இலக்கியங்களில் பெரும்பாலானவை சாகசங்களை முன்னிருத்துபவைதான். உதாரணத்திற்கு, பழந்தமிழ் இலக்கியப்படைப்புகளில் புறநானூறு மற்றும் அகநானூறு ஆகிய இரண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம். முந்தையது போர் சார்ந்த சாகசத்தைப் பேசுகிறது என்றால், பிந்தையது மனிதனின் காதல் மற்றும் காமம் சார்ந்த சாகசத்தைப்பற்றி விரிவாக எடுத்துச்சொல்கிறது.
பொதுவாக சாகசக்காரர்கள் நல்ல கற்பனாவாதிகளாக இருப்பார்கள். அவர்களது பேச்சில், படைப்பில் அவர்கள் சேர்க்கும் கற்பனையான விஷயங்களே அவர்களைப் புகழ்பெறச் செய்கின்றன. உலகை வலம்வந்த மார்கோபோலோவை எடுத்துக்கொண்டால், தான் கண்ட நிகழ்வுகளோடு இட்டுக்கட்டிச் சொன்ன பல விஷயங்கள்தான் அவருக்குப் புகழைப் பெற்றுத்தந்தன. அவர் வெறும் வரலாறைச் சொல்லியிருந்தால் அது மக்களை இவ்வளவு கவர்ந்திருக்காது என்பதுதான் உண்மை.
மார்கோபோலோவின் பல்வேறு கருத்துகள் ஒன்றிணைந்து ஆசியாவைப்பற்றியும், இந்தியாவைப்பற்றியும் ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்தினை உருவாக்கியிருந்தன. மேலும் வணிகம் செய்யவந்த வெள்ளையர்கள் நாடு திரும்பியபோது இம்மண்ணின் வளம் குறித்த பல்வேறு செய்திகளைக் கொண்டுசென்றனர். தங்களை எதிர்க்கும் அளவிற்கு ஆயுதம், தொழில்நுட்பம், அரசியல் அறிவு ஏதுமற்று இருந்த இந்தியர்கள் குறித்த ஏளன உணர்வு அவர்களது மனதில் தோன்றியது. ஆனால் பின்னாட்களில் அவர்கள் இந்நிலத்தை ஆக்கிரமித்து, சுரண்ட முயலும்போது பெரிய சவால் ஒன்று அவர்களுக்காகக் காத்திருந்தது. அது – இங்கிருந்த கானக வளம்.
பனிமூடிய நிலமும் அதில் வாழ்ந்து வந்த ஓநாய் என்ற ஒற்றை வேட்டை விலங்கையும் மட்டுமே அறிந்திருந்த அவர்களுக்கு இங்கிருந்த இருண்ட காடுகள், அவற்றில் வாழ்ந்து வந்த வேங்கைகள், சிறுத்தைகள், யானைகள், செந்நாய்கள், புதர்க்காடுகளில் வாழ்ந்து வந்த சிங்கங்கள், திறந்தவெளிகளில் வாழ்ந்துவந்த சிவிங்கிப்புலிகள், எங்கெங்கும் நிறைந்திருந்த விஷப்பாம்புகள் ஆகியன மிகப்பெரிய எதிரிகளாய்த் தெரிந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. போதாக்குறைக்கு வெப்பமும், தொற்றுநோய்களும் அவர்களை வேட்டையாடின. இதன் விளைவாக இந்தியா என்பது ஒரு மாயக்குகை என்ற கருத்தாக்கம் ஐரோப்பிய மக்களிடையே வலுப்பெற்றது. இதனால் இந்தியக்காடுகள், அங்கு வாழும் விலங்குகள்பற்றி எழுதும் ஓர் எழுத்தாளன் உண்மையோடு சேர்த்து நிறைய கற்பனைகளையும் கலந்து எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டான். இப்படியாக இந்தியாவைக் காணாத ஐரோப்பியர்களின் கற்பனைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில்தான் இங்கு வேட்டை இலக்கியம் சூல்கொண்டு வளர்ந்தது.
இன்றும்கூட உலகின் மிகச்சிறந்த வேட்டை இலக்கியங்களில் பெரும்பாலானவை இந்திய மற்றும் ஆஃப்ரிக்க நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டவைதான். இப்படியாக இந்தியக் கானகத்தின் வளம் வரலாறாகப் பதிவு பெறுவதற்குப் பதிலாக மலிவான வேட்டை இலக்கியப்படைப்புகளாக மாறி உலகின் எஞ்சிய பகுதிகளை அடைந்தன. இன்றுள்ள இந்தியத் திரைப்படங்களில் இருந்து எப்படி இந்திய சமூக அமைப்பை, அதன் நடைமுறையைப் பிறர் அறிய இயலாதோ அதே அளவில்தான் அன்றைய வேட்டை இலக்கியங்கள் இந்திய கான் வளத்தை அறியவியலாமல் செய்தன.
இத்தகைய கதைகளில் பெரும்பாலானவை முழுமையான கற்பனைகள்தான். அதற்காக எழுதியவர்களுக்கு அனுபவமே இல்லை என்றும் கூறிவிடவும் இயலாது. வெள்ளையர்கள் சுலபமாகத் துப்பாக்கிகள் வாங்கி வைத்துக்கொள்ள இயலும் என்ற நிலையில் வேட்டை அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. மேலும், ஆங்கில செவ்வியல் படைப்புகளைக் கற்றிருந்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கு ஒரு படைப்பை எப்படி அதன் சூழல் சார்ந்த குறிப்புகளோடு எழுத வேண்டுமென்ற அடிப்படை அறிவும் இருந்தது. இவை இரண்டும் இணைந்த நிலையில் அவர்களால் வெற்றிகரமான படைப்புகளைத் தர முடிந்தது. முதலில் சில வெள்ளையர்கள் இந்த வகை ‘உண்மை நிகழ்வுகளை’ எழுதத்தொடங்க, எழுதியவர்களே எதிர்பார்க்காத வரவேற்பு அவற்றிற்குக் கிடைத்தது. தொடர்ந்து பலர் இம்முறையிலான ‘வேட்டை நிகழ்வுகளை’ எழுதினர்.
இவ்வகைப் படைப்புகளில் உச்சம் என்று கருதப்படும் ஜிம் கார்பெட்டின் படைப்புகளில் பெரும்பாலானவை அவருடைய கற்பனைகள்தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியவற்றில் பல கதைகள் சக வேட்டையர்களின் வாழ்வில் நிகழ்ந்தவை. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான படைப்புகளே அவரது சொந்த அனுபவங்கள்.
அவரது எழுத்துமுறையைப் பின்பற்றி எழுதியவரான கென்னெத் ஆண்டர்சன் – தனது கதைகளில் கற்பனைக்கே அதீத முக்கியத்துவத்தை அளித்தார். ஆனால் ஜிம் கார்பெட் நிதானமாக, ஒரு வேங்கையைப் பின்தொடர்வதுபோல் முழு கதையையும் எழுதுவார் என்றால் இவர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி வேகமாகக் கதையை எழுதக்கூடியவர். ஆகையினாலேயே இவரது படைப்பை வாசிப்பவர்கள் விரைவாகக் கவரப்படவும், அதே வேகத்தில் விலகிச்செல்லவும் நேர்ந்தது.
என்னதான் இவர்கள் காயம்பட்ட, ஆட்கொல்லி விலங்குகளைக் கொன்றோம் என்று தங்கள் படைப்புகளில் கூறினாலும், இக்கதைகள் எல்லாம் இந்திய மண்ணில் வாழ்ந்த வெள்ளையர்களின் ரசனை சார்ந்த வேட்டை அனுபவங்கள் என்றுதான் கூறவேண்டும். இருவரது அனுபவக்கதைகளுமே இன்று போற்றப்படுவதற்குக் காரணம் – வேட்டை குறித்து அவர்கள் எழுதியதற்காக அல்ல – சூழல் குறித்த அவர்களது நுணுக்கமான அவதானிப்புகளுக்காகவே. வரலாறே முரண்களால் நிரம்பியது எனும்போது இலக்கியப்படைப்புகள் மட்டும் விதிவிலக்கா என்ன?
சரி. ‘வெள்ளையர் வரும் முன்னர் இந்தியர்கள் இவ்விலங்குகளை எப்படிச் சமாளித்து வந்தனர்?’ ‘துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் நடைமுறைக்கு வந்ததும் என்ன நிகழ்ந்தது?’ ‘வெள்ளையர் வருகை வேட்டையை எப்படி மாற்றியமைத்தது?’ போன்ற கேள்விகள் எழுகின்றன. இல்லையா?
கிட்டத்தட்ட தென்னிந்தியாவில் நிறைந்து கிடக்கும் புலிக்குத்திக்கற்கள் இக்கேள்விகளுக்குப் பதில் கூறுகின்றன. புலி உட்படப் பல விலங்குகளுடன் போராடுவது மக்களின் இயல்பாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித, விலங்கு இறப்புகள் ஏற்பட்டன. போரில் ஏற்படும் மரணம்போல் இம்மரணங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டன. ஆகவேதான் புலியோடு போராடி மரணித்தவர்கள் நினைவாக புலிக்குத்திக்கற்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டன.
அரசர்கள் காட்டு விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். முக்கியமாக முகலாயர் ஆட்சியின்போது ஆண்டு முழுவதும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அரசர், ஆளுநர்கள் தலைமையில் வேட்டைகள் நிகழ்த்தப்பட்டன. அவர்கள்தான் துப்பாக்கி வேட்டையை இந்தியாவில் அறிமுகம் செய்தனர் என்றபோதிலும், அது சாமானியர் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அக்பர் நாமா போன்ற புத்தகங்கள் வேட்டையின்போது கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதை உறுதிசெய்கின்றன. இத்தகைய விதிமுறைகள் முகலாயர் வருகைக்கு முன்னரும் இருந்தன என்பதால் மக்கள் பல நூறு ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்பட்ட வேட்டையைப் பண்பாடாகக் கொண்டிருந்தனர்.
வெள்ளையர் வருகை ஆயுதப்பயன்பாட்டை எளிமைப்படுத்தியது. கிட்டத்தட்ட அனைத்து வெள்ளை அதிகாரிகளும் ஆயுதம் வைத்திருந்தனர். பிறரை அடக்கவும், மரங்கள், விலங்குகள், கனிமங்கள் போன்ற இயற்கை வளங்களைச் சுரண்டவும் அவர்களுக்கு இவ்வாயுதங்கள் பயன்பட்டன. அதுவரை இந்தியாவை ஆண்டுவந்த முகலாயர்கள் அதிகார அமைப்பின் கடைநிலைக் கண்ணிகளான ஜமீன்தார்களை மிகக்குறைந்த அதிகாரம் கொண்டவர்களாக வைத்திருந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது வெள்ளையர்கள் மையப்படுத்தப்பட்ட அரசுகளை உடைத்து ஜமீன்தார்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கினர். இதைத் தொடர்ந்து முகலாயர்கள், இந்து மன்னர்கள், வெள்ளையர்கள் செய்துவந்த வேலைகளை ஜமீன்தார்கள் நகலெடுக்கத் தொடங்கினர். உணவு, வழக்கம், தேவை என்பதற்காக வேட்டை என்ற நிலை மாறி, பெருமைக்கு வேட்டையாடுவது என்ற முறை அதியுச்சத்தை அடைந்ததும் இக்காலத்தில்தான். பல்லாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் காற்றில் விடப்பட்டன.
ஒருபுறம் மேல்மட்ட அதிகார வர்க்கம் புலிகளையும், சிறுத்தைகளையும், யானைகளையும் வேட்டையாடியது. இன்னொருபுறம், கடைநிலை அலுவலர்களும் மக்களும் ஒன்றிணைந்து சிவிங்கிப்புலிகளைக் கணக்கின்றி கொன்றொழித்தனர். ஆடுகளையும், நாய்களையும் வேட்டையாடுகின்றனர் என்ற சில்லறைக் குற்றச்சாட்டுதான் அவை முற்றிலுமாக அழித்தொழிக்கப்படக் காரணம். கென்னெத் ஆண்டர்சன்னின் கதைகளில் வெள்ளை அதிகாரிகளும், அவர்தம் மனைவியரும் ‘சும்மா’ ஒரு புலியை வேட்டையாட விரும்புவதை இம்மனநிலையின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கவேண்டியதிருக்கிறது.
இதற்கு மாறான ஒரு சூழலும் இங்கு இருக்கத்தான் செய்தது. உண்மையிலேயே புலிகளும், கரடிகளும், யானைகளும், இன்னபிற விலங்குகளும் அலைந்து திரிந்த நிலப்பரப்புகளில் வசித்த மனிதர்களின் கதைகள் அவை. கேடம்பாடி ஜட்டப்ப ராய் போன்ற இந்திய வேட்டையாடிகள் எழுதிய மிகச்சில குறிப்புகளில் இருந்துதான் அன்றிருந்த உண்மை நிலையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. ஜட்டப்ப ராய் போன்ற நபர்களின் சாகச வாழ்வு இன்று நம்ப முடியாததாய் இருக்கலாம். ஆனால் பலர் இத்தகைய அதிகாரமிக்க வேட்டை வாழ்வை வாழ்ந்துள்ளதை நான் கேள்விப்பட்டும், நேரடியாகப் பார்த்தும் இருக்கிறேன் என்பதால் எனக்கு ஜட்டப்ப ராய் ஒரு நெருக்கமான நபராகத் தெரிகிறார்.
அவரது ‘ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள்’ புத்தகத்தைப் பலமுறை வாசித்திருக்கிறேன். அது உண்மையில் ஜட்டப்ப ராயின் கதை மட்டுமல்ல, காலனியாதிக்க சக்திகளின் கீழ் இயங்கிய இந்தியாவின் ஒரு துளி வரலாறும்கூட.
ஜட்டப்ப ராயின் தாத்தா கர்நாடகத்தின் ‘பிலிமஜாலு’ என்ற கிராமத்தின் தலைவர். அவர் விவசாய நிலங்களில் வந்து தொந்தரவு தரும் விலங்குகளைக் கட்டுப்படுத்த வெள்ளையரான கலெக்டரின் தலைமையில் ஒரு வேட்டைக்கு ஏற்பாடு செய்கிறார். அன்று அதுவோர் இயல்பான நடைமுறை. அவ்வேட்டையில் கலந்துகொள்ளும் சிறுவன் ஜட்டப்ப ராய் தன்னுடைய கல்வியைத் துறந்து, ஊர் சண்டியராக, திறம் வாய்ந்த வேட்டையாடியாக மாறுவதுதான் கதை. வேட்டையில் தனது பேரன் பெற்ற முதல் வெற்றியைத் தொடர்ந்து, ஜட்டப்பாவின் தாத்தா ஒரு நீண்ட அறிவுரையை அவனுக்கு வழங்குகிறார். அது அன்றுவரை நிகழ்ந்து வந்த பாரம்பரிய வேட்டையின் விதிமுறைகளின் சுருக்கம்தான். அதேபோல், வேறோர் இடத்தில் ஆங்கிலேயரான ரோசலின் தனது நாட்டின் வேட்டை விதிகளைக் கூறுகிறாள். கிட்டத்தட்ட சுய ஒழுக்கம் தேவைப்படும் ஒரு விளையாட்டாகவே வேட்டை இருந்துவந்துள்ளதை இவ்விரு மனிதர்களின் சொற்களில் இருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
கருநாகம் ஒன்றைக் கொன்றுவிடும் ஜட்டப்பா அவ்வுயிரினம் குறித்த தனது எண்ணம் என்று கூறாமல், பிறர் பாம்புகளின்மீது கொண்ட நம்பிக்கைகளைச் சிதைத்ததுபற்றிக் கூறிவிட்டு அதைக் கடந்து சென்றுவிடுகிறார். எங்களது நூறு ஏக்கர் நிலத்தில் நூற்றியொரு தேவதைகள் இருக்கின்றனர் என்று எள்ளலுடன் குறிப்பிடும் அவர், இன்னோரிடத்தில் சுப்பிரமணியர் கோயில் நோன்பினால் கறி தின்ன இயலாமல் இருப்பது குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். கடவுள் நம்பிக்கை கொண்டவரான அவர் இப்படியான விமர்சனங்கள் வழியே நவீனத்துவம் நோக்கி நகர்ந்த இந்தியர்களின் பிரதிநிதியாக நமக்குத் தெரிகிறார்.
ஆண் – பெண் நட்பை, அதன் தூய்மையை அறிந்த நவநாகரீக மனிதனாக அவரால் நடந்துகொள்ள முடிகிறது. இது வெள்ளையரிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட ஒரு விஷயமல்ல என்றும், நமது நாட்டின் ‘குடியா’ போன்ற பல இனமக்களிடையே நடைமுறையில் உள்ள ஒரு பண்புதான் என்பதையும் அவர் குறிப்பிடத்தவறவில்லை. அதே சமயம், நமது மக்கள் வெள்ளையினப் பெண்கள் குறித்து எப்படியான கீழ்மையான எண்ணம் கொண்டிருந்தனர் என்று சொல்லி, பொதுவாக மனிதர்களை இனம் சார்ந்து புனிதப்படுத்தப்படவோ, கீழ்மைப்படுத்தப்படவோ வேண்டிய தேவையில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.
இன்னொருபுறம் இப்புத்தகம் குன்னிமோனு என்ற இஸ்லாமியரின் கதையும்தான். சிறுவன் ஜட்டப்பா வேடிக்கை பார்க்கச்செல்லும் அந்த வேட்டையின்போது பன்றிக்கறியை விலக்கிவிட்டுத் தன்னுடைய பங்காகக் காட்டாட்டுக் கறியைப் பெற்றுக்கொள்ளும் குன்னிமோனு, காலப்போக்கில் ராயின் நம்பிக்கைக்கு உரிய தோழனாக, வேட்டைத்துணைவனாக மாறுகிறார். முதல்முறையாக பற்கள் விழுந்துவிட்ட வேட்டையாட இயலாத கிழட்டுப்புலியைக் கொல்லும் ஜட்டப்பாவுடன் இருக்கும் அவர், இறுதியில் தனது பற்கள் எல்லாம் விழுந்துவிட்ட நிலையில் ஒரு நேர இறைச்சி விருந்திற்காகக் காத்திருப்பதும், வேட்டையைக் கைவிட்டுவிட்ட ஜட்டப்பா ஒரு வளர்ப்பு ஆட்டின் கறியை அவருக்கு அனுப்பி வைப்பதும் வாழ்வின் நகைமுரண்தான்.
இப்புத்தகம் வேட்டையைக் கொண்டாடுவதைவிட, மக்களின் பாடுகளை, அதனால் ஏற்படும் வேட்டைக்கான தேவையை, தனிமனித வேட்கையை, அதில் அவன் பெரும் வெற்றி, தோல்விகளை சமரசம் ஏதுமின்றிப் பேசுகிறது. இப்படியாக மண்ணின் மைந்தன் ஒருவன் பார்வையில் ‘ஒரு பெருநிலத்தின் கதை’, இலக்கியமாக விரிந்து நிற்கிறது.
ஜெய சாந்தியின் மொழிபெயர்ப்பு வாசிப்பிற்கு இடையூறு செய்யாத வகையில் அமைந்துள்ளது. அதே சமயம் கடந்த சில ஆண்டுகளாக தமிழில் உருவாகிவந்துள்ள சூழலியல் சார்ந்த கலைச்சொற்களைக்கொண்டு இப்புத்தகம் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியமும் உள்ளது.
