பாரதி பாலன் முதன்மையாக ஒரு தமிழ்ப் பேராசிரியரும் கூடுதலாக ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளியும் ஆவார். தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் படைப்புத் துறையிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்த செய்திதான். ஆனால் அவர்கள் படைத்த இலக்கியங்களில் வாழ்க்கையின் அனுபவ சாரம் இறங்கியிராமல், வெறும் கதைகள் என்ற அளவில் நின்று போனவை அதிகம்! படைப்பின் மொழியையும் கற்பித்தலின் மொழியையும் தனித்தனியாகப் பிரித்துக் கையாள ஒரு தனிப்பட்ட திறன் தேவை. அந்தத் திறம் பாரதிபாலனிடம் இருப்பதை நான் அவருடைய படைப்புக்களின் வாயிலாக அறிந்திருக்கிறேன். நானறிந்த வரையில் அவரது படைப்புக்கள் அனுபவச் செறிவும் கலைத்தன்மையும் கொண்டவை; அனுபவங்களில் கிடந்து உழன்று, திரண்டு வந்தவை அவருடைய எழுத்துக்கள் என்பது எனது எண்ணம்.
பாரதி பாலன் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இசை நகரம் என்ற நூல். இசை நகரம் என்ற நூலில் காந்தியச் சிந்தனைகள், இன்றைய உயர் கல்வியின் அவல நிலை, சென்னை என்ற பெருநகரத்தின் வரலாறு, செயற்கை அறிவுகளின் அதீத வளர்ச்சி, சுற்றுப் புறச் சூழல் சீர்கேடுகள் என்று இன்றைய வாழ்வியல் தேவைகளைப் பேசும் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நூலின் நடை மிகவும் எளிமையானது. ஆனால் அதுபேசும் பொருண்மைகள் கனமானவை, புள்ளி விவரங்களை அளவுக்கு அதிகமாக அடுக்கிக் கட்டிப் பயமுறுத்தாமல் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் ஆழ்ந்த ஆய்வுப்பார்வைகொண்டவை இவை. இசை நகரம் என்ற கட்டுரையின் தலைப்பே இந்த நூலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் தலைப்பைப் படித்தவுடன் இதை ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்று நினைக்கத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
யுனெஸ்கோ அமைப்பு சென்னையை இசை நகரம் என்று அறிவித்ததைக் குறித்து இக்கட்டுரை அமைகிறது. சென்னையில் கடந்த நுற்றாண்டுகளில் நடந்த இசைப் போட்டிகள், பிரபலமான வித்துவான்களின் செயல்கள், அவர்களின் பெருந்தன்மை மிக்க செயல்கள், இசைக் கலையை ஆதரித்து வளர்த்த செல்வர்கள், சபாக்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய தகவல்கள் செறிவாகக் கூறப்பட்டுள்ளன. அறியப்படாத சென்னைநகரின் இசை முகத்தை நமக்கு மீட்டிக்காட்டியுள்ளார் பாரதிபாலன், இக்கட்டுரை உண்மையிலேயே ஒரு தகவல் களஞ்சியம் தான். அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் என்ற கட்டுரை மனத்தில் பல்வேறு எண்ணங்களைத் தூண்டுகிறது; பாரதிபாலனின் ஆழ்ந்த சமூக அக்கறையைக் காட்டுகிறது. பட்டப்பேற்றிற்காக வழங்கப்பெறுகின்ற ஆய்வேடுகள் பேக்கேஜ் முறையில் தயாரிக்கப்படும் இன்றய அவலம் குறித்து எல்லோருக்கும் தெரிந்தாலும் அதைப் பற்றி எவரும் வெளிப்படையாகப் பேசமுடியாத நிலை இன்றுள்ளது.
அண்மையில் நூற்றுக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் மென்பொருள்கள் மூலமாகப் பரிசோதிக்கப்பட்டுத் தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததானது இன்றைய ஆய்வு அறத்திற்கு (?) ஒரு சான்று! ஆய்வு மேற்பார்வையாளர்கள் தங்கள் ஆய்வுகள் குறித்துக் கல்வி நிலைய ஆண்டறிக்கைகளில் குறிப்பிடுவதற்காகவாவது சில கட்டுரைகள் எழுதித் தீர வேண்டும்; ஆனால் இப்போது அதற்கும் அவுட் சோர்சிங் கட்டுரை எழுத்தாளர்கள் வந்து விட்ட பின்னர் இனி என்ன கவலை? என்ற நிலைதான் இப்போது! இந்த லட்சணத்தில் உயர் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்துவதாகச் சூளுரைகள்! இந்தப் பொதுவான சூழ்நிலைக்கு மாற்றாக விதிவிலக்கான சிறந்த தரமான ஆய்வுகளும் வெளிவருவதை மறுக்க முடியாது.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற இந்த அவல நிலை குறித்து பாரதிபாலன் தகுந்த சமீபத்திய புள்ளிவிவரங்களுடன் எழுதியுள்ள கட்டுரை நமது சிந்தனையைத் தூண்டுகிறது. உலகம் முழுவதும் தமிழ் கல்வியைப் பரவச் செய்ய சில உருப்படியான ஆலோசனைகளை பாரதி பாலன் கூறுகிறார். உயர் கல்வி விஷயங்களில் முடிவெடுக்கும் தருணங்களில் மூத்த கல்வியாளர்களின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும்; அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத்தான் கொண்டுவர வேண்டும் . எல்லா விஷயங்களையும் நிர்வாக, அதிகார மட்டங்களிலேயே முடிவெடுத்துவிட முடியும் என்று தோன்றவில்லை
ஆளுக்கொரு நூலகம் என்பது மிகமுக்கியமான கட்டுரை ! அதைச்சொன்னவிதமும் சிறப்பு, நாம் இந்த உலகத்தை நூல்களின் மூலமாகவே பார்க்கிறோம் என்பது மிகச் சரியான கூற்று . நூலகத்திற்குப் போகும் வழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது நல்லதுதான்; ஆனால் அதற்கு முன்னர் ஆசிரியர்கள், துறைத்தலைவர்கள் போன்றவர்களுக்கு நூலகம் செல்லும் வழக்கம் ஏற்பட்ட வேண்டுமே? நான் ஆய்வு மாணவனாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது பல்கலைக்கழகத் துறைத் தலைவர்கள், ஏன்? சில சமயங்களில் துணை வேந்தரையே நூலகத்தில் புத்தக அலமாரிகளுக்கு நடுவில் பார்த்து ஒதுங்கிப் போயிருக்கிறேன் . இன்று அந்த நிலை உண்டா? உலகின் முதல் நூலகம், சென்னையின் முதல் நூலகம், இந்தியாவின் முதல் நூலகம் என்றவாறு பல வரலாற்றுப்பதிவுகளையும் பாரதிபாலன் தந்து செல்வது புதுமையாக உள்ளது. இன்று அறுபதுகளில் உள்ளவர்களுக்கு மலரும் நினைவுகளைத் தூண்டும் கட்டுரை.
இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றிலேயே மிக முக்கியமான கட்டுரையைப் பற்றிப் பேச வேண்டும். தேசத்தின் ஆசிரியர் என்ற அந்தக் கட்டுரை காந்தியடிகளின் கல்விக்கொள்கையைப்
பற்றி நீண்ட உரையாடலை நிகழ்த்துகிறது. இதனை மீண்டும் மீண்டும் பேச வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஒரு நாட்டின் கல்வி முறை அந்நாட்டின் புவியியல் அமைப்பு, பண்பாட்டு மரபு, மக்களின் முதன்மைத் தொழில், மக்களின் மனநிலைகள், பின்பற்றப்படும் விழுமியங்கள், முக்கியமாக உற்பத்தி உறவுகள் ஆகியனவற்றை ஒட்டி அமைய வேண்டும். ஆனால் இந்தியாவில் புகுத்தப்பட்ட கல்விமுறை முற்றிலும் அந்நியமானது; அடிமைகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைந்தது. இந்தப் பயனற்ற கல்விமுறையின் கொடும் விளைவுகள் இன்று நம் கண் முன்னே தாண்டவமாடுகின்றன;
ஆசிரியரைக் கத்தியைக் காட்டி மிரட்டுவது,பட்டக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டுவது போன்றவை சில உதாரணங்கள்! காந்தியடிகள், அனுபவமே கல்வியைத் தரும்; பாடப் புத்தகங்கள் தகவல்களைத் தான் தரும் என்று கூறியதைப் பாரதி பாலன் முன்வைத்துப் பேசுவது கவனப்படுத்தவேண்டியவை. இன்றைய பாடப் புத்தகங்களில் மாணவர்களுக்கு அனுபவத்தைத் தரும் களப்பணிக் கூறுகள் இல்லை என்பதைக் காணும் போது காந்தியடிகளின் கூற்று எத்தனை நிதரிசனமானது என்பதை உணர முடிகிறது. பண்ணைகளில் வரிசையாக வைக்கப்பட்டு உணவும் தண்ணீரும் கொடுத்து வளர்க்கப்படும் கோழிகளைப் போன்று மாணவர்கள் வளர்க்கப் படுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. ஓர் உழவனின் மகன் படித்து முடித்துத் திரும்பும்போது விவசாயத்தின் மீது கசப்புடன் வருவது ஏன்? கல்விமுறை அவனை அவனது வேர்களிலிருந்து பிடுங்கிவிட்டது என்பதுதான் பொருள்.
நான் எழுபதுகளில் முதுகலை இலக்கியம் படித்து முடித்ததும் வேலை தேடி நகரத்தில் சுற்றித் திரியவில்லை; நேராகக் கிராமத்திற்குச் சென்று விவசாயத்தில் தீவிரமாக இறங்கினேன். இது எனது அனுபவம்; இதற்குக் காரணம் என் வேர் எதுவென்பதை நான் தெரிந்து வைத்திருந்தேன். இன்றைய கல்வி முறையை காந்தியடிகள் எதிர்த்தார். இதை பாரதிபாலன் ஒரு கட்டுரையில் மிகச் சிறப்பாக விவரித்துக் கூறுகிறார். பெண் கல்வி விதையும் விழுதும் என்ற கட்டுரையில்,பெண்கள் கல்விபெறுவதில் இருந்த சிக்கல்களையும் அதை அடைவதற்கான போராட்டங்களையும் அதற்காகத் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவர்களையும் கல்வியினால் முன்னேற்றமடைந்த பெண் ஆளுமைகளையும் முன்வைத்துத்தரும் செய்திகள் சிறந்த ஆவணம்.
மாணவர்கள் நினைக்கப்படல் வேண்டும் என்ற கட்டுரையில், மாணவர் சமுதாயத்தில் இன்று வளர்ந்து வரும் வன்முறை எண்ணங்கள் பற்றிய கவலைகளையும் சிந்திக்கவேண்டியவைகளையும் குறித்து விரிவாகக் கூறுகிறார், சென்னை மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி போன்ற வரலாற்றுச்சிறப்பும் தொன்மையும் கொண்ட கல்லூரிகள் உலகப் புகழ்மிக்கபல ஆளுமைகளை உருவாக்கித்தந்தவைகள், அப்படியான வரலாறு இன்று அங்கு பயிலும் மாணவர்களின் மனப்போக்கால் வேறு ஒரு வரலாற்றினைக் கட்டிஎழுப்பக்கூடிய அவலத்துக்கு உள்ளாகியிருப்பதனை முன்வைத்து பாரதிபாலன் எழுப்பும் கேள்விகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
சென்னையின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் ஆகியவற்றைப்பற்றி வரலாற்றுத் தகவல்களின் அடைப்படையில் பேசும் கட்டுரை, இது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனது இளமைக் காலத் தோற்றம் பற்றி அறியக் கூடிய ஆர்வம் கிளைத்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் இன்றைய அரசியல், நிர்வாக, ராஜதந்திர நடவடிக்கைகளின் ஆடுகளமாக இருக்கும் சென்னை, புதிய மனிதர்களை மருட்டும் சென்னையைப் பற்றி அறிய ஆர்வம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். சென்னை தோன்றிய போது அது ஒரு சிறிய கிராமம் தான் அது தன்னோடு சேர்ந்த பல கிராமங்களை இணைத்துக்கொண்டு இன்றுள்ள பெரு நகர நிலையைஅடைந்த வரலாற்றினை விவரித்துச்செல்கிறது. இந்தக்கட்டுரையில் பாரதிபாலன் காட்டும் அறியப்படாத சென்னை நமக்கு பல ஆச்சரியங்களைத் தருகிறது.
அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிக்கூடம், அரசுப் பேருந்து ஆகிய அரசு சார்ந்த நிறுவனங்கள் எவ்வளவுதான் சிறந்த சேவைகளை இலவசமாகவும் குறைந்த செலவிலும் வழங்கிய போதிலும் மக்கள் அவற்றுக்கு இரண்டாம், மூன்றாம் இடத்தையே தரும் வழக்கம் இருந்து வருவது கண்கூடாகக் காணும் காட்சி. அதே நிலைதான் தொலைநிலைக் கல்விக்கும்! லட்சக்கணக்கில் செலவழித்துத் தனியார் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர் தொலைநிலைக் கல்வி என்றவுடன் முகம் சுழித்துத் தயங்குவார்கள். இந்த மனநிலை குறித்து ஒரு கட்டுரை, மிக முக்கியமான கட்டுரை, தொலைநிலைக்கல்வியின் பரிணாமங்களை நுட்பமாகப் பேசும் கட்டுரை,
சமூக அக்கறையுள்ள மனிதர்களின் மனத்தை உறுத்துகின்ற ஒரு தகவலை ஒரு கட்டுரையில் பாரதி பாலன் பதிவு செய்திருக்கிறார் .
அமெரிக்கக் கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவர், உலகின் தலை சிறந்த இளம் திறமைகளை அடையாளம் கண்டு எங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தி வருகிறோம் . இப்போது எங்கள் நிறுவனத்தில் பணி புரிபவர்களில் 42% பேர் அமெரிக்காவிற்கு வெளியே பிறந்தவர்கள் தான் என்று கூறுகின்றார் என்ற செய்தியை பாரதி பாலன் எடுத்துக் காட்டுகிறார். இப்படி நமது நாட்டில் கூறிவிட முடியுமா என்ன? இங்கே பெரும்பான்மையான திறமையாளர்கள் நிறுவனங்களுக்கு வெளியே தானே நிற்கிறார்கள்! நாடு முழுவதும் குளங்கள், ஊருணிகள் காணாமல் போய்விட்டதைக் குறித்து ஒரு கட்டுரை பேசுகிறது. இத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஆழமும் விரிவும் கொண்டு அதனளவில் தனித்தன்மைகொண்டதாக உள்ளது.
ஒரு சிறந்த கட்டுரையை நீ எழுத வேண்டுமானால் தேவைக்கு அதிகமாக எதையும் எழுதாதே என்று ரிச்சர்ட் பிரின்ஸ்லி ஷெரிடன் என்ற அமெரிக்கர் கூறுகிறார். பாரதிபாலனின் இக்கட்டுரைகள் அனைத்தும் தேவையான செய்திகளை அளவோடு அதே நேரம் நுட்பமாகக் கூறுகின்றன; அதனால் வாசிப்பதற்குச் சுவை கூட்டுகின்றன. சிந்திக்கவும் தூண்டுகின்றன. எளிதில் ஒதுக்கி விட்டுக் கடந்து போகக் கூடாத புத்தகம்