அலிகார் இயக்கம் என்று பள்ளி வரலாற்றில் எப்போதோ படித்த வார்த்தையும், அதை தோற்றுவித்தவர் சர் சையது அகமதுகான் என்பதும் நினைவுக் குறிப்புகளாக எஞ்சி நிற்கின்றன. விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள சர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு என்ற நூல் அந்த மகத்தான மனிதர் குறித்து தெரிந்து கொள்வதற்கு ஆயிரம் விஷயங்களை முன் வைக்கிறது. ரஷ்யப் புரட்சி நடப்பதற்கு மிகச்சரியாக நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த, 81 வயது வரை வாழ்ந்த அந்த மனிதரின் கடல் போன்ற வாழ்க்கையின் சில துளிகள் நமக்கு இப்புத்தகத்தில் கிடைக்கிறது. இது நிச்சயம் தனி மனித வாழ்க்கை வரலாறு அல்ல, அப்படி இருப்பின் இந்தத் தொடரில் எழுதும் அவசியம் கூட வந்திருக்காது.
இது இஸ்லாமிய சமூகத்தை நவீன கல்வியின் பக்கம் திருப்பிய ஒரு இயக்கத்தின் கதை.
இந்திய வரலாற்றை திரும்பி வாசிக்கும் போது இந்து சமூகத்தில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்கள் போல இஸ்லாமிய சமூகத்தில் ஏன் இத்தனை சீர்திருத்த இயக்கங்கள், அல்லது சீர்திருத்தவாதிகள் உருவாகாமல் இருந்தனர் என்பது ஆய்வுக்குரியதாகும். குறிப்பாக இராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜம் துவக்கியவர் என்பது மட்டுமல்ல, 1817ல் இப்போது கல்கத்தா மாநில கல்லூரியாக இயங்கி வரும், இந்துக் கல்லூரியைத் துவக்கினார். இவர் 1815ல் துவக்கிய ஆத்மிய சபையே 1828ல் பிரம்ம சமாஜமாக மாறுகிறது. தேசிய கவி ரவீந்திரநாத் தாகூரின் தந்தையான மகரிஷி திபேந்திரநாத் தாகூர் அவர்கள் தான் இப்பெயரை சூட்டினார். இவர்களது கொள்கை இன்றைய சமூகச் சூழலில் கூட மிகவும் ஆச்சரியமளிக்கக்கூடியது. உருவ வழிபாட்டைக் கண்டித்தல், உடன்கட்டை ஏறுதல், பலதார மணம், குழந்தைத் திருமணம் போன்றவை எதிர்ப்பு, பெண் கல்வி, விதவை மறுமணம், நவீன மேலைக் கல்வி, ஆங்கில மொழி கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை போன்றவை வலியுறுத்தப்பட்டது.
அதன் பின் இந்த சமூகத்திற்குள் ஏற்பட்ட சமூக சீர்திருத்த இயக்கங்களும், சீர்திருத்தவாதிகளும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தனர். குறிப்பாக சில இயக்கங்களையும் தனி நபர்களையும் பார்த்தால் தெரியும். ஆரிய சமாஜம், சந்திர வித்யாசாகர், விவேகானந்தர், ஜோதிபா கோவிந்த பூலே, இராமலிங்க அடிகளார், வைகுண்ட சுவாமிகள், ஸ்ரீநாராயண குரு, அய்யன்காளி, ஸ்ரீபாத சாது மகாராஜா என பட்டியல் நீண்டு டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், சீனுவாசராவ் என தொடரும்.
ஆனால் இந்திய வரலாற்றில் அலிகர் இயக்கம் மட்டுமே இஸ்லாமிய சமூகத்தில் ஒரே இயக்கமாக, ஒப்புயர்வற்ற இயக்கமாக எழுந்து நிற்கிறது. இதன் ஸ்தாபகர் தான் சர்.சையது அகமது கான். இவர்குறித்த எதிர்மறைக் கருத்தரங்கங்களுக்கு முகம் கொடுக்காமல் கடக்க இயலாது. எனவே நமக்கு நன்கு தெரிந்த அம்பேத்கர் குறித்த கற்பிதங்களை நினைவூட்டிக் கொள்வோம்.
தேசபிதா காந்தியின் எதிரி, காந்தியின் உயிருக்கு உலை வைக்கப் பார்த்தார், தலித் வக்காளர்களுக்கு இரட்டை வாக்குரிமை கேட்டு இந்தியாவை இரண்டாக்கப் பார்த்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையர்களுக்குத் துணை போனவர், தலித்துகளை சுதந்திரப் போராட்டத்திலிருந்து தள்ளி வைத்தவர், இந்திய தாய்மொழிப் பற்று இல்லாதவர், ஐரோப்பிய நாகரீகத்தை பின்பற்றி ஆடைகளை அணிந்தவர், இந்தியா முழுமைக்கும் பொது மொழியை வற்புறுத்தியவர், மொழிவாரி மாநில சுயாட்சிக்கு எதிரானவர், இந்து மதத்தை எதிர்த்தவர் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான மக்களோடு பவுத்த மதத்தைத் தழுவியவர், முஸ்லீம் மக்களுக்கு ஆதரவானவர், பாகிஸ்தான் பிரிவினைக்கு தூபமிட்டவர், தலித்ஸ்தான் என்ற தலித் தேசியத்திற்கு வித்திட்டவர்.
இத்தகைய கருத்துகளை புறம் தள்ளி மிக எளிதாக இன்றைய சூழலில் யாரும் பதில் சொல்லக்கூடும். மத துவேசங்களும், விடுதலைப் போரின் மகத்தான கருத்தரங்கங்களும் அம்பேத்கரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை புறம்தள்ளின என்பது எளிதில் புரியும். இதுதான் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த சர் சையது அகமது கானுக்கும் நடந்தது.
சர் சையது குறித்து பலர் பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அவர் ஆங்கிலேயரின் கைக்கூலி, முஸ்லிம்களின் எதிரி, இவர் ஒரு காபிர், அவர் மீது அளிக்கப்பட்ட பத்வா இன்றும் அமுலில் இருப்பதாக தமிழகத்தின் பல முஸ்லிம்கள் நம்புகின்றனர். அவர் முஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமே பாடுபட்டார், இந்துக்களின் எதிரி, பாகிஸ்தான் உருவாகக் காரணம் அவரே என பல குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன. ஆனால் அவரது பணிகள் நடந்த காலம், சூழல் குறித்த முழுமையன ஆய்வுகள் இல்லாமல் அவரை மதிப்பிட முடியாது.
இஸ்லாமிய நாடுகளை, மேற்கத்திய நாடுகள் கைப்பற்றி ஆட்சி செலுத்துகின்றன என்ற நோக்கத்தை மட்டுமே மையமாக வைத்து, இஸ்லாமிய மதத் தலைவர்கள் சில நியதிகளை விதித்திருந்தனர். அதன்படி இஸ்லாத்துடன் தொடர்பில்லாத பிற மொழிகளையும், ஆங்கிலேயர்களின் கல்வியையும், பயிலுதல் தங்கள் மத்த்திற்கு ஒவ்வாது என கருதினர். ஆனால் சர் சையது, இஸ்லாமியர்களின் தோல்விக்கும், ஆங்கிலேயேர்களின் வெற்றிக்கும் மூலகாரணம் அறிவியல் அறிவே என்ற மூலசூத்திரத்தை தனது ஆய்வால் கண்டுபிடித்தார்.
அறிவியல், கண்டிப்பாக அறிய வேண்டிய கல்வி என எடுத்து கூறினார். இதனால் பல மதவாதிகளின் எதிர்ப்பை கட்டாய வரவாக பெற்றார். ஆனால் அதை சைர் சையது ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவே இல்லை. எந்தக் காலக்கட்டத்திலும் ஒரு சமூக சீர்த்திருத்தவாதியை மதமும், மதத்தலைவர்களும் ஆதரிக்கவில்லை என்பதை வரலாற்றின் காலச்சுவடுகள் நமக்கு உணர்த்துகின்றன. கலிலீயோ துவங்கி கெப்ளர் முதற்கொண்டு சாக்ரடீஸ் வழியாக வரலாறு இதையே நிரூபணம் செய்துள்ளது. சர் சையதுக்கும் இதுவே நடந்தது. இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர். இவர் ஓர் முஸ்லிம் இல்லை என்று பத்வா அளித்தது – அவர் மீது வீசப்பட்ட கற்களை அவர் தாங்கினார். அவர் ஏன் இஸ்லாமிய சமூகத்தின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் என்பதற்கு கீழ்காணும் ஒரு தகவல் போதுமானது.
1858 – 1878 காலக்கட்டம் வரையில் அரசு மற்றும் மிஷனரி பள்ளி கல்லூரிகளில் தேர்வு பெற்ற இந்தியர்களின் விபரம் நான்கு வகையான சட்டப் படிப்புகளில் படித்த 950 மாணவர்களில் 13 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இரு பொறியியல் கல்வியில் மொத்தம் 87 மாணவர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை. இளங்கலை முதுகலை பிரிவுகளில் 1669 மாணவர்களில் 35 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இவர்களும் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடத்திட்டத்தைப் படிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.பி.எஸ் உள்ள நான்கு பிரிவு மருத்துவக் கல்வியில் 449 மாணவர்களில் 9 பேர் மட்டுமே முஸ்லிம்கள். எனவே தனது சமுகத்தின் முன்னேற்றத்திற்கு கல்வியை ஒரு ஆயுதமாக மாற்றினார்.
130 ஆண்டுகள் கடந்தும் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வந்துள்ளதா என்ன? இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? தலித்துகள் பழங்குடியினரை விட சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கியே உள்ளனர் என்பதை நீதிபதி ராஜேந்திர சச்சார் 2006 ஆண்டு தெளிவுபடுத்தினார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் ஆகிய பொறுப்புகளில் 3.2 சதவீதம் மட்டுமே முஸ்லீம்கள். இந்தப் பின்னணியில்தான் சர்.சையது அகமது கானின் சமூகப் பணியை பார்க்க வேண்டும்.
ஆங்கிலேய அரசாங்கத்தில் நீதித்துறையில் எழுத்தராக சேர்ந்து நீதிபதியாக உயர்ந்த இந்த மகத்தான மாந்தரின் சீர்திருத்த இயக்கமே அலிகார் இயக்கம், 1863ல் காஜிப்பூரில் அலிகர் அறிவியல் கழகத்தை துவக்கினார். 1864ஆம் ஆண்டு அதே ஊரில் பள்ளியைத் துவக்கினார். இப்பள்ளிக்கு ராஜா தேவ் நாராயண சிங்கும், மௌலானா முகமது பைசலும் இணைந்து அடிக்கல் நாட்டினர். அலிகர் அறிவியல் கழகம் பல்வேறு முக்கியமான நவீனத்துவம் வாய்ந்த அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்த நூல்களே புதிய விழிப்புணர்வை உருவாக்கியன. 1875ஆம் ஆண்டு அலிகாரில் இவரால் தோற்றுவிக்கப்பட்ட முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் (எம்.ஏ.ஓ.) கல்லூரி இவரது சிறந்த சாதனையாக இப்போதும் திகழ்கிறது. இந்தக் கல்லூரியை நடத்த அவர் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! தனது மகனின் திருமணத்தை சிக்கனமாக நடத்தியது மட்டுமல்ல, வலிமா என்ற, உறவினர்களுக்கான மறுவிருந்தைத் தவிர்த்துவிட்டு அதற்கு ஆகுமென எதிர்பார்த்த தொகை ரூ.500 யை கல்லூரி கட்டிட நிதியில் சேர்த்தார். இக்கல்லூரி நாளடைவில் இந்திய முஸ்லிம்களின் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக மாறியது.
இக்கல்லூரியே பிற்காலத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகமாக வளர்ச்சி அடைந்த்து. தனது எழுத்தாற்றலால் முஸ்லிம் சமுதாயத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இஸ்லாமிய பெண்கள் பர்தா எனும் முகத்திரையை அணிவதை நீக்கவும், பெண் கல்வி வளரவும் பாடுபட்டார். இஸ்லாமியர்களிடையே தன்னுடையச் சீர்த்திருத்தக் கொள்கையை விளக்குவதற்காக ‘தாசில் உத் அல்க்’ எனும் தினசரி நாளிதழை நடத்தினார். அவரது பல்கலைக் கழகம் இஸ்லாமியர்களுக்கானது மட்டுமல்ல, இந்துக்களும் அங்கு கல்வி கற்றனர், ஆசிரியர்களில் பலர் இந்துக்கள். சமஸ்கிருதம் துவக்கம் முதலே அங்கு போதிக்கப்பட்டது.
1857ஆம் ஆண்டு நடந்த முதல் இந்திய விடுதலைப் போரை, தில்லியின் அழிவுகளை நேரடியாக பார்த்த, தனது வீடு, குடும்பம் என அனைத்தும் சிதறியதைப் பார்த்த மனிதனின் மனதில் தில்லியின் அழிவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. எழுச்சிக்கு இஸ்லாமியர்ளே காரணம் என்று அவர்களைப் பார்த்த இடங்களிலெல்லாம் ஆங்கிலேயர்கள் வெட்டி வீசியதை, அவர்கள் குடும்பம் குடும்பமாக அழிக்கப்பட்டதை கண்ணீருடன் கடந்து சென்றார். ஆங்கிலேயர்களிடம் பணியாற்றிக் கொண்டே இந்த எழுச்சிக்கு எப்படி ஆங்கிலேயேர்கள் காரணம் என ஒரு பிரசுரத்தை மிகவும் தைரியமாக எழுதி வெளியிட்டார்.
எழுத்துப் பணி அவரது மற்றொரு மகத்தான முகமாகும். அவர் தில்லியின் பிரதான வரலாற்றை எழுத நினைத்தார். 1400 முதல் 1853 ஆண்டுகளில் ஆண்ட 142 இந்து அரசர்கள் குறித்தும், 59 இஸ்லாமிய அரசர்கள் குறித்தும் தனது ‘சில்சிலாத் உல் முல்க்’ என்ற நூலில் தொகுத்துள்ளார். குதுப்மினாரைப் பற்றி எழுத உயிரைப் பணயம் வைத்து அவர் செய்த சாகசம் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. இஸ்லாம் மதம் குறித்து அதன் மேன்மைகள் குறித்து பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இந்துக் கல்லூரி எனப்படும் கொல்கத்தா மாநில கல்லூரி துவக்கப்பட்ட 1917ஆம் ஆண்டு பிறந்த, அம்பேத்கரின் ஏழாம் வயது நடக்கும் போது (1898)மறைந்த சர் சையது அகமது கான் அவர்களின் வாழ்க்கை ஒரு சமூக முன்னேற்ற இயக்கத்தின் கதையாகும். நிச்சயம் இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டும். வரலாற்று ரீதியாக ஒரு சமூகத்தின் வளர்ச்சியைக் கண்டடைய நிச்சயம் இது உதவும்.
(சர்.சையது அகமது கான் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதியது )