத்து ரகுபதி அளித்துள்ளார்.
01..05.1928 அன்று சைகோன் (வியட்நாம்) நகரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பாலம்மாள் பங்கு பெற்றார். அப்போது அவரது சேவைகளைப் பாராட்டி அவருக்குப் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பெற்றது. அதில், – எங்களுக்கு இனிமையான மொழிகளைக் கூறி வழிநடத்தி, அரிய போதனைகளை அளித்து, ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்திய உங்களுக்கு இதய மெய்யன்புடன் உபசரிக்கும் சைகோன் வாசிகளான உங்கள் சகோதரிகள் அளிக்கும் பாராட்டுப் பத்திரம் – என அது நிறைவு பெறுகிறது. .
அக்காலகட்டத்தில் வெளியாகிக் கொண்டிருந்த தாய்நாடு, குடியரசு, ஜஸ்டிஸ், பொதுஜனமித்திரன், தாரூல் இஸ்லாம் உள்ளிட்ட பல இதழ்கள் சகோதரி பாலம்மாளின் நிலைப்பாட்டினை வெகுவாக ஆதரித்தன. இது அவரது சிந்தனைகளின் மேன்மையினையும், பெண்களுக்கான நடைமுறை அறிவினைப் பெற, அவர்களுக்கான உரிமைகளை அடைய தேவையான விழிப்புணர்வினை அவர் கொண்டிருந்த உள்ளார்ந்த ஈடுபாட்டினையும் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
தொகுப்பாசிரியரான ரகுபதி, பாலம்மாள் அவர்களின் இரண்டு சிறுகதைகளையும் இப்புத்தகத்தின் பிற்பகுதியில் இணைத்துள்ளார். இப்படைப்புகள் பாலம்மாளின் உள்ளார்ந்த எண்ணங்களையும் அவரது சித்தாந்தங்களையும் வெளிப்படுத்துவதைக் காணலாம்.
பாலம்மாள் தனது தேசசேவை -சிறுகதையில் அவரது அரசியல் நிலைப்பாட்டினை தெளிவாக்குகிறார். உழைக்கும் தொழிலாளர்களின்றி முதலாளிகளுக்கு எவ்விதமாக பொருள் சேரும்? .அவர்களின் கடின உடல் உழைப்பல்லவா பெரும் செல்வமாக உருப்பெற்றுள்ளதென, உழைக்கும் வர்க்கத்தினரின் பெருமையினை உயர்த்துகிறார். இதனை முதலாளிகள் உணர்ந்து தொழிலாளர்களை அன்புடனும், பொறுப்புடனும் ஆதரிக்க வெண்டும் எனவும் பொருள் படைத்தோர்க்கு அவர் உணர்த்துவதையும் அவ்வரிகளில் காணலாம்.
அதே சிறுகதையில், ஒரு செல்வந்தரின் மகனை தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஒரு கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வீட்டிலுள்ள பெண்களை கவனிக்காதவர்கள் எவ்விதம் தாழ்ந்த வகுப்பினர் முன்னேற்றம் குறித்து சிந்திப்பார்கள்? போன்ற பல வினாக்களை எழுப்புகிறார். இக்கேள்விகளின் வழி அவர் ஆண்களையும் பெண் விடுதலை, முன்னேற்றம் ஆகியவற்றிற்கு போராட வேண்டும் என்ற கருதுகோளினையும் முன்வைக்கிறார்.
பெண்கள் முன்னேற்றம் என்பதற்கான அளவுகோல்கள் எவை? என்னும் வினாவும் அவரது முக்கியமான கருத்துகளில் ஒன்றாகிறது. பெண்களுக்கான மாற்றம், முன்னேற்றமென்பது கல்வியினாலேயே சாத்தியப்படும் என்பதும் அவரது உறுதியான கருத்தாகிறது. கல்வியைக் கடந்த வாசிப்பும் மிக அத்தியாவசியமானது என்றும் அவர் தனது கட்டுரைகளில் தொடர்ந்து பெண்களை வலியுறுத்தி வந்தார்.
பெண்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தாங்களே தேடிக்கொள்வது குறித்தும், சாதி, வர்க்க வேறுபாடுகளைக் கடந்த மணஉறவினையும் இப்படைப்பில் அவர் வலியுறுத்துவதும் கவனம் கொள்ளத்தக்கது.
இவ்வாறாக, எழுத்தாளர், கட்டுரையாளர், சீர்திருத்த சிந்தனையாளர், முதல் பெண் இதழாசிரியர், சொந்த இதழின் வாயிலாக சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாக மணவாழ்வினைத் துறந்து உழைத்திட்ட பன்முகம் கொண்ட பெண்மணியான சகோதரி பாலம்மாள் அவர்களை தமிழ் இலக்கிய தளத்தில் முதலாக தனது படைப்பின் மூலம் கோ..ரகுபதி அறிமுகம் செய்கிறார்
கோ.ரகுபதி அவர்கள் பல நடைமுறை இன்னல்களுக்கிடையே தரவுகளைத் திரட்டியுள்ளது அல்லாமல் இதழ் நடத்தப்பட்ட காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த மொழி நடையிலேயே அதில் வெளியான கட்டுரைகள், கதைகளை வாசகனுக்கு அளித்துள்ளார். இது இப்போதுள்ள வாசகர்களுக்கு சற்று அயர்ச்சியைத் தரும். இருப்பினும், சமகால சொற்களில், மொழியில் உண்டாகியுள்ள மாற்றங்களையும் நாம் ஒப்பீடு செய்து பார்த்திட நல்லதொரு வாய்ப்பினை உண்டாக்கித் தருவதனையும் நாம் உணரமுடிகிறது. மேலும், இவ்விதழின் ஒளியச்சு நகல்களையும் (ஜெராக்ஸ்) தொகுப்பாசிரியர் இந்நூலில் இணைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கோ.ரகுபதி வரலாற்றுத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சாதி குறித்த ஆய்வுகளில் ஈடுபாடுடையவர். இரட்டைமலை சீனிவாசனின் மதநிலைப்பாடு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தற்போது விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிகிறார்.
தமிழகத்தின் முதல் பெண் இதழாசிரியர் என்ற பெருமையினைப் பெற்றுள்ள சகோதரி பாலம்மாள் குறித்த இப்படைப்பினை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய கோ.ரகுபதியின் படைப்பினை நாம் வரவேற்று இந்த நூலினை வாசித்தலே ஒரு படைப்பாளிக்கு அளித்திடும் சிறப்பு மட்டுமன்றி, அவருக்கு .உவப்பானதாகவும் அமையும்.
பெண் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் குறித்த படைப்புகள் பரவலாக வெளியிடப்படவில்லை என்ற குறையினை இந்நூலானது போக்கும் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு தடாகம் பதிப்பகம் தனது வரிசை நூல்கள் வாயிலாக இதனை பதிப்பித்து வெளியிட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது மட்டுமன்றி போற்றத்தக்கதுமாகும்.