நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்க விரும்புபவர்களுக்கு நிறைய வாசிப்பனுபவம் உள்ளவர் எவரேனும் நல்ல நூல்களைப் பட்டியலிட்டுக் கொடுத்தால், தேடிப் படிப்பது சுலபமாகி விடும். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாவண்ணன் தனது சொந்தப் படைப்புகள், மொழிபெயர்ப்புகள் இவற்றுக்கு நடுவே, தான் வாசிப்பதை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதையும், அதன் அழகுகளை எடுத்துச் சொல்வதையும் தொடர்ந்து செய்து வருகிறார். அவருடைய எனக்குப் பிடித்த கதைகள், நூறு சுற்றுக் கோட்டை, அவர் ரசித்த கவிதைகள் பற்றிய கட்டுரைகள், நாவல்கள் பற்றிய அறிமுகங்கள் என வாசகர்களுக்காகவும், இளம் எழுத்தாளர்களுக்காகவும் இந்தப் பணியை இடை விடாது செய்து வருகிறார்.
ஒரு முறை அவர் தனது கட்டுரை ஒன்றில், இப்படிச் செய்வதை அவர் தனது கடைமையாக நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வரிசையில், புதிய புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளி வந்துள்ள புத்தகம்” கதவு திறந்தே இருக்கிறது”. புதிய புத்தகம் பேசுது இதழில் அவர் தொடர்ந்து எழுதி வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தில் 17 கட்டுரைகள் உள்ளன. இவற்றில் 5 கட்டுரைகள் தமிழில் வந்த புத்தகங்கள் பற்றியதும், மற்ற 12 கட்டுரைகளும் பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாக வந்திருக்கின்ற நூல்கள் பற்றியதுமாகும். அவற்றிலும், வித விதமாக, வகை வகையாக பல விதமான நூல்களை அறிமுகப்படுத்துகிறார் பாவண்ணன். தமிழ் மொழியிலிருந்து பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக மேடை அனுபவங்கள், ம.இலெ. தங்கப்பாவின் பாட்டு வாழ்க்கை,, நாமக்கல் கவிஞரின் என் கதை, வெ.சாமிநாதசர்மா அவர்கள் “அவள் பிரிவு” எனும் தலைப்பில், தன் நண்பருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு பாரத தேவியின் நிலாக்கள், தூரதூரமாக என்ற நாவல் போன்ற வெவ்வேறு சுவை கொண்ட ஐந்து புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறார்.இவற்றை வாசிக்கும்போதே நிச்சயம் இந்தப் புத்தகங்களைத் தேடி வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை வாசகர் பெற முடிகிறது. அதுவே புத்தகத்தின் முதல் வெற்றி.
மொழிபெயர்ப்பு நூல்கள் 12ல், புத்தர் பற்றிய இரண்டு நூல்கள் (தீகநிகாயம் மற்றும் புத்தரின் புனித வாக்கு) ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறார்.தீகநிகாயம் என்ற புத்தகம் புத்தரின் தத்துவ சூத்திரங்களை சொல்கிறது என்று எடுத்துச் சொல்லும் பாவண்ணன் புத்தர் தத்துவங்களை விளக்குவதற்குக் கையாண்ட அழகான உவமைகளை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். புத்தரின் உபதேசங்கள் படிப்பதற்கு கடினமாகவும், வறட்சியாகவும் இருக்கும் எனவே படிக்க முடியாது என்று நினைத்தாலும், பாவண்ணன் இந்தப் பகுதியை எடுத்துக் காட்டுவதால் அந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஆர்வம் கிளர்ந்தெழுகிறது.
அதே போல புத்தரின் புனித வாக்கு நூல் பற்றி எழுதும்போது, ஆசையே துன்பத்திற்க்குக் காரணம் என்றால், ஆசையே படாமல் எப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியும் என்ற கேள்வியிலிருந்து தொடங்கி எழுதுகிறார். சாதாரணமாக எல்லோர் மனதிலும் எழும் கேள்வி இது என்பதால் வாசிப்பவரும் இந்தப் புத்தகத்தைப் பற்றி பாவண்ணன் என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வம் மேலிட வாசிக்கும்போதுதான், புத்தர் ஆசை பற்றி, போர் பற்றி எல்லாம் பேசும் வார்த்தைகள் புரிபடுகிறது. இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள் கேள்வி பதில் வடிவில் இருப்பதால் வாசிக்க ஆர்வமாக இருப்பதாக பாவண்ணன் சொல்வதால் நமக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.
இப்படி நூலின் பல பகுதிகளைச் சுவைபட பாவண்ணன் எடுத்துச் சொல்கிறார்.
இந்த இரு நூல்களின் மூலம் புத்தரின் உபதேசங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் நிச்சயம் வாசிப்பவரைப் பற்றிக் கொள்ளும். புத்தரின் உபதேசங்கள் உண்மையான ஆன்மீகத்தைப் போதிப்பதாக உள்ளதை உணர முடிகிறது.
வகை மாதிரியாக,நதிகள் , பறவைகள், யானைகள், வேட்டையாடுதல், இளமைப்பருவ நினைவுகள் பற்றிய சிறுகதைத்தொகுப்பு என வித்தியாசமான பல புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறார்.
ஜீவன் லீலா என்ற புத்தகம், காலேல்கர் குஜராத்தியில் எழுதி ஹிந்தி வழியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நதிகள் பற்றிய பயணக் கட்டுரைகள் பற்றிய கட்டுரை அருமையாக இருக்கிறது. துங்கபத்திரை என்பது ஒரு நதியல்ல, அது துங்கா, பத்ரா என்ற இரு நதிகளின் சங்கமம்,என்ற தகவல்,, டேராடூன் அருகில் உள்ள தீஸ்தா நதி பற்றிய விபரங்கள், நர்மதையை வலம் வருவது பற்றிய விபரங்கள், ஜீலம் நதி பற்றி, குடகின் அருகில் இருக்கும் ஜோக் நீர் வீழ்ச்சி என புத்தகம் பற்றிய அறிமுகத்திலேயே நம்மை ஒரு குளுமையான நதியிலும், நீர்வீழ்ச்சியிலும் நனைய வைக்கிறார் பாவண்ணன். நதிகளும்,, நீர் நிலைகளும் அருகி வரும் இந்நாட்களில் இந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்துப் படித்து நம் நாட்டின் நதிகள் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது.
அதைப் போல வேட்டை நினைவுகள் புத்தகம் பற்றிய அறிமுகம் அற்புதம். கேதம்பாடி ஜத்தப்பா ரை கன்னடத்தில் எழுதிய புத்தகம் ஆங்கில வழியாக தமிழுக்கு வந்துள்ள நூல் வேட்டை நினைவுகள். இந்தப் புத்தகத்தில் புலி வேட்டை போன்றவற்றை கதை போன்று சுவை பட ஜத்தப்பா ரை எழுதியிருப்பதையும், அந்தக் காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையையும், ஆங்கில அதிகாரிகளுக்கும், காட்டில் வசித்த மக்களுக்கும் நிலவி வந்த சுமுகமான உறவையும் எல்லாம் அவர் புத்தகம் சுவைபட விவரிப்பதை பாவண்ணன் நமக்கு அழகாக எடுத்துச் சொல்கிறார்.சுவாரசியமான இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஆர்வம் மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
யானைகள் பற்றி ராமன் சுகுமாரன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள என்றென்றும் யானைகள் புத்தகம் ஜீவானந்தம் என்பவரால் தமிழில் பொழிபெயர்க்கப்பட்டுள்ளதை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பாவண்ணன்.
யானைகள் பற்றிய புதிது புதிதான செய்திகள் எல்லாம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. யானைகளை நாம் கோவிலிலோ, வீதியிலோ வேடிக்கை பார்த்து அதோடு விட்டு விடுவோம். இந்தப் புத்தகத்தின் மூலம் அவைகள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் போது யானைகள் பற்றி நமக்கு பெரிய ஆர்வம் உண்டாகிறது., இப்போதெல்லாம் யானைகளை மின்சார வேலி வைத்தும், அருமை தெரியாமல் மிருகம்தானே என்ற அலட்சியத்தோடும் அவைகளோடு விளையாடுவது நடக்கிறதே என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை..
ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி எனும் தலைப்பில் பறவை ஆர்வலர் சாலிம் அலியின் வாழ்க்கை வரலாறு தமிழில் பொழிபெயர்க்கப்பட்டுள்ளதை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பாவண்ணன். இன்றைக்கு நாம் சிட்டுக்குருவிகள் அருகி வருகின்றன என்று கவலைப் படுகிறோம். காக்கைகள் கூட குறைந்து வருகின்றன. இன்றைக்கும் பல வன ஆர்வலர்களும்,, பறவை ஆர்வலர்களும் அவைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 1926, 1930 ஆகிய காலகட்டங்களில் பறவைகள் பற்றிய ஆராய்ச்சிகளை நிகழ்த்தி, பத்தாண்டுகள் அதற்காக உழைத்து, “இந்தியப் பறவைகள்” என்ற புத்தகத்தை பத்து தொகுதிகளாகக் கொண்டு வந்ததும்,”இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள்” எனும் புத்தகமுமே இவர் மேல் தேசிய அளவில் கவனம் பதிய காரணமாயின.அவருக்கு பத்மபூஷன் விருதும் கிடைத்தது.
ஆனாலும் அவரது ஆராய்ச்சியும்,வேளாண்மை, தாவர வளர்ச்சி, வன இயல் ஆகிய மூன்றின் முக்கியத்துவத்தையும் ஆராய்ந்து அவர் அளித்த திட்ட நகலையும் அரசாங்கம், முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் வருத்தமளிக்கிறது. பதவிகள், பொறுப்புகள் என்பதெல்லாம் இல்லாமலேயே எத்தனையோ பேர், இந்த நாட்டின் இயற்கை வளங்கள் மீதும், விலங்குகள், பறவைகள் மீதும் உண்மையிலேயே எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும் நம்மை உணர வைக்கிறது.
பழைய புத்தகங்கள் முதல் சமீபத்தில் வந்திருக்கும் “நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற புத்தகம் வரை இந்த நூல்கள் அறிமுகங்கள் இருக்கின்றன. மலையாளத்தில் மனோஜ் குரூர் , சங்கப் பாடல்களின் அடிப்படையில் வேள் பாரியின் கதையை புனைவாக எழுதியுள்ளதை தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழி பெயர்த்துள்ளார். ஒரு மலையாள எழுத்தாளர் தமிழின் சங்க கால நிகழ்வை புனைவாக்கியிருப்பது கவனம் பெறக் கூடியது என்று சொல்லும் பாவண்ணன் நாவலை நமக்குச் சுருங்கிய வடிவில் அறிமுகப்படுத்துகிறார்.
இப்படி வாசகர்கள் தேடிப் படிக்க வேண்டிய பல நூல்களை, அதுவும் குறிப்பாக மொழிபெயர்ப்பு நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கும் பாவண்ணன் மிகுந்த பாரட்டுக்குரியவர். அதுவும், வெறும் புதினங்கள் மட்டுமில்லாமல், பல சுவைகள் கொண்ட விதவிதமான புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் அவருக்கு வாசகர்கள் நிச்சயம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பார்கள்.
இதைச் சிறப்பாக புத்தகமாக ஆக்கியிருக்கும் பாரதி புத்தகாலயத்தார் பாராட்டுக்குரியவர்கள் இந்தப் புத்தகம் வாசகர்களுக்கு, வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு கையேடு போன்று நிச்சயம் இருக்கும்.
கதவு திறந்தே இருக்கிறது” என்ற புத்தகத்தின் தலைப்பில் எந்த கட்டுரையும் இல்லை. ஆனால், வாசிப்பு ஆர்வலர்களுக்கு, புத்தக உலகத்தின் கதவு திறந்தே இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது பாவண்ணனின் அருமையான இந்தப் புத்தகம்.