பளுதூக்கும் இளவரசி என்பது கதையின் பெயர். 53 கிலோ மட்டுமே இருந்த இளவரசி நிலாவுக்கு வருத்தமாகி போனது. அவளது தேசத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற பளுதூக்கும் போட்டியில் அவள் கலந்து கொள்ள அவளது எடையில் இரண்டு கிலோ குறைவாக உள்ளதே அதன் காரணம். நிலா இதற்குத்தான் இத்தனை நாளாக காத்திருந்தாள். அவள் குழந்தையாக இருந்த போதே நாய், பலகை, நாற்காலி, மேசை எல்லாத்தையும் தூக்கி மகிழ்ந்திருப்பாள். சில நேரங்களில் தன் தந்தையை கூட. வருத்தமாக இருந்த தன் குழந்தையிடம் தாய் கேட்டாள், “எப்படி உன் பயிற்சி எல்லாம் நடக்கிறது என்று“. “எங்கேம்மா, இன்னும் இரண்டு கிலோ எடை போட வேண்டும்“. “சரி கண்ணு, வேகவைச்ச முட்டை சாப்பிடு” என ஊக்குவித்தாள் அம்மா. சரியான வயது வருகையில் சென்ற முறை போட்டியில் ஜெயித்த விக்ரம் இளவரசரோடு தன்னை மணம் முடித்து வைக்க அவள் அப்பா காத்திருக்கையில், அவளோ தூர தேசத்தில் விளையாட்டு பல்கலையில் சேர ஆர்வம் கொண்டிருந்தாள். நாட்கள் செல்ல, செல்ல நிலா கடுமையாக பயிற்சி எடுக்கலானாள். மலைகளில் ஏறியும், ஆற்றில் நீந்தியும் அதே சமயம் உடல் எடை கூட பழங்களை, காய்கறிகளை, மாமிசத் தை உண்ணலானாள். போட்டிக்கு ஒரு வாரம் முன்னதாக, நிலா எடை பார்த்திட, அப்பாடா, அவள் தயாராகி விட்டாள், ஆம் அவள் எடை இரண்டு கிலோ கூடியிருந்தது. கடும் போட்டியாளர்களுடன் மோத அந்த நாளும் வந்தது. எல்லோரும் எல்லாவற்றையும் தூக்கலானார்கள். நீதிபதிகள் எவர் கைகள் நடுங்குகின்றன, கால்கள் நடுக்கம் கொள்கின்றனவா, எடை தூக்கி சரியாக நிற்கிறார்களா என பரிசோதித்த வண்ணம் இருந்தனர். இறுதியில் இளவரசன் விக்ரம், மற்றும் இளவரசி நிலா மீதமிருந்தனர். இருவரில் எவர் அந்த பழைய புராதன இரும்பு அரியணையை தூக்குகிறார்களோ, அவரே போட்டியில் வெற்றி பெறுவார். இறுதியில் நிலா ஜெயிக்கிறார். அவள் தந்தை பெருமிதத்துடன், நிலா நீ இனி வெற்றியாளரின் மனைவியாக தகுதி பெறுகிறாய் என, அவளோ, இல்லை, இல்லை, நானே வெற்றியாளர் என பெருமிதத்துடன் சொன்னாள்.
இப்படி ஒரு கதை www.storyweaver.org.in என்னும் வலைதளத்தில் வந்தது. அதன் கதை ஆசிரியராக இருப்பவர் சௌம்யா ராஜேந்திரன். குழந்தை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அவரோடு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் நடத்திய பேட்டியின் தமிழாக்கம் பின்வருமாறு :
பளுதூக்கும் இளவரசி என்னும் இந்த
கதை எழுதும் எண்ணம் எவ்வாறு உருவானது?
வழக்கமான இளவரசி கதை என்பதாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதொரு “இளவரசி’ கதையை எழுதி தருமாறு “பிரதம் புக்ஸ்” நிறுவனம் கேட்டிருந்தது. இதற்கு சில நாட்களுக்கு முன்புதான், “புத்தகங்களில் மற்றும் திரைப்படங்களில் வரும் பெண்களின் கைகளும் சரி, பெண் குழந்தைகளின் கைகளும் சரி ஏன் குச்சி மாதிரி இருக்கின்றன? என என் ஏழு வயது பெண் கேட்டிருந்தாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அதற்கு பின் உருவான கதையே இந்த “பளுதூக்கும் இளவரசி”, நிலாவும் பளுதூக்கும் வீராங்கனையாக உருவானாள்.
மற்ற தேவதை கதைகளில்/ராஜா ராணி கதைகளில் இல்லாத வகையில் நிலா என்னும் இந்த பளுதூக்கும் வீராங்கனை எப்படி வித்தியாசமானவள் ஆகிறாள்?
Girls to the Rescue என்னும் தலைப்பில் தூலிகா புக்ஸ் நிறுவனத்திற்கு நான் ஏற்கெனவே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அக்கதையில் வழக்கமான தேவதை கதைகளில் வரும் முடிவுகளுக்கு மாறான முடிவை தருவதாக படைத்திருக்கிறேன். அது மட்டுமல்லாது, மாற்று வளர்ப்பு முறைகளை கொண்ட பெற்றோர் கதாபாத்திரங்களை படைத்திருப்பேன். இருந்தபோதும், இக்கதை அந்தக் கதையின் தழுவல் அல்ல அசல் கதையே. வழக்கமான இளவரசி கதைகளில் வரும் இளவரசிகள் நளினமாக கொஞ்சமாக உணவு உண்பவர்களாக இருப்பார்கள். இக்கதையில் வரும் நிலாவோ நன்றாக உண்பவராகவும், தன்னுடைய விளையாட்டில் அதிகம் பயிற்சி எடுப்பவராகவும் இருக்கிறாள். வடிவழகனான ஒருவரை கண்டடைவது என்பதாக அவள் இலக்கு இல்லை, மாறாக தான் ஒரு வெற்றியாளராக இருக்கவே அவள் விரும்புகிறாள். நிலாவின் தாய்க்கும் இதே போன்றதொரு கனவு அவள் இளமைக் காலத்தில் இருந்த காரணத்தா, தாயின் உதவியும் ஒரு கூட்டாளியாக நிலாவிற்கு கிடைக்கிறது. தேவதை/ராஜா ராணி கதைகளில் அரிதாகவே பெண்கள் மற்ற பெண்களுக்கு உதவுபவராக ஆதரவு தருபவராக இருக்கிறார்கள்.
எந்தெந்த வகைகளில்
இப்புத்தகம் குழந்தைகளையும் பெற்றோர்களையும்
கவரும் என நினைக்கிறீர்கள்?
முதலில் இந்த கதை அவர்களை
வழக்கமான பாலின பங்களிப்பினை தாண்டி யோசிக்க வைக்கும். அடுத்தது, பெண் குழந்தைகள் வெயிலில் விளையாடுகையில் கறுத்துவிடுவார்கள் என்று அவர்களை
விளையாடுவதை தடுக்கும் எண்ணத்தை கைவிடுவார்கள். நிலாவை எவர் கையிலோ பிடித்து
ஒப்படைப்பதே இலக்கு என நினைக்கும் அவளது தந்தையின் கதாபாத்திரத்தில் பெற்றோர்கள் தனக்ளை ஒப்புமையாக கண்டு, அந்த மனநிலையிலிருந்து வெளியேறுவார்கள் என
நம்புகிறேன். அதோடு, இந்த கதையை வாசிக்கும் குழந்தைகள் பெரியவர்கள் சொல்லும்
பெண்கள் மென்மையானவர்கள் மற்றும் குழந்தைகள் பெற்றோர்களின் கனவினை நனவாக்கவே
உருவானவர்கள் என்ற கற்பிதங்களை நம்பி விடாமல் இருக்க பயில்வார்கள் எனவும்
நம்புகிறேன்.
குழந்தைகளிடையே உணர்வூட்டுவதற்கு எந்த விதத்தில் வாசிப்பு பழக்கம் பங்களிப்பினை செய்கிறது என எண்ணுகிறீர்கள்?
முதலில் புத்தகங்கள் நம்மிடையே உள்ள பச்சாதாப உணர்வை பிறர் நிலை உணர்ந்து அறியும் அறிவை), பரிவுணர்வை உண்டு பண்ணுகிறது. தற்போதுள்ள சூழலில் அவர்களால் வாழ இயலாத வாழ்வினை கற்பனை செய்து பார்க்க தூண்டுகிறது. அதே நேரம் எல்லாம் மாற்றவல்லவையே என்னும் எண்ணத்தை வளர்த்தெடுக்கிறது. ஒரு கதை உங்களை தொட்டுவிட்டால், உங்களிடம் ஏதோ ஒன்று மொத்த வாழ்வுக்குமாக மாறிவிடும்.
வழக்கம் போலான தேவதை/ராஜா-ராணி பொய் முகத்தை கிழித்தெறியும் நோக்கம் மட்டும் இ ல்லாமல் கதையாக மட்டும் இக்கதை இல்லாமல், தேர்வு செய்வதற்கான சுதந்திரம் குறித்து குழந்தைகள் அறியவும் இக்கதை உதவுகிறது என நினைக்கிறேன். இது எவ்வளவு முக்கியம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
நிச்சயமாக. பெற்றோர்களாகிய நாம் நம்மோடு நம்சார்பு நோக்கங்களோடு இருப்பினும், நம் குழந்தையின் ஒழுக்கத்தில் அதீத முக்கியத்துவம் காட்டுகிறோம். அதோடு இல்லாமல், நம்மைப் போன்றே ஒரு சிறிய மாதிரியாகவே நம் குழந்தைகளையும் காண்கிறோம். பெற்றோர்களாகிய நாம் ஒன்றும் ஒரே இரவில் பெரியவர்களாகி விடவில்லை. குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு தேர்வு செய்யும் சுதந்திர வெளியை நாம் அதிகரிக்க வேண்டும். அதன் வழியே தான் குழந்தைகள் பொறுப்புடன் முடிவுகளை எடுக்க கற்பர். அத்தோடு, பெற்றோர்களாகிய நாம் எவ்வாறு செய்த தவறுகளிலிருந்து கற்றோமோ, அவ்வாறே நம் குழந்தைகளும் கற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
குழந்தைகள் பெண்ணியவாதிகளாக வளர்த்தெடுக்க பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எதை சொல்வீர்கள்?
சமூகம் வரையறுத்துள்ள பாலின புரிதல் எண்ணத்தோடு குழந்தைகள் பிறப்பதில்லை. பெற்றோர்களாகிய நாம் தான் குழந்தைகளின் தலையில் அதை ஏற்றுகிறோம். சமூகமும் மீண்டும் மீண்டும் அதையே வலியுறுத்துகிறது. எனவே, பெற்றோர்களாகிய நாம் சமூகம் வைத்துள்ள பாலின பாகுபாடு குறித்த வரையறைகளிலிருந்து தன்னை கட்டுடைத்து கொள்ள வேண்டும். அதுவே முதல் பணி. இரண்டாவது,ம் சமூகம் பாலின பாகுபாடு குறித்து வைத்துள்ள கருத்துக்கு மாறான கருத்தாக்கங்களை குழந்தைகளிடம் அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுப்புத்தியில் என்ன உள்ளதோ அவற்றை விவாதிக்க தடை போடாமல் குழந்தைகளோடு உரையாற்ற வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள அனுமதிக்க கூடாது. சினிமாவில் எந்த நாயகன் தன்னை முதல் காட்சியில் அடித்தானோ அவனையே அடுத்த காட்சியில் காதலிப்பதாக காட்டுகையில், பெற்றோர்கள் அந்த குழந்தைகளிடம் அது ஏன் காதல் இல்லை எனவும், அவை உதவாது எனவும் பேச வேண்டும். இறுதியாக, குழந்தைகளை பெற்றோர்கள் தம்மோடு முரண்பட அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கான அரசியலை அவர்கள் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும்.
தமிழாக்கம் : சீ.நா.இராம்கோபால் மற்றும் நளினி. க