உணர்வு பூர்வமாக எழுதினாலும், எழுதுவதில் அறிவுபூர்வமான சிந்தனை வாசகனுக்கு எழ வேண்டும் என்பதே என் ஆசை தனது முன்னுரையில் நிவேதா லூயிஸ்.
பெண்களுக்கான சிறப்பு செய்தல் என்பது நடைமுறையில் பெரும் விவாதத்திற்குரியது. ஆணாதிக்கம் நிறைந்த உலகு தனக்குப் போட்டியாக சக ஆண்கள் உருவாதனையே கூடியவரை தவிர்த்துவிடக்கூடிய சூழலில் பெண்களுக்கான இருப்பும், சிறப்பும் கிடைக்கப் பெறுதல், பெரும் மனப்பொருமல்களுக்கிடையே வேறு தேர்வுகளற்ற தருணத்தில் நிகழ்கிறது. துணிவும் வீரமும் எங்கள் இனத்துக்குரியதென மார்தட்டிக் கொள்ளும் ஆணினம் பெண்களை ஊக்குவிக்கவோ, அங்கீகரித்திடவோ தயங்குவதும், அஞ்சுவதும் நகைமுரண் அல்லவா?
பல படைப்பாளிகள் தாங்கள் வாழும் காலத்தில் பல்வேறு ஆண் இலக்கிய ஆளுமைகள் குறித்தும், சாதனையாளர்கள் குறித்தும் எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளனர். வாசகர்களும் அவற்றைக் கடந்தும், வாசித்துமிருப்பர். எனினும், பெண் ஆளுமைகள், சாதனையாளர்கள் குறித்து வெளியான படைப்புகள் சொற்ப எண்ணிக்கையிலானவையே என்பதில் ஐயமில்லை.
மாத்ரி பதிப்பகத்தின் வெளியீடான முதல் பெண்கள் என்ற நூல் இக்குறையினைப் போக்குகிறது. ஏறத்தாழ 43 பெண் முன்னோடிகள், ஆளுமைகள் குறித்த பல தகவல்களை இப்புத்தகத்தின் ஆசிரியரான நிவேதா லூயிஸ் எனும் பெண்ணே படைப்பாக்கியிருப்பது இதற்கு மேலும் சிறப்பு செய்கிறது.
பொதுவாக, பல்வேறு துறைகளில் முதலாவது என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் நிவேதா இதனைப் படைத்துள்ளார். பல அரிய, வியப்பிற்குரிய தரவுகள் இப்படைப்பெங்கும் விரவிக்கிடக்கின்றன.
நீலகிரி மாவட்டத்தின் முதல் படுகர் இனப் பட்டதாரி, முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பெயர் பெற்ற அக்கம்மா என்ற பெண்மணியைக் குறித்த குறிப்புகளுடன் இப்புத்தகம் தொடங்குகிறது. தனது தந்தையின் முழு முயற்சியின் விளைவாகவே தோழர் அக்கம்மா கல்வியினைத் தொடங்குகிறார். 1918ஆம் ஆண்டு பிறந்த அவர் தூயதெரேசாள் கல்லூரியில் இளங்கலை பட்டத்தினை 1938இல் பெற்றார்.
1962ல் நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக தனது இறுதிநாள் வரை உழைத்தது மட்டுமல்லாது பல மகளிர் அமைப்புகளிலும் திறம்பட பணியாற்றினார். பெண்களிடையே மகளிர் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை உண்டாக்கிட குறிப்பிடத்தக்க பணியினை மேற்கொண்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேண்டியது உரிமை, சலுகையல்ல. மனித உரிமை, அதனைப் போராடிப் பெறவேண்டியதும் நாமே. தமிழகத்தின் முதல் தலித் பெண் அமைச்சர் மற்றும் மத்திய அரசில் முதல் பெண் துணை அமைச்சர் சத்தியவாணி முத்து அவர்களின் கருத்துரை. (நூலிலிருந்து).
சிறந்த பேச்சாற்றல் மிக்கவரான சத்தியவாணியை திராவிட முன்னேற்றக் கழகம் அரவணைத்தது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கணவரான முத்துவின் ஊக்கமும் இதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. வெவ்வேறு கொள்கை நிலைப்பாடுடையவர்களாயினும் அவரவர் பாதையில் இருவரும் இயங்கி வந்தனர். தனது இளம்வயதிலேயே (20) பட்டியல் வகுப்பார் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவரானார். இந்தி திணிப்பிற்கெதிராக முதல் குரல் எழுப்பியவர்களில் ஒருவர். ஹிந்தியின் ரகசியங்கள் எனும் தலைப்பில் கட்டுரைகளும் எழுதினார்.
1957இல் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். பல நிலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார் வடசென்னையில் அம்பேத்கர் கல்லூரியினை அமைக்க முழுமுயற்சியுடன் பாடுபட்டு வெற்றி கண்டார். மாநில அரசிலும், மத்திய அரசிலும் 1979 வரை பதவி வகித்தார். தன் வாழ்நாளின் இறுதி வரை சுயமரியாதைக் கொள்கை நாத்திகம் ஆகியவற்றை மனவுறுதியுடன் பின்பற்றினார். 1968 கீழ்வெண்மணி துயரநிகழ்வின்போது, களப்பணியாற்றி, அரசின் உதவியைக் கோரிப் பெற்று அது மாதிரி கிராமமாக அமைய காரணமாக இருந்தார். .
தென்னிந்தியாவில் முதலில் முதுகலைப்பட்டம் பெற்ற பெண் மற்றும் அகில இந்திய அளவில் பெண்களுக்கான இதழினைத் தொடங்கிய கமலா சத்தியநாதன் அவர்களைக் குறிக்கும் பகுதியும் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது எழுத்தாற்றலை உணர்ந்து கொண்ட கணவரது உந்துதலால் பெண்களுக்கான ஆங்கில மாத இதழாக வெளியானது இந்தியன் லேடீஸ் மேகசின் -.
இவ்விதழ், 1901 முதல் 1938 வரை இடையே சில வருடங்களில் சில காரணங்களால் தடைபட்டாலும் பின்னர் வெளியானது. இவரது வாழ்க்கை மிகவும் துயரத்திற்குரியதாக அமைந்திருந்தாலும், தனது தனிப்பட்ட வேதனையை அவர் பொருட்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகரின் முதல் தலித் பெண் துணைமேயரான மீனா சிவராஜ் குறித்த பதிவுகளையும் நிவேதா பதிவாக்கியுள்ளார். அம்பேத்கர், அண்ணா, பெரியார், நேரு என அனைத்து தலைவர்களின் அன்பையும், மதிப்பினையும் ஒருங்கே பெற்றவர். இவரை எனது தங்கை மீனாம்பாள் என்று அண்ணல் அம்பேத்கர் அவரை அழைப்பார். தலித் மக்களுக்காக எங்கு பொதுக்கூட்டங்கள் நடந்தாலும் அங்கு சென்று முழங்குவார். சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் அவ்வாறே என நிவேதா கூறுகிறார்.
அண்ணல் அம்பேத்கர் தலித் மக்களுக்காக தொடங்கிய அனைத்திந்திய பட்டியல் வகுப்பார் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.எஸ்.எஃப்) முதல் தலித் பெண் தலைவர் இவர்தான். இவருக்கு அண்ணலே தம் கையால் உணவு சமைத்துப் பரிமாறுவார் என்பதும் வியப்புக்குரிய செய்தியாகிறது. பட்டியல் வகுப்பார் கூட்டமைப்பு தேசிய பெண்கள் மாநாட்டை 1944இல் அம்பேத்கருடன் இணைந்து தலைமையேற்று நடத்தியுள்ளார்.
1938இல் சென்னையில் தமிழ்நாடு பெண்கள் மாநாடு நடந்தது. அன்று ஈரோடு ராமசாமிக்கு சுயமரியாதை இயக்கப் பெண்களால் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்களில் முதலாவது இதுவே. மாநாட்டுக் கொடியினை ஏந்திவந்து இத்தீர்மானங்களை கொண்டு வந்தவர் மீனாம்பாள்.
தனது வாழ்நாளின் இறுதி இருபது ஆண்டுகளை பார்வையற்ற நிலையில் கழித்தாலும் அவரது செயல்பாடுகளை அக்குறைபாடானது எள்ளவும் பாதிக்கவில்லை. கறுப்புக் கண்ணாடியுடன் அவர் கூட்டங்களுக்குச் சென்று பங்கேற்றதனை நூலாசிரியர் பதிவாக்கியுள்ளார்.
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆங்கிலஅரசால் கைது செய்யப்பட்ட முதல் தென்னிந்தியப் பெண்ணான கே.பி.ஜானகியம்மாள் குறித்த பகுதியுடன் இந்நூல் விமர்சனக் கட்டுரை நிறைவுறுகிறது. துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கொண்டே விடுதலைப் போராட்டத்தில் தீவிரப்பங்காற்றினார். இருப்பினும், 1934ஆம் ஆண்டு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை ஜெயப்பிரகாஷ் நாராணன் துவக்கியபோது குருசாமி, பசும்பொன் முத்துராமலிங்கம், ஜானகி ஆகியோர் அதில் இணைந்தனர்.
1939ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கனாரின் அழைப்பை ஏற்று மதுரை வந்த சுபாஷ் அவர்களை ஜானகி தம்பதியரும், முத்துராமலிங்கனாரும் வரவேற்றதையும் நிவேதா குறிப்பிட்டுள்ளார். மேலும், 1940இல் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி கிளை துவக்கப்பட்டபோது அதில் இணைந்தார். அத்தருணத்தில் யுத்த எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதால் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதான முதல் தென்னிந்தியப் பெண் எனப் பெயர் பெற்றார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார். 1974இல் தமிழக மாதர் சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாழ்க்கையின் துவக்கத்தில் மிகப்பெரும் செல்வந்தராக வாழ்ந்த ஜானகி அம்மாள் கட்சி அலுவலகத்திலேயே தங்கியிருந்தார். அவர் மரணமுற்றபோது ஒரு கைப்பையும், குடையும் மட்டுமே அவரது உடைமைகளாக இருந்தன. தங்கத்தின் விலை 10 ரூபாயாக இருந்த காலத்தில் அவர் ஒரு நாடகத்தில் நடிக்க ரூ300 பெற்றார்.
இவ்வாறு நிவேதாவின் நூலானது முதல் பெண் விமானி, முதல் பெண் கணக்காய்வர், முதல் பெண் தேர்தல் அதிகாரி, முதல் பெண் குடியேற்ற அதிகாரி, முதல் பெண் வெளியுறத்துறை அதிகாரி, முதல் பெண் பொறியாளர், முதல் பெண் நீதிபதிகள் என பட்டியல் நீள்கிறது.
முதல் பெண்கள் நூலில் தங்கள் துறைகளில் சாதித்த பெண் மருத்துவர்கள் ஐவரைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்கிறார் நிவேதா. ஒவ்வொவரும் தனது பிரிவைச் சார்ந்த மருத்துவத்துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதுடன், மனிதகுலத்திற்கு நன்மையளிக்கும் பல சாதனைகளும் நிகழ்த்தியவர்கள். உலகின் முதல் பெண் சர்ஜன் ஜெனரல் என்ற பெருமைக்குரிய மேரி பூனென் லூகோஸ், கேப்டன் லட்சுமி ஆகியோரைக் குறித்த பகுதிகளும் குறிப்பிடத்தக்கவை.
ஆசிரியப் பெருமக்களும், தன்னார்வ அமைப்புகளும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கி பெண்களுக்கான கல்லூரி வரை இந்நூலினை அறிமுகம் செய்து வாசித்திட ஒரு வாய்ப்பினை பெண் குழந்தைகளுக்கு உருவாக்கித் தருதல் மிக்க அவசியமானதொன்று. இப்பெண்கள் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூகச்சூழலில் வசதிகளும், பள்ளி, கல்லூரிகளும் அரிதாக இருந்தன. அத்தகைய இக்கட்டான காலத்திலேயே இப்பெண்கள் இத்தகைய சாதனைகனைப் புரிந்துள்ளதனை அவர்களுக்கு விளக்கி தற்கால நிலையில் இத்தகைய இலக்குகளை எளிதில் அடைய முடியும் என்பதனையும் பெண் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தல் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
இச்சாதனை மணிகளில் சிலர் குறித்தே இந்த விமர்சனக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதனை ஓர் உரைகல்லாகவே கருதிக் கொள்ளவேண்டும். நோக்கம் யாதெனில் வாசகர்களுக்கு இப்புத்தகத்தினை பரவலாக அறிமுகம் செய்திடுவதற்காக… படைப்பின் முழு வீச்சினைப் புரிந்து கொள்ள அதனை முழுவதுமாக வாசித்தல் அவசியம் என இக்கட்டுரை வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
எண்ணற்ற நடைமுறை இடர்பாடுகளுக்கிடையில் தங்களை வருத்திக்கொண்டும், பொருத்திக் கொண்டும் இப்பெண்மணிகள் இச்சாதனைகளைப் புரிந்தது மாத்திரமின்றி, தங்களது நோக்கங்களையும், குறிக்கோளினையும் எட்டியுள்ளனர். இத்தகைய சாதனைப் பெண்மணிகள் குறித்த தகவல்கள் அல்லாது அவர்களுடைய நோக்கம், மகளிருக்கான உரிமைகளைப் பெற்றுத் தர அவர்கள் எடுத்த முயற்சிகள், தன்னலமற்ற சேவை, சீரிய அர்ப்பணிப்பு ஆகியவை உரிய முறையில் தமிழ் சமூகத்திற்கு எடுத்துரைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது ஓர் அவலம். அத்தகைய பிழை இனியேனும் நிகழாவண்ணம் கருத்துடன் செயல்படுவது நமது பொறுப்பாகிறது.
நிவேதாவின் ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை என்ற நூலும் அண்மையில் வெளியாகி உள்ளது. நிரந்தர வருவாயினையும், சமூக அடுக்கில் மதிப்பினையும் அளிக்கும் அரசுப்பணியை துணிவுடன் துறந்துவிட்டு படைப்புத் தளத்தினை தெரிவு செய்வது எளிதான செயலன்று. அத்தகைய தருணம் பல இகழ்வுப் புன்னகைகளை நமக்கு வழங்குகிறது. இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது இவ்வரிய பணியினை பலரைச் சந்தித்து உரையாடியும், முக்கியமாக கன்னிமாரா நூலகத்திலும் தனது விலைமதிப்பற்ற நேரத்தினை செலவழித்து தரவுகளைத் தொகுத்தளித்து, பெண் ஆளுமைகளுக்கு சிறப்பு செய்துள்ள நிவேதாவின் பணி தமிழ் படைப்புலகில் என்றுமே நினைவு கூறத்தக்கது