குடும்பம், தனிச் சொத்து மற்றும் அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸின், திருப்புமுனை புத்தகம் 1884ல் வெளிவந்தது. பெண் அடிமைப்பட்டுக் கிடப்பது, பெண் தலைமை சமூகம், மாற்றமடைந்ததற்கு காரணம்… சமூகப் பொருளாதார முதலாளிய அடிமைச் சமூக உருவாக்கத்தோடு நடந்த தற்காலிக போலிச் சூழல்; அதிலிருந்து நமக்கான சோஸலிச பெண்ணியத்தை கட்டி எழுப்பிய வரலாற்றுச் சிறப்பு மிக்க போராளிகளான கிளாரா ஜெட்கின், எலியனார் மார்க்ஸ் மற்றும் அலெக்சான்டரா கோலன்தாய் ஆகியோர்; பூர்ஷ்வாக்களின் வரட்டுக் கூச்சல் பெண்ணிய வாதத்தில் இருந்து மார்க்சிய பெண்ணியத்தை தனித் தெடுத்தனர். 1940களில் உருவான ராடிக்கல் உமன் எனும் (புரட்சிகர பெண்கள்) அமைப்பு பெண்களுக்கும் பூர்வீக சொத்தில் சம உரிமையை மட்டும் கேட்கவில்லை.
பாலியல் சமத்துவம் என்ற சொல்லாக்கத்தின் மூலம் சம அளவு கல்வி, வேலை, வேலைக்குக் கூலி யாவற்றையும் முன்வைத்தபோது ஆணாதிக்க பிற்போக்கு முதலாளித்துவம் அதிர்ந்தது. அப்போது நமக்குக் கிடைத்ததுதான் சைபோர் பெண் விடுதலை அறிக்கை (A Cybour manifesto). அந்த அறிக்கை; பெண்களுக்கான அறைகூவலாகவே முன் வைத்தது. பல சமூகங்களில் மத நூல்கள் தவிர பெண்கள் எதையுமே வாசிக்க அனுமதிக்கப்படுவது இல்லை. கிருத்துவம் பைபிளையும் இசுலாம், குரானையும் வாசிக்கவும் மட்டும்தான் அவர்களை படிக்க வைத்தது. நம் இந்திய மண்ணின் வரணாசிரம மதமோ வேதம் படிக்கக்கூட பெண்ணை அனுமதித்தது இல்லை. மாதவிடாய் போன்ற இயற்கை அம்சங்களை காரணம் காட்டி பெண் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்படுவது இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.
பெண் படிக்கவோ பணிக்குச் செல்லவோ கூடாது; வீட்டில் முடங்குவதே பெண்ணின் ‘படைப்பு’என எம்.பி.க்களும் மந்திரிகளும் காவி நஞ்சை அவ்வப்போது துப்புவதும், பாலியல் வக்கிர கொடியவர்கள் உயர்ந்தவர்களாக புனித சாமியார்களாக வலம் வருவதும் பாசிச ஆட்சியின் அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது. இவற்றில் இருந்து மீண்டு பெண் விடுதலையை சாதிக்கும் ஒரே ஆயுதம் வாசிப்புதான். சுதந்திர வாசிப்பு என்பதை பெண்கள் கையிலெடுத்தால் அந்த குடும்பமே வாசிப்பை கையில் எடுக்க பெண் வாசித்தாலே போதும். வாசிப்பின் வழியே மீண்டு எழும் பெண் சமூகங்கள் ஏராளம். லத்தீன் அமெரிக்காவின் இன்றைய முழக்கம் ‘பிங்க்- பேரலை’ (Pink tide) என்று அழைக்கப்படுகிறது.
கார்பரேட்களுக்கு எதிரான சோஷலிஸம் அது. என் விடுதலைக்கான பாதை வாசிப்பில் உள்ளது’என பெண்கள் முழங்கும்போது உணர்வுப் பூர்வமான விடுதலை நோக்கிய முதல் படியை எடுத்து வைக்க முடியும் என்று பெண் விடுதலையின் அரசியல் பொருளாதாரம் கட்டுரையில் மார்கரெட் பென்ஸ்டன் 1969லேயே எழுதுகிறார். அதைத் தான் பெண் ஏன் அடிமையானாள் நூலிலும் தந்தை பெரியார் முழங்குகிறார். வாசிப்பின் வழியே பெண் விடுதலையை சாதிப்போம். சர்வதேச பெண்கள் தினத்தில் புத்தகங்களை பெண்பிள்ளைகளுக்கு பரிசாகக் கொடுப்போம். – ஆசிரியர் குழு