இந்நூல் சிறுவர்களுக்கு மட்டுமல்ல. சிந்தனையிலும், செயலிலும் முதிர்ச்சி பெறாத பெரியவர்களுக்கும்தான்.
‘‘ஏன்? எதற்கு? எப்படி என்று சிந்திப்பதே பகுத்தறிவின் துவக்கம். ஆறறிவு பெற்ற மனிதர்களுக்கு ஒண்ணே முக்கால் அடியில் பொதுமறை தந்த திருவள்ளுவர் போல், இந்நூலாசிரியரும் ஒவ்வொரு கதைகளையும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் அளித்துள்ளார். ‘நீ யார்’ என்ற கேள்விக்கு விடை தந்து முதல் கதையை துவக்கி மொத்தம் 50 தலைப்பில் கதைகளை எழுதியுள்ளார்.
பள்ளித் தேர்வுகள், பாலினம், எது இறைவன் படைப்பு, எது தகுதி மனிதர்களால் ஏற்பட்ட கடவுளின் பரிணாமங்கள் கடவுளுக்கும் உள்ள கடமைகள் என்று நறுக்குத் தெறித்தாற்போல் உணர வைக்கிறார். ஒரு கதையில், ‘‘கல்வி கற்க தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது சிறப்பு. குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வந்தான். ஆனால் தேர்வு என்றால் பயம் என்பதே ஏதார்த்தம்.
இறைவன் பெயரால் நடக்கும் வணிகத்தை சாடுகிறார். படிக்க வேண்டிய வயதில் வேலைக்குச் செல்லும் சிறுவனின் உள்ளக்கிடக்கையை ‘‘ஏக்கம்” என்ற கதை பிரதிபலிக்கிறது. தேர்வு எழுத எது முக்கியம்? நாடு கெட்டுப் போச்சு என்றால், அதன் கர்த்தர் யார்? என்பதை உணர்த்துதல் வெகு நேர்த்தி. மருத்துவத்தில் எது நியாயம் என்பது இக்கால டாக்டருக்கு உணர்த்தும் கதை. நம் சமூகத்தில் நிலவும் ‘‘தீண்டாமை’’யின் வலியை ‘அடிசக்கை’ கதையில் நாசுக்காக கொட்டு வைக்கிறார். ‘‘ஆதாரம்” என்ற கதையில் நம்மை படைப்பதாக கூறும் கடவுள் பற்றிய விளக்கத்தில் ஆன்மீக சொல்வேந்தரின் திணறல். அதில் மேலும் அவருக்கு உண்டாகும் கோபம். அந்தோ பரிதாபம்!
எது அடிமைத் தனம் என்பதை யானை மூலம் தெளிவுபடுத்துகிறார். பூமி, சூரியன் இயக்கங்கள் பற்றி ‘‘அறிவுச் சூரியன்’’ என்னும் ஒரே பக்க கதையில் சொன்ன விதம் சிறப்பு.
என்ன பண்றோம்னு தெரியாமலேயே தொடர்ந்து சிலவற்றைச் செய்தால் பிறகு பழக்கமாகிவிடும் என்பதை கண்மூடித்தனம் என்றுதானே சொல்ல வேண்டும்.
கடவுள் தூணிலும், துரும்பிலும் இருப்பார் என்பது அக்காலம். இக்காலம் எதில் இருப்பதாக பரப்பப் போகிறோம் என்பதைப் படிக்கும்போது சிந்திக்க வைக்கிறார். யாருடைய முகத்தில் இறைவனைக் காணலாம் என்பதை ‘‘புதிய பூஜை’’ என்ற கதையில் காணலாம். ‘‘அறிவுடையார் எல்லாம் உடையார் என்பதை படிங்கப்பா’’ என்ற கதையில் சுருங்கச் சொல்லி அசத்திவிட்டார்.
வைகுண்ட ஏகாதசி அன்று விடிய விடிய கண் முழித்தால் கிடைக்கும் சொர்க்கத்தின் தூரத்தை அறிவியல் முறையில் கணக்கிட்டு நச்சென்று சொல்கிறார். ‘‘வைகுண்ட ஏகாதசி’’ என்ற கதையில்.
விதி எது? உழைப்பு எது? அழகான பதில் தருகிறார். கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் எப்போதும் சிறப்புதான். அதில் வேறு கருத்தில்லை என்பதை அழுத்தமாக விளக்குகிறார்.
அப்பா தன் தலைக்கு ‘டை’ அடிப்பது தேவைதானா என்பதை மகன், தன் Progress Report மூலம் உணர வைப்பது வித்தியாசமான ஒன்று. நல்ல சிந்தனை. படிக்கும் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து (encourage) பாராட்டினால் சிறப்பாக வருவார்கள் என்பதை வற்புறுத்துகிறார்.
இந்நூலின் எழுத்தாளர் தோழர் பாலுமணிவண்ணன் அவர்கட்கு உறுதுணையாக இருந்து நூலை வெளியிட்ட தோழர் துரைப்பாண்டியன்
(மு.கா.புத்தகப்பண்ணை) பாராட்டுக்கு உரியவர்.
இந்நூலைப் படிக்கும் சிறுவர்கள் பகுத்தறிவில் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. நல்ல முயற்சி. நூலாசிரியருக்கு என் பாராட்டுக்கள்.