எகிப்திய மொழியின் பெண்ணிய நாவலாசிரியை நவல் எல் சாதவி. அரேபிய பெண்ணின் மனசாட்சியை திரை விலக்கி ஆணாதிக்க பாசாங்குகளின் மேல் சாட்டையை சொடுக்கும் எழுத்துக்களின் சொந்தக்காரர். ஒரு டாக்டர் அவர். ஆனால் மிகுந்த நவீனத்துவ நுணுக்கம் மிக்க எழுத்தாளர். இவருடைய The hidden face of eve. நாவலை சமீபத்தில் தான் வாசித்திருந்தேன். இப்போது எதிர்வெளியீடாக வந்துள்ள ‘சூன்யப் புள்ளியில் பெண்’ எனும் முதல் நாவலை தமிழிலேயே வாசிக்கும் வாய்ப்பு.
பிர்தவ்ஸ் எனும் பெண். தூக்கு தண்டனைக் கைதி. அவரை சந்திக்கப் போகும் மனநலமருத்துவராக கதை சொல்லி நாவலில் ஏறக்குறைய ஒவ்வொரு வரியுமே நமக்கு அதிர்ச்சியை உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தருகிறது. பிர்தவ்ஸ் தான் விபசாரியாக்கப்பட்ட கதையைச் சொல்லச் சொல்ல ரத்தம் கொதிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் சாதாரணப் பெண்களின் போராட்ட வாழ்வைச் சொல்ல ஒரு நாவல் போதாது
மாமாவின் பாலியல் பலாத்கார வக்கிரங்களுக்கு இடையே பிர்தவ்ஸ் பள்ளி படிக்கும் வறுமை நிலையை வாசித்தபோது என் மனம் விம்மி அழுதது. மிக அற்புதமான நாவல் தமிழுக்கு தந்திருப்பவர் சசிகலா பாபு. உக்கிரமான நூல்.
சூன்யப் புள்ளியில் பெண் நாவல் எல் சாதவி
த. சசிகலா பாபு
எதிர்வெளியீடு, பக். 152, விலை. ரூ.160.