‘புனைவும் நினைவும் வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்’ கவிஞர் சமயவேல் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு. ஏற்கனவே ‘கூடு’ மின்னிதழில் வெளிவந்த கட்டுரைகளை அச்சுவடிவம் கொடுத்துள்ளார் மணல் வீடு ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன். மணல் வீடு பதிப்பகத்திற்கே உரிய நேர்த்தியுடனும், நேர்மையுடனும் நூல் வெளிவந்துள்ளது. கவிஞர் சமயவேல் தன்னுடைய பால்யகால வாழ்வினை மலரும் நினைவுகளாக படைத்துள்ளார். கட்டுரைகளைப் படிக்கும் வாசகர் எது நினைவு எது புனைவு என்றறியாத தவிப்பில் இருக்க வேண்டும் என்ற படைப்பாளியின் விருப்பம் இனிதே நிறைவேறியுள்ளது. கனடா வாழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்‘ நூல் ஏற்படுத்திய அற்புதத்தை சமயவேலின் நினைவும் புனைவும் நூல் சாதித்துள்ளது. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) என்ற பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்தாளர் எலியா என்ற புனைப்பெயரில் எழுதிய கட்டுரைகளுக்கு இணையானவை சமயவேலின் கட்டுரைகள்.
எட்டயபுரம் அருகில் உள்ள வெம்பூர் எனும் கரிசல் காட்டு கிராமம் சமயவேல் பிறந்து வளர்ந்த ஊர். வானம் பார்த்த பூமி. வெயிலுடனும், வறுமையுடனும் மல்லுக்கட்டி வாழ்கிறார்கள் ஊர்ச்சனங்கள். இளம் வயதில் இயற்கையுடன் இயைந்த வாழ்வு கிட்டிய பெருமிதத்தில் மிதக்கிறார் சமயவேல். கலாச்சார எச்சங்கள் எனும் நூலின் முதற்பகுதியில் வெம்பூர் மக்களின் பழக்க வழக்கங்கள், சாதிய கட்டுமானங்கள், திருவிழாக்கள், மழை பொய்த்ததால் ஏற்பட்ட பஞ்சம், நிலவுடைமைக் கலாச்சாரத்தின் இறுக்கமான பாலுறவுக் கட்டுப்பாடுகள், ஆண் மையச் சமூகத்தில் ஆண்களின் பாலியல் வக்கிரங்களுக்கு பெண்கள் பலியாவது, விவசாயம் தழைக்காமல் கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி புலம் பெயர்வது, இறந்தோருக்கான சடங்குகள் எந்தவித மாற்றமுமின்றி காலங்காலமாகத் தொடர்வது பற்றியெல்லாம் உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கிறார்.
வன்மமான சாதிய பாகுபாடுகள் இல்லையென்றாலும் வெம்பூரிலும் இரட்டை தம்ளர் முறை இருந்ததையும், இரட்டைத் தம்ளர் முறைக்கு எதிராக அவர் ஆற்றிய துணிச்சலான நடவடிக்கையையும், அதில் அவர் அடைந்த வெற்றியையும் பதிவு செய்கிறார். இப்படி வெளிப்படையான சாதியம் சார்ந்த ஊர்களில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வேதனையுடன் கூறுகிறார். ஆங்கிலக் கவிஞர் ஆலிவர் கோல்டு ஸ்மித், ‘தி டெசர்ட்டட் வில்லேஜ்‘ என்ற கவிதையில் நகரமயமாதலின் விளைவால் எவ்வாறு பதினெட்டாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் கிராமங்கள் சிதைந்தன என்பதை சித்தரித்துள்ளார். அவர் காட்டும் அபர்ன் எனும் கிராமத்திற்கும் சமயவேல் காட்டும் வெம்பூருக்கும் பெரிய வேறுபாடில்லை.
‘ஊரில் எனது மனிதர்கள்‘ எனும் நூலின் இரண்டாம் பகுதியில் நல்லதொரு சொற்சித்திரத்தைக் காண்கிறோம். காடை சண்முகம் என்பவர் வெம்பூரைச் சுற்றியுள்ள பறவைகள் பற்றிய அத்தனை செய்திகளையும் அறிந்த பறவையியலாளர். பறவைகள் மீதான அவரின் ஆர்வத்தை அவரது குடும்பமும், கிராமமும் அங்கீகரித்தது அக்கால வாழ்வியலின் மேன்மையைச் சுட்டுகிறது என்கிறார் சமயவேல்.
குருசாமி எனும் சலவைத் தொழிலாளி பழந்தின்னி வௌவால்களை வேட்டையாடுவதில் கொண்டிருந்த சாதுர்யம் வியப்பிற்குரியது. பூச்சன் கடும் உழைப்பாளி. மௌனம் தான் அவர் மொழி. வார்த்தைகளின்றி வெறும் வகை வகையான சிரிப்புகளினால் மட்டுமே உரையாடலை நகர்த்துபவர். தபால்காரர் பிச்சை ஒரு ஏசுவின் ஊழியர். சமயவேலின் ஆரம்ப கால வாசிப்பு வேட்கைக்கு உறுதுணையாக இருந்தவர் பிச்சை. பந்தல்குடியிலிருந்த பொது நூலகத்திலிருந்து புத்தகங்களைக் எடுத்துவந்து கொடுத்து உதவியவர். வெம்பூர் கிராமத்தில் ஒரு பறவையியலாளர் வாழ்ந்ததுபோல் ஒரு பெண்ணியலாளரும் வாழ்ந்தார் என்பது நம்மை வியக்கவைக்கிறது. பெண்ணியலாளர் ஆனந்தியம்மாள் யாருக்கும் அஞ்சாத பெண்மணி. கிராமத்துப் பெண்களின் குடும்பச் சண்டைகளைத் தீர்த்துவைப்பார்.
ஆண்-பெண் உறவில் பொது ஒழுக்கவிதிகள் நிலவிடும் அதே நேரத்தில் விதி மீறல்களும் இருக்கத்தானே செய்கின்றன. அந்தக் கிராமச் சூழலில் ஆனந்தியம்மாள் பெண்ணியலாளராக மட்டுமல்ல; ஒரு தன்பால் உறவுப் பெண்ணாகவும் வாழ்ந்துள்ளார் என்பது நம்மைத் திகைக்கவைக்கும் உண்மை. வெம்பூர் கொண்டிருந்த மற்றுமொரு அதிசயப் பெண் கனியக்கா. கணவனைப் பிரிந்து தனித்து வாழ்ந்த கனியக்கா தி.ஜானகிராமனின் ரசிகை. அவரின் புனைகதைகளைப் படிப்பதுடன் ஆழ்ந்த விவாதங்களிலும் ஈடுபடுவார். கவிஞரான சமயவேலின் உரைநடையும் கவித்துமானதாக இருக்கிறது. வெம்பூர் தமிழக கிராமங்களின் ஒரு அடையாளமாகும். இந்தியாவின் பண்பாட்டுப் பெட்டகங்களாக அதன் கிராமங்கள் இருப்பதை வெம்பூர் உறுதிப்படுத்துகிறது.
